Wednesday, December 14, 2016


கால்வாய் நீரழகு




கால்வாய் நீரழகு

              செஞ்சேரி அருகாமையில் கால்வாய் நீரோடுவதாக எனது தம்பி உறவினர் சபரி சொல்ல, குதூகலமானேன். நீர் என்றாலே ஆனந்தம் தானே! என் இல்லத்திலிருந்து 25 கி.மீ. இருக்கும். ஸ்கூட்டரில் போய் விடலாம். நண்பரில்லாமல் போனால் சளிப்பாயிருக்கும். எனவே மூத்த நண்பர் செலக்கரிச்சல் பழனிக்கவுண்டரை பின்னால் அமரச்செய்து பயணித்தேன். பயணிக்கும் வழி மழையற்ற வருஷத்தில் கூட கொஞ்சம் அழகாக இருக்கும். கிணற்றில் நீர் இருக்கும் பகுதியில் பயிரிட்ட பயிர் பச்சை தெரியும். பூமித்தளம் ஒரே சமனாக ஊடே ஊடே மரங்களாகவும். காற்றற்று சுழலாத காற்றாடிகளும் கண்ணுக்கு எதோவித விருந்து அளித்தன. வழியில் புலம் பெயர்ந்த வெறிச்சோடிய முத்தக்கோணாம் பாளையம் கிராமம்,  புளிய மரத்துப்பாளையத்தில் உள்ள பெரிய்….ய்…ய் …ய ஆல் மனதை சமனப்படுத்தியது. ஆல் அருகில் ஒரு நிமிஷம் நின்று அதை கண்ணாரத்தழுவி பெருமூச்சு வாங்கிக்கொண்டோம். எத்தனை வருஷத்திய பழமையான மரம். விழுதுகள் மரத்தளவு பரிமாணத்தில் இறங்கி…ஓ…..மனதை அமைதிப்படுத்தின. பெயருக்கேற்ற மாதிரி ஊரின் நுழைவில் ஒரு கோயில் முன்புறம் ஒரு புளிய மரம். கால்வாய்க்கு நீர் திருமூர்த்தி மலையிலிருந்து வருகிறது என்று சொன்னார்கள். மேற்கு கிழக்காக அகன்ற சிமெண்ட் கால்வாயில் ஓடியது. முதல் நீர் கலங்கி வந்தது. இரண்டாவது சென்ற போது நீரற்று வரண்டிருந்தது. ஏனெனில்  நீர் 15 நாளைக்கு நிறுத்தி விடுவார்களாம். அது தெரியாமல் போய் நீரற்ற கால்வாயைப்பார்த்து ஏமாற்ற மடைந்தேன். இந்த முறை தனியாக வந்தேன். இரண்டு கி.மீ நடந்தேன். நிறைய ஆட்காட்டி (செங்கண்ணி)ப் பறவைகளைப்பார்த்தேன். முதல் மாதிரி பெண்டிர் கால்வாயில் துவைப்பது குறைவு பட்டு விட்டது. வாஷிங் மெஷின் வந்த கால கட்டத்தில் இப்படித்தான் இருக்குமோ! நீர் இருக்கும் போது புகைப்படங்கள் எடுப்பது அழகூட்டும். வரண்ட கால்வாய் மனதை வெறுமையாக்கியது. ஏழு சகோதிரிப்பறவை கிளிங், கிளிங் என இசைக்க, தூரத்தில் இருந்த கோழிப்பண்ணையில் அடைபட்ட பிராய்லர் கோழிகள் பரிதாபமாகக்கூவிக்கொண்டிருந்தன. எதற்குத்தான் மக்கள் நோய் பீடிக்கப்பட்ட கோழிகளை மசாலாத்தடவி உண்ணுகின்றனரோ! பெரும் பாவம் செய்கின்றனர். கால்வாயிலிருந்து நிறைய நீர்த்திருட்டு அருகிலுள்ள தென்னைத்தோப்புக்காரர்கள் செய்கிறார்கள். அதை பொதுப்பணித்துறை தடுக்க குழாயில் அடைப்புகள் போடப்பட்டுள்ளன. மூன்றாவது முறை சென்ற போது மூத்த நண்பர் வந்தார். குடைவேல் மரங்கள் புகைப்படத்துக்கு அழகு சேர்க்கின்றன. செஞ்சேரி படித்துறையில் கொஞ்சம் ஊர்மக்கள் துவைத்தும், குளித்தும் காட்சி தருவார்கள் என பல்லடம், பொள்ளாச்சி சாலைக்குச்சென்றோம். அங்கு சுத்தமாக் துவைக்கக்காணோம். சபரி மலைக்கு மாலையிட்ட இளைஞர் மூவர் வர எனக்கு, அவர்களால் நீச்சல், நீர்க்குதிப்பு என பல நல்ல புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றேன். திரும்புகையில் சூடான தேனீர் அருந்திவிட்டு, வாரப்பட்டி வழியாக கிராமத்தின் எதார்த்த எழிலை ரசித்துப்பார்த்தவாறு மெதுவாக ஸ்கூட்டரில் வந்தோம்.

Sunday, October 2, 2016


செஞ்சேரி 


வனம் இந்தியா பவுண்டேசன் உபயத்தில் மரங்களுக்கு நீர்

நூறு நாள் வேலை வாய்ப்பு பெண் தொழிலாளர்களிடையே திரு. நடராஜ் உரை.


செஞ்சேரி
            செஞ்சேரி மலைக்கு இன்னொரு பெயர் மந்திரகிரி. தென்சேரி என்பது செஞ்சேரி என மறுவி விட்டது. மலைமேல் வேலாயுத சுவாமி வீற்றிருக்கிறார். மலைப்பாறைகுன்றில் ஒரு சுரங்கம் இருப்பதாகவும், அதில் சிறிது தூரம் போனால் மூச்சடைக்கும். அதற்குமேல் போக முடியாது. இந்த கிராமத்தைச்சுற்றி  திருமூர்த்தி அணைக்கட்டு நீர்க் கால்வாய் வருஷத்துக்கு 35 நாட்களாவது ஓடுவதால் இன்னும் பசுமை அப்பிக்கொண்டுள்ளது. பொதுவாக இந்த பருவத்தில் மழையின்னையால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, வாட்டமாகத்தான் உள்ளது. திடீரென ஒரு நாள் வெள்ளிக்கிழமை (2.9.16) செலக்கரிசல் 86 வயதைத்தொட்டும் சுறுசுறுப்பாக வலையவரும் பழனிக்கவுண்டரை என் ஸ்கூட்டர் பின் புறம் அமர வைத்து, அவர் வழிகாட்ட சூலூரிலிருந்து 25 கி. மீ- க்கு அப்பாலுள்ள செஞ்சேரிக்கு பறந்தேன்.
            வழியில் இத்தனை குளம் குட்டைகள் வாயைப்பிளந்து நீருக்காக தவம் கிடக்கின்றனவே என வருத்தமாயிருந்தது. தார் சாலையைத்தவிர நீர் நீச்சல் இல்லாததால் காட்சிகள் அவ்வளவு சோபிக்கவில்லை. தென்னை மரங்களை மிகுதியாகப்பார்க்கிறேன். வழியில் புளியமரத்துப்பாளையத்தில் நூறு வயதான ஆலமரம் விழுதுகளோடு பார்த்து பரவசம் மேலிட்டது. காய்ந்துபோய் பல வருஷங்களான ஒரு பெரிய குளத்துக்குள் ஒத்தையடிப்பாதையில் போய் தார் சாலையில் இணைந்தோம். எனது மூத்த நண்பர் பழனி இருந்ததால், வழி பிசகாமல் சந்திராபுரம்,  வாரப்பட்டி, முத்தக்கோனாம் பாளையம், சுல்தான் பேட்டை வழி காட்டப்பட்டு செஞ்சேரி அடைந்தோம். நல்ல வேளையாக பாதையோரத்தில் வனம் இந்தியா பவுண்டேசனின் பேருதவியால் நடப்பட்ட மரநாற்றுகளுக்கு நீர் வார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த வனம் இந்தியா ட்ராக்டர் டாங்க் வண்டியை அடையாளம் கண்டு நிறுத்தினோம்.
            நூறு நாள் வேலை வாய்ப்பில் பணிபுரியும் முதிய மகளிர் குடங்களில் ட்ராக்டர் டாங்க்கில் நீர் பிடித்து பாதையார நாற்றுகளுக்கு ஊற்றிக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் நாங்கள் சரியாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி கொண்டோம். நீர் அருகாமையிலுள்ள கிணறுகளில் ட்ராக்டர் டாங்க்கில் பிடித்து ஊற்றுகிறார்கள். மழைமேகங்கள் ஏன் இப்படி ஏய்க்கின்றன எனத்தெரியவில்லை. கரு மேகங்கள் கூடும் ஆனால் ஒரு சொட்டு மழை தென் மேற்குப்பருவ மழை தராது கஞ்சத்தனமாக இருந்துவிட்டது. மனிதன் ஏய்த்தால், இயற்கையும் ஏய்க்கத்தானே செய்யும். ஐந்து நிமிஷத்தில் இந்தப்புனிதப்பணியை மேற்பார்வையிடும் நடராஜன் அவர்கள் மொபட்டில் வந்து சேர்ந்தார். அங்கிருந்த இன்னொரு நண்பர் பொன்னுசாமி என்பவரை செய்ற்குழு உறுப்பினர் என அறிமுகப்படுத்தி வைத்தார்.
            அங்கிருந்து செஞ்சேரி –சுல்த்தான் பேட்டை சாலை, பச்சார் பாளையம், செஞ்சேரி மலை, குமாரபாளையம், வடவேடம்பட்டி, அருகம்பாளையம், குறிஞ்சி நகர், செஞ்சேரி மயானம் என செஞ்சேரி மலையை நோக்கிச்செல்லும் கிட்டத்தட்ட எல்லாச்சாலைகளிலும் மரநாற்றுகள் சாலையோரம் நடப்பட்டு, மூங்கில் கூடைகள் ஆடு, மாடுகள் கடிக்காமல் பாதுகாப்பாக இருக்க நாற்றுகளைச்சுற்றி வைத்திருந்தனர். காற்றில் அசையாமலிருக்க குச்சி நட்டிருந்தனர். நானாவித மர நாற்றுகளைப்பார்க்க முடிந்தது. மூவாயிரம் நாற்றுகளுக்கு மேல் நட்டிருப்பதாகச்சொன்னார். 14.9.16-க்குப்பிறகு 35 நாட்கள் திருமூர்த்தி அணைக்கட்டு நீர் கால்வாய்களில் வருவதால் மேலும் மர நாற்றுகள் நட இருப்பதாக நடராஜன் சொன்னார். அண்ணாரது தன்னலமற்ற பணியைப்பாராட்ட வேண்டும். பல உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முன்னின்று செயலாற்றுவது அதுவும் அன்றாடம் நேரம் ஒதுக்கிப்பணிபுரிவது குறித்து பாராட்டாமல் இருக்க முடியாது.
            மயானம் காய்ந்து போய் மழையின்மையால் வெப்பம் கொப்பளித்தது. நீர் பற்றாக்குறையிலும் வரிசைக்கிரமமாக நீர் வார்ப்பது சிரமம் தான். தினமும் ட்ராக்டர் டாங்கர் மூலம் தான் மரநாற்றுகளுக்கு நீர் வார்க்க வேண்டியுள்ளது. அதனால் வண்டி தினமும் செஞ்சேரி சாலைகளில் சுற்றிச்சுற்றி வலம் வருகிறது. சொட்டு நீர் இட வழியில்லை. பாதையோர நிழலில் வெய்யிலின் மிகையால் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நூறு நாள் முதும் பெண்களை ஒரு வேப்பமர நிழலில் நடராஜன் அவர்கள் கையசைத்து வரச்சொல்லித்திரட்டினார். என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசப்பணித்தார். அருகில் பழனிக்கவுண்டர், இருந்தார். முதலில் நடராஜன் அவர்கள் பேசினார். பிறகு நான் பேசினேன்.

            இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிஷ்நாய் இன மக்கள் ராஜஸ்தானிலும், அதற்குப்பிறகு சிப்காட் நிகழ்விலும் குறிப்பாக பெண் மக்கள் மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர். கூடி மரத்தண்டைச்சுற்றி கைகோர்த்து நின்று, முதலில் எங்களை சிரசேதம் செய்து கொன்று விட்டு பிறகு மரத்தின் மேல் கை வையுங்கள் என வெட்டப்பட இருந்த  மரங்களைக்காப்பாற்றினர். அந்த எழுச்சி எங்கு போனது? ஆகவே ஆடு, மாடு கடிக்க விடாமல் காப்பாற்றுங்கள். குடிக்கத்தண்ணீர் நாம் உற்பத்தி பண்ண முடியாது. மழையை வருவிக்க மரங்கள் தேவை, என உரையாற்றினேன். சில மாதங்கள் சம்பளம் வரவில்லை என தாக்கீது செய்தனர், மறுநாளே இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயித்து ராஜ் மாண்புமிகு மந்திரிக்கு மின்னஞ்ல் செய்தேன்.  

Thursday, September 15, 2016


பொங்கலூர் காட்டூர் புதூர் மர வளர்ப்பு

மன்னிக்கவும் ராஜேஸ் குமார் அவர்களே! தங்கள் சாதனைக்கு பாராட்டுகளைத்
தெரிவித்தே ஆக வேண்டும்.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்                                                                       தாற்றின் அடங்கப்பெறின்.
அடக்கமே அறிவுடைமை என்பதை அறிந்து நடப்பவரின் நற்பண்பு, நல்லவர்களால் அறியப்பட்டு அவருக்குப்பெருமையை உண்டாக்கும். இந்த திருக்குறல் ஒன்றே தங்களைப்பற்றி என்னை எழுதத்தூண்டியது.
கெங்கநாயக்கன் பாளையத்தில் வாழும் இளைஞர் திரு. ராஜேஸ்குமார் S.R.S. Japanese Quail Products எனும் நிறுவனத்தை இதே கிராமத்தில் நடத்தி, கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இவர் வனம் இந்தியா பவுண்டேசனின் அறங்காவலராக உள்ளார். இவர் விளம்பரத்தை விரும்ப வில்லையாயினும் நாம் இவரைப்பற்றிச்சொல்லத்தான் வேண்டும். ராஜேஸ் குமார் அவர்கள் பொருத்துக்கொள்ளவேண்டும். உங்கள் சாதனையைச்சொல்லும் போது நாட்டு மக்களுக்கு உத்வேகம் பிறந்து, மேலும் லட்சக்கணக்கான மரங்கள் வளர்ந்து நின்று வான் மழையைப் பொழிவிக்கும்.
4.07.2016- செவ்வாய்கிழமை, பல்லடத்தில் வனம் இந்தியா பவுண்டேசன் வாரக்கூட்டம் முடிந்ததும், வடுகபாளையம் மரநடுவிழாவில் கலந்து கொண்டோம். இந்த விழாவினை இனிதே முடித்துக்கொண்டு நானும், செந்தில் ஆறுமுகமும் ஸ்கூட்டரில் பொங்கலூரிலிருந்து தொலைவில் உள்ள கெங்கநாயக்கன் பாளையம் கிளம்பிப்போனோம். ராஜேஸ் குமார் அவர்களின் அலைபேசி எண்கூட எங்களிடம் இல்லை. அவரைச்சந்திக்க முடியுமா என்றும் தெரியவில்லை. பல்லடத்திலிருந்து 40 கி.மீட்டராவது இருக்கும், தொலை தூரம் தான். மரங்கள் எங்களை காந்தம் போல ஈர்த்து விட்டபிறகு தவிர்க்க முடியவில்லை. இதற்கு முன்பு கெங்கநாயக்கன் பாளையம் சென்றதுமில்லை. ஏனிந்த ஆவல் அவரைப்பார்க்க என, கேள்வி கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்.
சுத்துப்ட்டு பதினொரு கிராமங்களில் காட்டூர் புதூர், செம்பட்டப்பாளையம், கெங்கநாயக்கன் பாளையம், சின்னக்காட்டூர், சோளியப்பக்கவுண்டன் புதூர், சந்தநாயக்கன் பாளையம், திருமலைநாயக்கன் பாளையம் ஆகிய கிராமக்குளம், குட்டைகளில் 2300 மரக்கன்றுகள் நட்டிருக்கிறார் இந்த இளைஞர். இந்த நல்ல உள்ளத்தைப்பாராட்ட வேண்டாமா? அவரது மரப்பிள்ளைகளைக்கண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா? அது தான் இவ்வளவு தொலைவுப்பயணம். அதுவும் ஸ்கூட்டரில்….. போகும் வழி தெரியாது விசாரித்து, விசாரித்து சக்கரங்கள் உருண்டன. இருமருங்கும் பச்சை பசேலென காட்சிகள். பிஏபி கால்வாய் மலைப்பாம்பு போல அங்கும் இங்கும் நீரற்றுநெளிந்தன. பேரமைதியில் வழுக்கிப்போன பாதையோ அகலமான தார்சாலை. போகும் வழிநெடுக கண்ணுக்கு விருந்து. மனதுக்கும், தேகத்துக்கும் காட்சிகள் சந்தனம் பூசின.
ஒரு மணிப் பொழுதுக்கு மேலாக பயணித்து, இறைவன் புண்ணியத்தில் ராஜேஸ் குமார் மேஜை எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தோம். தேனீர் வரவழைத்தார். அவரது இலக்கு 5000 மரங்கள், இந்தப்பகுதியில் வைப்பது என தனது குறிக்கோலைப்பகிர்ந்து கொண்டார். இதில் பாதி நெருங்கியே விட்டார். மழையின்மையும், கிணற்றில் நீர் குறைவாக இருப்பதாலும் தற்சமயம் தமது சீரிய பணியை நிறுத்தி வைத்துள்ளார். எங்கெங்கு மர நாற்றுகள் நடப்பட்டுள்ளது எனத்தெரிவிக்க, நேரில் பார்த்து பரவசப்பட தமது ஊழியர் ரவியை எங்களுடன் அனுப்பி வைத்தார். இளைஞர் ரவி மோட்டார் சைக்கிளில் முன்னே செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம். இவரை சம்பளத்துக்கு நியமித்துள்ளார். இவரது வேலை மரநாற்றுகளை பார்த்துக்கொள்வது, ஆடு, மாடு கடிக்காமல் பாதுகாப்பது. சொட்டுநீர் கச்சிதமாக சொட்டுகிறதா, இரும்புக்கூண்டுகள் ஒழுங்காக நிற்கின்றனவா என்பது போன்ற கண்காணிப்புப்பணிக்கு அமர்த்தியுள்ளது, அறங்காவலரின் அக்கரையையும், மரத்தின் மீது உள்ள அன்பையும் காட்டுகிறது.
 குட்டைகளின் உட்புறம், ஏரி மேடு கீழ்புறம், நீர் அளவாக நிற்கும் பகுதி ஓரங்கள், தடுப்பு அணை வழிந்து நீர் போகும் தடங்கள், எனமரக்கன்றுகள் வைத்து அசத்தியுள்ளார். கூண்டுகள் அவசியமென உள்ள மரக்கன்றுகளுக்கு இரும்புக்கூண்டுகள் வைத்துள்ளதுள்ளதோடு ஆடிக்காற்று அசைக்க முடியாத படி மரப்பாத்திக்குள் சொருகியுள்ளது அருமை. சொட்டுநீர் சிறுகருப்புக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாகப்போய் எப்படியும் மரம் வளர்த்தி தலை சிலும்ப மழை வருவிப்போம் என உறுதி கூறிப்போயின. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் தனது தென்னந் தோப்புக்கு நீர் தட்டுப்பாடாக இருப்பினும், அருகிலுள்ள குளம் குட்டை மரநாற்றுகளுக்கு விடுவது, மழை அருகிவரும் காலக்கட்டாயம் என உணர்ந்து, நீர் தரும் விவசாயிகளை நினைத்து நாங்கள் இதயம் நெகிழ்ந்து போனோம். கிராமம் ஒவ்வோன்றாகப்போகும் போது வழியில் பார்த்த மாடு மேய்ப்பவளிடம் இது உங்களுக்காக செலவு செய்து வளர்க்கும் மரங்கள். மாடுகளை மேயவிட்டுவிடாதீர்கள், என்றேன். நிழலில் கூடிக்கிடந்த கிராமியர்களிடம், இது உங்களுக்காக, மழைக்காக, நீருக்காக, நிழலுக்காக நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்றேன்.
திரு. ராஜேஸ் குமார் இந்த இளம் வயதில் தனது சீரிய பணியை வெளிக்காட்டாமல் தன்னடக்கத்துடன் இருப்பது நினைத்து நெகிழ்து போகாமல் என் செய்வது தோழரே! இவர் பாணி தனிப்பாணி! பாதையோரம் மரக்கன்றுகளை வைப்பதை விட குளம், குட்டை, தடுப்பு அணைவழிந்தோடும் பாதை, ஏரி மேடு சுற்றிலும் வைத்திருப்பது, காலத்துக்கும் இவர் பெயரைச்சொல்லி மரங்கள் தலையாட்டி நிற்கும். கோயிலில் ஒரு ட்யுப் லைட் கொடுத்தாலே வெளிச்சம் வெளியில் கசியவிடாமல், உபயம் என தன்பெயர் பொரிக்கும் காலகட்டத்தில், இவர் தனது பெயரை மரக்கூண்டில் பிணைக்க வேண்டாம் என்று சொன்னதும் வியப்பில் ஆழ்ந்தோம். அவரது அவா என்னவெனில் வனம் இந்தியா பவுண்டேசன் ஸ்டிக்கர் இட்டால், கூட காட்டூர் கிராமப்பொது மக்கள் என பெயர் பொரிக்கலாம் என்கிறார். இவரது மனசு விரிந்து, பரந்தது. வாழ்க! இத்தகைய நல்ல உள்ளங்களுக்காகவாவது பெண்கள் கூடி கும்பியடிப்பது போல கருமேகங்கள்  கூடி மழை பொழிய வருணபகவானை வேண்டுவோமாக!.
பயணித்ததும், எழுத்தும்
 ஆ. சுகுமார் (சின்ன சாத்தன்)
4, எசு.வி.எல். நகர்
சூலூர். 641 402


