Saturday, December 27, 2014


My book "Diary on the nesting behaviour of Indian Birds"-Author Chinna Sathan is now available in, on line shop amazon.in


சிட்டுக்குருவியைப்பற்றி சில உண்மைகள்


அம்பர் கோட்டை, பிகானிர் முன்புற வளாகத்தில் மாடப்புறாக்களும் சிட்டுக்குருவிகளும்

 ஜெய்ப்பூர் நகர வீதியில் சிட்டுக்குருவிகள்

            சிட்டுக்குருவி செல்போன் கோபுரத்தினால், அதன் ஜனத்தொகை குறைந்து விட்டது என்பதை விட அதற்கு கூடுகட்ட இடம் தற்போதைய RC கட்டிடங்களில் இல்லை என்பதும், அதற்கு உணவாகும் தானியங்கள் சிந்துவதில்லை என்பதும் தான் உண்மையான காரணங்கள். சூலூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அதாவது வெளியூர் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு தென்புறம் இரண்டு வேப்ப மரங்கள் உள்ளன. இதற்கு அருகில் உள்ள பெரிய மாடி காம்ளக்ஸ் மேலும் அதற்கு அருகில் உள்ள கட்டிடங்கள் மீதும் செல்போன் கோபுரங்கள் உள்ளன. இருந்தும் சூலூர் ஊர் குருவிகள் 50 ஜோடியாவது இரவு இங்கு தங்குகின்றன. மாலையில் சென்றால் ‘கிச்,கிச்’ என இதமான ஒலி, குருவிகள் தூங்கப்போகும் முன்னம் கேட்டு மகிழலாம்.
          இது போல அதிகாலையில் ‘கிச், கிச்’ ஒலி எழுப்பி ‘குழு குழு’வாக திசைக்கு ஒரு குழுவாக பறந்து சென்று, தோட்டி வேலை செய்வதில், தனது பசியை ஆற்றிக்கொள்கின்றன. தினமும் இதைப்பார்க்கலாம். செல்போன் கோபுர பாதிப்பு இல்லாததனால் தானே அங்கு தினமும்தங்குகின்றன. முன்பிருந்த ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் இப்போது இல்லை. தாழ்வாரங்கள், ஓடு மற்றும் குடிசை பனை, தென்னை ஓலைகள் கூடுகட்ட இடமாயிருந்தது. இப்போது அவை எங்கே? கிராமத்தில் கூட RC வீடுகள். தானியம் சிந்தாத மாதிரி பிளாஸ்டிக் மூட்டைகள். அரிசியைத்தவிர மற்ற தானியங்கள் யாரும் உண்பதில்லை. குருவிகள் எண்ணிக்கை குறைந்து போனதற்கு இது தான் காரணம். தாளப்பறக்கும் பறவை இது. ஆனால் விண்முட்டும் கட்டிடங்களின் ஊடே எப்படிப்பறப்பது?

          ராஜஸ்தானில் நான் ஜெய்சால்மிரிலிருந்து ஜோத்பூர் ரயிலில் வரும்போது, ரயிலில் சிந்திய தின்பண்டங்களை தின்ன குருவிகள் சில வந்து ரயில் பெட்டிக்குள் மேய்ந்து கொண்டிருந்தது பார்த்து வியந்து போனேன். ராஜஸ்தானில், மாடப்புறாக்களுக்கு மக்காச்சோளம் போன்ற தானியங்களை, காரில் வந்தும், மோட்டர் சைக்கிளில் வந்தும் மூட்டையில் விசிறி விடுகிறார்கள். பிகானிர், அம்பர் கோட்டை முன்பு இந்த மாதிரி தூவி விட்ட தானியங்களை மாடப்புறாக்களோடு சிட்டுக்குருவிகளும் கொத்தித்தின்கின்றன. ராஜஸ்தான் மக்கள் இப்படி தானியம் விசிறி விட்டிருப்பதைப் பல அரண்மனை முன்பு பார்த்தேன். அவர்கள் பறவைகளின் மேல் அன்பு வைத்துள்ளனர். மாடப்புறாக்கள் அபரிமிதமாக உள்ளன.அதே வேளையில் குருவிகளும் தமிழ் நாட்டை விட அதிகம் உள்ளன. மக்களை ஒட்டி வாழும் இந்தப் பறவை ராஜஸ்தானில் அதிகம் இருக்கும் போது இங்கு குறைவு பட்டது மனிதனின் தங்குமிடக் கட்டிடமும், உணவு முறையும் மாறிப்போனதால், நம்மை நம்பியிருந்த சிட்டுக்குருவிகள் எங்கோயோ தொலைந்து போயின. இவைகளை மீட்டு எடுக்க வேண்டும்.

