Monday, April 29, 2013


Super click


Dr. லிம்அலியின்          
                                       ஏக்கம்
Super click
                இந்தத்தருணம் எப்படி உறைந்துள்ளது பார்த்தீரா? காணக்கண்கோடிவேண்டும் என கிருஷ்ணபரமாத்மாவிடம் கேட்டுப்பெறலாம். நான் இதை கோமேதகப்பறவை எனப்பேயரிட்டுள்ளேன். என் பறவை குருநாதர் Dr. ரத்னம் இதற்கு ஊதா தேன்சிட்டு எனத்தமிழில் பறவைப்பெயர்கள்நூலில் குறிப்பிட்டுள்ளார். இது லோட்டன் ஊதா தேன்சிட்டு(Loten’s Sunbird). இதன் அலகு ஊதா தேன்சிட்டுவின் அலகை விட நீளமாகவும், வளைந்தும் உள்ளது.இது ஒன்று தான் நமக்குத் தடயம். இதன் குழாய் போன்ற நாக்கு மலரின் அடிவரை போய் தேன் எடுக்கிறது. சிலசமயம் பூவின் அடிப்பாகத்தின் வெளிபுறமே அலகால் ஓட்டையிட்டு, தேனை உறிஞ்சிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். இயற்கை இந்தப்பறவை தேனுறிஞ்சுவதற்காகவே அலகை இப்படி வடிவமைத்துக்கொடுத்துள்ளது. பறவையியல் பிதாமகர் Dr.சலிம் அலிக்குப் மிகப்பிடித்தமான பறவை இதன் இனமான Purple Sunbird. அவர் மரணப்படுக்கையில் படுத்திருந்த போது வலசைப்பருவம் முடியம் தருவாயில் வலசை வந்த பறவைகள் தங்கள் தேசங்களுக்குத்திரும்பிக்கொண்டிருந்தன.அவருக்கு மரணிக்கவிருப்பமில்லை. இன்னும் பறவையியலில் சாதிக்க வேண்டியதுள்ளதே என ஏக்கம் அவரை பற்றியிருந்தது. அடுத்த வலசைப்பருவத்தில் தான் இருந்து பறவைகளை ரசிக்கமுடியாதே என ஏக்கமும் வருத்தமும் மீதூர, படுக்கையிலிருந்து ஜன்னல் வழியாக சிறகடித்துத்திரும்பிப்போகும் பறவைகளைப்பார்த்தார். இவருக்கு அடுத்தபிறவியிருந்தால் பறவை நேசராகத்தான் இருப்பார்.

Photo Courtesy: N. Radhakrishnan
Source: Fall of Sparrow - Dr. Salim Ali 

Friday, April 26, 2013

மழை

மழை வாசம் பிடிக்குமா?
! குட்டி தேவதையே!!

மழை வாசம் பிடிக்குமா உனக்கு?
துளிகள் வாசிக்கும் குடைத்தாளமும்,
ஈரடீசலில் தார் சாலை காட்டும்
வர்ணஜாலமும் பிடிக்குமா?
நனைந்த காற்று கணத்து நிற்கும்.
ஈரம் உண்ட களைப்பு அதற்கு!
அதில் புகுந்து நடக்க குளிருது
மழை வாசம் பிடிக்குமா உனக்கு?
மழையின் நீண்ட விரல்களுக்கு -இதோ!
தென்னை ஓலை, ஓட்டுக்கூரை
மத்தளங்களாய்ப்போயின –கேள்!
இந்த வாசிப்பு உனக்குப்பிடிக்குமா?
வீட்டுத்தோணிகளும், ஓட்டுத்துளிகளும்
சேர்ந்த மழைத் தாரைகள் ஆறாகி,
குளங்களாகி, வீழ்ச்சிகளாய்,கடலோடியது
நீர்ப்பயணம் பார்க்கப் பிடிக்குமா?
தலை துவட்டாத மரங்களும்
இடியில் புடைத்த காளான்களும்
மழைச்சாரலில் நடுங்கிய மலர்களும்
துளி தொங்கிய புல் விளிம்புகளும்
பிடிக்குமே! உனக்கு மனம் லயிக்குமே!
ஓ! மழை தேவதையே! ஓ! குட்டி தேவதையே!

