Saturday, November 28, 2015


புள்ளி ஆந்தைக்கு ஆபத்து     Bird rescue





                ஆடி 18, 2014(ஆகஸ்ட்-3) அன்று ஆடி அமாவாசை, அம்மாவும், தம்பியும் என்னை, மேற்கே உள்ள இராமநாதபுரம் வீட்டில், அம்மாவாசை படையல் இட்டுக்கும்பிட வருமாறு அழைத்திருந்தனர். கீதா மகள் வசிக்கும் அரக்கோணம் சென்றிருந்தாள். மணி பதினொன்று இருக்கும். நல்ல வெளிச்சமான கதிரவன். பேருந்து நிலையம் செல்ல நடந்து போய்க்கொண்டிருந்தேன்.
            அலைபேசிக்க்கடையைத்தாண்டிய திருப்பத்தில் ஒரு புள்ளி ஆந்தை மின் கம்பியில் மாட்டித்தவித்துக்கொண்டிருந்தது. நான் இதைக்காலையில் (ஞாயிறு) ஏழு மணிக்கு பறவை நோக்கலுக்குப் போகும் போது பார்த்தேன். அந்த இடம் வீடுகளுக்கு நடுவே ஒரு அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட வெற்று பூமி. அங்கு சாணிக்குவியல் இருக்கும். கடைக்கோடியில் தில்லி முட்புதர்கள். இந்த அரை ஏக்கர் நிலத்தைச்சுற்றி வீடுகளுக்குச்செல்லும் மின்சாரக்கம்பிகள். ஒன்றிரண்டு வேம்பு மரங்கள்.
            இந்த மாதிரியான இடத்துக்கு காலை, மாலை பல பறவைகள் வரும். சாணியில் புழு, பூச்சிகள் கிடைக்கும். வெற்று நிலத்தைக்கிளறினாலும் சில இரைகள் கிடைக்கும். அதனால் பல பறவைகள் அங்கு வருவது வியப்புக்குரியதல்ல. கரிச்சான், கொண்டலாத்தி, புள்ளிதினைக்குருவி, சிட்டுக்குருவி, வெண்மார்புமீன் கொத்தி, மைனா,காகம், வலசைப்பருவத்தின் தாம்பாடிகள் சில சமயம் ஆந்தை, மாட்டுக்கொக்கு, புதர்க்குருவி என வரும். அன்று காலை செல்லும் போது ஒரு புள்ளி ஆந்தை, தினைக்குருவிகள், சிட்டுக்குருவி, கரிச்சான் என சில பார்த்தேன். நான் அன்று, பெட்ரோல் அடித்துவிட்டு, குளத்தின் வடக்கு ஏரி மேட்டில் நடையுடன் கூடிய பறவை நோக்கல் செய்தேன்.
            மீண்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புள்ளி ஆந்தைக்கு வருவோம். அது இளைஞனாக இருக்க வேண்டும். அந்தப்பறவை அருகில் இரண்டு கம்பிகள் இணைக்கும் ‘ப’ வடிவக்கம்பி சந்திப்பில் கெட்டியான நூலில் சிக்குண்டிருந்தது. நான், அலைபேசிக்காமெராவில் பதிவு செய்துவிட்டு, இதை எப்படிக்காப்பாற்றுவது என யோசித்தேன். முதலில் மின்சாரம் தாக்கி விட்டதோ என நினைத்தேன். இல்லையே! அது தவித்துக்கொண்டிருந்தது. எதிர் வீட்டில் கம்பு கேட்கலாமெனில், இரு வீட்டில் யாரும் தென்படவில்லை. கம்பு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.
            அப்போது ஒரு 18 வயது மதிக்கத்தக்க பையனும், பத்து வயது மதிக்கத்தக்க பையனும் வந்தார்கள்.
என்ன பாத்துட்டிருக்கீங்க?
கண்ணாடி போட்டிருக்கே! என்ன பாத்துட்டிருக்கேன்னு தெரியலையா?
இது என்னங்க?
                                                                                                                                                2
ஆந்தை. சரி! உங்க வீடு எங்கே?
அங்கே.
வா! ஒரு கம்பு எடுத்திட்டு வரலாம்.
அவர்கள் வீட்டுக்குச்சென்றேன். இரும்பு நுழைவாயில் கதவு தென் புறத்தோட்டத்தில் நாய் உலைத்தது. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆசிரியை. வரவேற்றனர்.ஒரு பிளாஸ்டிக் மின் கம்பிக்கு உறை போடும் பைப் கிடைக்க, அதைத்தூக்கிக்கொண்டு, விபத்து இடத்துக்கு வந்தேன்.
மூன்று கெட்டி நூல்கள், ஆந்தையைப்பிணைத்திருந்தன.கம்பியில் அமர்ந்திருந்த ஆந்தை மெதுவாக நகர, நூல் காலில் மாட்டிக் கொள்ள, அதை உதற, சுழன்று போய் உடம்பில் சுற்றி விட்டது போலும். பிளாஸ்டிக் பைப் காற்றில் ஆடியது. நூல் ஆந்தையின் கழுத்தை இறுக்கிவிடுமோ என்ற பயத்தில், எப்படியோ, கஷ்டப்பட்டு ஒரு நூலை அறுத்தேன்.
            PVC  20 அடி உயரக்கம்பு காற்றுக்கு ஆடியதால் மீண்டும் ‘கவட்டி’ யுள்ள கம்பு கிடைக்குமா என ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன். கூட இரு சிறுவரும் வந்தனர். சிறு ‘கவட்டி’ உள்ள ஒரு கம்பு, அதில் இன்னொரு கம்பு கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் விபத்து இடத்துக்கு வந்தேன். ‘கவட்டி’யில் நூலை சிக்க வைத்து, அதை அறுக்க முயற்சித்து, முயற்சித்துத்தோற்றேன். இணைத்திருந்த கம்புகள் முன்னும் பின்னும் நழுவி ஆடின. குண்டான ஆசிரியர், அந்தக்கம்புகளை இறுக்கிக்கட்டினார்.
            மீண்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, பிரபாகரன். குடும்ப நண்பர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் கம்பை வாங்கி, முயற்சியில் ஈடுபட்டார். இரண்டு நூல்களில் மட்டுமே புள்ளி ஆந்தை தொங்கிப்போராடிக்கொண்டிருந்த்து. கழுத்து இறுக்கப்படாமல் ஆந்தை நூலைக்காலால் தடுத்திருந்தது, அதன் அறிவை உணர முடிந்தது. இதை குண்டாசிரியர் சிலாகித்தார். மேலும்
‘மின்சார இலாகாவிற்கு போன் செய்து மின் இணைப்பை துண்டிக்கலாம்’ என்றார்.
 ‘அது நடக்காது’ என்றேன்.
பிரபாகரன் இரண்டு நூல்களை அறுத்து வெற்றி பெற்றார். ஆந்தை கழுத்து இறுகாமல் தப்பித்தது. இதில் இன்னொரு சிக்கல் இருந்தது. மின்சாரம் தாக்கி விடுமோ என பயமிருந்தது. ஆனால்அதி மின்கடத்தும் ஒயரில்லை.மேலும் PVC பைப் கம்பு, பிறகு மூங்கில் கம்பு, இவை தவிர செருப்பு அணிந்திருந்தேன். விடுபட்ட ஆந்தை கிழக்குப்புறமாக, இருந்த வேப்ப மரங்களுக்கு அருகில் பறந்து, தரையின் நிழலில் அமர்ந்தது.
             நாங்கள் ஓடிப்போய் அதன் அருகில் சென்று நின்றோம். பிரபாகரன் கையில் எடுத்தார். ‘கழுத்தில் நூல் சுற்றியிருக்கா, பாருங்க!’ என்றேன்.
‘ இல்லே. நூல் சுற்றலே’ என்றார் பிரபாகரன்.
           
