Monday, May 26, 2014

   பூனைகளின் உட்சண்டை....   INFIGHTING OF CATS     

           பூனைகளை புலியினம் எனலாம். அதனுடைய குணாதிசயங்கள் இதற்கும் இருக்கிறது. எங்கள் குடியிருப்புப் பகுதியில் பல பூனைகள் வயதுவாரியாக உலவுகின்றன. யாரும் எடுத்து வளர்த்தவில்லை.எப்படி வயிற்றை வளர்க்கின்றன, எங்கு தூங்குகின்றன , எங்கு போய் இறந்து போகின்றன என்பன மர்மமாக உள்ளது. ஒரு நாள் இரவு எட்டு இருக்கும், எனது தங்கை பெண்கள்,கல்லூரி மற்றும் பள்ளியில் படிப்பவர்கள், கோடை விடுமுறையில் விருந்தினராக வந்தவர்கள் கீழ் தளத்திலிருந்து மாடிக்கு ஓடி வந்தனர். நான் கணனியில் முகநூலில் பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன்.
 பரபரப்பாக, ‘ முன்னறையில்  பெரியபூனை,குட்டிப்பூனையைக்கடிச்சுக் கொதறுது, வாங்க!’ என்றனர். நான் கீழ் தளம் செல்ல அங்கு குட்டிப்பூனை பயத்தில் மலஜலம் கழித்து, கழுத்திலும், பக்கவாட்டு வயிற்றிலும் பெரிய பூனையின் நகங்கள் பதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நாங்கள் சென்றதும் மஞ்சள், வெள்ளைப் பெரிய பூனை தப்பித்து ஓடியது. ‘நான் குட்டிப்பூனை இறந்து விடும், இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?’ என புலம்பி, வருத்தப்பட்டுச்சொன்னேன். ‘க்ரில் மேல், அறைக்கூரைப்பகுதியெல்லாம் தாவிப்பாய்ந்து தப்பிக்கப்பார்த்தும், அந்த அரக்கத்தனமான பூனை விடவில்லை. கடித்துக்குதறியிருக்கிறது.’ என உறவுப்பெண்டிர் பயந்த குரலில் சொன்னார்கள். மலஜல நாற்றம் அடித்தது. ‘காலைக்குள் பூனை இறந்து விடும். காலையில் அடக்கம் செய்யலாம். நாம் செய்ய ஒன்றுமில்லை. மோசமான நிலையில் உள்ளதுஎன நகர்ந்தேன்.
காலையில் பூனையை அடக்கம் செய்ய மண்வெட்டியெடுத்து  எதிர்புறத்தோட்டத்தில் இரண்டடிக் குழி வெட்டிவிட்டு பூனையைத்தூக்கினால் அது லேசாக நெளிந்தது. பூனை பாவம் பொல்லாதது, உயிரோடு புதைப்பது மகா பாவம் என ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு கார் ஷெட்டில் காருக்கு அடியில் வைத்தேன். அது மறுநாள் பார்த்தால், மூன்றடி தள்ளிக்கிடந்தது. நாய், மற்றும் திரியும் பூனைகள் மீண்டும் கடித்துக்குதறிவிடுமோ என பயம் வாட்டியது. மறுநாள் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து, சுற்றிலும் பினாயில் தெளித்து வாசம் வராமல் சுத்தமாக அந்த இடத்தை வைத்தேன்.
