Sunday, September 29, 2013

Body parasites-                           
                           Roller Bird sun bathing at Oorvelankaadu, Sulur  Anting Eagle sp.(Photo published in Diary on the nesting behaviour of Indian Birds)
Bathing Jungle Myna at Munnar
Control methods adopted by Birds                                        
Dust bathing Little Ringed Plover-thanks to bloger 
பறவைகளும் நம்மைப்போல குளியலிடும்
அதுமட்டுமா? தூசிக்குளியல், எறும்புக்குளியல், சூரியக்குளியல்என ஈடுபடும்.

குளியல்
பறவைகளின் பாதி நேரம் இறகு கோதுவதிலேயே கழியும். நமக்கு முடி அதிகம் இருந்தால் ஈர், பேன் வருவது போல அவைகளுக்கு உண்ணிகள் வரும். அவைகளை ஒரு கட்டுக்குள் வைக்க குளியலிடும். பிறகு இறகு கோதும். ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொரு விதமாகக் குளியலிடும். கரிச்சான்(Black Drango) நீர்ப்பரப்பைத்தொட்டும் தொடாமலும் பறந்து தன்னை ஈரப்படுத்திக்கொண்டு இறகு கோத, தாவர சிமிறில் அமரும். புள்ளிமூக்கு வாத்து நீரில் கரை ஒதுங்கி, அலகால் குளநீரை எடுத்து உடம்பின் மீது சில முறை விட்டு,இறகைக்கோதும்.
தூசிக்குளியல்
மண் இலகுவாகவும், தூசியுடனும் இருந்தால் பல முறை அசைந்து சிறு குழிவு ஏற்படுத்தி தூசி மண்ணுக்குள் கடையும். சிட்டுக்குருவி(House Sparrow) தூசிக்குளியல் பார்த்திருக்கீறீர்களா? இதே முறை தான்! (சிட்டுக்குருவியே பார்க்க முடிவதில்லை-இதில் தூசிக்குளியல் எங்கே பார்ப்பது?) கொண்டலாத்தி(Hoopoe) குளியல் உடற்பயிற்சியில் தண்டால் எடுப்பது போலவும், பக்கவாட்டிலும் உருளும். இன்னும் கிராமத்தினர் களிமண்ணை உடலில் பூசி குளியல் போடுகின்றனர்.
எறும்புக்குளியல்
எறும்புகளின் ஃபார்மிக் அமிலம்(Formic acid) உண்ணியை நீக்க வல்லதா! எனத்தெரியவில்லை. அல்லது எறும்பு ஊர்தலும், கடியும் உண்ணிக்கடியில் பறவைக்கு இதமாக உள்ளதா என நினைக்கத்தோன்றுகிறது. பறவையினத்தில் மாடப்புறா(Pigeon), பனங்காடை(Roller Bird) , கழுகு(Eagle sp.) என்பவை எறும்புப்புத்துக்கருகில் அமர்ந்து கொள்ளும். சில இனம் எறும்புகளை எடுத்து ஒவ்வொன்றாக தன் உடம்பின் மீது விடும். பிறகு கடி வாங்கிக்கொண்டு, எறும்பை எடுத்துக்கீழே விடும்.எறும்புக்குளியல் நம்மால் ஆகாதுடா! சாமி!
சூரியக்குளியல்

ஆண் குயில்(Koel) எனது குடியிருப்புப்பகுதியில் உள்ள தென்னைமரக்கிளையின் மேற்புறம் ஏறு வெய்யிலின் போது சில சமயம் அப்படியே ஆடாமல் அசையாமல் படுத்துக்கொள்ளும். பெண் குயிலைப்பார்த்தால் அருவி மரம் (Fountain tree) கிளையின் மீது,காலை ஏறு வெய்யிலில் படுத்துக்கொள்ளும். புறாக்கள்,பனங்காடை  வெய்யிலில் அமர்ந்திருக்கும். நீர்க்காகங்கள்(Cormorants)நீரில் மூழ்கி, மூழ்கி இரை தேடி ஈரமாய்ப்போன இறகை உலர்த்த இறகை விரித்து வெய்யில் காயும். நீங்கள் மட்டுமா sun bath எடுப்பீர், நாங்களும் எடுக்கிறோமே! என்கின்றன பறவைகள்.