Saturday, September 3, 2016

கல்வெட்டு
அனுப்பபட்டி கல்வெட்டு
கூலித்தொழிலாளி





புளியமரங்கள்

ஆசிரியர் (ஓய்வு)
 அனுப்பபட்டி தர்ம சிந்தனையாளர்          

       அனுப்பபட்டி கிராமம் அப்போது செழிப்பான கிராமமாக இருந்திருக்க வேண்டும். இந்த கிராமத்தில் தான் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பிறந்தார்.
1947-ல் சுதந்திரமடைந்த ஆண்டில் ஒரு கல்வெட்டு அனுப்பபட்டி பெரிய தனக்காரர்  (லேட்)திருவாளர் நா. வெங்கிடுசாமி நாயுடுவால் நிறுவப்பட்டு கிராமத்து மையப்பகுதியில் கல்தூண் ஒன்று நடப்பட்டுள்ளது. அதில் கண்டுள்ள வாசகம் பின்வருமாறு;-
1947 வந்தே மாதரம் சுதந்திரோதய சர்வ ஜித்துக்கு கா.நெ.மா. 200-ம் 18  7 1/A 5  80 11 ஜெய்ஹிந்த். நாவே அனுப்பபட்டி , இவ்வூரில் ஹரிஜனர் முதலிய ஏழைகளின் கல்வி வசதிக்காக   56 புளிய மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன.
கல்வெட்டுப்படி 1947-லேயே 56 புளிய மரங்கள் வளர்க்கப்பட்டு பலனுக்கு வந்து விட்டன. இந்தப்புளியமரங்களெல்லாம் அனுப்பபட்டிஏரியைச்சுற்றிய மேட்டு பன்டு-களில் இன்றும் ஆண்டுக்கொரு முறை  பலன் தந்து நிழல் பரப்பி வருகின்றன.
நா. வெங்கிடுசாமி நாயுடுவின் தர்ம சிந்தனையை எண்ணி வியப்பதோடு நிற்காமல், எந்தக்காலத்திலும் எல்லோராலும் மனமார போற்றக்கூடிய செயலாகக்கருதப்படுகிறது. அவர் புதல்வர்  திரு. அப்பாசாமி நாயுடு, பேரன் திரு. தாமோதரசாமி நாயுடு, கொள்ளுப்பேரன் திரு. ராமமூர்த்தி என வம்ச வழித்தோன்றல்களுக்கு  இந்த தர்ம காரியத்தால் காலத்துக்கும் புண்ணியமும், போற்றலும் தொடரும். கொள்ளுப்பேரன் மட்டுமே தற்போது உள்ளார்.
திரு. ராமமூர்த்தி தற்போது காரணம்பேட்டையில் வசிக்கிறார். 56 புளிய மரங்களின் காய்களால் வரும் பலனை நிர்வகிக்கும் உரிமை, அதாவது புளியங்காய்களில் வரும் வருமானத்தை நிர்வகித்து ஹரிஜன் முதலான ஏழைக்குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் கல்விக்கு செலவிடும் பொறுப்பு, எப்படியோ திரு. நா. வெங்கிடுசாமி நாயுடு வம்சத்திடமிருந்து, வருவாய்துறையினர் கைக்குப்போக, (1.8.76-க்கு முன்பு) நா. வெங்கடுசாமி நாயுடுவின் தர்ம காரியம் தொடராமல் போனது வருத்தத்திற்குரியது. அவரது குறிக்கோள், அவா நிறைவேறவில்லை. 56 புளிய மரத்தின் ஆண்டு பலன் ரூ. 50000 (சுமார்) ஏழைக்குழந்தைகளின் கல்விச்செலவுக்குப்போகாமல், தடம் மாறி ப்போனது வருத்தப்படக்கூடிய விஷயம்.

                      இதை ஈடு செய்யும் விதமாக1.8.1976- அன்று பேரன் தாமோதரசாமி நாயுடுவும், சுப்பே கவுண்டரும், (வெங்கிட்டாபுரம்) ஒரு ஜாய்ன்ட் அக்கவுண்ட் கூட்டுறவு விவசாய வங்கி, அனுப்பபட்டியில் ரூ 1619 /- வைப்புத்தொகையாக வைத்து, அதில் ஆண்டு ஒன்றுக்கு வரும் சொற்ப வட்டியை ஏழைக்குழந்தைகளுக்கு சுதந்திரதினத்தன்று சாக்லெட் வாங்கத்தான் பயன் படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த தடம் மாறிப்போன புளியங்காய்ஆண்டுப்பலன் மீட்டெடுக்க, ஹரிஜனம் முதலான ஏழைகள் முயற்சியில் ஈடுபட, அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. அவர்களில் படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள், வெளியூரில் தங்கினாலும், தங்கள் சமூக முன்னேற்றத்தில் அக்கறையில்லாமலும், பிறந்த கிராமத்தை நினைத்துப்பார்க்காமலும் இருப்பது இன்னும் வருத்தமளிக்கறது என அனுப்பபட்டியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற எண்பது வயது தாண்டிய திரு. மாசிலாமணி சொல்கிறார். இதையே வெங்கிட்டாபுரம் கூலித்தொழிலாளி திரு. குமாரசாமி  உண்மையென ஆமோதிக்கிறார்.
மேலும் திரு நா. வெங்கிடுசாமி நாயுடுவின் கொள்ளுப்பேரன் திரு ராமமூர்த்தி கல்வெட்டு தர்ம சாசனப்படி தனது சந்ததியின் உரிமையை நிலை நாட்ட நீதிமன்றம் செல்வது குறித்து அந்தக்குடும்பத்திற்கும் அக்கறை இல்லை. இதனால் அனுப்பபட்டி ஹரிஜன் உள்ளிட்ட ஏழைக்குடும்பக்குழந்தைகள் கல்விச்செலவுக்கான இந்த சலுகையை இழந்து நிற்கின்றனர்.
திரு. நா. வெங்கிடுசாமி நாயுடுவின் கல்வெட்டு சாசனத்துக்கும், அவருடைய நல்லதொரு சமூக சிந்தனைக்கும்  புறம்பாக  வருவாய்த்துறையினர் எப்படி செயல் படலாம் என்பது தான் நம் முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி.
காலஞ்சென்ற திரு நா. வெங்கிடுசாமி நாயுடுவின் தர்மசிந்தனையை புளியமரங்களின் பலன் மூலமாக ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவ எண்ணிய சீரிய சிந்தனையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. தற்போது இந்த தர்ம சிந்தனை வேறு கிராமங்களில், ஊர்களில் தொடருகிறதா எனத் தேடிப்பார்க்க வேண்டும்.
சின்ன சாத்தன்

23.08.2016

Friday, August 19, 2016



புத்தகத்திருவிழா

            ஈரோடு புத்தகத்திருவிழாவுக்குப்போயிருந்தேன். திருவிழாக்கூட்டம் தான், ஆனால் புத்தகம் வாங்குவதில் தயக்கம் காட்டும் கூட்டம் தான் அதிகம். சுத்துப்பட்டு பல மாவட்டங்களிலிருந்து சுற்றுலா போல வந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளம் அப்படியே கால்வாய் போல புத்தகக்கடை வழித்தடத்தில் ஓடியது. புத்தகம் எப்படிப்பார்ப்பது, அதை எப்படித்தான் தேர்வு செய்வது? என்ற அடிப்படை அறிவு அற்ற செம்மறி ஆட்டு மந்தைகள் போவது போல இருமருங்கும் உள்ள புத்தகக்கடைகளின் வழித்தடத்தில் புழுதியைக்கிளப்பிக்கொண்டு நடந்தன(ர்). பல மாணவச்செல்வங்கள் கடைக்கு வருவர், புத்தகத்தைத்தடவிப்பார்த்து, சீட்டுக்கட்டு கலக்கும் போது புரட்டுவுமே அது போல புத்தகப்பக்கங்களை புரட்டிவிட்டு, மற்ற புத்தகங்களின் படங்களைப்பார்த்து அப்படியே நகர்ந்து போய்விடுவார்கள். இதைவிட அறிவு சால் ஆசிரியைகள் அதைவிட சொல்லக்கூடிய தரத்தில் இல்லை. ஆட்டு மந்தைகளை மேய்ப்பவர் போல வந்து போயினர். புத்தங்களைப்பார்த்த கண்களில் எந்த வித ஆர்வமும் இல்லை. நான் பல மாணவ மணிகளுக்கு எப்படிப்புத்தகம் பார்ப்பது எனச்சொல்லிக்கொடுத்தேன். ஒரு புத்தகத்தின் தலைப்பை முதலில் படி, பிறகு யார் எழுத்தாளர் எனப்படி, அதன் பிறகு பின்னட்டையில் அந்தப்புத்தகத்தில் என்ன உள்ளது என சில வரிகளில் சொல்லியிருப்பார்கள். பின்னாலேயே விலையிருக்கும். கண்காட்சியாக இருப்பதால் விலையில்10% கழிவு, என சொல்லிக்கொண்டிருந்தேன். பல குழுவை என்ன பிக்னிக்கா எனக்கேட்டதற்கு, ஆம் என்றனர். சில குழுக்களிடம் என்ன எக்ஸ்கர்சனா எனக்கேட்டதற்கு ஆம் என்று உண்மையை ஒத்துக்கொண்டனர். திருவிழாவில் எதையாவது வாங்குவார்கள், இங்கு அதுவும் இல்லை. கண்காட்சி தான். நூல்கள் கண்ணுக்கு காட்சி தரும் ஒரு பொழுது போக்கு. 200 கடைகள் இருக்கும். பள்ளி பேருந்து புறப்படத்தயாராக உள்ளது, முன்புறம் வரவும் என ஒலிபெருக்கியது வேறு, தமாஷ்சாக அவ்வப்போது கேட்டது. ஆசிரியைகள் மாணவமணிகளுக்கு எப்படி, பாடமற்ற புத்தகம் பார்ப்பது என அடிப்படையைக்கூட சொல்லி அழைத்து வரவில்லை. எவர் கையிலும் திருவிழாக்கடைகளில் வாங்கப்பட்ட மருந்துக்குகூட ஒரு நூல் இல்லை. ஒரு 50, 100-க்கு என வாங்கியிருந்தால் சந்தோஷப்படலாம். பதினைந்து வயதைத்தாண்டிய மாணவ மைனர்கள், பெண்கள் பின்னால் வட்டமடித்துக்கொண்டிருந்தனர். இந்தத்தலைமுறை தொலைக்காட்சியாலும், மொபைல் எனும் கைபேசியாலும் மற்ற நூல்கள் படிப்பதில் சொட்டும் பரவசத்தை இழந்த ஆட்டுமந்தைகள். பாவம்! பிறகு ஜொச்சி, பஜ்சி கடைகளில் அலைமோதினர்.