தம்பி 15 கி.மீ தாண்டியுள்ள ஊரில் வசிக்கிறான். அவன் வீட்டில் பூனை ஒன்றுபோக ஒன்று வளர்த்துவர். அவனை வரச்சொன்னேன். அவன்நீயோசல்ப்காயத்துக்கு மருந்துப்பொடியும், பால் கொடுக்க ஒருசிரின்ச்சும் கொண்டு வந்தான். பால் சிரின்ச் ஊசியில் கொடுத்தான். பால் இறங்குவது கழுத்து அசைவில் உணர்ந்தேன். காயத்துக்கு ‘நீயோசல்ப்பொடி தூவினான். ‘இப்படியே பராமரியுங்கள்எனச்சொல்லிப்போய் விட்டான். நானும் ஆறு நாள் போராடிப்பார்த்தேன். பினாயில், நீர், சிரின்ச் ஊசிபால், ‘நீயோசல்ப்பொடி, எனக்கவனித்துப்பார்த்தேன். பால் கொடுத்தால் உடல் முழுக்க நனைந்து போனது. அது பாதி உள்ளிறங்க, பாதி வெளியில் வழிந்தது. பாலுக்கு கட்டெறும்பு, சின்ன எறும்பு என வந்து பூனை வாயிலும், உடம்பிலும் ஏறின. பார்க்கப்பரிதாபமாக இருந்தது.
இந்த கருப்புவெள்ளை நிறக் குட்டிப்பூனையின் தகப்பன் பூனைக்கும், வேறொரு வெள்ளை, மஞ்சள் நிறப் பூனைக்கும் விரோதம். அதை நீங்கள் புகைப்படங்களில் பார்க்கலாம். (படம்; 1,2) ஒன்றையொன்று அடிக்கடி கத்திக்கொண்டும் உறுமிக்கொண்டும் சண்டையிடும். அதன் மையமாக வைத்து கருப்புவெள்ளை தகப்பனது,மஞ்சள் வெள்ளை  பூனை, கருப்பு வெள்ளை குட்டிப்பூனையை குதறிவிட்டது. இப்படியும் நடக்குமா! நடக்கும். விலங்குகளின் பதிவுகள் நம்மிடமும் உள்ளது. இப்போதும் இது மாதிரி நடந்து கொள்கிறோமா, இல்லையா?
குட்டிப்பூனை இறந்துபட்ட பிறகு விரோதப்பூனைகளிரண்டும் ஆக்ரோசமாக புலிகளைப்போல சண்டையிட்டுக் கொள்வதைப் பாருங்கள். (படம்; 3)
அடிக்கடி உயிர் இருக்கிறதாவென என் கண்கள் பூனையின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியைப் பார்க்கும். பூனை சில பொழுது விழித்துப்பார்க்கும், முணகிநெளியும். அது படும் அவஸ்தை, உயிர் விடப்போராட்டமா? உயிர் தக்க வைத்துக்கொள்ளப்போராட்டமா? எனத் தெரியாது, நானும் கண்ணீர் விடாத சோகத்திலிருந்தேன். நாற்றம்…. எனக்கு கிருமிகள் ஒட்டிக்கொள்ளுமோ! பூனை மெலிந்தது. நிற்க வைத்தேன் பல முறை அது கீழே சரிந்து, சரிந்து விழுந்தது. நான்கு பூனைகள் தனித்தனியாக வந்து பார்த்துச்சென்றன. நமது வேண்டப்பட்டவர் மருத்துவ மனையில் இருந்தால் ரொட்டி, ஆப்பிளோடு சென்று பார்ப்பதில்லையா! அது போல வாயில்லா ஜிவன்களுக்கும் அந்த உணர்வு இருக்கிறது.
திருப்பிப்போட அது எப்போதோ கழித்த சிறுநீர் அடர் மஞ்சலாக இருந்து, ஒரு பக்க உடலில் பரவி ஒட்டியிருந்தது. வாய் பிளந்திருந்தது. வெளிரியிருந்தது. இறைவனுக்குத்தெரியும். எந்தக் கானகத்தில், எந்த மரத்தில், எந்தக்கிளையில் எந்தச்சிமிறில், எந்த இலை வாடி வீழும் என அவரைத்தவிர யாவருக்கும் தெரியாது, என கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்த மதத்தில் எழுதியுள்ளார். அது நினைவுக்கு வந்தது.மனம் சங்கடமாக இருந்தது. மஹாத்மா காந்தி ஒரு ஆடு படும் மரணப்போராட்ட அவஸ்தையைப்பார்த்து மனம் புண்ணாகி, சகிக்காது ஊசி போட்டு கொன்று விடச்சொன்னார்,என நண்பர் சொன்னார்.