Thursday, September 26, 2013


Himalaya Trekking
ட்ரெக்கிங்-கை வனவலம் என்று சொல்வேன்.
மழை வரும் போலிருந்தது, தூறல் போட ஆரம்பித்ததும், காமெராவை உறையில் போட ஆரம்பித்தேன்.மழை பெய்தால் வழுக்கி, வழுக்கி வரவேண்டியதுதான். பெரும் மழை பெய்தால் ட்ரெக் பை, துணிகள் நனைந்து எடையேறி நடப்பது படுசிரமமாகிவிடும். நடுங்க ஆரம்பித்தோம். 'இடிஇடி'த்தது.மரங்களடியில் அமர முடியாது. இடி விழலாம். பயந்தவாறு நடந்தேன். அண்ணாந்து பார்த்தால், மலைப்பு கொள்ள வேண்டியிருந்தது. எப்படி ஏறப்போகிறோம்! அவ்வளவு தூரமா! என திகைப்பு ஏற்பட்டது.எனவே பத்தடி தூரம் மட்டும் பார்த்துக்கொண்டு நடந்தால் போதுமானது. 'மடங்கி மடங்கி'ஏறினோம். மழைத்தூறல்-- ஏறும் போது, இரு கைகளாலும், 10 கிலோ எடை முதுகுப்பையாலும், புவியீர்ப்பை மையத்தில் சரியாக விழச்செய்து நடந்தோம்.


அந்த வழியாக மூன்று இமயமலைப் வாசிகளான இளம் பெண்கள் முதுகில்வெண்சாக்குடன் வந்தனர்.’பஹன் ஏக் போட்டோ’ என தயவாகக் கேட்டு நிழற்படம் எடுத்தேன். அவர்கள் கால்களில் வெறும் சாதாரண ‘கட் சூ’. விரல்களில் லேஸ் போட்டவாறு நடக்கின்றனர். எங்களுக்காக மலைமீது, பனிக்குளிரில் காய்கறி, அரிசி, கோதுமை கொண்டு போகின்றனர். அவர்கள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக எப்படியெல்லாம் தங்களை சிரமப்படுத்திக்கொள்கிறார்களென என் மனம் கசிந்தது. அவர்களுக்கு பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் கொடுத்தேன். தன்யவாத்பஹனோ
ஆஹா! வாழ்நாளில் இது போல பரவசத்தின் உச்சியில் இருந்ததில்லை. தொலைநோக்கியில் ராதாப்பாணியிலிருந்து பார்த்த நீலநிறடெண்ட் வந்தது. அங்கு சிறு திறந்த வெளிக்கடை. தீ, கட்டைகளில் எரிந்து கொண்டிருந்தது. இதயமும், நுரையீரல்களும் அழுத்தி,அழுத்தி ஆக்சிஜன் எடுத்து, கரியமலவாயுவை வெளியேற்றிக்கலைத்துப்போய், கால்கள் கெஞ்ச, உச்சியை அடைந்து ஓய்வெடுக்கும் முதல் பத்துநிமிஷங்கள், ஆஹா! இந்த சின்னசாத்தன் வெறும் எழுத்துகளால் விளக்க முடியாது. அதை மலையேறி உணர வேண்டும்.
பனிமலைவாசி,அலுமினிய திறந்தகெட்டிலில் கொதித்த தேநீரில் புதினா, இஞ்சி எல்லாம் இட்டு அருமையான தேநீர் தயாரித்துத்தந்தார். தேநீர் எட்டு ருபாய். பனிரெண்டாயிரம் அடி உயரத்தில் கிடைக்குமா? வாவ்! அருமை! பனிமலை வருடிய குளிருக்கு தேநீர் 'சுடச்சுட' தொண்டையில் இறங்கியது. அந்த இடம் சுவர்க்கமாக இருந்தது. ஐஸ் கட்டி மழை பெய்தது.எனது தோள்பை மீது வீழ்ந்து அரைஅங்குலத்துக்குப்படிந்தது. குகை என்று சொல்ல முடியாத, உள்வாங்கிய குழிவில் அமர்ந்திருந்தோம். அருகில் தீ எரிந்து கொண்டிருந்தது. குளிருக்கு படு இதமாக இருந்தது. உள்ளங்கை வாட்ட தீ நாக்குகள். ! சுவர்க்கம் இது தானா! கருப்பு நாய் மேல் ஐஸ் துகள்கள்வீழ்ந்தன. பாவம். அதை என்னருகில் வரவழைத்து நிறுத்தினேன்.
ஆலம்கட்டி மழை பார்த்து எவ்வளவு நாளாயிற்று. சுற்றிலும் ஐஸ்கட்டி மலை மடிப்புகள், இரண்டடியில் எரியும் நெருப்பின் கனப்பு. கையில் சுடச்சுடத் தேநீர். இறைவன் என்னுள் சுகந்தமாக ஆனந்திக்கிறார். மலையேற்றமா! வனவலமா! உடலும், மனமும், ஆன்மாவும் ஒரே லயம் தோழா! ஏறி ஏறி கால்கள் கெஞ்ச, மூச்சிறைப்பது எனக்கு மட்டும் கேட்க, காதோரம் ஜிவ்வென இரத்தம் ஏற சிரமத்தின் உச்சியால் 12,000 அடி உச்சி அடைந்தேன். Welcome to Nagaru-என துணி பேனர் தெரிய, கீழே வாழ்வா, சாவா, என்று வந்த தோழர் தோழியருக்கு இமயமலை எதிரொலிக்க கேம்ப் பகூன்சி என குதூகலமாகக்கத்தினேன்.