Saturday, December 20, 2014

யமுனை நதிக்கரைப் பறவைகள்

Ruddy Shelduck

Spurwinged Lapwing

            காதல் சின்னமான தாஜ்மஹாலுக்குப்பின் புறம் யமுனை நதி செல்கிறது. நதியில் வெள்ளம் அதிகம் இல்லை. நான் நவம்பர் ’2014 –ல் சென்ற போது சில பறவைகள் நதிக்கரையில் கண்டேன். அவை கரண்டி வாயன்(Spoon Bill), நீர் காகம்(Cormorant), மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork), நெடுங்கால் உள்ளான்(Black winged Stilt), பட்டைத்தலை வாத்து( Bar headed goose), கருட தாரா(Ruddy Shelduck), ஸ்பர் விங்குடு புலோவர்(Spurwinged Plover) என்ற பறவைகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
கடைசி இரு பறவைகளும் எனக்கு புது அறிமுகம். கடைசிப் பறவைக்கு தமிழிலில் பெயர் இன்னும் வைக்கவில்லை போலும். எனது பறவை குருநாதர் க. ரத்னம் நூலான தமிழில் பறவைப் பெயர்கள் நூலில் இல்லை. இது தமிழ் நாட்டுக்கு வருகை புரிவதில்லை. இறுதிப்பறவையை நான் ஆக்ரா யமுனை நதிக்கரையில் பார்த்த போது செங்கண்ணி(Redwattled Lapwing) எனத் தவறாகப்புரிந்து கொண்டேன். கணனியில் உருப்பெருக்கிய போது அதனை இனம் காண முடிந்தது. இதற்கு உதவியது சலிம் அலியின் The Book of Indian Birds. கடைசி இரண்டு பறவையும் தமிழ் நாட்டுக்கு வருகை புரிவதில்லை. கருட தாரா வாத்து. இது லடாக், நேப்பாள், திபெத்தில் இனப்பெருக்கம் செய்வது. இது ஒரு குளிர் கால வருகையாளர். ஆற்றில் நீந்திக்கொண்டும், தோளில் முகம் புதைத்து உறங்கியும், பறந்து கொண்டும் குழுவாக இருந்தது. இவை மிக அழகான வண்ணத்தில் கண்ணுக்கு சுவை கூட்டுகின்றன. ஆறு, குளங்களில் இவற்றைப்பார்க்கலாம்.
ஸ்பர் விங்குடு புலோவர் இரண்டு யமுனை ஆற்றின் மணற்கரையில் நின்றிருந்தன. இவை வாழிடம் இங்கு தான். இதனை நான் அடையாளம் கண்டு கொண்டது ஸ்வராஸ்யமான விஷயம். அவைகளாவன;-
1.    வட இந்தியாவில் பார்த்தது.
2.    ஜோடி
3.    ஆற்றங்கரை மணற்வெளி
4.    கூனிக்குனிந்திருக்கும் கருப்புத்தலை
5.    நம்பார்வைக்கு தவிற்கும் பாவனை
6.    இதன் வடிவம், நிறம்

இவ்வாறாக ஒரு பறவை செங்கண்ணி என நினைக்க வைத்து தடுமாற வைக்கும் போது நாம் இப்படித்தான் இனம் காண வேண்டும். இதற்கு திறமையான நுண்ணறிவு தேவை. இந்த பறவை டையாளம் காணல் வெற்றிகரமாக அமைந்து விட்டால்,  நமக்கு அன்றைக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைத்தரும்.

Thursday, December 11, 2014


ஜெய்சால்மிர்


  


                       