பூனையை இனி என்னால் காப்பாற்ற முடியாது என உணர்ந்தேன். இயற்கை நியதியில் தலையிடுகிறேன், இது கூடாது எனவும் மனதுக்குப் பட்டது. ஆறு நாள் முயற்சி பலன் தரவில்லை. ஒரு பாதி உடைந்த பிளாஸ்டிக் குடத்திலிட்டு பூனையை  50 செண்ட் மைதான மூலை தில்லி முட்புதருக்கடியில் வைத்தேன். கடைசியாக அந்தப்பூனை என்னை பச்சைக் கண்ணில் விழித்த விதம் என் இதயத்தை பிழிந்தது. சர்வம் சிவமயம்

Saturday, May 17, 2014

பச்சை வாயன்

Small Green billed Malkoha
(Rhopodytes viridirostris)

அதிகாலைப்பொழுது காகம் கரையும் வேளையில்

சின்னப்பச்சைவாயன்

            புத்தபெளர்ணமியன்று(14.05 2014) மருதலை அடிவாரம் தெற்குப்பகுதிக்குச்சென்றோம். விஜயகுமார், மோகன் பிரசாத், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் முதல் நாள் பேசி முடிவு செய்து, இரண்டு மோட்டர் சைக்கிளில் கிளம்பினோம். நகரத்திலிருந்து 15 கி.மீ இருக்கும். முதல் நாள் இரவு மழை பெரியதாகப்பெய்து,  அருமையான பறவை நோக்கலுக்கு வழிவகுத்திருந்தது.மழை வாய்க்கால் சுவடுகள், அந்த ஈரப்பதம், நெகிழ்ந்த மேற்பரப்பு மண், உழுது விட்ட குறிஞ்சி நிலம், சாம்பல் நிற மேகங்கள் நிறைந்த வானம்என்னைகுதூகலத்தில்ஆழ்த்தியது.வானம்பாடிக்குருவிகள் (Bush Lark)மின் கம்பிகளிலும் தரையிலும் கண்டுரசிக்க முடிந்தது. ஈப்பிடிச்சான்கள்( Small Green Bee eaters) அங்குமிங்கும் பச்சை காட்டின. ஒரு குறு முயல்(Rabbit) வேகமாக வெட்டவெளியில் ஓடியது மனதைக்கவர்ந்தது. முயல் இருந்தால் குள்ளநரி இருக்கும்.
            மலை முழுக்க வேல மரங்கள். இது ஒரு முட்காடு நிறைந்த மலை. யானைகள் நடமாட்டம் சில சமயம் இருக்கும். நெட்டைக்காலி(Paddy field Pipit) ஒன்று வேலிக்கல்லில் காட்சி தந்தது. மலை அடிவாரம் என்றால் சிறு கோயில் உருவாகிவிடும். வனபத்ரி கோயில் உள்ளது. கோயிலுக்குப்போகும் வழியில் மூன்று அரச மரங்கள், ஒரு ஆழ மரம் பெரியதாய் குடைவிரித்திருந்தன. அரசமரத்தின் கிளைகளில் ஜெஸ்பல் ஒட்டுண்ணி கொடிகள் தொங்கிக்கொண்டிருந்தன.இந்தக்கொடி ஜெஸ்பல்(Jezebel) என்ற இன வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவுத்தாவரம். இந்த உணவுத்தாவரத்தின் பெயரை வைத்தே அதை உணவாக உண்ணும் வண்ணத்துப்பூச்சிக்கு பெயர் வந்துள்ளது என மூர்த்தி சொன்னார். தரையிலிருந்த நன்னாரி, வேரில் வாசமிருக்கும் செடி சிறியதாக வளர்ந்திருந்ததை மோகன் காட்டினார்.
              இந்தியன் ராபின் (Indian Robin) ஜோடி ஆனந்தமாக இங்குமங்கும் பறந்து பூச்சி பிடித்துக்கொண்டிருந்தது. சிக்ரா(Shikra) வானத்தை அளந்து கொண்டிருந்தது. ஆலமரத்தடியில், யானை வருவதைத்தடுக்க கால்வாய் போல பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. காட்டுக்குள் அப்படியே மண் பாதை சென்றது. மூர்த்தி கேழ்வரகு உப்புமா கொணர்ந்தை பங்கிட்டு உண்டோம். சுவை கூட்டியது நாவில்.. அதுவும் வனத்துக்குள் உண்டால் அதீத சுவையிருக்கும். வரப்பு, வனப்பாதை என நடந்து இயற்கையை அதிசயத்தோம். கரிச்சான்(Black Drongo) பல குரலில் பாடி சூலழை இனிமையில் தள்ளியது. காடைகள்(Grey partridge) மூன்று என்ன மாயமாய் போக்குக்காட்டுகின்றன். இவைகள் லென்ஸ்க்கு சிக்குவது நமது அதிஷ்டம்.
           