மேலே சொன்னது எனது ‘இமயவலம்’ நூலின் 91-ம் பக்கம்-இந்த நூல் பயண இலக்கியத்தில் ரூ- 10000 பரிசு பெற்றது. தமிழக நூலக ஆணைக்குழு இந்த நூலைத்தேர்வு செய்து, 600 நூல்களை தமிழக அனைத்து நூலகங்களுக்கும் வழங்கியது. 2004-ல் என் வாழ்வில் நடந்த நிகழ்வை பகிர்கிறேன்.
Tuesday, September 24, 2013

ஆன்மாவின் இளைப்பாறல் கவிதை

படைப்பில் தியானம்

இறைவனும் இயற்கையும் அழகும் கவிதை

இசையோடு இசைதல்


இசை
இசை கேட்டு நீ சிலிர்க்கவில்லையே!
கண்ணனின் மயிலிறகுகூட சிலிர்க்கையில்;
இசையால் கண்கள் கசியவில்லையே!
இசை கல்லையும் கரைக்கையில்;
வயலின் நரம்பு உன் நரம்பைமீட்டியும்
இதயம் உருகவில்லையே!
இசையில் மயில்தோகையும் சிலிர்க்கையில்
நீ நெகிழ வில்லையே!
காற்றும் நின்று கேட்கையில்
மானும் காதசைக்கையில்
உன் மயிற்கால்கள் சிலிர்க்கலையா?
கொன்றைப்பூக்கள் தலையசைக்க
கலைந்த மேகம் கூடி நிற்க
இசை உன்னை உருக்கவில்லையா?
இசையில் மழை சிணுங்க, காளான்களும் விடைக்க
நீ தலையசைக்காது போனது விசித்திரமே!
இசை, துளிகள் வழி ஊடுருவி இசைத்திட
மேற்கே ஏழுநிற வானவில் ரசிக்கலையா?
வானவில் ஏழிசை கணநேரத்தில் மறையுமே
இன்னுமா பரவசக்குமிழ்கள் கிளம்பவில்லை
இனி இந்த இசைமழை உனக்காக காத்திருக்காது.---சின்ன சாத்தன்

ஓவியர், மற்றும் படக்கலைஞர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் சமர்ப்பணம்
BIRD RESCUE