Thursday, July 28, 2016

அடிகளார் வனம்
 Protect our Environment Trust, Sulur jointly working with Vanam India            Foundation, Palladam (visited on : 12.07.2106)                                    

 அடிகளார் வனம், ஆறுமுத்தாம் பாளையம், திரு. பழனிசாமி
கல்லுக்குழி -----மரங்களுக்கு நீர் பாய்ச்சும் கல்லுக்குழி

                                                                                                            சின்ன சாத்தன்
            அடிகளார் வனம் சாந்தலிங்க அடிகளாரால் துவக்கி வைக்கப்பட்டது. தவத்திரு சாந்தலிங்க அடிகளார் வனம் என்று நாமம் சூட்ட அவர் மறுத்துவிட்டதால் அடிகளார் அதாவது தொண்டர் வனம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான பூமி. கிடைநீர் தேங்கிக்கிடக்கும் பெரிய கல்லுக்குழிக்கு அருகில் உள்ள ஒரு அடி, மண் மட்டுமே பாவிய பாறைக்காடு. காற்று உய்……ஊய் என நரிகள் ஊழையிட்டது போல இருந்தது.  ஆடி மாதக்காற்று ஆனியிலேயே ஆரம்பித்து விட்டது. தென் மேற்குப்பருவ மழை பல்லடம் பகுதி வரை வருவதற்குள் வலிமையிழந்து மெலிந்து விட்டது. இந்த மேட்டு கல்லாங்காடான 13 ஏக்கர் கோயில் நிலத்தில் 7 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

பல்லடம் வடகிழக்குப்பகுதியில் உள்ள இந்த வனத்துக்குச்செல்ல நாரணாபுரம், சேடபாளையம் மார்க்கமாக தார் சாலையில் 8 கி.மீ பயணித்து, ஆறுமுத்தாம் பாளையத்தை அடையவேண்டும். பிறகு ஊரைத்தாண்டியதும் அரைக் கீ.மீ சரளைமண் வண்டித்தடத்தில் போனால் அடிகளார் வனம் வரும். ஆறுமுத்தாம் பாளையத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 1 லட்சம் ரூபாய் சீட்டு இருபது அங்கத்தினருடன் நடத்தி, சீட்டுத்தொகையாக வந்த 1 லட்சத்தை அவர்களுக்குள் வட்டிக்கு விட்டு,  மரநாற்று பாரமரிப்புக்கு செலவிடுகின்றனர். மாதம் ஆயிரம் சம்பளத்துக்கு ஒருவரை நியமித்துள்ளனர்.
 வாரம் இரண்டு முறை சொட்டுநீர் திறந்து விடுகின்றனர். ஒவ்வொரு மணி நேரம் சொட்டுநீர் விடுகின்றனர்.  இதை இரண்டு மணி நேரமாக நீட்டிக்கலாம். ஏனெனில் இந்த முறை பருவ மழை, இது வரை நம்மை வந்து சேரவில்லை. மேலும் பாறைக்காடாக இருப்பதால் நீர் கொஞ்சம்சேர்த்து விட்டால் பாறை கொஞ்சம் இளகும். கல்லுக்குழியிலும் கிடை நீர் வேண்டுமளவு உள்ளது. அதில் ஒரு கொம்பன் ஆந்தை (Indian Great Horned Owl)-யைப்பார்த்து பரவசமாகிப்போனேன். இந்த மூன்றடி உயர ஆந்தை மயிலைக்கூட தன் கால்களில் தூக்கிச்செல்ல வலிமையுண்டு. இவை கல்லுக்குழியில் ஜோடியாக பாறைப்பிளவுகளில் வாழும். எலி. பெருக்கான், வேலி ஓணான், உணவாக எடுத்துக்கொள்ளும். விவசாயிகளுக்கு நண்பன். கல்லுக்குழியில் நீர் கிடைநீராக நாள்பட இருப்பதால் சற்றே கருப்பாக இருந்தது.
                                                            
அருகிலுள்ள அறிவொளி நகரில் 2500 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. நீர் இறைக்க மோட்டார் மற்றும் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளன. புளியமர நாற்றுக்கு இடைவெளி அதிகமாக விட்டதால் அதிக காய் காய்க்கும். ஒரு சில நாற்றுகள் வரண்டுள்ளதை மாற்றலாம். மற்றபடி எல்லா நாற்றுகளும் நல்ல நிலையில் உள்ளன. காற்று  மரக்கன்றுகளை அசைத்துக் கொண்டே இருப்பதால், வேர் பிடிப்பு எளிதில் ஏற்படாது, எனவே சின்னக்குச்சிகளை அருகில் நட்டு, கயிற்றில் மரக் கன்றுகளை இணைக்கலாம். காட்டுகோரைப்புற்கள் நான்கு அடி வளர்ந்தவை, தங்க நிறத்தில் சரிந்துள்ளன. பார்க்க அழகாக உள்ளன. அவைகளை களைச்செடிகள் எனப்பிடுங்காமல் விட்டுவைத்ததை பாராட்டுகிறோம். இவை நீரைப்பிடித்து வைக்கும். அதே சமயம் வரண்டு போனபின்பு உரமாகி விடும். அதிலிருந்து விழும் சின்னச்சின்ன விதைகளை உண்ண வளைகளில் இருந்து எலிகள், மற்றும் பறவைகள் வரும். அவைகளைப்பிடித்து உண்ண கொம்பன் ஆந்தை வரும். இயற்கையின் உணவுச்சங்கலியைகண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.சங்கலியை உடைப்பது மனிதன் தான்.

இயற்கையை ஒட்டி வாழ்தலே நலம் பயக்கும்.அடிகளார் வனத்துக்கு ஒரு பெரிய இரும்பு கேட் உள்ளது. அதில் அடிகளார் வனம், வனம் இந்தியா பவுண்டேசன் மற்றும் ஆறுமுத்தாம் பாளையம் கிராமப்பொதுமக்கள் எனப்பெயர் பொரித்த பலகை இருத்தல் நலம். இந்த கோரைப்புற்களுக்கு மனிதன் தீயிடாமலும், கேபிள் திருட்டுப்போகாமலும் கண்காணிக்க வேண்டியுள்ளது. இந்த புனிதப்பணியை திரு. பழனிசாமி அவர்கள் முன்னிருந்து செய்கிறார் அவர் உழைப்பையும், நல்ல எண்ணத்தையும் பாராட்ட வேண்டும். மீதமிருக்கும் 6 ஏக்கர் கல்லாங்காட்டில் இன்னும் மரக்கன்றுகள் வைத்து வளர்த்திட திட்டம் இருப்பதாக திரு. பழனிசாமி சொன்னார்.

தற்போது மரநாற்றுகள் 1500 வைத்து வளர்த்து வருகின்றனர். இடத்தைச்சுத்தப்படுத்த JCB, சொட்டுநீர் குழாய்கள், மோட்டார், ஜெனரேட்டர், மர நாற்றுகள் ஆறுமுத்தாம்பாளையம் கிராம மக்களுக்கு அளித்து, வனம் இந்தியா பவுண்டேசன் ஆக்கப்பூர்வ செயலுக்கு பொருளாதார ஊக்கம் தந்துள்ளது. சுற்றிலும் வேலி கற்கள் நடப்பட்டு, கம்பி வேலியை ஊர் பொதுமக்கள் இட்டுள்ளனர். போகும் வழியில் சேடபாளையத்தில் தார் சாலையோரமாக ஒரு பெரிய குட்டை  நீரற்று வாய் பிளந்து உள்ளது. குட்டை ஓரங்களிலும், தடுப்பு அணைப்பகுதியிலும் பசுமை ஏற்படுத்த, ஊர் மக்களில் சிலருக்கு பசுமை விதையை தூவலாமே என்று யோசனை என்னுள்ளே மூண்டது. ஒரு சிலரே நாட்டை பசுமைப்பாதையில் வழிநடத்திச்செல்கின்றனர். அதில் வனம் இந்தியா பவுண்டேசன் பங்கு பெறுவதில் மகிழ்ச்சியடைகிறது. திரு. பழனிசாமி அவர்களுக்கும், அவரைச்சார்ந்த, சீட்டு உறுப்பினர்களுக்கும் உடல் உழைப்பை நல்கும் நல் உள்ளங்களுக்கும் வனம் இந்தியா பவுண்டேசன் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறது.

