Friday, September 28, 2012

பறவை அறிமுகம்


கல் கெளதாரி

Chestnut-bellied Sandgrouse
(Pterocles exustus)


இந்தப்பறவை முட்காடுகளிலும், கல்லாங்காடுகளிலும் காணலாம். வரண்ட பருவத்தில் மாலை நேரங்களில் நீர் அருந்த நீர்நிலைகளுக்கு வரும். நம் நாட்டுப்பறவையான இவை கூட்டமாக வாழும். கொஞ்சமே குழிவான தரையில் தான் கூடு வைக்கும். அதில் 2 () 3 சின்னக்கற்களை வைக்கும். இந்தக்கூட்டை பெட்டை பறவையிடம் காட்டி, தலையை ஆட்டும் ஆமோதிப்பைப்பெறும்.  உடனே தன் எச்சத்தை முட்டை வடிவில் ஒரு வித நாற்றத்துடன் அந்தக்கூட்டினுள் இடும். பருந்து போன்ற பறவைகள் முட்டை போன்ற எச்சத்தை உடைத்திருக்கிறதா அல்லது கலைத்திருக்கிறதா என சில நாட்களுக்குப்பிறகு பார்த்து, எச்சம் கலைக்கப்படாமிலிருந்தால் முட்டையிடத்தொடங்கும். பொதுவாக காலனியாக கூடு வைக்கும். இதைப்பார்ப்பது அரிதாய் இருக்கும். பார்ப்பதற்கு அழகு. பறப்பதோ படுவேகம். இப்பறவை கூட்டில் அடைகாப்பதைப்பார்க்கிறீர்கள். இந்த மாதிரி பறவைகளைபற்றிய பல ஆச்சர்யத்தகவல்கள் மற்றும் முன்னூறு வண்ணப் படங்களுடன் வெளிவந்த நூல் பற்றி www.nestingbook.webs.com வலைப்பூவுக்குச்சென்று தெரிந்து கொள்ளவும்.

கவிதைஈசல்
மழை பெய்து முடிந்தது; ஈசல்கள் பறந்து வந்தன
மஞ்சள் கிரணங்கள் சாய்வாக விழுந்து மயக்கின
மாலை கவியும் முன்னம் ஈசல் வாழ்வு முடியும்
யாவரையும் மரணம் தழுவப்போவது நிச்சயம்
அதில் யாருக்காவது மாறுபட்ட கருத்துண்டா?
அப்போதுதான் இறகு விரித்த ஈசல்களுக்கு ஆனந்தம்
மஞ்சள் வெய்யிலில் மயங்கிச் சிறகடித்துத் திரியும்
விளக்கேற்றியதும் அதைச்சுற்றிக் கும்மாளமிடும்
வாலிபத்தில் மது, மாது, மாளிகை, மயக்கம்
இரவுக்குள் இறகு உதிர்ந்துத் தரையில் புரளும்
முதுமையில் தெம்பிழந்து மரணப்படுக்கை வீழம்
ஈசல்களுக்குப் பிறந்த அன்றே மரணம் நிச்சயம்
நமக்கோ ஒவ்வொரு உறுப்பாக மந்தமாகி
நெய்தீர்ந்து மெல்ல அவியும் விளக்குப் போல
அவிந்து போவோம். வாழ்ந்ததில் நிம்மதியுண்டோ?
ஏன் இப்படி? ஈசல் வாழ்வு வாழவா பூமி வந்தோம்!

சின்னசாத்தன் எழுதிய தியானக்கவிதை நூலிலிருந்து............

