Thursday, August 13, 2015

தொங்கநாதன்…..3





             அதிகாலையில் எழுந்ததும் அலைபேசியைப்பார்த்தபோது மணி 05.30. செலக்கரிச்சல் பழனிக்கவுண்டர் சொல்வது போல மொகுல் (கருப்பு மேகம்) வானத்தை அடைத்திருந்தது. சில சமயம் மழைத்தூறல் போட்டது. தெருக்கடையில், காய்கறி ரசம் சூடாக அருந்தி விட்டு ஸ்கூட்டரில் பறந்தேன். செலக்கரிச்சல் இதோ பார் எனத்தெரிய, நிறைய கருப்புக்கிரீட வானம்பாடிக்குருவிகள் உயரே சிறிது தாழ்ந்தும் எழுந்தும் பறந்ததை வைத்தே கண்டுபிடித்து ஆனந்தப்பட்டேன். குளிரில் நெருக்கியடித்து, காதல் ஜோடி போல கொண்டைக்கருவிகள் மின் கம்பியில் அமர்ந்திருந்தைப்பார்த்து பொறாமையாக இருந்தது.பழனிக்கவுண்டருக்கு 86 வயது.மனைவியை இழந்தவர். அவர் ஓட்டு வீட்டின் முன்பு நின்று கைவைத்த பனியன், வேட்டியில் இருந்தவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு, புளிய மரத்துப்பாளையம் பாதையில் போனேன். சோளத்தட்டுகள் அறுக்கப்பட்டு கூம்புகள் போட்டு விட்டனர். கிணற்றில் எட்டிப்பார்த்தால், பத்து கூடுகளும் தொங்கநாதன் சுவடே இல்லாமல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தன. புள்ளிஆந்தை மட்டும் கிணற்று பொந்துக்குள் இருந்து உற்றுப்பார்த்தது. மயில் கூட்டைத்தேடி ஒற்றையடிப்பாதையில் வண்டியை உருட்டினேன். ஒரே ஒரு வெள்ளை முட்டை புதருக்குள் பத்து நாட்களாக இருப்பது வியப்பாக இருந்தது. ஏன்? பிற்பாடு 7 (அ) 8 முட்டைகள் வைக்கவில்லை!. ஏமாற்றமாய்திரும்பி சுல்தான் பேட்டை பாதையில் சறுக்கிப்போனேன். அங்கும் ஏமாற்றம். தொங்கநாதன்கள் தென்மேற்குப்பருவ மழைப்பருவ காலத்தில் இனப்பெருக்கம் செய்தால் அதற்கு சோளமும், நிறைய பூச்சிகளும் கிடைக்கும் என்பது அவற்றிற்கு தெரிகிறது.  ஆனால் இந்த மாநிடனுக்கு தெரிவதில்லை. அவன் அறிவிளியாய் இருப்பது எனக்கு வெறுப்பைத்தருகிறது. ‘சும்மா இருந்தவன் பெண்டாட்டி தலையைச்செரைத்தான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த தோப்புக்காரன் கிணற்றுக்குள் சீனிப்புளி மரச்சிமிறுகளில் தொங்கிக்கொண்டிருந்த தூக்கணாங்குருவிக்கூடுகளை அறுத்து யாவற்றையும் கிணற்று மேட்டில் போட்டிருந்தான். அவைகளில் குஞ்சுகள் இருந்தனவா? இனப்பெருக்கம் முடிந்து விட்டதா? என அந்த மடையனுக்குத்தெரிந்திருந்ததா? அந்தக்கூடுகளால் ஒரு பாதமும் அவனுக்கு இல்லை. அப்படியிருக்க அதையேன் செய்தான்? ஓ! மனிதா! அப்படியே விட்டிருந்தால், அதில் சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். வெண்கழுத்து தினைக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அவை இரவில் தங்கும். இவன் ஏன் இப்படி உயிரினத்துக்கு பாதகம் செய்து திரிகிறான். பூமி இவனுக்கு மட்டுமே சொந்தம் என நினைத்துக்கொண்டிருக்கிறானா? இந்த மாதிரி பாதகர்களை எப்படித்திருத்துவது? அங்கு உலவி வந்த சிட்டுக்குருவி, வெண்கழுத்து தினைக்குருவி, கருந்தலை தினைக்குருவி, சிலம்பன், புதர் சிட்டு, மைனா, பஞ்சுருட்டான் என்பன அன்று இல்லை. அந்த சுவர்க்கம் அந்த தோப்புக்காரனால் நரகமாக்கப்பட்டிருந்தது. இருந்த ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள் பாவமாக மின் ஒயரில் அமர்ந்து இருந்தன. என் செய்வேன் கடவுளே!