Monday, November 26, 2012


மீன் பிடிப்பு
மீன் பிடிப்பு


சூலூர் மற்றும் கோவையைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளம், ஏரிகளில் மீன் பிடிப்பவர்கள் பரம்பரை மீனவர்களல்ல. அதனால் அடிப்படை மீன் பிடிப்பு அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களோடு கலந்து பேசித்தான் சொல்கிறேன்.  முன்பெல்லாம் படகு, பரிசல்களில் சென்று வலை வீசி மீன் பிடிப்பார்கள். இப்போது 5 அடி அகல வலைகளை நீரில் தட்டி மாதிரி மூழ்கடித்து குளத்தின் பரப்பு முழுதும் தெர்மக்கோல் துண்டுகள் மிதவைகளாகப்பயன் படுத்தி விரித்து விட்டு ஒரு நாள் கழித்து பரிசலில் தெர்மக்கோல் துண்டுகள் மிதவைகளோரமே சென்று நீரில் மூழ்கியிருந்த படல் (அ) தட்டியை எடுத்து வலையில் மாட்டிய மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து பரிசலில் போடுகின்றனர். நீரில் மறைந்திருக்கும் வலையில் நீர் காகம், முக்குளிப்பான், புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, கூழைக்கடா போன்றவை நீரில் நீந்தி மீன், மற்றும் நீர் தாவரங்களை உண்ணும் போது மாட்டிக்கோள்கின்றன. வலையில் மாட்டி இறந்த இரண்டு நீர்காகங்கள் சுலூர் குளத்தின் வடகரையில் பார்த்தேன், பள்ளபாளையம் குளத்தில் வலையில் மாட்டிய முக்குளிப்பானைக்காப்பாற்றினேன். அமராவதி அணைப்பகுதி கரையில் அடிப்படை அறிவற்ற மீனவர்கள் பழுதான துண்டு வலையை காற்றில் விசிறி விட அதில் மாட்டிய கொண்டைக்குருவியை மீட்டேன். இது குறித்து மீன்வளத்துறைக்கு எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதே போல துண்டு வலையில் மாட்டிய மாட்டுக்கொக்கை சூலூர் குளத்தில் மீட்டேன். SACON, SANF, NGOs மீன்வளத்துறையோடு பேசலாமே. மேலும் மீன்பிடிப்பாளர்கள் பறவைகள் சாப்பிட்டு மீன் குறைந்துவிடுமென குளத்தில் பறவைகள் தங்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். குளத்திலிருக்கும் கருவேல மரங்களை வெட்டி விடுவது, குளத்தின் நடுவே திட்டுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என பறவைகளுக்கு தீங்கு செய்கின்றனர், வருசத்தில் 6 மாதம் மீன் பிடித்து மீதமுள்ள மாதம் மீன் வளர நேரம் கொடுக்க வேண்டும். வருடம் முழுதும் மீன் பிடிக்க, பறவைகள் பசியோடு ஓரமாக இந்த பேராசை மனிதர்களைப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. என்ன தான் செய்வது? இந்த தெர்மக்கோல் வலை விரிப்பால் வலசை வரும் வாத்து இனங்கள் இந்த வலசைப்பருவத்தில் நமது சாக்கடைக்குளங்களில் இறங்கவில்லை.