                                                                                                                                                3
ஆந்தை கண்கள் சுற்றிலும் மஞ்சள், நடுவில் கருப்பு. உடல் பழுப்பு மற்றும் புள்ளிகள். அரையடி இருக்கும். புள்ளி ஆந்தையை ஏராளமான முறை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இது எங்கள் காலனியில் அடிக்கடி பார்க்கலாம். ‘கிர்ரிக், கிர்ரிக்’ என ரசிக்க முடியாத ஒலி எழுப்பி என் இல்லத்து அருகிலிருக்கும் ஒயரின் இருளில் அமர்ந்திருக்கும். தெரு விளக்கு வெளிச்சத்துக்குக்கீழ் முன்னும் பின்னும் பறக்கும் பூச்சிகளை குறுக்குமறுக்கும் பறந்து பிடித்து ஒயரில் அமர்ந்து உண்ணும். இவை மரப்பொந்துகள், கிணற்றுப்பொந்துகள் போன்ற இடங்களில் ஏழு, எட்டு என குடும்ப உறுப்பினர்களோடு இருக்கும், அல்லது ஜோடியாக இருக்கும். இதன் உணவு எலி, வெட்டுக்கிளி, தவளை. உழவர்களுக்குத்தோழன். ஒரு நாளைக்கு ஒரு எலியாவது வேண்டும். குண்டு ஆசிரியர் ஓய்வு பெற்றவர்,
‘ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது,பழவகைகள் சாப்பிடும்’ என்று என்னிடம் சொன்னார்.
நான், ‘கிடையாது’ எனச்சொன்னதை அவர் நம்பவில்லை. புள்ளி ஆந்தையை விடுவித்ததை, யுவன்கள் விடியோ, மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
பத்து வயதுப் பையன் சற்று பயந்தவாறு, ‘ தொட்டுப்பார்க்கட்டுமா?’ என,
 ‘தொடு’ என்றார் பிரபாகரன்.
அவன் புள்ளி ஆந்தையை வாங்கினான். அவன் கண்களில் வியப்பு கலந்த மகிழ்ச்சி. விரலில் தடவிக்கொடுத்தான். ஆந்தை களைப்பாகவும், நடுக்கத்துடனும் இருந்த்து. அது பறக்கும் தெம்பில் இல்லை. ‘தண்ணி கொடுக்கலாம்.’ எனப்பிரபாகரன் சொல்ல 18 வயதுப்பையன் விரைந்து போய் நீர் கொண்டு வந்தான். புள்ளி ஆந்தைக்கு உள்ளங்கையில் நீர் ஊற்றித்தந்தார் பிரபாகரன்.
            18 வயது, 10 வயதுப்பையன்கள் ஆந்தைகளைப்பெற்றுக்கொண்டனர்.
 ‘ஆந்தை, களைப்பும், பயமும் தெளிஞ்ச பிறகு பறக்க விடலாம்’ என ஆசிரியர் சொல்ல,
நான், ஆமா, அப்படியே செய்யுங்க’ என்றேன்.
            தம்பிகளே! பெயரென்ன?
அரவிந்த-18 வயது, பிரவின் 10 வயது.
‘அரவிந்த் போகும் போது, உங்களுக்குத்தான் கிரடிட். நீங்க தானே பறவை ஆபத்திலிருந்ததை முதலில் பாத்திங்க. நீங்க பிரஸ்சா?
‘ அட! நா எதுவுமில்லே’
            இரண்டு நாட்களுக்குப்பிறகு, ஆசிரியரைப்பார்த்து, ‘ ஆந்தை பறந்து போச்சா? என ஆவலுடன் கேட்டேன்.
            ‘ஆந்தை வீட்டுக்குள்ளார வரக்கூடாதுன்னு பொண்டாட்டி சொல்லீட்டா. நாங்க வேப்ப மரத்துலகொண்டு போய் விட்டுட்டோம்.’