Thursday, September 27, 2012

பயணம்


சந்திரனும் சூரியனும்
கலம்காரி ஓவியம் துகிலில்


பயணம்
(Travel)     பயணம் எனக்குப் பிடித்தமானது. பல முகங்கள், பல மொழிகள், பல மரங்கள், பலவித நிலஅமைவு, பல உணவுகள்  சிற்பங்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள், பறவைகள், விலங்குகள், நதி, ஏரி, கடல், வானம் என இயற்கை தான் என்னைக்கொள்ளை கொள்ளும். மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை விட என்னை பரவசத்துக்குள் தள்ளுவது இயற்கை தான். இந்த இயற்கையை சீரழிப்பவன் மனிதன் ஒருவன் மட்டுமே! அதே மனிதனின் கை கலைப்பொருட்களை செய்யும் போது தியானத்தில் அதுவும் இறைவனுக்கு அருகில் உள்ளான். மனிதன் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும். கிரானைட் போல பல கனிமங்களை வரைமுறையற்று திருடுவது, சேலம் மூக்கனேரியில் வேதியல் வினாயகரைக்கரைப்பது, விளைநிலத்தில் பிளாட் போடுவது, சோலைகளைக்கொழுத்துவது என பொறுப்பற்ற செயலில் ஈடுபடுபவன் மனிதனல்ல. தோழா! பின்விளைவுகள் படு பயங்கரமாக இருக்கும். விலங்கை அனுமானிக்க முடியும், ஆனால் மனிதன் ஒருவனைத்தான் எதில் சேர்த்துவது என்று தெரியவில்லை. சென்ற சனி (22.09.12) அன்று நானும் நண்பர் பாஸ்கரும் சென்னை மாமல்லபுரம், முட்டுக்காடுக்கருகில் தக்ஷின் சித்ரா என்ற கண்காட்சியில் தென்னக கலாசாரப்பதிவுகளைக் கண்டு பரவசப்பட்டோம். தியான மனிதன் களிமண்ணில் உருவாக்கிய கலைப்பொருள், சிற்பம், கலம்காரி ஓவியம் பார்த்து ரசியுங்கள்.பூமி அழிவு பட்டால் எதைப்பார்த்து ரசிப்பது? மனிதன் பூமியைப்பண் படுத்திடல் வேண்டும். பணத்துக்காக பூமியை நாசம் செய்திடல் கூடாது. இயற்கை அழிந்த பின் பணத்தை சாப்பிடமுடியாது. நினைவில் வைப்பீராக!.


Tuesday, September 18, 2012

இலக்கியப்பறவை


தேவாரத்தில் செங்கால் நாரை
Painted Stork
(Mycteria leucocephala)

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
                சேருந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல்
     மாலைப்புரிபுன் சடையீரே   -சுந்தரர், ஏழாம் திருமுறை

செங்கால் நாரை (Painted Stork) சங்க காலத்திலேயே தொலைநோக்கி இல்லாமல் பார்த்து, ரசித்து, பக்தி மற்றும் சங்க இலக்கியங்களில் நமது புலவர்கள் பாடியுள்ளனர். சுந்தரமூர்த்திசுவாமிகள் 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருவாரூர் பதிகத்தில் செங்கால் நாரையைப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்பறவைகள் உணவைத்தேடி உள்வலசை போகும். தமிழ் நாளிதழ்கள் இப்பறவையை வெளிநாட்டுப்பறவையென எழுதுவதை திருத்திக்கொள்ளவேண்டும்.
    இப்பறவைகளை நீர்நிலைகளில் காணலாம். இதன் உணவு மீன், நண்டு,தவளை,புழுப்பூச்சிகள் ஆகும்இதற்கு வேறு பெயர்களும் உண்டு. அவைகளாவன;- செவ்வரி நாரை, மஞ்சள்மூக்கு நாரை. பதிகத்தின் பொருள்;- தினைத்தாள் போல மெல்லிய நீண்ட கால்களை உடைய செங்கால் நாரைகள் பறந்து போய் திருவாரூரை விரும்பிச்சேரும். திருவாரூரில் பொன்நிறக்கொன்றை மாலையை தன் சடையில் சூடிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

Saturday, September 15, 2012

கோவை வெய்யில்


கோவை வெய்யில்


                                  
                          செண்பகத்துக்கு தாகம்


   