Tuesday, April 23, 2013மழை மரம்-RAIN TREE
(Enterolobium saman)


இந்த மரத்தில் இளைப்பாற வரும் பறவைகள்

காகம்
கொண்டலாத்தி
அண்டங்காகம்
சிலம்பன்                                                     
கொண்டைக்குருவி
வால்காகம்
குயில்
தேன்சிட்டு
கரிச்சான்
மைனா
செண்பகம்
மீன்கொத்தி
வல்லூறு


                                                                         ஆமாம். நானும் இந்த மழை மரம்
                                                                          வந்து இளைப்பாறுவேன்.
                                                                                                                                                                                                                                                                               
                                                                                                                      
                                                                                                            Shikra                     
                                                                                                                         

            இந்த மரம் பிழைக்குமா? என ஆதங்கத்தோடு இருந்தேன். ஏனெனில் பத்தடியில் இருக்கும் போது நான்கடி உயரத்தில் பாதியாகப்பிளந்த நிலையில் இருந்தது. பெரும் காற்று இதை ‘மலுக்’கென முறித்திருக்கும். வளைந்து வேறு இருந்தது. நான் வளைந்த இடத்தில் முட்டுக்கொடுத்து, ஒரு மூங்கிலை வைத்தேன். பாதி பிளந்த இடத்தில் சாணி வைத்து ஒரு தாம்புக்கயிற்றால் கட்டினேன். மரம் ஒரு அடிக்குமேல் தடிமன் இருக்கும். இது நடந்து ஐந்து வருஷத்துக்கு மேல் இருக்கும். வளர வளர இது தண்டு பெரியதாகி கணமாக தன் வளைந்த கிளையையும், பிளந்த அடித்தண்டையும் மேலும் பிளக்காமல் தாக்குப்பிடிக்குமா?சரிந்து விடுமா? சிக்கடாக்கள் இதன் இலைகளை விரும்பி உண்ணுவதால் இதில்அதிக அளவில் வந்து தங்க அதன்             கழிவுகள்(discharge)மரத்துக்கடியில் ஈரப்படுத்த இதற்கு மழைமரம் எனப்பெயர் வந்தது.   
        

        இது பிரேசிலில் இருந்து வந்தது என S.G. Neginhal, IFS (Retd) சொல்கிறார்.இதன் குழுமையான நிழலில் ஒரு படையே முகாமிடலாம். எப்போதும் ஊனமான உயிர் மேல் நமக்குப்பிரியமதிகம். அது நம்மை அறியாமலே வரும். அது ஏன்? மனிதன் எப்படி தன்னை உடல் திறனுக்கேற்றவாறு தகவமைத்துக்கொள்கிறானோ அது போல இந்த மரம் 50 வருஷம் கூடவாழ தன்னை சரி செய்துகொண்டது. இதோ! அந்த ஜீவன்! தன்னை பூமியில் நிலை நிறுத்திக்கொண்டு சிக்கடா, காகக்கூடு, சிலம்பன், வல்லூறு,காகம், அண்டங்காகம், தேன்சிட்டு, வால்காகம், மீன்கொத்தி,குயில், கொண்டைக்குருவி, செண்பகம், மைனா, கொண்டலாத்தி, கரிச்சான்,பலவிதப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள் என அனைத்துக்கும் மடிகொடுத்து இந்த வேனில் காலத்தில் நிழலில் இளைப்பாற்றுகிறது.ஊனப்பட்டும் அதன் விருந்தோம்பல் சோடை போகவில்லை. மனிதரே!  உமக்காக வாழ்ந்தாலும், இந்த மழை மரம் போல் பலருக்கும் உபயோகமாக வாழ வேண்டும். வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும்.  