Friday, November 23, 2012


பல்லுயிரினம்
                                                    
                                                       எனக்குந்தான் தாகமடிக்குது 

பல்லுயிரினம்

            இருபது வருஷங்களுக்கு முன்பு, நான் மேட்டுக்காட்டில் வீடு கட்ட ஒரு மனை வாங்கி அகழ்ந்த போது பூச்சி, புழுக்கள், பிள்ளப்பூச்சி, சிறு மூஞ்சூர், பாம்பு, உட்பட புலம் பெயர்ந்து போயின. எனக்கு தருமசங்கடமாகப்போயிற்று. அந்த இடம் பருவ மழைபெய்த காலத்தில் புன்செய் தானியங்கள் விளைந்த பூமி.ஐந்தரை ஏக்கர் நிலத்தில் 64 மனைகள் பிரித்ததில் நான் ஒரு மனை வாங்கினேன். மனிதனாகிய நான் குடியேற, பல உயிரினங்கள் குடிபெயர்ந்தன. சோகப்பட்ட நான் ஒரு சோகக் கவிதை எழுதி துக்கத்தை குறைத்துக்கொண்டேன். அந்த மேட்டாங்காட்டில் எண்ணி மூன்று மரங்கள் தான் இருந்தன. பிறகெல்லாம் சூரமுட்புதர்கள் தாம். தனி மனிதன் குடியேற்றத்துக்கே இந்த பாதிப்பு எனில் நீலகிரி, வால்பாறை, போன்று காடு கொன்று சாயா, ‘ஹாயா’ குடிப்பதற்காக தேயிலைதோட்டம் சமைத்தது, எப்பேற்பட்ட ஈவு இரக்கமற்ற செயல் என எண்ணிப்பார்க்கிறீரா? நான் 23 வருஷங்களுக்கு முன்பு மேட்டுக்காட்டில் குடியேறிய போதிருந்ததை விட என்னைச்சுற்றி பல்லுயிரினம் இப்போது அதிகம். அணில், வண்ணத்துப்பூச்சிகள், தும்பியினம், பறவையினம், வண்டினம், பூச்சியினம், புழுயினம் பெருகி என்னை மகிழ்ச்சியில் ஆழ்ந்து போக வைத்துள்ளன. எப்படி? கிட்டத்தட்ட நான் வைத்து வளர்த்த நூறு மரங்கள் ஆற்றும் பணி. 50 வகையான மரங்கள் உள்ளன. பூக்கள் வர்ஷிப்பு, வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் ஈர்க்கின்றன.பூச்சி, புழுப்பெருக்கம் பறவைகளை கவர்கின்றன.வலசை வரும் பறவைகள் கூட வருகை புரிகின்றன. விருக்ஷ்சங்கள் தேன், மகரந்தம், இலை, வேர், கனி என விருந்தோம்பல் செய்வதால் இப்படிப்பட்ட பல்லுயிர் பெருக்கம். அத்துடன் நீர் அருந்த கொள்கலன்கள் வைத்துள்ளேன். உயிரினம் என்னால் தொந்தரவுக்கு உள்ளானதை இப்படிப்பட்ட செயல் பாட்டில் அந்த 5 எக்கர் பூமியையே சுவர்க்கமாக மாற்றியமைத்தேன். நீங்கள் என்ன செய்தீர்கள?

Monday, November 12, 2012


தும்பி
Dragon Fly

          தும்பிகள் மழைக்கு முன்னும், பின்னும் தாழப்பறந்து  திரிவதைப்பார்த்து ஆனந்தப்பட்ட காலமுண்டு.இப்போதுகைபேசியைவைத்துக்கொண்டு பேசியவாறு எதிரில் காணும் காட்சிகளை காணத்தவறுகிறோம். தும்பி பிடித்து விளையாடிய காலம் போய் மின்னனு காலமாய் போயிற்று. விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டாலும், தாராள குணம் வளரவில்லை. தும்பியோடிருந்த போது இருந்த மகிழ்ச்சி மாநிடன் கண்டுபிடித்த மின்னனு பொருட்களோடு இருக்கும் போது இல்லை. இயற்கையோடு உறவாடுகையில் உற்சாகமும், ஆரோக்கியமும், மன அமைதியும் கிடைக்கிறது. அது ஏன்? இயற்கை எப்போதும் சரியானது. சிலசமயம் நமக்கு விளங்காது. புதிராக இருக்கும். தும்பிகள் பறந்து, பறந்து கொசுப்பிடித்து உண்ணும்.அதனால் நமக்கு நண்பன். ஆனால் இயற்கையில் கொசு படைக்கப்பட்டது, ஏன்? நம்மில் நல்லவர், கெட்டவர் போல………..  நான் விவசாய பல்கலைக்கழக சமுதாய வானொலியில் (பாகம் 1) பறவைகளைப்பற்றி அக்டோபர் 5-இல்   பேசியதை agri portel  e community radio programme-ல் இப்போதுகேட்டு மகிழலாமே. 