இந்த வனம் மாத இதழை வாசிக்கும் ஒவ்வொருவரும் திரு. பழனிசாமி போல அவரவர் ஊருக்கு பொதுத்தொண்டு ஆற்ற வேண்டும், என்ற எண்ணத்தை விதைக்கவே சீரிய செயல் புரியும் அன்பர்களை  மாதாமாதம் அறிமுகப்படுத்துகிறோம்.

பாறைக்காடு, நீர் அருகிலுள்ள கல்லுக்குழி, அந்தப்பகுதியில் வாழும் மக்களில் பெரும்பகுதியினர் இயற்கையை பற்றி சிந்தனையற்றவர், மழையின்மை, ஆளை வீழ்த்தும் காற்றுடன் உற்றுப்பார்க்கும் வெட்டவெளி என்ற இத்தனை எதிர் காரணிகளிலும் சமாளித்து மரம் வளர்த்துவது என்பது இமாலய சாதனை. சுவாமி விவேகானந்தர் கூறியது நினைவில் அலைமோதியது.

மலைபோன்ற சகிப்புத்தன்மை
இடைவிடாத முயற்சி
எல்லையில்லா நம்பிக்கை
இவை நற்காரியத்தில் வெற்றி தரும்.

_____சுவாமி விவேகானந்தர். 

Friday, July 8, 2016

சூலூர் வனம்

சூலூர் வனம்-செங்கத்தறைப்பாதை கிழக்கு மேற்காகச்செல்கிறது

சொட்டு நீர்


சூலூர் வனம் சூலூர் சின்னக்குளம் (அ) செங்குளத்தின் வடபுறச்சரிவில் வனம் உருவாக்க முயற்சி செய்துள்ளனர். பொக்லைன் உதவியில் புதர்களை சுத்தம் செய்து வேலியிட்டு பத்தடிக்கு ஒரு மரநாற்று ஏன நட்டுள்ளனர். குழிகள் பொக்லைன் உதவி கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. மர நாற்றுகள் குறுக்கு மற்றும் நெடுக்கு என எப்படிப்பார்த்தாலும் பத்தடி தாம். இருபது அடிக்கு ஒன்றாக வைத்திருக்கலாம்.முழுமரத்தைப்பார்ப்பதற்கு இந்த இடைவெளி அவசியமானது.ஆனால் ஆர்வக்கோளாறில் பத்தடிக்கு ஒரு மரம் வைத்தது நன்றாக இராது.
அருகில் சின்னக்குளம் எப்போதும் வற்றாதிருப்பதால் சொட்டு நீர்இழுக்கப்பட்டுள்ளது, பாராட்டக்கூடியது. ஆடு, மாடுகள் மேயாமல் இருக்க கல், கால் வேளி போடப்பட்டுள்ளது அருமை. மர நாற்றுகள் பல வகையும் நடப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள இளவல் நண்பர்கள்; பசுமை நிழல் விஜயகுமார், தர்மராஜ், சக்திவேல் ஆகியோரைப்பாராட்டுகிறேன். 3 ஏக்கரில் 1008 மர நாற்றுகள் வைத்துள்ளனர். இன்னும் 7 ஏக்கர் நடவு பாக்கியுள்ளது. இது ஒரு பிரம்மிக்கத்தக்க முயற்சி. குளத்தை ஒட்டி நடவு செய்யப்பட்டதால் மழைநீர் கிடைக்கும், மேலும் நிலத்தடி நீர் கிடைக்கும். மரங்கள் வளர்ந்து விட்டால் குளுமையும், பசுமையும், நிறைய பிராணவாயுவும் கிடைக்கும். அதை ஒட்டிய செங்கத்துறை தார் சாலையில் நடை போனால் ரம்மியமாயிருக்கும்.
என் பங்காக, 25 கி.மீ-க்கு அப்பால் உள்ள வனம் இந்தியா பவுண்டேசனிலிருந்து எடுத்து வந்திருந்த நான்கு மர நாற்றுகள்,(மகோகனி=2+தாந்திரி= 2) அவர்கள் சின்னக்குளத்தை ஒட்டிய நாற்றுப்பண்ணையில் சேர்ப்பித்து விட்டேன். சூலூர் வன செயல் வீரர்கள் மூவரையும் வனம் பவுண்டேசனுக்கு,(பல்லடம்) ஒரு செவ்வாயன்று வாராந்திர கூட்டத்தில் அறிமுகப்படுத்தி மேலும் 300 மர நாற்றுகள் வேண்டினேன். சூலூர் வனத்தினர் வேண்டுதல் பொருத்து பொக்லைன், நாற்றுகள் என வனம் இந்தியா பவுண்டேசன் வழங்கும் என நம்புகிறேன். இவர்கள் சூலூர் ரிசர்வ் சைட்டுகளில் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மேலும் மரம் நடுதலில் ஈடுபடுவதை மெச்சுகிறேன்.

Protect Our Environment Trust, Sulur. Kindly donate to conserve our Environment, contact……e-mail: sukubird@gmail.com

Sunday, June 12, 2016


தஞ்சமடைந்த புறா
                ஒரு காலைப்பொழுது உள்ளுர் நண்பர் ஆன்ட்ரூஸ் காரில் ஒரு வெண்புறா கையிலிருக்க வந்திறங்கினார். ‘சார்! இந்தப்புறா நம் சூலூர் குளத்தில் கிடைத்தது. கழுகு துரத்திக்கொண்டு வர, இது பயந்து போய் குளத்து நீர்ல விழுந்திருச்சு. இறக்கை முழுக்க ஈரமாக, இதனால் பறக்க முடியலை. நான் ஒரு கோலெடுத்து ஆகாசத்தாமரை மேல் வந்ததை பக்கமிழுத்து எடுத்தேன். இது காப்பாத்தறாங்கன்னு தெரிஞ்சுகிச்சு. அதனால அருகில வந்தது.’ என்று முன்கதைச்சுறுக்கத்தைச்சொன்னார்.
 நான் கையில் வாங்கி கடப்பைக்கல் பெஞ்சில் விட, அது பயந்து போய் மதில் சுவர் ஓரம் குதித்து அங்கேயே நின்றது. ஒரு வேளை இது sub adult-ஆக இருக்குமோ? என சந்தேகம் வந்தது. ஒரு வேளை ஈரம் உடம்பில் காய்ந்தால் பறக்கலாம். எதற்கும் ஒரு அட்டைப்பெட்டியில் இட்டு வைக்கலாம். எங்கள் காலனியில் பூனை, நாய் அதிகம். பிடித்துக்கொண்டு போய்விடும். உடனே ஒரு அட்டைப்பெட்டி காற்றுப்புக ஓட்டைகள் இட்டு, அதற்குள் குடிக்க நீர், என்னிடமிருந்த சாமையைத்தூவி, புறாவைப்பிடித்து உள்ளே விட்டேன்.
மதியத்துக்கு மேல் கம்பு வாங்கிப்போட ஜோசப் ரெஜினால்ட் யோசனை வழங்கினான். வினி, முடிந்தால் அட்டைப்பெட்டியிலிட்ட புறாவை கோவை கொண்டு வரவும் என்றாள். பயந்திருக்கும். அடி பட்டிருந்தால் சிகிச்சை அழிக்கலாம் என்றாள். இருவரும் Animal Rescuers என்ற NGO வைத்துள்ளனர். வாழ்க! ஒரு நாள் முழுக்க அட்டைப்பெட்டியில் இருந்தது. நான் இன்னொரு அட்டைப்பெட்டி வாங்கி வந்தேன். இப்போது இருப்பது இடம் போதவில்லை. போதிய இடமளிக்கும் அட்டைப்பெட்டிக்கு புறாவை மாற்றினேன். மறுநாள் காலை பார்க்க அட்டைப்பெட்டி கீழ் புறம் நனைந்திருந்தது. எச்சமிட்டிருக்க நாற்றம் குடலைபிடுங்கியது. பறவைகள் இயற்கையில் இருந்தால் ரசிக்கலாம்.
இயற்கை தான் அதைப்பராமரிக்க முடியும். ஆயிரம் வருஷங்களாக மனிதனோடு பழகும் புறா காலையில் வெளியில் எடுத்து விட அது மீண்டும் பயத்தில், படிக்கட்டு அடியில் போய் அமர்ந்து கொண்டது. நான் கையில் கம்பு வைத்துக்கொண்டு அழைக்கிறேன், வர மாட்டேன் என அடம் பிடித்தது. கீழே கம்பைத்தூவி விட்டேன். அதன் அலகு கம்பைப்பொறுக்க ஏதுவாக இருந்தது. வினிக்கு மறுபடியும் போன் செய்ய, ‘நீங்கள் அங்கு இருக்க வேண்டாம். வந்துடுங்க. அது தானே வந்து தானியம் பொறுக்கும்’, என்றாள்.

நானும் பறந்து போனால் இயற்கை பார்த்துக்கொள்ளும். நம்மால் இது ஆகாத செயல். தினமும் பெட்டியைச்சுத்தம் செய்ய வேண்டும். ஒரு பெட்டியைக்காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும். நான் குளித்து, சிவபெருமானை தேவாரம் பாடி போற்றி விட்டு வந்து பார்த்தால் வெண்புறா ஒன்று கையில் வராமலே….உனது கதை புதுக்கவிதை எனப்பாடுவதற்குள், அது அதன் ஞாபகமாக எனக்கு ஒரு இறகை மட்டும் விட்டு விட்டு பறந்து போய்விட்டது. சந்தோஷமாகப்பறந்து போவதை அடியேன் பார்க்கக்கொடுத்துவைக்கவில்லை.