Saturday, April 20, 2013
காடு எனது இன்னொரு தாய்
-சின்ன சாத்தன்
          

          ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஆடுமேய்த்துக்கொண்டிருக்கும் போது தர்ம லிங்க சுவாமிமலைக்கு அடிவாரத்தில் அறிமுகமானான். அவன் பள்ளிக்கும் செல்கிறான். மழைக்குருவி வலைதளவாசகர்களுக்கு எறும்புச்சிங்கத்தை(Antlion) எப்படியும் காட்டிவிடுவதென எண்ணியிருந்தேன். மலை அடிவாரமுட்காட்டுக்குள் பறவை நோக்கலில் இருந்த போது எறும்புச்சிங்கவலைகள் இருந்ததைக்கண்டேன். அபிஷேக்சிறுவனை இது என்ன என்று கேட்டதற்கு அதைப்பற்றி உடனே விளக்குகிறான். காடுகள்; பூச்சி, விலங்கு, தாவரம், மண்தன்மை, மழை என இயற்கை அறிவை அவனுக்குக்கற்றுத்தருகின்றன. நகரச்சிறுவருக்கு அந்த அறிவு இல்லை. அவனைக்காடு, தையரியமாகவும், இயற்கை அறிவுடனும் வளர்த்தெடுக்கிறது. அவன் மரத்தண்டில் இருந்த சில்வண்டை (Cicada)இனம் கண்டு சொல்கிறான். சென்ற பதிவைப்படிக்காமல் வெறுமனே படம் பார்த்துச்செல்பவர்களுக்கு இப்போது என்ன விளங்கும்.படம் பார்ப்பது சிறுவர் வேலை.வளர்ந்தவர் நிறையப்படிக்க வேண்டும். சிக்கடாவுக்கு தமிழில் சில்வண்டு எனப்பெயர். நம்முன்னோர்,’ஏண்டா சில்வண்டு மாதிரி கத்தறே?’ என்று இயற்கையில் காணும் பூச்சியை உதாரணம் கொடுக்கின்றனர். அபிஷேக் தையரியமாக எறும்புச்சிங்க வலையை அடியோடு வாரியெடுத்துஉள்ளங்கை வைத்துக்காட்டுகிறான். சிக்கடா பிடித்துக்காட்டவா? என்கிறான். அந்த மலைஅடிவாரத்தில் யானை அடிக்கடி வரும். இரண்டுமுயல்கள்ஓடின.           

சின்னான்கள்(BulBuls)கீச்சான்(Shrike),செண்பகம்(Coucal),தேன்சிட்டுகள்(Sunbirds),கவுதாரி(Grey Partridge), ஈப்பிடிச்சான்கள்(Bee eaters) பரவசம் கூட்டின.

 ‘பள்ளியில் தேர்வு, மதியம் வருவேன்’ என அபிஷேக் விடைபெற்று இருபது நிமிஷப் பழக்கத்துக்குள் ஓடியேவிட்டான்.
            


ஒரு கோயிலோ, சர்ச்சோ, மசூதியோ சிறுவனுக்கு கற்றுக்கொடுப்பதை விட காடு நிறைய கற்றுக்கொடுக்கும்.


 -ஓஷோ                                                                                                                                         
NB: There were  57 visitors visited my Blog “Mazhai kuruvi” on 16.4.13. Day by day more Blog readers like to visit my Blog. You are all requested to tell about my Blog to your friends. Mazhai kuruvi is an interesting informative entertainment to all.