பயணங்கள் ஆன்மாவைப்பக்குவப்படுத்தும் 

        நாங்கள் ராஜஸ்தான் பிரயாணத்திட்டம் தயாரிக்கும் போது ஜெய்சால்மிர் போக நினைக்கவில்லை. ஆனால் பிகானிர் சுற்றி வரும் போது வழிகாட்டி சன்சய் கண்டிப்பாக ஜெய்சால்மிர் போக வேண்டும். இவ்வளவு தூரம் வந்த பிறகு நீங்கள் தார் பாலைவனம் போகாமல் போனால் உங்கள் உலா முற்றுப்பெறாது என வற்புறுத்தவும், எனக்கும் அங்கு செல்ல ஆசை இருந்துகொண்டே இருந்ததும் காரணமாக எங்கள் உலாவை மாற்றி அமைத்தோம். காலை 7.20-மணிக்கு லால்கர் ஃபோர்ட்டிலிருந்து ரயில். குளிரில் கம்பளியோடு சுறுட்டிக்கொண்டு எழுந்து . வெடவெடக்க ஆட்டோவில் கனத்த பைகளோடு 05.45-க்கு ஏறி, 5 கி.மீ பிரயாணித்தோம். ரயில் பாலைவனத்துக்குள் பிரயாணித்தது, எனக்கு வாழ்நாளில் புதுமையாக இருந்தது. பாலையில் கூட பறவைகள், சில விளைச்சல்கள், மேயும் ஒட்டகங்கள் என பிரயாணத்தை அனுபவித்தேன். போகும் வழியில் கஜ்னர், மான்கள் சரணாலயம் வந்தது. அது ஒரு அடர்த்தியான முட்காடு.
     ஜெய்சால்மிரில் இறங்கினோமோ இல்லையோ எங்களைச்சுற்றி தங்கும் விடுதிக்காரர்கள் சூழ்ந்து கொண்டு இழுத்தார்கள். அலாவுதீன், சாம்ராட் விடுதி முதலாளி ஜுப்பில், பிரயாணித்து மதியவேளையில் 1.30-க்கு விடுதியை அடைந்து குளித்து, உணவு வேளை தவறியும் உண்டோம். இளைஞர்,மண்டூ என்ற ஓட்டுனருடன் மணல் குவியல்களுக்குப்பறந்தோம். கோட்டைகள் தற்போது டிக்கெட்டில் காட்சிப்பொருளானதுஅல்லது அது ஓட்டலாகிப்போனது. எத்தனை அழகான கோட்டைகள்! ஒளிரும் விளக்குகளில் ஒளிர்ந்து மயக்கின. அவற்றில் தங்கக்கூடிய அளவு நான் செல்வந்தனில்லையே என ஆதங்கம் மிகுந்தது. பாகிஸ்தான், அங்கிருந்து 60 கி.மீ தூரத்திலிருந்தது. 40 கி.மீ ஜிப்பில் பிரயாணித்து தார் மணல் குன்றுகளை அடைந்தோம். மாலை சூரியன் அஸ்தமனமாவதற்குள் தார் பாலைக்குள் நுழைந்து விடவேண்டும் என பரபரப்பு எனக்கு. ஆனால் நண்பர் இங்கு வந்து ஒரு ஜெயின் கோயிலிற்குள் நேரத்தை செலவழித்தது, டென்ஷன் கொடுத்தது. நான் பாக்யவான். சரியாக சூரிய அஸ்தமனமாகும் போது  தார் பாலைக்குள் ஒட்டக முதுகில் சவாரியில் இருந்தேன். கடவுளே! மணல் குன்றுகள் அட!அட! என்னென்ன வடிவங்கள்! தாழ்ந்தும், ஏறியும் ஒரு அழகிய பெண்படுத்திருந்ததைப் போல…… ..…….
             ஆரஞ்சு சூரியப்பந்து ஒட்டக முதுகில் விழுந்து மறைய எத்தனித்தது. என்னை நோக்கி வந்த இளம் பெண்கள் ராஜஸ்தான் அடர் நிறம் மற்றும் அணிகலன்களில் ஒப்பனையோடு இருந்தனர். என்முன் பாட்டுப்பாடியவாறு ஆடினர். ஒளிப்படமாக என் காமெராவுக்குள் சென்றனர். ..ஒ....... இவர்களுக்கு இந்த மணல்வெளிதான் சொற்பமான காசு கொடுக்கும் பூமி. Silhouette ராஜஸ்தான் இளம் பெண்களின் நடன அசைவுகள், முற்றுமான பாலைக்குன்றுகளில் சிகப்பு ஆதவனில் மறைய எத்தனிக்கும் தருணம், ஒட்டகங்கள் என்னை வேடிக்கை பார்க்க….என் வாழ்நாளில் எஞ்சிய நாட்களில் இதுவும் என்னுள்ளே எஞ்சி நிற்கும் நண்பரேநான் பாக்யவனாகிப்போனேன்.