       அதிகாலைப் பொழுது ஆகாயத்தில் நீர்காகங்கள் பறந்தவாறு அணிவகுக்கும் அழகை ரசித்திருக்கிறீர்களா? ‘V’ வடிவம், அலை வடிவம், என அணிவகுத்துப்போகும் அழகை விவரிக்க எந்த மொழியிலும் உங்களுக்கு நான் சொல்லமுடியாது. சில சமயம் பல கருப்பு சேலைகள் காற்றில் பறந்து போவது போல போகும் அழகை என்னென்று விவரிப்பேன்.
            இவை பள்ளிச்சிறார் போல பலர் நீரில் ஒருத்தரை முந்தி ஒருத்தர் போவது போல நீரில் மீன் தேடி, மூழ்கிப்போவது, ஓ! அந்த பரவசத்தை எப்படி எழுத்தில் வடிப்பேன்? மூன்று நீர்காகம் வகையில் சின்ன நீர்காகம்(Little Cormorant) பற்றிதான் சொல்கிறேன்.
திடீரென்று நான் பார்த்து ரசிக்கும் போதே நீரில் ‘பொசுக்’கென மூழ்கி கண்ணாம்பூச்சி விளையாடும் சில்மிஷத்தையும், மூழ்கிய இடத்தில் நீர்வட்டம் தோன்றி சற்றே பெரிய பெரிய வட்டமாகி மறைந்து போகும் ஏகாந்த வனப்பை அனுபவித்தால் தான் தெரியும்.
ஒரு நாளைக்கு 2-3 கிலோ மீன் சாப்பிடும் என் ப்ரியமான நீர்காகம். அதை மீனவன் விரும்புவதில்லை. ஏனெனில் இவை மீனவனுக்கு மீனைக்குறைக்கிறதாம். பல வருஷங்களுக்கு முன்பு கேரளத்தின் மீனவர், நீர்காகத்தின் எண்ணிக்கை பெருகிவிட்டது, அதனால் கழுத்தைத்திருகி கொன்று, எண்ணிக்கையைக்குறைக்கவேண்டும் என்ற செய்தி படித்தேன்.
இது இப்படி இருக்க, வடஇந்தியாவில் இந்த நீர்காகத்தின் கழுத்தில் வளையமிட்டு படகிலிருந்து மீனவர் நீரில் விசிறி,, அது மீனைப்பிடித்ததும் ‘தர,தர’வென இழுத்து பிடித்த மீனை அபகரித்து, மீண்டும் நீரில் எறிவர்.
மீனவர், நாள்முழுக்க குளத்து நீருக்குள் மதில் மாதிரி தொங்கவிடும் வலையில் மாட்டி இறக்கும் பரிதாபம் மிகையான வருத்தமளிக்கிறது. மேலும்  பொறுப்பற்ற மனிதன் போடும் பிளாஸ்டிக் பொருட்கள் நீர்காகம் மற்றும் நீர்பறவைகளால் உட்கொள்ளப்பட்டு, இறப்பது விசனமளிக்கிறது.

இதற்கெல்லாம் தீர்வு,  குளத்தை பராமரிக்கும் PWD, சுற்றுசூழலுக்காகவே இருக்கும் Environment Dept, மின்பிடிக்க உபகரணம், மற்றும் நீருக்குள் மதில் கட்டும் வலைவிரிப்பைக்கற்றுக்கொடுத்த Fisheries Dept. கழுத்தில் வளையமிட்டு மீன் அபகரிக்கும் நரிபுத்தியை SPCA, Blue Cross, Forest Dept என அவரவரின் பொறுப்பு,கடமையை(Duty)செய்தால் பறவைகள் பிழைக்கும்.

            

Thursday, September 19, 2013

BIRD RESCUE                                      
உலகம் முழுதும் வருஷத்துக்கு  4 லட்சம் கடல் பறவைகள் இறக்கின்றன
மனிதனின்ஆபத்தான மீன் வலை மற்றும்
பிளாஸ்டிக்கழிவுகளே காரணம்- புள்ளியலில் ஆறு, குளம் இல்லை

             உயிரினம்வாழத்தகுதியற்ற 

உலகம் ஆக்கிவிடுவான்!


