Tuesday, November 4, 2014


கோதபாளையம் மான்கள்- ஒருபயணம்

எங்களை எட்டிப்பார்க்கும் ஆண் புள்ளி மான்கள்

மான்கள் பாதுகாவலருடன் நண்பர் விஜயகுமார்

            கோதபாளயம் என்ற தெக்களூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மான்கள் நிறைய உலவுவதாக சில செய்திகள் பத்திரிகைகளில் வர, நாங்களும் போகலாம் என ஒத்தி வைத்து, சில வருஷங்களுக்குப்பின்,மொகரம் (4.11.14-செவ்) அன்று அந்த சுபதினம் வந்தது. விஜயகுமார் கார் ஓட்ட, நானும், பாஸ்கரனும் பின் இருக்கையில், விஐயகுமார் மகள் முன் இருக்கையில் பயணித்தோம். போகும் போது மங்கலம் வழியில் புதையல் வேட்டை போல விசாரித்து,சுற்றுவழியில் செல்ல நேர்ந்தது. வரும் போது நேர் வழி. 

        கோதபாளயம் அன்பர் குருசாமி, மான்கள் உலவும் பூமியின் உரிமையாளர். எங்களுக்கு அறிமுகமில்லை. இருந்தும் அவர் மான்கள் பார்க்க பெரும் உதவி புரிந்தார். அவர் பண்ணயத்தோடு, மான்களையும் பாதுகாத்துவருகிறார். இதை மான்கள் சரணாலயம் ஆக்கிட பல முயற்சிகளுமே தோல்வியில் முடிவுற்றுள்ளன. முதலில் மான்கள், கோடையில் தீனி பற்றாக்குறையில் பல தனியார் தோட்டங்களில் புகுகின்றன. ஒரு நீர் குட்டை உட்புறம் உள்ளது. 80 ஏக்கர் பொது இடம் போதாது என சம்மந்தப்ட்ட அரசு நிருவாகம் சொல்கிறது.  சமீபத்தில் பெய்த மழையில் பூமி பச்சைப்போர்வை போர்த்தியுள்ளது. அதனால் மான்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தீவனம் கிடைக்கும். செங்காந்தல் மலர்களைப்பார்த்து சொக்கிப்போனேன். மான்கள் குளம்புத்தடங்கள் ஈர மண்ணில் பதிந்திருந்தன. மயில்களின் அகவலுடன், உதிர்ந்த இறகுகளும் எங்களுக்குக்கிடைத்தன. முட்காடு, இடைஇடையே காய்கறி விளைச்சல் குருசாமி செய்திருந்தார். தானாக ஆக்கரித்த பார்த்தீனியம் எங்களைப்படுத்தின. 
      ஈப்பிடிச்சான், மாடப்புறா, புள்ளி ஆந்தை, கெளதாரி, தாம்பாடி, பனைக்கருவி,மயில் எங்களை ஆனந்தப்படுத்தின. ஒற்றையடிப்பாதை வழி சென்று ஒருசில மணி நேரத்துக்குப்பிறகு, புள்ளிமான்கள் கூட்டம் ஒன்று, தூரத்தில் தெரிய எங்கள் மனசு மான்கள் போல துள்ளிக்குதித்தது. புள்ளி மான்கள் எப்போதும் ஆன்மாவுக்கு சந்தோஷம் கூட்டுவன. அதன் மருண்ட பார்வை, வெகுளியான நடவடிக்கை, அழகு, ஓடும் பாங்கு என ஒவ்வொன்றும் ரசிக்க வைப்பவை. அழகான பெண்ணுக்கு உவமையாக மான்கள் வந்து கைகொடுக்கும். 
       அப்படியே நடந்து போனதில், இரண்டாவது போனசாக கொம்புள்ள இரண்டு மான்கள் தூரத்தில் எங்களை ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டு நின்றன. கொம்புள்ளவை ஆண்மான்கள். இதை நிழற்ப்படம் எடுக்க முடிந்தது. மான்கள் பார்த்த திருப்தியில் திரும்பி, தாதா காலத்தியவேப்பமரத்துக்கடியில் உள்ள சிறு பெருமாள் கோயிலுக்கு வந்தோம். குருசாமியிடம் கொஞ்சம் நேரம் அளவளாவி விட்டு நன்றி சொல்லி புறப்பட்டோம். மான்கள் எப்படியோ இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து, வனமற்ற பகுதியில் இருக்கின்றன. அதுவும் பொது மற்றும் தனியார் நிலங்களில் வாழ்கின்றன. அவைகளுக்கு தீனி பிரச்னை, மேலும் மனிதன் இடையூறுகளைத்தாங்கி வாழ்கின்றன. இவைகளுக்கு நாம் என்ன செய்திட முடியும். குருசாமி ஜீவகாரண்யம் செய்கிறார் என்று மட்டுமே உணரமுடிகிறது.