Saturday, December 6, 2014


பரத்பூர் பறவை சரணாலயம்


சரணாலயத்துக்குள் நான் சுற்றிய சைக்கிள்

Lessor whistling Teal

Nilgai

            1938-ல் இந்தியாவுக்கு வியாபாரியாக வந்த ஆங்கிரலேயன் வைஸ்ராய் லின்லில்த்கோ என்ற கிங்கரன் 12 நவம்பர் அன்று 4273 பறவைகளை சுட்டு மாபெரும் பாவத்தை வாங்கிக்கொண்டான். ஜாலியன்வாலா படுகொலைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம். இந்த இரத்தப் பீரிட்ட, பறவைக்கதறல் எதிரொலித்த 29 .கி.மீ இடத்தில் நான் இன்று சைக்கிளில் உலவிக் கொண்டு இருக்கிறேன். காலை 07.30-க்கு இன்னும் காற்றில் பனிக் குளர் இருந்தது. தேநீர் மட்டும் எனது அலுவலக ஊழியர் தயாரித்துக் கொடுத்ததை அருந்தியிருந்தேன். மதியம் 12.00 மணி வரை சைக்கிளில் தனியாக நின்று, மிதித்து, தள்ளி, நடந்து உலவினேன்.என்னோடு வந்த ஒரே ஒரு நண்பரும் சைக்கிளில் வேறு மார்க்கத்தில் சுத்திக்கொண்டிருந்தார். பசியிருப்பினும் பறவைகளின் நேசத்தின் மிகை, அதை அசட்டை செய்தது.
அங்கங்கே காய்ந்த மடுக்கள், இடையே அகன்ற கால்வாய், குளம் என வித்தியாச முகம் கொண்டு எனைப்பார்த்த பூமியில் பான்கங்கா, காம்பில் என்ற இரு நதிகள் நீரை ஊட்டுகின்றன. மரங்கள், முட்காடுகள், நீர் நிலை என அப்சரஸ் நாட்டிய மேடை இது. இங்கு மான்கள் வேட்டை, சிறுத்தை வேட்டை நடந்த காட்டுமிராண்டிக்காலமும் உண்டு. ஆங்கிலேயன் துப்பாக்கியோடு இந்தியாவுக்கு வந்ததிலிருந்து, அரக்க குணத்தால் 50 ஆண்டுகள் வேட்டை, சகட்டுமேனிக்கு நடந்துள்ளது. 1902-1965 வரை இந்த Keoladeo bird sanctuary-ல் வாயில்லா ஜீவன்களின் கொலைகள் நடந்தது. 1965-ல் கடைசி சிறுத்தை, பலி கொண்டபிறகு நாகரிகம் தலைதூக்கியது. 1967-ல் வனக்கட்டுப்பாட்டில் வந்தது. 1981-ல் ராம்சர் சைட் பிறகு 1985-ல் World heritage site-ஆனது.
வலசைப்பறவைகள் இந்த வருஷம் நிறைய மழை பெய்ததால் பல்வாறு இடங்களுக்குப் பிரிந்து பறந்துவிட்டன. அதனால் எனக்கு ஏமாற்றமே நிலவியது. 2500 கி.மீ தாண்டி வந்தும் எனதருமைப்பறவைகள் என்னைக்காணாது வேற்று நிலம் போனது. எல்லாமே அறிமுகமான பறவைகள். Blue throat, Scope Owl இரண்டு மட்டுமே எனக்கு புது வரவு. Lessor whistling Teal, Shovellor, White cheeked bulbul மற்றும் Nilgai (மான்இனம்!) கண்ணுக்கு விருந்தளித்தன. கானா கேட் எனும் இடம், சரணாலயப்பகுதி. இது ஆக்ரா--ஜெய்பூர் பிரதானசாலையில் உள்ளது. சரணாலயத்துக்குள் நடக்கலாம். ரூ 40 கொடுத்து சைக்கிளில் அலையலாம். சைக்கிள் ரிக்ஷா, ஒட்டக வண்டி, குதிரை வண்டி என வாடகைக்கு எடுத்து, உள்ளே பறவை கண்காணிப்பு செய்யலாம்.

மற்ற வண்டிகள் பறவைகளை, தொந்தரவுக்கு தள்ளும் என அனுமதி இல்லை. நீறைய வெளிநாட்டினர் வருகை புரிகின்றனர். நுழைவுக்கட்டணம் ரூ 50.  உள்ளே கைடுகள், வாட்ச் டவர், தொந்தரவு ஏற்படுத்தாத கேண்டீன் உள்ளன. கோவையிலிருந்து நேராக ஆக்ரா, அங்கிருந்து பஸ்-சில் பரத்பூர் 61 கி.மீ. சரணாலயம் ஒட்டியே,நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. Pelican, Robin, King fisher என்ற பெயர்கள் விடுதிக்கு வைத்து அசத்தியிருக்கிறார்கள். வசதிக்குத் தக்க விடுதி அறைகள் உண்டு. பறவை அன்பர்கள் கண்டிப்பாக கண்டு களிக்க வேண்டிய பறவை சரணாலயம். வாழ்நாளில் இன்னொரு முறை போவேனா என்பது சந்தேகமே……..