Tuesday, April 16, 2013


Ant Lion trap
சிங்கஎறும்பு வலை

          புகைப்படத்தில் காணும் இந்தக் குழிவை ஒரு வகை எறும்பு ஏற்படுத்தி உள்ளே பதுங்கியுள்ளது. வழியில் செல்லும் இதை விட சின்ன எறும்பு மற்றும் சில சிறுபூச்சிகள் தவறி இந்தக்குழிவில் விழுந்தால் அதோ கதிதான். உடனே சிங்கஎறும்பு வெளி வந்து இழுத்து உண்டுவிடும். இந்த மாதிரி பொறிகள் பலவற்றை பாரதியார் பல்கலை மேற்குப்புற முட்காட்டில்பல வருஷங்களுக்கு முன்பு எல்.பி.ஆர். எனது வனவலம் (Trekking) ஆசான் அடையாளம் காட்டினார். இதை வனவலம் என்ற எனது நூலில் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது, எப்படியெனில் சமீபத்தில் ஊர்வேலங்காட்டில்இந்தப்பொறிகளை மனைவிக்கு காட்டமுடிந்த போது தான்.வனவலம் 2002 திசம்பர் 14-ல் வெளிவந்தது. 
          இது தமிழில் மாறுபட்ட நூல். வனம்வலம், மற்றும் பறவை நோக்கல்கட்டுரைகளைக்கொண்டது.முன்னால் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு இதைப்டித்து விட்டு என்னைப் பாராட்டினார். என். கிருஷ்ணக்குமார், IFS, IFGBT, CBE பாராட்டினார். தமிழக அரசு பொது நூலகத்துக்கு 600 படிகள் தேர்வு செய்தது.
         எனதுவனவல ஆசான் 31 முறை வெள்ளியங்கிரி மலை ஏறி சாதனை புரிந்தவர். அதை தேதிவாரியாக் குறித்து யார்யாருடன்சென்றது எனவும் குறித்து வைத்துள்ளார். அயராது குறிப்பு எடுப்பார். இவர் எங்களை விட்டுப்பிரிந்தது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.நடமாடும் நூலகம் இவர். நாங்கள் அப்போது Coimbatore Trekking Association- வைத்து நிறைய வனவலம் சென்றோம். அவர் சிரிக்காமல் ஜோக்கடித்து எங்களை சிரிக்க வைப்பார். அதில் மூன்று மட்டும் இங்கே;-

# சார் உங்க வீட்ல இன்று என்ன மெனு?
கஞ்சிதான்.
என்ன சார்!
அட ஆமாப்பா! என் நாயுக்கும் அதேதான். எனக்கும் அதே தான்
தட்டுதான் வேற வேற…..!

# சார்! மனைவிக்கு கை எலும்பு தேய்ஞ்சு போச்சு.
இனி உங்களைப்பார்த்து கைநீட்டி, நீட்டிப் பேச மாட்டாங்க. விடுங்க.

#  என்னை தினமும் எழுந்தவுடன் காலையில் பார். யோகம் வரும் (டீக்கடை கழுதை படத்தில்)
    காலையில் எழுந்தவுடன் என் படத்தைப்பார்த்தால் போதும்!!

Monday, April 8, 2013பூச்சிகளின் ராஜ்ஜியம்
சிக்கடா(Cicada) ஒரு அதிசயம்
சின்ன சாத்தன்


     எனது வீட்டு மதில் ஓரம் சரக்கொன்றை மரமும் குல்மோஹர் மரமும் என்னோடு உறவாடும். நான் வளர்த்த மரக்கூட்டத்தில் அவை வருஷம் தவறாமல் பூத்துக்குலுங்கி என்னை குதூகலத்தில் ஆழ்த்தும். சரம் சரமாகத்தொங்கும் மஞ்சள், சிகப்புப்பூக்களோடு எனது மரசகாக்களை புகைப்படங்கள் பல எடுத்து பரவசப்படுவேன். அதில் ஒரு சமயம், வனத்துக்குள் செல்லும் போது கேட்பது போல சிக்கடா ஒலி ங்கிகீ...ங்கிகீ..... எனக்கேட்க என் மனைவி, ‘இனி நீங்கள் Trekking போக வேண்டியதில்லை. அந்த சூழலை இங்கேயே உருவாக்கிட்டீங்களே! என்று சிரிக்க, எனக்குள் ஓடியது என்ன தெரியுமா?