பச்சை வாயன்(Small Greenbilled Malkoha) மிக நாணம் கொண்ட பறவை. சின்னப்பச்சை வாயன், பெரிய பச்சை வாயன் என்று இரண்டு வகை உளது.இதில் எங்கள் கண்ணுக்கு தரிசனம் தந்தது சின்னப்பச்சை வாயன். இதன் அலகு பச்சை. கண்ணைச்சுற்றி நீல நிற தீற்று. இவை நம்மைக்கவரும். பறப்பதில் சவளை. அதனால் முட்புதருக்குப்புதர் மெலிதாகப்பறந்து ஒளிந்து கொள்கிறது. தரையில் இறங்குவது அற்பம். உண்ணுவது;  வெட்டுக்கிளி, பல்லி, சிறு விலங்கு, மான்டிஸ், புழு என்பன. கூட பெர்ரிப்பழமும். இப்பறவை ஒன்றை வேல மரங்களுக்கிடை பார்த்து ரசித்தோம். இதைப்பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். புகைப்படப்பெட்டிக்குள் அடைப்பதற்கு, படு முயற்சி வேண்டும். 

Sunday, May 4, 2014My book "DIARY ON THE NESTING BEHAVIOUR OF INDIAN BIRDS" available in ON LINE http://www.marymartin.com/web/selectedIndex?Entry=140646