தினமும் ஒரு எலியாவது பிடித்து உண்டு, விவசாயிக்குத்தோழனாக இருக்கும் ஜீவனை வெறுக்கும் மக்கள் எப்பேர்பட்ட மூடநம்பிக்கையில் இருக்கிறார்கள் பாருங்கள்! இது எப்போது விலகுவது?

Tuesday, November 3, 2015

என்னெதிரே ஒற்றை இருக்கையில்..............

































என்னெதிரே ஒற்றை இருக்கையில்
நான் இசைத்த பாடலைப் பாடும் உனக்கு,
உயிரை உறிஞ்சும் குரல் வளமை;
விரல் நயனங்களும், புருவ ஏற்ற இறக்கமும்
உதட்டுச்சுழிவும், கண்களின் உயிர்ப்பும்
பாடும் பாவமும், சொல்லாமல் சொல்லும்
உனது ரசிப்பை; அபரிமித ரசனையை;
எனது இசைக்கு மேலும் உயிர்ப்பானாய்
தென்னம் பாளையென பற்களின் ஒளிர்வும்
ஓ! நாக்கில் ஊறிவரும் எனது பாடலும்
என்னவென்று சொல்வேன்! தோழி!
இதுவே நமது கடைசி சந்திப்பா?
இந்த உடலான இசைக்கு
உன் உயிர் கலந்த குரல் உயிர்ப்பூட்டும்
தேனும், கற்கண்டும் கலந்த கலவை-இது
தெவிட்ட ஞாயமில்லை! தோழி!
மேலும் சந்திபோம் என்பதில்லாத போது
இந்த இனிமையான பாடல் ரீங்காரமிடும்
என்னைச்சுற்றிஉன் நினைவுகளைப்போல…………….சின்ன சாத்தன்