Friday, November 9, 2012

பூச்சிகள் ராஜ்ஜியம்


பூச்சிகள் ராஜ்ஜியம்
Scelio


                                                             Scelio

பூச்சிகள் கிட்டத்தட்ட 30,000 வகைகள் இந்தியாவில் மட்டும் உள்ளன. இவைகளில் பெறும்பாலும் தாவரங்களை நம்பி உள்ளன. எனவே விவசாயத்துக்கு கேடு. அதே சமயம் நன்மை பயக்கும் பூச்சிகளும் உள்ளன. நம் சமுதாயம் போலத்தான் அங்கும் உள்ளது. வெட்டுக்கிளிகள் தாவரங்களை உணவாக்கிக்கொண்டு பல்கிப்பெருகுகின்றன. அதனால் பயிர்கள் வளம் குறைகிறது. நம் எதிரிவெட்டுக்கிளிகளின் பெருக்கத்தைக்குறைக்க எல்லாம் வல்ல இயற்கை ஸ்சிலியோக்களைப்படைத்திருக்கிறது. வெட்டுக்கிளிகளை மைனாக்கள் உட்கொண்டு நமக்கு நன்மை பயக்கின்றன. வெட்டுக்கிளிகளுக்கு எதிரி ஸ்சிலியோ. அதனால் ஸ்சிலியோ நமக்கு மைனாவைப் போல  நண்பன். நம் எதிரிக்கு எதிரி நம் நண்பனாகிறான். வெட்டுக்கிளிகள் தாவரங்களில் ஏராளமான முட்டைகளை இடுகின்றன. அந்த முட்டைகளுக்கு ஒட்டுண்ணியாக இந்த ஸ்சிலியோக்கள் உள்ளன. பூச்சிகளின் ராஜாங்கம் நீங்கள் நினைப்பது போல அருவருப்பானது அல்ல. ரொம்பவும் ஸ்வராஸ்யமானது. இதோ நமது நண்பர் ஸ்சிலியோ புகைப்படத்துக்கு முகம் காட்டியுள்ளார்.

Thursday, November 8, 2012

வண்ணத்துப்பூச்சிPlain banded awl  வண்ணத்துப்பூச்சி
(Hasora vita)இது ஸ்கிப்பர் குடும்பத்தைச்சார்ந்தது. அதி காலையில் சூலூர் குளத்தின் வடக்குப்புற அவன்யு’---வில் சந்தித்த ஸ்கிப்பர் வண்ணத்துப்பூச்சி பற்றி சொல்கிறேன். இதை சிலர் மாத் (moth) என தவறாகக் கனித்து விடுவர். 'மாத்' எனும் வண்ணத்துப்பூச்சிஇனம் இரவு நேரங்களில் உலாவும்.கொஞ்சம் பனி விழும் போது வண்ணத்துப்பூச்சிகளுக்கு சுறுசுறுப்பு குறைவு, ஏனெனில் சூரியவெப்பம் அதன் உடம்பில் ஏறவில்லை. அந்த நேரத்தில் காமிரா கண்களுக்கு மாட்டும். இந்த ஸ்கிப்பர் ஒரு அங்குளம் தான் இருக்கும்.மலர் தாவரத்தில் அமர்ந்திருந்த போது எடுத்தேன். த் தாவரம் இந்த ஸ்கிப்பருக்கு உணவுத்தாவரம்.  இந்த இனம் அதிக சுறுசுறுப்பு பறத்தலால் இப்பெயரை வைத்து விட்டனர். ஸ்கிப்பர் பொருத்தமான பெயர். இது அதிகாலை மற்றும் அந்தியில் துறுதுறு’. இவைகளை சந்திக்க அதன் உணவுத்தாவரங்களைக்கண் வையுங்கள். மேற்குத்தொடர்ச்சி மலையோரப்பகுதிகளில் காணலாம். வண்ணத்துப்பூச்சிகளுக்கு இன்னும் தமிழில் பெயர் பட்டியல் இல்லை. முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி என நான்கு அவதாரம் எடுக்கிறது. எனக்கு ஏன் பறவைகளையும், வண்ணத்துப்பூச்சிகளையும் பிடிக்கிறது? அவைகளின் அழகு வண்ணங்களும், நளினமான அசைவுகளும், அவற்றின ரம்மியமான வாழிடங்களும், கூவும் பாடல்களும்(பறவையில்) மனதை மயக்குகின்றன. இவை பூமியெனும் கிரகத்தில் உலாவும் தேவதைகள். ரசனை இயற்கை மீது இருக்க வேண்டும். நீங்கள் கண்டு பிடித்த உபகரணங்கள் மீது அல்ல!

வண்ணத்துப்பூச்சி


Lemon Pancy
(Junonia lemonias)