மாடப்புறாக்கள்
Blue Rock pigeons (Columba livia)
            உலகம் முழுவதும் பரவியிருக்கும் இப்பறவைகள் விண்ணைத் தன் சிறகுகளால் வெற்றி கொண்டவை. நான் சிறு வயதில் அதாவது 5 வயதில் இருக்கும் போது, எங்கள் வீதியில் வெள்ளிங்கிரி என்பவர் இருந்தார். அவர் வீடுஅந்த வீதியின் கடைக்கோடி. அவர் புறா வளர்பார். அங்கு அடிக்கடி போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். அம்மா சோறு ஊட்ட அடிக்கடி வந்து என்னை கட்டாயப்படுத்திக்கூட்டிச்செல்வார்.
புறாக்களுக்கு விதம்விதமாக நாமகரணம் செய்து வைத்திருந்தார். மஞ்சக்குருமா, செங்கண்ணு, லகடு, லகான், இப்படிப்பெயர். புறாக்காரர் இடையே போட்டி கூட நடக்கும். எந்தப்புறா அதிகம் நேரம் பறக்கிறதோ அதன் சொந்தக்காரருக்குப்பரிசு. ‘கொட்ரு…க்ட்ரு…ட்ரு..கொட்ரு…’ என சப்தம் வெள்ளிங்கிரி வீட்டில் வந்து கொண்டிருக்கும். அவர் சாதாரண குடும்பஸ்தர். அவர் வீட்டின் முன்பு புறாக்கழிவு, இறகுகள், அலுமினியநீர்க்குவளை இருக்கும். ஒரு பக்கம் புறாக்களை அடைக்கும் மரத்தாலான புறாக்கூண்டுகள். அதில் இரண்டு புறா அடைப்பார். குறும்புக்காரப்புறாவாக இருந்தால் ஒன்றினை அடைப்பார். இணைசேர்த்த,ஆண், பெண் புறாக்களை ஒரு கூண்டில் அடைப்பார். சோளம், ராகி உணவாக சிதறிக்கிடக்கும்.
ஆண் புறா, பெண் புறாவை விட உருவத்தில் பெரியதாக இருக்கும். பளபளவென்ற பச்சை சிவப்பு பட்டை மாலை கழுத்திலிருக்கும். இவை ஜோடி சேர்ந்தால், பிரியாது. ஜோடியாகவே இருக்கும்…தமிழர் பண்பாடு போல…  அவை சுதந்திரப்பறவைகளாக இருக்கும் போது கோவில் கோபுரங்கள், பாறை முகடுகள், பாளடைந்த கோட்டைகள், தானியக்கூடங்கள், தற்போது அடுக்குமாடிக்கட்டிடங்கள் என வியாபித்துள்ளன. புறாக்களுக்கு பறப்பது பிடிக்கும், அதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும். காலை வேளையில் குழுவாகப்பறக்கும் அழகையும், சூரிய கிரணங்கள் அதன்சிறகுகளில் மிளிர்வதையும் பார்க்க எனக்கு கவிதை எழுதத்தோணுகிறது.      
           நகரமாகட்டும், முட்காடாகட்டும் இவை சஞ்சலமின்றி பறப்பது நமக்கு உற்சாகமூட்டும். இவற்றைப்புகைப்படம் எடுப்பது என்பது அசாத்தியம். அதுவும் பறக்கும் நிலையில் லாட்டரி விழுந்த மாதிரி தான். சோளக்காடு அதிஷ்டவசமாக எனது நகரமும், கிராமும் அல்லாத ஊரில் கிடைக்க உற்சாகமானேன். பல நாட்கள் முயன்று வியர்வை முதுகில் வழிய, புருவத்தில் வழிந்து கண்கள் ‘மச, மச’ வென ஆக கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு  50, 100 என எடுக்க 5 படங்கள் தேறியது தான் உண்மை. வேகம்… வேகம் …வேகச்சிறகடிப்பு…. என் செய்வது? ஒவ்வொரு முறையும் மாடப்புறாக்கள் பறக்கும் காட்சியைப் பார்க்கும் தோறும் என்இதயமும் சிறகடித்து அவைபின்னே போகும், காதலி பின்னே போவது போல…………

மாடப்புறா
ஆலயம், கோயில், மசூதி உச்சி
மிச்சமின்றி நீவிர்தான்! மனிதரோ
ஏதோ வொரு மதத்தில் மீந்தவர்
காதலர் கை கோர்த்து இந்தியா ‘கேட்’ அருகில்;
நூற்றுக்கணக்கில் தரை மேய்ந்த நீவிர்,
‘பட, பட’ வென சிறகடித்து இடம் மாறி அமர
மனம் அள்ளிக்கொண்டு போனீர்!
கருஞ்சாம்பல் நிற இறகுகளும்
பசுஞ் சிகப்புத் தகடுக் கழுத்தும்
மனம் கொள்ளை கொண்டு போகுதே!
சங்க காலம் தொட்டு மனிதன் நேசித்தானுன்னை.
கோப்புகளில் மூளை சூடாயின்,
அலுவலகப் பலகணி துறுத்திய குளிர் பெட்டி
அமர் மாடப்புறாவே! நின்னைப் பார்க்க
மணிக்கொருதரம் எட்டிப் பார்ப்பேன்
மூளை குளிர்ந்து போகுமுன் தலையசைப்பில்…….

                                                            --சின்ன சாத்தன்