Friday, May 20, 2016


வீகன் ஆசிரமம் 
பிரம்ம பிரகாசம் தொடர்பு; 98423 77758


           நான் அடிக்கடி வீகன் ஆசிரமம் போய் விடுவேன். தேடல் இருந்தால் தான் எதுவுமே பெற முடியும். இந்த ஆசிரமம் பொள்ளாச்சியின் கோவைப் பாதையில் வடக்கி பாளையம் பிரிவில் இறங்கி, சிவாலிக் பள்ளிப்பாதையில் 1 கி.மீ போனால் ஆசிரமத்துக்குள் நுழையலாம். ஐந்தரை ஏக்கர் தென்னந்தோப்பு, சுற்றிலும் வேலியோரம் தேக்கு. மாமரம், பலா, சர்க்கரைப்பழ மரங்கள், காட்டுமல்லி என மனதிற்கு இனிமை தரும். நண்பர் பிரம்மப்பிரகாசம் அரிசி, நீர், தேங்காய் வைத்து, அணில், மரங்கொத்தி, சிலம்பன், காகம், வால்காக்கை எனக்கவருவார். பனங்காடைகள் சப்தமிட்டு மின் கம்பிகளில் அமர்ந்திருக்கும். 
                   தோப்புக்கு நடுவே கவ் பாய் ஸ்டைலில் மேலே ஏற்றிப்போடப்பட்ட வெட்டவெளி ஷவர் இரண்டு பொருத்தியிருக்கும் பாங்கு அருமை. அவைகளில் ஒன்று தபதப வென அருவி போல வீழும் குழாய், இரண்டாவது ஷவர். ஆனந்தமாகக்குளிக்கலாம். வெட்டவெளிக்குளியல். சுற்றிலும் தென்னந்தோப்பு. குளியலறைக்குளியலைவிட அனுபவித்து இயற்கையோடு இயற்கையாக மாறிப்போகலாம். பிறகு எதிரிலிருக்கும் காட்டு மல்லிகை, ராமபாணம் வெள்ளைப்பூக்களை ரசித்துகொண்டே உரையாடல் எனக்கும், பிரம்ம பிரகாசத்துக்கும் நடக்கும். மகாசைவத்தைப்பற்றி ஒரு நூல் எழுத ஆழமான கலந்துரையாடல்  நாள் முழுக்க நடக்கும். தொடக்கத்தில் நான் தேவாரம் இசையோடு பாடுவேன். ஆசிரமம் என்றால் நானும் என் நணபரும் மட்டும் தாம். நான்கு நாட்களுக்கு கூட தங்கிவிடுவேன். சில வேளைகளில் மேற்குப்புற நாடுகளில் வந்து தங்குவர். 
               அனைவரும் தாவர உண்ணிகளாக மாறினால் இந்த பிரபஞ்சம் சிபிட்சமாக இருக்கும் என்பது எல்லோரும் உள் வாங்க வேண்டும். திணிக்கும் கருத்தல்ல. உங்கள் வயிறு என்ன சுடுகாடா? உங்களையே அண்டியிருக்கும் பிராணிகளை கொன்று ஏன் உண்ணுகிறீர்கள்? உண்ண எவ்வளவோ இருக்கும் போது உயிர் வதை செய்வது ஞாயமா? உங்கள் இதயத்தைத்தொட்டு உணர்ந்து பாருங்கள். எங்கள் குடும்பம் NV குடும்பம் என்றால்,நீங்கள் ஏன் கண்மூடித்தனமாக உங்கள் குடும்பத்தை பின்பற்றுகிறீர்கள். 
             
Water canal adjacent to Vegan Ashram

Front view of Ashram. Any spiritual & vegans may contact Brahma Prakasam-cont:: 98423 77758
சரி! மாலையில், சைக்கிளில் கிராம எழிலைப்பார்ப்பதற்கு பெடலை மிதிப்பேன். காலை மாலை தோப்பின் அருகில் நெளியும் வாய்கால் தண்ணீரில் குளிக்க ஓடுவேன். மக்கள் அங்கேயும் என்னை தனிமையில் குளிக்க விடுவதில்லை. துவைக்கும் பெண்டிர். என்ன செய்ய? சைக்கிளை மிதித்து கிழக்கில் ஒரு கி.மீ போய் ஒரு ஆள் இறங்கும் படிக்கட்டில் இறங்கி, ஆளை இழுக்கும் விசையில் ஓடும் நீரில் ஜட்டியுடன் இறங்கி குப்புறப்படுத்துக்கொள்வேன். நீரில் மிதந்து கிடக்க, நீர் என்னை படு வேகமாக இழுக்கும். கைவிரல்கள் சிமெண்ட் தளம் பாவிய காரைப்பிளவைப்பிடித்துக்கொள்ளும். இல்லையேல் நான் புரட்டப்பட்டு, பல கிமீ போய் விடுவேன். நீர் உடம்பை மிருதுவாக்க, முழங்கையில் ஒரு முறை, பிறகு வலது கால் பெருவிரலில் சிராய்ப்புக் காயம் பட எரிந்தது. நீர் எனது அம்மை… நீரைச்சுத்தமாக வைத்திருப்பது நமது தலையாய நியதி.

Friday, May 6, 2016

ஒன்றையொன்று…


பூனை பிடித்து வந்த அண்டகாகக்குஞ்சு

குஞ்சை இழந்து தவிக்கும் அண்டங்காக ஜோடி
ஒன்றையொன்று…………
நான் வளர்த்த மழை மரத்தில் ஒரு அண்டங்காக ஜோடி கூடு கட்டியிருந்தது. ஒரு பொழுது அந்த ஜோடி காகம் பூனையைத்துரத்திக்கொண்டு வந்தன. பூனை வாயில் ஒரு அண்டங்காக குஞ்சு. விஜயவினாகர் கோயில் அருகில் ஒரு செம்பருத்தி செடியருகில் வைத்து விட்டது. காகக்குஞ்சு உயிருடன் தான் இருந்தது. மரத்தின் மீது ஏறி கூட்டிலிருந்ததைக்கவ்விக் கொண்டு வந்து விட்டது. அம்மா, அப்பா காகம் முயற்சியில் இறங்கியிருந்தன. அருகிலிருந்த ஆலமரத்தில் அமர்ந்து கா….கா… எனக்கத்திக்கிடந்தன. என்ன முயற்சி செய்தாலும் மீண்டும் அந்த குஞ்சு கூட்டுக்கு காகங்கள் எடுத்துச்செல்ல முடியாது. நான் இடைமறித்தால் காகங்கள் என் மண்டையைப்பதம் பார்க்கும். மேலும் மரமேறிக் கூட்டில் கொண்டு போய் வைக்க முடியுமா? கொழுப்புப்பிடித்த பூனை உண்ணவும் இல்லை. கொஞ்சம் நாழி கழிந்து பார்க்க குஞ்சு அப்படியே உயிருடன் கிடந்தது. மூன்று அல்லது நான்கு முட்டை வைத்து அடைகாத்துப்பின் குஞ்சு பொரித்த பிறகு இந்த விபரீதம். ஒரு குஞ்சின் தலைவிதி அப்படியாயிற்று. நாம் இதில் செய்ய ஒன்றுமில்லை. வனத்தில் இன்னும் என்னென்ன நிகழும்!
மூன்றாம் நாள் குஞ்சை பெரிய குப்பைத்தொட்டியில் போடலாம், வாசம் பரவுகிறதே என குனிந்தால், எங்கிருந்தோ குஞ்சைப்பறி கொடுத்த ஜோடி அண்டங்காகம் பறந்து வந்து என்னை அடிக்க வந்தன. எப்படியொரு சோகம் அவைகளுக்கு! மூன்று நாட்களாகியும் காகஜோடிக்கு ஞாபகமிருக்கிறது. ஆச்சர்யமாகத்தான் உள்ளது. பறவைகளும் நம்மைப்போல் தாம். அதில் சந்தேகமா உங்களுக்கு? குஞ்சை நாய் கவ்வும் அல்லது குழி தோண்டிப்புதைக்க வேண்டும். இது முன்பொரு முறை எங்கள் வீதியில் உள்ள ஒரு வீட்டின் குட்டையான பாதாமி மரத்திலிருந்த கூட்டில் வெண்தலைச்சிலம்பன்களின் நான்கு குஞ்சுகளும் பூனை தூக்கி ஓடியது.

நாம் இதில் தலையிட முடிவதில்லை. தலையிடவும் கூடாது. அதனால் தான் பறவைகள் நான்கு முட்டைகள் வைக்கின்றன. ஒன்றிரண்டு கழிந்து விடும். பூனைகள் எங்கள் காலனியில் வளர்ப்பார் யாருமில்லை. அவைகள் இனப்பெருக்கமாகி தங்களுக்குள் ஒரு வீட்டை தத்து எடுத்துக்கொண்டன. மீதமான தயிர், பால் கொல்லைப்புறத்தில் கொட்டுவது, உணவு மீதமானவை, பிறகு இது போல குஞ்சுகள், எலி, வேலி ஓணான் என உண்டு வாழ்கின்றன. வீட்டுப்பூனை எங்கு போகும் வீட்டைஅண்டித் தான் வரும். பறவைகள் மரத்தின் மேல் தான் கூடு வைக்கும். ஈசன் பூஉலகை விளையாட்டாகப்படைத்திருக்கிறார். ஒன்றுக்கு ஒன்று உணவாகிப்போகிறது.

Wednesday, April 20, 2016


ஆலமரத்தின் கதை





ஆலமரத்தின் கதை
            ஆலமரத்தின் விதை ஒரு மீன் முட்டையை விட சிறியதானாலும் வளர்ந்துவிட்ட பிறகு ரஜ, கத, துரக, பதாதிகள் கீழே தங்க நிழல் தந்து நிற்கும் ஒரு தடாகம். எத்தனை ஜூவராசிகள்! அட! அட!  அப்போதைய காலகட்டத்தில் கிராம சபையென்ன, சிறார் ஊஞ்சலாட்டமென்ன, பெண்கள் ஊர் வம்பென்ன, என எப்போதும் குழுமுமிடமாக இருக்கும். அக்காலத்தில் பணியர் என்ற வியாபார இனம் இம்மரத்தடியில் குழுமி வியாபாரம் செய்வர். ஆலமரத்தடியில் வியாபாரம் நடத்தினால் கொடுக்கல், வாங்கல் பிரமாதமாக நடக்குமாம். விழாக்கள் வேறு இம்மரத்தடியில் ஜோர் படுமாம். பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. பணியர் இதனடியில் கூடுவதால் இதற்கு Banyan Tree என்று நாமகரணம் செய்விக்கப்பட்டது. எனது மர குருநாதர் வேலுசாமி ஐயாவுக்கு இந்த மரம் எனில் உயிர். அவரது உற்ற தோழர் பழனி ஐயா ஆலான் என்று தான் பகருவார். இருவரும் வாட்ட சாட்டமாக 6 அடிக்கு மேல் 80 வயது தாண்டி இருந்தனர். பழனிக்கவுண்டர் கடின உழைப்பில் தண்ணீர் சுமந்து, சுமந்து மரங்களை செலக்கரிசிலில் வளர்த்தார். வேலுக்கவுண்டர் காசு செலவு செய்தார். இவ்வளவு கடின உழைப்பிலும் ஊர் மக்கள் விட்டேத்தி- யாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது. ஒருவரும் துணைக்கு வரவில்லை. இளைஞர்கள் தாங்கள் உண்டு தங்கள் படிப்பும், கனவுக்கன்னிகளும் உண்டு என்று இருக்கின்றனர். பிற மனிதர்கள் தானுண்டு தங்கள் பொண்டு, பிள்ளையுண்டு என பிழைபைப்ப்பார்த்து கடுகு உள்ளத்தோடு இருக்கின்றனர். ஆலமரம் இனி இப்பூமியில் அதுவும் ஊருக்குள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது எனலாம். காரணங்கள்;-
# இடத்தை அடைக்கிறது (ஆம்! ரியல் எஸ்டேட் பாதிக்குமே!)
#வேரும் விழுதும் விடும் போது அருகில் உள்ள கட்டிடம் பாதிக்கும்.

கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மரங்களின் விழுதுகளை ஊன்ற விடாமல் மரத்தின் கீழ் வியாபாரம், தண்டுகளில் ஆணியடிப்பது, விழுதுகளில் ஊஞ்சலாடுவது, இதில் மாடு, எருமை குட்டி ஈனும் போது வரும் நஞ்சை பையிலிட்டுக்கட்டுவது, விழுது ஊன்ற வழியில்லாமல் தார் ரோடு இடுவது, ஏரி மேட்டில் வைத்து, விழுது நீரில் ஊசலாடுவது போல சகல விதமான துன்மார்க்க செயல்களையும் செய்து ஆலானை வாழ வழியற்றுப்போகுமாறு செய்வது மனிதன் உள்ளத்தில் கருணை என்பது துடைத்தெறியப்பட்டதைக்காட்டுகிறது. நீங்களெங்கே! நம் முன்னோர்களெங்கே! மண்ணில் ஆசை வைத்த மக்கள் உருப்படுவது கிடையாது. ஆலானுக்கு நிச்சயமாக இடம் தர மாட்டார்கள். அந்தகோ!
நீ மரமல்ல மகான்

ஆலமர நிழல் கிராம மையம்
அக்கால கிராம மக்களுக்கு நன்றி
ஆல் எனக்கு ஒரு சின்னத்தடாகம்
தர்ம சிந்தனை கிராமத்தாருக்கு;
ஆல் மக்கள் நீதிசபை
ஆலம் பழங்களின் சிகப்பு
இதயம் சுண்டும் காதலி விழிகள்
தடாகம் நிறையப் பறவைகள்
கிளைகள் தோறும் பறவையொலி
ஓ! ஆலே! வாழ்ந்தாலுன் போல
பெரு வாழ்வு வாழனும் பூமியில்
உன் மடி தொங்கும் விழுதுகளில்
ஊஞ்சலாடுவேன். சந்தன நிழலே!
மனசுக்குள் ஆனந்தம் முட்டும்
மைனா நானா வித ஒலி கூட்டும்
வா! உண்ணு! இளைப்பாறு!
செர்ரி நிறப்பழங்கள் அசைந்து கூப்பிடும்.
குக்குறுவான், மாங்குயில், கொண்டைக்குயில்
நீந்தும்; ஆல் எனக்கு சின்னத்தடாகம்.
சிறார் கும்மாளமிடும் திடல்
உன்னை அன்னாந்து பார்த்து
பெருமூச்சு விடுவேன்; முத்தமொன்று
கட்டிப்பிடித்து ஈய்வேன்
ஆயின் என் கைகள் போதாது
பரந்த மனசு போல நீ விரிந்தவன்
தர்மவான் போல உயர்ந்தவன்
உனை அண்டி எத்தனை ஜீவன்கள்!
ஆல் எனத்தழைத்து விரியணும்
ஆசி நல்கல் இப்போது புரியது.

நீ மரமல்ல மகான்!

Monday, April 4, 2016


இரக்கம் என்பது சிறிதும் இல்லையடா……!

Both Photo taken by Sri T.R.A. Arunthavaselvan

கொண்டலாத்தி (Hoopoe) 
 இரக்கம் என்பது சிரிதும் இல்லையடா……!
பொள்ளாச்சி, பணிக்கம் பட்டி மஹா சைவம் ஆசிரமத்துக்கு போயிருந்தேன். தோப்புகள்  மற்றும் வானம் பார்த்த நிலங்கள், மழை பெய்தால் புற்கள் தோன்றும் பூமியாகிப்போயின.அங்கு நானும் நண்பரும் உணவுக்காக ஸ்கூட்டரை உருட்டிப்போகும் மண் பாதை தெற்குப்புறம் தோகைகள் உதிர்ந்து போன மொட்டைத் தென்னை மரங்கள். அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது. விசாரித்துப்பார்த்த போது, வீட்டு மனைகள் பிரிப்பதாக சொன்னார்கள். எனக்கு ‘திக்’கென ஆயிற்று.
தென்னை காய்ந்து போன மரங்கள் தாம், ஆனால் அதன் உயரமான தண்டுகளின் துளைகளில்  புள்ளி ஆந்தை, பச்சைக்கிளி, பனங்காடை, மைனா, மரங்கொத்தி, கொண்டலாத்தி  என சாதாரணமாக நாம் பார்க்கக்கூடிய பறவைகள் முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கும்.  துளைகள் இப்பறவைகளால் ஏற்படுத்துவதல்ல, ஏனெனில் இதன் அலகுகள் அப்படியொன்றும் வலிவில்லை. காய்ந்த மரங்களின் தண்டுகள் வெய்யிலுக்கும், மழைக்கும் இளகிப்போய் துளை ஆவதுண்டு. இந்த பொந்துகளை இப்பறவைகள் பயன்படுத்திக்கொள்ளும். தற்போது மார்ச் (பங்குனி). இன்னும் ஒரு மாதத்தில் சித்திரை சுழி மழை வரும். பிறகு தென்மேற்குப்பருவ மழை. அப்போது நிறையப்பூச்சிகள் கிளம்பும். பிப்ரவரி நமக்கு வஸந்த பருவம். குளிர் முடிந்து கதிரவன் கதிர்கள் உக்கிரமாக எத்தனிக்கும் போது பழங்கள், மலர்கள் அரும்பி மலரும், காய்க்கும். எனவே இப் பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் காலமிது.
இந்த ரியல் எஸ்டேட் பேராசைக்காரகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டத்தொடங்கினர். நானும் நண்பரும் உணவுக்குச்செல்லும் போது பேசிப்பார்த்த போது,குஞ்சோ அல்லது முட்டையோ இருந்தால் அந்த மரங்களை வெட்ட மாட்டோம் என்றார். ஆனால் மூன்று வாரம் கழித்து வெட்டி சாய்த்தார்கள். எமக்குத்தெரிந்து மூன்று கிளிக்குஞ்சுகள் மண்ணோடு மண்ணாகின.

பொள்ளாச்சிநெடுஞ்சாலை நான்கு வழிப்பாதை ஆகிக்கொண்டிருக்கிறது. நான் போன மாதம் சென்றிருந்த போது நானும் நண்பரும் நெடுஞ்சாலை ஓரம் மேற்குப்புறமாக நின்றிருந்த மழை மரத்தில் அதாவது தூங்க வாகை மரத்தின் கிளைகளில் நான்கைந்து காகத்தின் கூடுகள் பார்த்தோம். அப்போது இரு சிறுவர்கள் உண்டிவில்லில் கூட்டை அடிக்க, நாங்கள் அவர்களைத்துரத்தினோம். கைபேசி படம் எடுக்கப்பின்னால் ஓட, அவர்கள் பயந்து பாதம் பிடரியில் பட ஓடினர். அப்பாடா! நான்கு கூடுகள் காப்பாற்றி விட்டோம். சரி! கண்ணுகளா! நெடுஞ்சாலை அகலமாகிக்கொண்டிருக்கிறது, தெரியுமில்லே! இப்ப என்ன செய்வே மக்கா? மனிதன் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். செய்யத்தயங்கவும் மாட்டான். இயற்கை மவுனமாக கண்காணித்துக்கொண்டு தான் உள்ளது. இயற்கையின் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.  

Monday, March 21, 2016


வாய்க்கால் குளியல்





            கால்வாய் நீரோடு அகலமாகப்போகும். வாய்க்கால் அதைக்காட்டிலும் குருகலாகப் போகும் எந்நேரமும் அழுப்பு சளிப்பற்று  சலசலவென ஓசை எழுப்பி வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும் வாய்க்கால் பார்த்த வசீகரத்தில் நான் தினமும் பல மணி நேரம் அதோடு பிரியாமல் இருந்தேன். சிமெண்ட்டும், கற்களாலும் கட்டப்பட்டு ஒரே நேர்கோடாக நீரைப் வழிந்தோடச்செய்வது மனிதனின் கால்வாய் மற்றும் வாயக்கால். இதன் போக்கை மனிதன் நிர்ணயிப்பான். ஆறோ அதன் போக்கை அதுவே நிர்ணயித்துக்கொள்ளும். அகலத்தில் மாறுபட்டு பள்ளம் கண்ட இடம் நோக்கிப்போகும். பொள்ளாச்சி, பணிக்கம்பட்டி கிராமத்தில் மனிதன் ஓடவிட்டிருக்கும் சிமெண்ட் வாய்க்காலில் இவன் தினமும் இரு வேளை இறங்கி ஆலிங்கணம் செய்வான். அதிகாலை ஆறு மணிக்கு விடிய எத்தனிக்கும் போதும், பகல் போது முடியும் தருவாயிலும் தண்ணீரின் வருடலில் இருப்பான். பனை மரங்களும், பனை பட்சிகளும் இவனை வேடிக்கை பார்க்கும். நீரின் வேகமும், அதன் நிறமற்ற நிறமும், ஒளியற்ற ஒளியும், ஒலியற்ற ஒலியும், இதமும், தணிப்பும் நீர் ஒரு விசித்திரமான கலவை. மேனியில் ஒட்டியும் ஒட்டாமல் ஈரமாக்கி செல்லும் பாங்கு அருமை. நீர் தேகத்தினைக் குளிர்வித்து, இருக்கும் அலுப்பை துடைத்து எடுத்து, மேனியை மசாஜ் செய்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி விட்டு, நன்றி சொல்வதற்குள் நலுவி விடும் பாங்கு என்னவென்று சொல்வேன். என் தாய் மேனி பிடித்து குளியலிட்டது போல இருக்கும். நீர் விசித்திரமானது. எந்த சோதனைச்சாலையிலும் புறப்படாத உயிரின் ஜுவிதம். அனைத்து உயிர்களின் இரத்தம். தினமும் வாய்கால் நீரைப்பார்த்தே நான்கு மணி நேரம் கழித்திருந்தான் இந்த சின்ன சாத்தன். கால்வாயில் கதிரவன் உதயம் பார்த்தான். கால் ஒட்டிய மண் ஒத்தையடிப்பாதையில் வாய்க்காலோடு இணைந்து   சில போது நடந்தான். சில போது சைக்கிளில் ஆதவனை நோக்கிச்சென்றான். வாய்க்கால் இவனுக்கு எதிர் திசையில் வேகமெடுத்து ஓடியது. கிரணங்கள் நழுவும் நீரில் சிகப்பு நிறத்தில் ஜாலமிட, சற்றே நகர்ந்தால், தங்க நிறப்பொடிகள் மிதந்து போவதைக்கண்டான். எத்தனை ஜிவனுக்கு உயிர் கொடுத்து எந்த எதிர்பார்ப்புமற்று நாள் முழுக்க நோகாமல் ஓடுவது வியப்பளிக்கிறது. ஆடைகளை அவசரமாக களைந்து விட்டு நீரைப்பார்த்து ஆனந்தபட்டு ஓடுவது, எப்படியுள்ளது எனில், ரொம்ப நாள் பார்க்காத, தன் குழந்தையை தகப்பன் அணைக்கத் தவிப்பும், தாயும், மகனும் பிரிந்திருந்த காலம் நெடிது கழிந்து, தாய் மடியில் முகம் புதைக்க ஓடிய சிறுவன் தவிப்பும் தினமும் பூபாள நேரத்திலும், மாலை சந்தியா காலத்திலும் இவனுக்கு இருந்தது. H2 O என விஞ்ஞானி சொன்னாலும் இவனுக்கு என்னவோ பிறவிதோறும் இந்த நீர் தாயாக இருந்தது.