   சாலைப்போக்குவரத்து அபிவிருத்தி என்று சாலையோர மரங்களையெல்லாம் வெட்டிச்சாய்க்க ஒரு சில மாதங்களிலேயே கோவையில் வெப்பம் ஏறி தென்மேற்கு பருவ மழை சுத்தமாக இல்லை. பனிரெண்டு மாதமும் வெய்யில் காலமாகப்போயிற்று. மழையைப்பார்க்க துபாய்க்காரர் மும்பாய் ஓட்டலில் தங்குவது போல நாமும் போக வேண்டியது தான். என்ன சட்டம் வந்தாலும், மரம், மரம் எனக்கரடியாகக் கத்தினாலும் யாரும் சட்டை செய்வதில்லை. சகபயணிகளே! மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டினீர்களானால் ,பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் பங்க்குகளை திறப்பது உறுதி. அதில் க்யூவில் நிற்கப்போகிறீர்கள். உலகம் வெப்பமயமாவது மண்டையில் உறைக்கவில்லையா? உலகம் குளிர நீங்கள் உடனே செயலாற்றுங்கள். உங்கள் உதாசீனத்தால் பறவைகளும் தாகத்தில் தவிக்கின்றன். இந்தப்படம் என் வீட்டு தோட்டத்தில் எடுத்தது. கோவை வெய்யிலில், பறவை செண்பகத்துக்கு தாகமோ தாகம். நீங்களும் நீர் பாத்திரம் வைத்து  பறவைகளின் தாகத்தைத்தணியுங்கள்

Friday, September 14, 2012

அதிசயப்பறவைவெள்ளைக்காகம் (White Crow)

வெள்ளக்காகா பறக்குதுஎன்று சொன்னால் யாராவது நம்புவார்களா? இப்போது நம்பித்தான் ஆகவேண்டும். புகைப்படமே நிரூபணம். இந்த காகம் (14.09.12) அன்று காலை கோவை, சிங்காநல்லூர் குளத்துக்கு கிழக்குப்புறம் உள்ள கால்வாய் ஒட்டியுள்ள தென்னைமரங்களிடையே காணப்பட்டது. நண்பன் மோகன் தான் இதைக்காட்டினான், இந்த புகைப்படம் எடுக்கவும் உதவினான்.இதை அல்பினோ (albino) எனச்சொல்வர். ஜினில் பதிந்துள்ள நிறமிகள் தொடர்பான உத்தரவு, நிறமி சேர்க்கையின் போது தவறி விட்டது. விலங்குகளிலும், ஏன் மனிதஇனத்திலும் இது நிகழ்வதுண்டு. காகம் அமர்ந்த நிலையில் வெள்ளைக்கோடு தெரிகிறது பார்த்தீர்களா?. பிறகு இறகு விரித்துப்பறந்த நிலையில்  வெள்ளைக்காகம் அதிசயப்படவைக்கிறது. மற்ற காகங்கள் இதை ஒதுக்குவது தான் வேதனையளிக்கிறது

Tuesday, September 11, 2012

மலர் அஞ்சலி


நிஷாகந்தி
வாடைக்காற்றில் வாடினாலும்
குளிர் மயிற்க்கால்களைச்சிலிர்த்தாலும்
ஜலதோஷம் இந்த ராவில் பற்றினாலும்
உனைவிட்டு அகலேன்! செல்லமே!

உறக்கத்தில் விழிகள் சொருகினாலும்
ராப்பொழுது ஏறிப் பயமுறுத்தினாலும்
மறுநாள் பணிக்குச்செல்வதானாலும்
உனைவிட்டு விலகேன்! காந்தமே!

விழிகள் அகலவிரித்து வலித்தாலும்
நிலவொளி இல்லாது போனாலும்
ஆடிக்காற்று மழைத்துளிகளை விசிறினாலும்
உனைவிட்டுப்பிரியேன்! வசீகரமே!

வீசும் குளிரலையில் நறுமணத்தோடு,
நடுநசியில் இதழ் விரித்து, காந்தப்பார்வையில்
விழிகள் விரித்து ,நோவுற நோக்க
சொக்கிவருகுதே! சொக்கக்கள்ளியே!

இதோ வருகிறேன் மலராமல் காத்திரு.
எனக்காக மலர்த்தாமல் வலிகாங்கிய
நடுநசிப்பூங்கொத்தே! ஆராதிப்பேன்
உனை விட்டு நீங்காதிருப்பேன்! தேனே!

மலர்த்தாமல் தாமதிக்க, நரம்புகள் வலித்ததோ
பதிவிரதையே! ஒரேயொரு இரவுதானே
என்னோடு இருப்பாய்! பிறகு தலைகவிழ்ப்பாய்
இம்மரணம் அகாலமரணம்! அய்யகோ!