வண்ணத்துப்பூச்சி வாழ்கையில் பெறும்பாலும் சொற்ப மாதங்களில் நான்கு அவதாரமும் முடிவுக்கு வந்து விடும். இருப்பினும் நம்மைப்போல கவலைப்படுவதில்லை. ‘துறுதுறு’  வென மென்மையாக சிறகடித்து நம்மைக்கிரங்க அடிக்கின்றன. இவையும் பறவைகளைப்போல வலசை போகும். குடும்பம் உண்டு. இயற்கை எத்தனை விதமான வண்ண சேலைகளை நெய்திருக்கிறது! பேன்சிக்கள் நிம்பாலிட்ஸ்(Nympalids) குடும்பத்தை சார்ந்தவை. ஆறு கால்களில் முதல் இரு கால்கள் குட்டை, அதனால் பயனற்றது. இப்பெயர் பொருத்தமானது தான். இதை பூந்தோட்டம், வனவெளி, திறந்த விவசாய நிலங்களில் காணலாம். இறக்கையில் நான்கு கண்கள். பேன்சிகள், பீக்காக் பேன்சி, க்ரே பேன்சி, சாக்லெட் பேன்சி, யெல்லோ பேன்சி, ப்ளூ பேன்சி எனப்பல வகைகளில் இந்த வகை வண்ணத்துப்பூச்சி சாதரணமாக பார்க்கக் கூடியது.சிறு வயதில் வண்ணத்துப்பூச்சிகளை துரத்தினீர்களே! அது ஏன் மறந்து போனது? அப்போதிருந்த ஆனந்தம் இப்போது ஏன் தொலைந்து போனது?

Friday, November 2, 2012

திசை மாறிய பறவை


பூநாரை
Greater Flamingo
(Phoenicopterus roseus)

           

 சூலூர் குளத்தில் பூநாரை வந்தது எல்லோருக்கும் வியப்பு. இது முழு வளர்ச்சி பெறவில்லை. இறகு ஓரங்கள் குங்கும நிறம் இன்னும் வரவில்லை. ராணே வளைகுடாவிலிருந்து வந்திருக்கலாம். இதற்கு பிரியமானது உப்பங்கழிகளும், கடல் ஓரங்களும், ஆனால் நான் பூநாரைக் கூட்டங்களை கூந்தகுளத்திலும் அதன் சுற்று வட்டார சில குளங்களிலும் பல முறை நண்பர்களோடு பார்த்து ரசித்திருக்கிறேன். இது கோடியக்கரை, கன்னியாகுமரி, இராமனாதபுரம் பகுதிகளுக்குப் போகவேண்டியது தான். தனது கூட்டத்தோடு சேர்ந்து விடும். அதற்காக பலம் பெற பொன்னாங்கன்னி கீரை தீடைக்குள் தன் மண்வெட்டி போன்ற அலகை நுழைத்து, நுழைத்து பூச்சி லார்வா, புழு, சேற்றுக்தாவரங்களின் விதைகள் உண்ணுகிறது. நீலம் புயல் உருவான சமயம் இந்த இளைஞரை தடுமாற வைத்து, திசை மாற்றியிருக்கலாம். இவை லங்கா, இந்திய துணை கண்டத்தில்  உலவும் பறவைகள். பூநாரை பார்க்காத கோவை வாசிகள் பார்க்க அதிஷ்டமடித்தது. இவை குழு வாகப்பறக்கும் பொழுது ஆஹா! ‘V” வடிவில் போகும். சுவர்க்கம் இங்கு தான் தோழா! ஆயிரக்கணக்கில் குறை நீருக்குள் இரை தேடும் போது முனகல் ஒலி கேட்டிருக்கிறீர்களா? பூநாரை கூட்டத்தைக்காண இந்த வலசைப்பருவத்தில் மேலே சொன்ன இடங்களுக்கு விரையுங்கள்.

பறவை அறிமுகம்


மயில் உள்ளான்
Painted Snipe
(Gallinago gallinago)

                சூலூர் ராமச்சந்திரா குளத்தில் இந்த வலசைப் பருவத்தில் பார்த்தேன். ஜோடியாக உலாவியது. இவை உள்வலசை போகும். நான் தனிமையில் இருந்தேன். ! மயில் உள்ளானே! நீயும் நானும், ஊருக்கு வெளியே இந்த அலாதியான, அழகான, குளுமையான குளத்தில் இருந்தது மகிழ்ச்சி பொங்கிய நிமிஷங்கள். புள்ளும், புதரும், சேறும் நிறைந்த இடத்தில் நீ தேடுவது புழு, நத்தை, தாவரத்தண்டு தானே! மூக்கா இது! நீளமான மூக்கு, சேற்றில் விட்டுக்கிளறத்தானே! உன் இனத்தில் பெண் ராஜ்யமாமே! குரல் போத்தலில் (bottle)காற்று துவது போல என்ன இனிமை! புகைப்படத்தில் பார்ப்பது பெண். ஆண் தான் பறவையினத்தில் அழகு. ஆனால் இந்த இனத்தில் நேர் மாறாக இருக்கும். பெண் பறவை பல ஆண் பறவைகளுடன் உறவு வைக்கும். இவை லங்கா மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் உலவும். மீண்டும் எப்போது சந்திப்போம்?