குளத்துநீருக்குள் மதில் சுவர் போல மீன்வலையை 48 மணிநேரம் தொங்க விடுவதால் அதில் சிக்குண்டு இறக்கும் பறவைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு மாய்ந்து போகும் பறவைகள் உலகம் முழுவதும் 4 லட்சம் என புள்ளியல் சொல்கிறது. மனிதனின் சொகுசு வாழ்க்கையால் எத்தனை உயிர் பலி! எத்தனை சுற்று சூழல் மாசு! 2000 மைல் நதியில் பிரயாணித்துக்கடலில் கலந்த பிளாஸ்டிக்கழிவுகளை அல்பாட்ரஸ் எனும் கடல் பறவைகளால் உணவு என உண்ண, உயிர் போன பறவைகள் ஏராளம். இதில் மற்ற பறவைகளும் சேர்த்துத்தான். மனித நாகரிக நகரம் 2000 மைலுக்கு அப்பால் இருந்தும் எவ்வளவு தூரம் பிளாஸ்டிக் மாசு பரவுகிறது, பாருங்கள!
பறவைகள் மட்டுமள்ள விலங்குகளும் இதில் அடக்கம். மனிதர்கள் நாகரிகம் அடைந்தவர் எனச்சொல்ல முடியுமா? அவன் முன்னோர் (மீனவர்) மாதிரி தோளைச்சுழற்றி மீன்வலைவீசினால், பறவைகள் வலையில் மாட்டாது. தேவையற்ற வலைத் துண்டுகளை குளக்கரையில் வீசிவிடுவதும், மற்றும் நீருக்குள் அமிழ்த்தும் மீன் வலையும், பெரிதும் ஊறுவிழைவிக்கின்றன. பறவைகள் வலையில் சிக்கி வேதனையுடன் மாய்ந்து போகின்றள. பறவைக்குஞ்சுகளுக்கு இரை எது? பிளாஸ்டிக் கழிவு எது? என எப்படி பாகுபடுத்தும்? அப்படியே விழுங்க வலியில் துடிதுடிக்க மடிகின்றன. மனிதன் சம்பாதணையுடன் சொகுசாக இருந்தால் போதும் என நினைக்கிறான்! மற்ற உயிரினங்களைப்பலி கொண்டு எப்பேர்பட்ட பெருவாழ்வு வாழ்கிறான் பாருங்கள்! இந்த அவலம் மேற்கொண்டு நடக்காமல் இருக்க அரசும், அரசு சாரா அமைப்புகளும்(NGO), நாமும் என்ன செய்யப்போகிறோம்?

இது என் அனுபவம். கேளுங்கள்! அமராவதி அணைப்பகுதியில் நான் தூவானம் வனவலம்(Trekking) போய் திரும்பும் போது ஒரு கொண்டைக்குருவி மீனவர் விசிறி விட்ட துண்டு வலையில் மாட்டித்தவித்ததை பார்த்து விடுவித்திருக்கிறேன். சூலூரில் குள நடுவே இருந்த சிறு தீவில் காலில் மாட்டி தவித்த மாட்டுக்கொக்கினை வாடகைக்கு படகு எடுத்துப்போய் விடுவித்திருக்கிறேன். பள்ளபாளையம் குளத்தில் முக்குளிப்பான் வலையில் மாட்டி தவித்ததை பரிசலில் சென்று விடுவித்தேன். (இந்த விபரம் மழை குருவி வலைப்பூவில் ஏற்கனவே எழுதியுள்ளேன். பறவை பாதுகாப்பு தொகுப்பில் படிக்கவும்)நீங்கள் பார்க்கும் இரண்டு இறந்த சின்ன நீர்காகங்கள் வலையில் சிக்கி, சூலூர் குளக்கரையில் இறந்து கிடந்தவை. இது குறித்து மீன்வளத்துறைக்கு நான் எழுதி எந்த விளைவுமில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் Fisheries dept- க்கு மீன் பிடிக்கும் முறையை மாற்ற வேண்டும் என வற்புறுத்தி உடனே எழுதவேண்டும்.