ஆகவே உனை விட்டுப்பிரியாதிருப்பேன்.
ராமுழுதும் உன் விரிந்த விழி பார்த்து
கவிதை சொல்வேன்! உனக்கு என் செய்குவேன்?
இக்கவிதை மட்டுமே சமர்ப்பணமாகுமா?

சூரியனைக்காணாமல் பகல் உணராமல்
மலர்ந்தவுடன் மரிப்பது சாபமோ!
ஆகவே உனைவிட்டு நகராதிருப்பேன்! உன்னதமே!
பிரமிப்பே! நிலத்தில் பூத்த வெண்தாமரையே!

இந்த ரா முழுதும் உன்னோடிருப்பேன்
புலரும் போது நீ இருக்க மாட்டாயே!
என் செய்குவேன்? நீ வாங்கி வந்த வரமிதுவா?
அதிசயமே! இலை விளிம்பு மலரே!

நான் மன்னனாகில் ஆணையிடுவேன்!
நீ மலர்ந்த இரவு யாரும் உறங்காமல்
உன் நினைவாய் விழா எடுக்கவே
ஆணையிடுவேன்! தவறி உறங்கினால்
அவர் தலை கவிழும் உன் போலவே.

நடுநசி நழுவும் போது நின் விழிகள் சொருகும்
தலை கவிழும், நரம்புகள் துவளும்
துடித்துப்போகிறேன். என் சுகந்தமே!
மரித்தாலும் காற்றில் மணம் மரிக்காது.
ஆகவே ரா முழுதும் உனை விட்டு அகலேன்.

வினாடி தோறும் உன் மலர்ச்சியிலென்
இதயம் நின்று போகட்டுமே!
நீ இற்று தலை கவிழ்ந்ததும்
நான் நானாக அற்று தலை கவிழ்ப்பேன்.
நீ நானாக மலர்ந்து, நான் நீயாக விரிந்து
நீ நானாக கவிழ்ந்தும், நான் நீயாக வாடியும்
நறுமணமான இந்த ராக்காற்றில்—நாம்
சங்கமிக்கலாம்- உயிக்குள் உயிராக---………சின்னசாத்தன்Saturday, September 8, 2012

பறவை அறிமுகம்


பெரியகாட்டு ஆந்தை
Forest Eagle Owl (Bubo nipalensis)

                இந்த ஆந்தையை சிறுவாணிக்காட்டில் பார்த்தேன். இது இரண்டடிக்கு மேலிருக்கும்.இரவு நேர வேட்டைக்காரன். சின்ன மயில், சின்ன ஓநாய் கூட பிடித்துத்தின்று விடும். இது இரவு நேரத்தில் அலறிக்கேட்டால் நமது இரத்தம் உறைய பயந்து விடுவோம். மேற்குத்தொடற்ச்சி மற்றும் சேர்வராயன் மலைகளில் பார்க்கலாம். பகற்ப்பொழுதில் இலைகள் அடர்ந்த மரங்களில் அமர்ந்து ஓய்வெடுக்கும். அந்த வேளையில் என் லென்சில் மாட்டியது

தேவதை தும்பி


Damselfly தேவதை தும்பி


     அழகாக இலையில் அமர்ந்திருக்கும் இந்த தும்பி  Damselfly என ஆங்கிலத்தில் பெயர். தமிழில் தெரிந்தவர்கள் சொல்லலாம்.இதைப்படம் பிடிப்பது கடினம். ஏனெனில் உருவம் அப்படி. தும்பிக்கு(Dragonfly)கண்கள் ஒட்டுமொத்தமாக இருக்கும். இதற்கு தனித்தனியாக இருக்கும். அமர்ந்த நிலையில் இறக்கைகள்  வாலை ஒட்டியிருக்கும். இவை கொசு, பறக்கும் சிறு பூச்சிகள் என உண்ணும். பெண்தும்பி நீர் அல்லது மூழ்கிய தாவரங்களில் முட்டையிடும். முட்டை பொரிந்து நிம்ஸ்   (Nymphs) வெளிவரும். இவை கொசு லார்வாக்களை உண்ணும். பல சட்டை உரிதலுக்குப்பின் இந்த அழகு தேவதை வெளிப்படுவாள்.