Sunday, March 6, 2016


மலை முகடு- விமர்சனம்
ஓதிமலை

மஞ்சம் பட்டி
மலை முகடு – நூல்
நூலாய்வு……….                                                           சூலூர் கலைப்பித்தன்

மலையும் காடும் மனதுக்கு மகிழ்வைக்கொடுப்பனவாகும்.மலையோடும் காட்டோடும் இணைந்து வாழ்பவர்கள் இறைவனோடு உறவாடி வாழ்பவர்கள் என்று கூறலாம். அதனால் தான் சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் இயற்கையொட்டி வாழ்ந்தார்கள். நம்மைப்போன்றவர்கள் அப்படியொரு மலைவனவாச ஆனந்தத்தைச் சந்திக்க முயற்சித்தால் சின்ன சாத்தன் போன்றவர்களின் நூலைப்படித்து செல்வது நல்லதாகும்.
            அவர் பயணிக்கும் போது, வனவலத்தை காசு கொடுத்து வராத சுகம் என்கிறார். எப்படியெனில் வனவலம் புத்துணர்வு தரும். அதை தண்டம் என்று யாரும் கூறிவிடமுடியாது. நடக்க மறந்தவர்களுக்கு இது முடியாது. வனவலத்தில் இயற்கை அறிவு, ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, தைரியம், சமயோசிதம், உடல்வலிவு, பழங்குடி வாழ்க்கை முறை, மூலிகை, விலங்கியல், தாவரவியல், புவியியல், மண்ணியல், திசைகள், வரைபட அறிவு என பலவும் பெறலாம். அதாவது  ஒரு பல்கலைக்கழகப்படிப்பே படிக்கலாம் என்கிறார்.
            தூவானம் காட்டில் தவழும் ஆற்றைப்பிரித்துக் கூறியிருக்கும் விதம் அழகு சேர்க்கிறது. விடலையாறு, வாலிப ஆறு, வயோதிக ஆறு எனப்பிரித்து கூறுகிறார். அங்கிருந்த நீர்வீழ்ச்சியில் இவர் நீராடும் போது இவர் கவிஞரும் கூட என்பதை நீரூபிக்கிறார்.
            நீரோடு நீராகக் கரைந்து போவேன்
            மேகத்தோடு மேகமாக நகர்ந்து போவேன்
வனவிலங்கு கணக்கெடுப்பு எந்த முறையில் எடுக்கப்படுகிறது என்பதை கூறியிருப்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
            வாண்டல் டேம் என்று ஒரு டேம். இந்த பயண வழியில் ஒரு மலையருவி வருகிறது.அதில் இவர் மனம் குளிர குளிக்கிறார். நண்பர் இளங்கோவன் கூப்பிடுகிறார். அதற்கு இவர் சலித்துக் கொண்டுகூறும்போது,‘பெண்உதட்டில்முத்தமிட்டுக்கொண்டிருந்தவனைப்பிரியச்சொன்னது போல’… உணர்வில் தோய்ந்து வெளியேற மனமில்லாமல் வந்தேன் என்கிறார். இது இயற்கையோடு இணைந்த இன்பத்துப்பாலின் வெளிப்பாடு.
            நான் அடிக்கடி மலைப்பிரதேசம் செல்லக்கூடியவன். எனக்கென்னவோ இயற்கை மீது அப்படியொரு வசீகரம். நீலவானம், பச்சையாகத்தேயிலைத்தோட்டங்கள், அதன் நடுவே சில்வர் ஓக்மரங்கள், யுகலிப்டஸ்கள் நெடிதுயர்ந்து வானம் துடைக்கும் ஒட்டடைக்குச்சிகள் போன்ற நடுக்கிளைகள். ஓ…என்னவேன்று நான் சொல்வேன்? என்கிறார். அதனால் ஒரு மலைவாழ் பெண் ஆடு மேய்ப்பதை இவர் ஆட்சேபணை செய்கிறார். ஆடு வளர்த்தால் காடு போய்விடும் என்கிறார். என்னே! இவரது இயற்கை வெறி!இயற்கையை விரும்பி தினம் கலந்தால் நோயில்லை.
            மலைமுகடுஆசிரியர்சின்னசாத்தன்நூலின்ஒவ்வொரு வனவலக்கட்டுரைத்தொடக்கத்திலும் உலகப்பேரறியர்களின் பொன்மொழிகளைக்கூறி தொடங்கியிருப்பது அழகு. ‘பூமி அனைத்து மக்களின் தேவைகளையும் பார்த்துக்கொள்ளும். ஆனால் தனி மனிதனின் பேராசைக்கு அது ஈடு கொடுக்க முடியாது’ - மகாத்மா காந்தி. இவை இயற்கையை சீரழிக்காதீர் என தாக்கீது கொடுக்கின்றன. பின் வரும் கட்டுரைகள் இயற்கையை ரசித்து இன்புறத்தூண்டுகின்றன.
            வனவலம் பத்து நாட்களுக்கு ரீங்காரமிடும். பிரியும் போது ஏக்கமாகயிருக்கும். அங்கங்கே உதிர்வும், பிரிவும் இருக்கும். இப்படித்தான் பிறப்பும், இறப்பும். தனித்தனியாக வருவோம். போவோம். யாரும் எவரும் சேர்ந்தே இருப்பதில்லை, எனத்தத்துவம் பேசுகிறார். பெருமாள் முடி மலைப்பயணத்தில் ஆசிரியர் GPS எனும் (Global position system) கருவியின் பயன்பாட்டை விளக்குகிறார்.
            மானாம்பள்ளி வனவலக்கட்டுரையில் ஆசிரியர் கொங்கு நாட்டு வரைபடத்தைக்கூறுகிறார். வனம் கொன்ற வரலாறு எனக்கூறும் இவர் ஆங்கிலப்பேராசைக்காரர்கள் எப்படியெல்லாம் வனத்தை அழித்தனர் என படம் பிடித்துக்காட்டுகிறார். தர்மலிங்க ஸ்வாமி மலை என்ற மலையேற்றக்கட்டுரையில் அந்தப்பகுதியில் இருக்கும் ராணுவப்பயிற்சி முகாமைக்குறிப்பிடும் போது ‘ராணுவத்துக்கு செலவழிக்கும் பணமிருந்தால் உலகிலேயே வறுமையை ஒழித்து விடலாம்’ என்கிறார்.
            கழுகு மலை மலையேற்றக்கட்டுரையில் அங்குள்ள கோயில் முற்றுப்பெறாமல் பாதி நிலையில் நிற்கிற நிலை கண்டு வேதனையில் ஆசிரியர் அதைப்பற்றிக்கூறும் போது, ‘ எனக்கு இந்த வெட்டுவான் கோயில் முற்றுப்பெறாமல் நிற்பது கவலை அளிக்கிறது. இனிமையான கீதம் பாதியில் நின்றது போல……அழகிய இளம் பெண் தன் யவ்வன வயது கடக்கும் முன்னே இறந்து விட்டது போல…. சுவராஸ்யமான கதை பாதியில் நின்றது போல… என வர்ணனை படிப்போரையெல்லாம் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
            நீர் காகம் இறுதிப்பகுதி வேட்டைக்காரனுக்கும், பறவை ப்ரியருக்கும் நடக்கும் சம்பாஷணை போர் வித்தியாசமான உக்தியில் போகிறது. வேட்டைக்காரன் நீர் காகத்தை சுட விரும்புவதை, பறவைப்ரியர் அதை எப்படியெல்லாமோ தடுத்தும், இறுதியில் வேட்டைக்காரன் வெற்றிக்களிப்பில் நீர் காகத்தை சுட்டு வீழ்த்துவது மனதில் வடு ஏற்படுத்தி விட்டு நினைவில் அகலாத சம்பவமாக உள்ளது.

வனவலப்பயணம், மலையேற்றம், இலக்கிய நயமான இருவேறு துருவத்தில் இயற்கை பற்றிய கணவன் மனைவி சம்பாஷணை, கட்டுரைகளில் பறவைப்பிரியர்களுக்கு விருந்து, பல இயற்கை சால் அறிவுப்பொக்கிஷம் என கைப்பிடித்து வனத்துக்குள் அழைத்துச்செல்லும் சின்ன சாத்தன், இயற்கை அன்னைக்கும், ஏன் தமிழன்னைக்கும் புதிய அணிகலன் பூட்டி அழகு பார்க்கிறார். வாசித்தால் நாமும் தான். தமிழுக்குப்புதுமை படைக்கும் நூல். இது ஒரு பசுமை இலக்கிய விருந்து.