   
     சிக்கடா எப்படி இருக்கும்? அதன் வாழக்கை முறையைஅறிந்து கொள்ள ஆவல் கொண்டேன். வெளியிட்டுள்ள படம் எனக்கு மரம் தந்த உபயம். பெண் சிக்கடா மரத்தில் முட்டைகளிட்டு, அது குஞ்சு பொரிக்க சின்ன கரப்பான் பூச்சிகள்(Nymphs) போல வரும். ஆனால் இறக்கை இருக்காது. அவை அப்படியே மண்ணில் விழுந்து நிலத்துக்குள் 17 வருஷங்கள் இருக்குமாம். அப்போது அவை வேர்களின் சாறை உறிஞ்சி வாழும். Hibernation என்று சொல்லலாம். பிறகு அவை நிலத்திலிருந்து மரத்தண்டுகளுக்கு படை படையாக வந்து மரத்தில் ஒட்டிக் கொள்ள, உடல் பிளந்து சிக்கடாக்கள் வெளி வருகின்றன. சிக்கடாக்கள் மரச்சாற்றை உறிஞ்சி வாழும். வளர்ந்து விட்ட  ஆண் சிக்கடா பெண் சிக்கடாவுடன் இணைய இப்படி ஒலி எழுப்புகிறதாம். வனத்துக்குள் செல்லும் போது இப்பூச்சிகளிடமிருந்து தொடர்ந்து ரீங்காரம் கேட்கும்.ஒலி இறக்கைகளை அசைப்பதால் வருகிறது என நண்கர்கள் சொல்லுவார்கள். மழைக்காக ரீங்காரம் இடுகிறது என ரீல் விடுவார்கள். ஆனால் அப்படியில்லை. வயிற்றிலிருக்கும் சவ்வுபடலத்தை அதிரவைத்து இப்படி வாய் ஓயாமல்(தப்பு....தப்பு)  வயிறு ஓயாமல் ரீங்காரமிடுகிறது. எதற்கும் சிக்கடா என அடித்து வலைதளத்துக்குள்  ஒரு நடை போய் டேவிட் அட்டன்பரோ You tube-ல் என்ன சொல்கிறார் என அதிசயப்படுங்களேன். பூச்சிகள் உலகம் தனி!

Friday, April 5, 2013


அரிய காட்சி

No space for nesting to House Sparrows
சிட்டுக்குருவிகள் கூடு வைக்க இடமில்லை


          சிட்டுக்குருவி காணாமல் போனதற்குக்காரணம் காங்கிரிட் ஜங்கிள் தான் காரணம். அது இனப்பெருக்கம் செய்ய ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள், வீட்டு பொந்துகள், விளக்கு தடுப்பான்கள், குயவன் ஓட்டு வீடுகள் இப்போது இல்லை. கிராமத்தில் கூட காங்கிரிட் வீடுகள். குஞ்சுகளுக்கு புழுப்பிடித்துக்கொடுக்க நகரத்தில் மண்ணில்லை. வீட்டைச்சுற்றி சிமெண்ட், தெருவெல்லாம் தார். என்ன செய்யும் அந்த சிட்டு? பொறுக்க தானியமாவது இருக்கா? நான் ‘Diary on the nesting behavior of Indian Birds” வெளியிடும் போது ஊரெல்லாம் தேடியும் கூடு கிடைக்கவில்லை. தூய மிக்கேல் பள்ளி மாணவர் சிலர் துப்புக்கொடுக்க, அவர்களோடு ஆசிரியர் ஜார்ஜ் சென்று, ஒரு வீட்டின் கொல்லைப்புற வளை சிமெண்ட் கூரையின் அடியில் இருந்த குருவிக்கூட்டின் படம் பிடித்து வந்தார். அதுவும் மூன்று வருஷங்களுக்கு முன்னமே இந்த நிலைமை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

          இப்போது நணபர் எனது ஆஸ்தான போட்டோகிராபர் N. ராதாகிருஷ்ணன் ஒரு கல்யாணமண்டபத்தின் சாண்ட்லியர் விளக்கில் குருவி கூடுவைத்திருந்ததை படம் பிடித்துள்ளார். சாண்ட்லியருக்கு நேரே மாப்பிள்ளை அமர்ந்திருந்தாராம். நல்ல வேளை தலைமீது 'ஷிட்' அடித்து ஆசிர்வாதம் பண்ணவில்லை.

          2004-ல்நான், நண்பர் ராதாவுடன் தில்லி ரயில் நிலையம் நுளைந்த போது, என்னை ஒரு மைனா 'ஷிட்' அடித்து வெல்கம் செய்தது. இதை பொது நூலகங்களில் உள்ள எனது இமய வலம் நூலில் படிக்கலாம்.