Saturday, May 17, 2014

பச்சை வாயன்

Small Green billed Malkoha
(Rhopodytes viridirostris)

அதிகாலைப்பொழுது காகம் கரையும் வேளையில்

சின்னப்பச்சைவாயன்

            புத்தபெளர்ணமியன்று(14.05 2014) மருதலை அடிவாரம் தெற்குப்பகுதிக்குச்சென்றோம். விஜயகுமார், மோகன் பிரசாத், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் முதல் நாள் பேசி முடிவு செய்து, இரண்டு மோட்டர் சைக்கிளில் கிளம்பினோம். நகரத்திலிருந்து 15 கி.மீ இருக்கும். முதல் நாள் இரவு மழை பெரியதாகப்பெய்து,  அருமையான பறவை நோக்கலுக்கு வழிவகுத்திருந்தது.மழை வாய்க்கால் சுவடுகள், அந்த ஈரப்பதம், நெகிழ்ந்த மேற்பரப்பு மண், உழுது விட்ட குறிஞ்சி நிலம், சாம்பல் நிற மேகங்கள் நிறைந்த வானம்என்னைகுதூகலத்தில்ஆழ்த்தியது.வானம்பாடிக்குருவிகள் (Bush Lark)மின் கம்பிகளிலும் தரையிலும் கண்டுரசிக்க முடிந்தது. ஈப்பிடிச்சான்கள்( Small Green Bee eaters) அங்குமிங்கும் பச்சை காட்டின. ஒரு குறு முயல்(Rabbit) வேகமாக வெட்டவெளியில் ஓடியது மனதைக்கவர்ந்தது. முயல் இருந்தால் குள்ளநரி இருக்கும்.
            மலை முழுக்க வேல மரங்கள். இது ஒரு முட்காடு நிறைந்த மலை. யானைகள் நடமாட்டம் சில சமயம் இருக்கும். நெட்டைக்காலி(Paddy field Pipit) ஒன்று வேலிக்கல்லில் காட்சி தந்தது. மலை அடிவாரம் என்றால் சிறு கோயில் உருவாகிவிடும். வனபத்ரி கோயில் உள்ளது. கோயிலுக்குப்போகும் வழியில் மூன்று அரச மரங்கள், ஒரு ஆழ மரம் பெரியதாய் குடைவிரித்திருந்தன. அரசமரத்தின் கிளைகளில் ஜெஸ்பல் ஒட்டுண்ணி கொடிகள் தொங்கிக்கொண்டிருந்தன.இந்தக்கொடி ஜெஸ்பல்(Jezebel) என்ற இன வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவுத்தாவரம். இந்த உணவுத்தாவரத்தின் பெயரை வைத்தே அதை உணவாக உண்ணும் வண்ணத்துப்பூச்சிக்கு பெயர் வந்துள்ளது என மூர்த்தி சொன்னார். தரையிலிருந்த நன்னாரி, வேரில் வாசமிருக்கும் செடி சிறியதாக வளர்ந்திருந்ததை மோகன் காட்டினார்.
              இந்தியன் ராபின் (Indian Robin) ஜோடி ஆனந்தமாக இங்குமங்கும் பறந்து பூச்சி பிடித்துக்கொண்டிருந்தது. சிக்ரா(Shikra) வானத்தை அளந்து கொண்டிருந்தது. ஆலமரத்தடியில், யானை வருவதைத்தடுக்க கால்வாய் போல பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. காட்டுக்குள் அப்படியே மண் பாதை சென்றது. மூர்த்தி கேழ்வரகு உப்புமா கொணர்ந்தை பங்கிட்டு உண்டோம். சுவை கூட்டியது நாவில்.. அதுவும் வனத்துக்குள் உண்டால் அதீத சுவையிருக்கும். வரப்பு, வனப்பாதை என நடந்து இயற்கையை அதிசயத்தோம். கரிச்சான்(Black Drongo) பல குரலில் பாடி சூலழை இனிமையில் தள்ளியது. காடைகள்(Grey partridge) மூன்று என்ன மாயமாய் போக்குக்காட்டுகின்றன். இவைகள் லென்ஸ்க்கு சிக்குவது நமது அதிஷ்டம்.
           

பச்சை வாயன்(Small Greenbilled Malkoha) மிக நாணம் கொண்ட பறவை. சின்னப்பச்சை வாயன், பெரிய பச்சை வாயன் என்று இரண்டு வகை உளது.இதில் எங்கள் கண்ணுக்கு தரிசனம் தந்தது சின்னப்பச்சை வாயன். இதன் அலகு பச்சை. கண்ணைச்சுற்றி நீல நிற தீற்று. இவை நம்மைக்கவரும். பறப்பதில் சவளை. அதனால் முட்புதருக்குப்புதர் மெலிதாகப்பறந்து ஒளிந்து கொள்கிறது. தரையில் இறங்குவது அற்பம். உண்ணுவது;  வெட்டுக்கிளி, பல்லி, சிறு விலங்கு, மான்டிஸ், புழு என்பன. கூட பெர்ரிப்பழமும். இப்பறவை ஒன்றை வேல மரங்களுக்கிடை பார்த்து ரசித்தோம். இதைப்பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். புகைப்படப்பெட்டிக்குள் அடைப்பதற்கு, படு முயற்சி வேண்டும். 

1 comment:

  1. சங்க இலக்கியத்தில் வரும் குறிஞ்சி நில பரப்பை இது வரையிலும் நம் முன்னோர்கள் காப்பாற்றி நமக்கு தந்து உள்ளார்கள். ஆனால் நாம் அதை அழித்து கட்டிடங்களாக ஆக்கி கொண்டு இருக்கிறோம். வாழ்வதற்கு வீடுகள் கட்டினாலும் பரவாயில்லை. 'இன்வெஸ்ட்மெண்ட்'க்காக நில பரப்பை அழித்து பல்வகை உயிரினங்களையும் அழிக்கின்றோம். கூடவே ஆடம்பரங்களுக்கு marble, granite மற்றும் மணல் போன்றவற்றாயும் அழித்து வாழ வேண்டுமா என்று சிந்தியுங்கள். மீதம் உள்ள குறிஞ்சி நில வகை வாழ்விடத்தை நோக்கியது மகிழ்ச்சி தருகின்றது. அங்கு தேவார்மிதமாய் உண்டது ராகி புட்டு. அதுவும் இந்த நில வகை உணவே. மூர்த்தி சாருக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete