Monday, March 31, 2014






Rain tree



பருவ காலங்கள் வசந்த காலத்தை வெவ்வேறு விதமாகக் கொண்டாடுவது புலப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இந்திர விழா பற்றி வருகிறது. இது வசந்த விழாவாக இருக்கும். மாடம், கடற்கரை, ஆறு எனக் காதலியுடன் கூடிக் குலாவி பாடல், இசைத்து முழு நிலாவுடன் மகிழ்ந்து போகின்றனர். நம்மூர்களில் மாரியம்மன், மாகாளியம்மன் கோயில் களில் விழா முடிந்த மறுநாள், மஞ்ச நீரடி விழா. மஞ்சள், சுண்ணாம்பு என நீரில் கரைத்து மாமன்மார்களைப்பார்த்து முறைப்பெண்கள் நீரை அடிப்பது விளையாட்டான பேருவகை.வடபுலத்தை எடுக்குக் கொண்டால், ஹோலிப் பண்டிகையின் போது வண்ண வண்ணச்சாயங்களின் நீரால் ஒருவரை ஒருவர் தெளித்துக் கொள்கின்றனர். மரங்கள் பூக்களை வர்ஷிக்க, மணம் பரப்பிட விழா. பனி, மழை, குளிர் விலகி, ஆதவனின் முகம் தெரிய வசந்த விழாக்கள் தொடக்கம். வசந்த பருவத்தில் வேப்ப மரங்கள் புத்தம் புது இலைகளோடு, வெள்ளைக்குறும்பூக்கள் மெல்லிய மணம் பரப்புகின்றன. சித்திரை ஒன்றில் வேப்பம் பூக்கள் அருந்த தயாராக இருக்கும், உகாதிப் பண்டிகை. ஆகவே மரமும், பருவமும், பண்டிகைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து நாம் கொண்டாடுகிறோம்.வசந்த காலம் எது என மக்களுக்கு மறந்து போனது. மாசி ,பங்குனி தான் நமக்கு வசந்த காலம். மாசியில் மரங்கள் இலைகளை உதிர்த்து புத்தம் புது தளிர் இலைகளை ஏந்துகின்றன. மாசிக்கடைசியிலேயே மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மரங்கள் வசந்த்த்தை வரவேற்கின்றன. மரங்களுக்கு ஐப்பசி மழை கிடைத்து மாசி, பங்குனியில் சூரியன் வெப்பம் பெற்று பூக்கள் மலருகின்றன. செம்மண், அத்தோடு நீரும், வெப்பமும், காற்றும் சேர்ந்து எப்படித்தான் வண்ண வண்ண மலர்களைக் கொண்டு வருகின்றனவோ! மனிதன் வாழ்வில் இயற்கையைப் பார்த்து வியப்படைய வேண்டும். மண் எப்படி விதவிதமான மலர்களுக்கு வாசனையைக் கொண்டு வருகின்றன, மக்கள் வியப்படைய வேண்டும்.பருவ காலங்கள் இந்த உலக வெப்ப மயமாதலில் களைக்கப்பட்டு விட்டது. வெய்யில், மித வெய்யில், அதிவெய்யில், தகிக்கும் வெய்யில் என்பது போல வெய்யில் மூன்று, மூன்று மாதங்களாக நம்மைப் படுத்துகின்றன. பருவ காலங்கள் பிழை பட்டதை சீர்படுத்த, சோலைகளை ஏற்படுத்த வேண்டும். நீர் நிலைகளைப் பாழ் படுத்தி, அதில் பேருந்து நிலையம் போல கட்டுமானம் செய்தல் கூடாது. மலைப்பயிர்களான தேநீர், காபி பயிரிடுதலை கைவிட்டு மலைகளில் மழைக்காடுகளை ஏற்படுத்த வேண்டும். இப்படி அறிவுப்பூர்வமாக செயல் பட்டால் வரண்டு போன ஆறுகள் மீண்டும உயிர் பெறும். பருவ காலங்கள் மீண்டும் மலரட்டும். அவற்றோடு நமது வாழ்க்கையும் பேருவகை கொள்ளட்டும்.
Pink Cassia













தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து,
மன்னவன் கூடல் மகிழ்துணைதழூஉம்
இன்இளவேனில யாண்டு உளன் கொல்? -   சிலப்பதிகாரம்


Clisiridium



கடம்பமரம்


                                                            சிலப்பதிகாரம்
சோலைகளும், கானகமும் அழகான மலர்களை ஏந்தி நிற்க
பொதிகை மலை ஊடே வந்த தென்றல் நகருக்குள் புக
மன்னன் தன் துணையை மகிழ்ந்து தழுவும்
இந்த இளவேனில் காலம் போல எதுவும் இல்லை.


இது போல ஆறு பருவகாலங்களையும் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. இலக்கியங்களை நீங்கள் படித்து இன்புறவேண்டும்.

Tuesday, March 25, 2014

நினைவேந்தல்

சுனில் லால்ஜி

இவர் ஒரு இயற்கை விரும்பி. மும்பயிலிருந்து 50 வருடங்களுக்கு  முன்பு கோயம்புத்தூர் வந்தார். சுனில் லால்ஜி B.A.,(Psychology) படித்தவர். இவர் இளமைக்காலங்களிலேயே இயற்கை நாட்டம் கொண்டவர். மும்பயிலிருக்கும் போதே பல வனவலம் (Trekking) சென்றவர். வயது வரம்பில்லாமல் எல்லா வயதினர் கூடவும் பழகக்கூடியவர். முதன் முதல் Youth Hostel of India (YHAI) உறுப்பினர். அதன் மூலம் பல வனவலம் சென்றவர். ஐம்பது வருடங்களாக கார் ஓட்டிவர், 75 வயதுக்கு மேலும் மலைப்பாதைகளில் கார் ஓட்டிய திறமைசாலி.
            
                கோவை வந்தவர் பாஸ்மதி அரிசி, பருப்புஆகியவற்றிற்கு தனி முத்திரை (Brand) பதித்து வியாபாரம் செய்து செல்வம் ஈட்டியவர். தன் வியாபரத்துடன் அவருக்கு இஷ்டமான பொழுது போக்கு இயற்கையோடு இருப்பது தான்.ஒரு நிலைப்பாடு வந்ததும் வியாபாரத்தை குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டு முழுக்கவும் இயற்கையில் ஒன்றி, வாழ்வில் ஈடுபட்டார். கோவையைச்சுற்றியுள்ள இயற்கை கொஞ்சும் இடங்களுக்குச் செல்வார். அவர் தன்னுடன் இயற்கை விரும்பிகளையும் அழைத்துச்செல்வார். பறவையியல் நூல்களை எனது அப்போதைய அலுவலகம் (Central Excise & Customs) கூட வந்து என்னைச்சந்தித்து கொடுப்பார். அவர் எதையுமே இலவசமாகப்பெறக்கூடாது என்பார்.
            கடின முயற்சியும்,உழைப்பும் அவரது மூலதனம். மனவியல் (Pshchology) சம்பந்தமான கட்டுரைகளை கோப்பில் வரிசையாக கோர்த்து வைப்பார். வீட்டின் பின்புறம் பூந்தோட்டம் அமைத்திருந்தார். நண்பர்கள் சென்றால் அதை சுற்றிக் காட்டுவார். அத்துடன் தேனீர் பரிமாறலுடன் இயற்கை சம்மந்தப்பட்ட பத்திரிகை மற்றும் சஞ்ஞிகைகளில் வந்த படங்கள், செய்திகளை ஒட்டி வைத்துள்ள பெரிய டைரிகளைக் காட்டி மகிழ்வார். இது குறித்து தி இந்துநாளேட்டில் செய்தி வந்துள்ளது. அவரது இல்லத்தில் பலமுறை இயற்கை நாட்டமுள்ளவர் குழுமி கூட்டம் நடந்த காலம் மிகை.

இவர் இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு நண்பர்களோடு செல்லும் போது இவரது காரில் அனைத்து பொருட்களையும் கொண்டு வருவார். உணவு, தின்பண்டம், குடிநீர் என எதுவும் விடுபடாமல் கொண்டு வருவார். எல்லோரையும் ஒருங்கிணைத்து, திட்டமிட்டு அழைத்துச் செல்வதில் வல்லவர். இறுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஆனைகட்டியில் நம்மை வந்து சந்தித்தார். விடையும் பெற்றுக் கொண்டார்
கோயம்புத்தூர் இயற்கை சமூகம் (Coimbatore Nature Society) மூத்த உறுப்பினர்.இதற்கு முன்பு இயற்கை விரும்பிகள் சமூகம் (Nature lovers Forum) என்ற அமைப்பை நடத்தி வந்தார். 23.03.14 அன்று Salim Ali Centre for Ornithology and Nature Science –ல் காலை 10.00 மணிக்கு மெளவுன அஞ்சலியோடு திருவாளர்கள் பிரமோத், மதுர், சுகுமார், செல்வராஜ், பரமேஷ்வரன்,விஜயராஜ்,ஜோஷி மற்றும் பல நண்பர்கள் சுனில் லால்ஜியை நினைவு கூர்ந்தனர்.இவரது ஆன்மா இனி வரும் காலங்களில் நம்மை வழி நடத்திச் செல்லும். இவரது ஆன்மா இயற்கையோடு இயைந்து அமைதி பெற, இறைஞ்சும் நண்பர்கள் என்றும் சுனில் லால் மாதவராவ்-வை மறக்க மாட்டார்கள்.

Sunday, March 23, 2014

 காதல் பறவைகள்
Love Birds

காதல் பறவைகள் என்று ஏன் பெயர் வந்தது எனில் அவை அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ளும். ஜோடி இல்லையெனில் இறந்து விடும். தனித்து ஒரு பறவை மட்டும் இருக்காது. வண்ண, வண்ண நிறத்தில் கண்ணையும், மனதையும் கவரக் கூடிய பறவைகள். இவை நம் நாட்டுப்பறவைகள் இல்லை. நம் நாட்டில் வளர்ப்புப் பறவைகளாக கூண்டுக்குள் தான் பார்க்கலாம். வெளியில் சுதந்திரமாக பறந்து திரிந்தால் கழுகு, பருந்துகளால் ஆபத்து. இவை ஆஸ்திரேலியப்பறவைகள். அங்கிருந்து கப்பலில் வியாபார நிமித்தம் இறக்குமதியாக, இவை இந்தியாவில் புறா மாதிரி வளர்க்கின்றனர். விற்பனை நடை பெறுகிறது. இவற்றை வீடுகள், நிறுவனங்கள் என வளர்ப்போர் உண்டு.
பறவைகளின், ஒலி(Sound therapy) மனதை சந்தோஷப்படுத்துகின்றன. உடலையும், மனதையும் ஓய்வுக்கு கொண்டு செல்கின்றன. நீலம், மஞ்சள், வெண்மை, பச்சை எனப் பல வண்ணங்களில் நம்மைக் கவருகின்றன. இவை சப்திப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கில் பறக்கும். பறக்கும் போது வேகத்துடன் பெரிய மேகம் வருவது   போல கிச், கிச் என பேரோலியுடன் வரும்.அப்போது கழுகுகள் உள்ளே பறந்து வந்து சும்மா அலகைத்திறந்து வைக்கும். ஒன்று மாட்டிக்கொள்ளும். அப்படி ஆயிரக்கணக்கில் இரையாகும்.
இவை தன் ஜோடியுடன் மிக நெருக்கமாக இருக்கும். முத்தமழை தான். அலகோடு அலகு இணைத்து அடிக்கடி முத்தம் கொடுக்கும். கூண்டிலேயே இணை சேர்ந்து முட்டை வைத்து அடை காத்துக் குஞ்சு பொரிக்கும்.ஐந்து வரை கூட வைக்கும். முட்டை ஓவல் வடிவத்தில் வெள்ளையாக இருக்கும். இதன் உணவு தினை, பொதினா கீரை, கொத்துமல்லி இலை. ஆண் அலகு அடிபாகம் சற்று நீல நிறம். பெண்ணுக்கு அலகு அடிபாகம் மஞ்சள், பிறகு வெள்ளை. பகல் முழுதும் கிச், கிச் என ஒலி எழுப்பும். மாலை ஆறு மணிக்கு மேல் நிஷப்தம். அதி காலையில் மீண்டும் ஒலி எழுப்ப ஆரம்பித்து விடும். கூண்டுக்குள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டும், ஊஞ்சலில் ஆடியும், தன் ஜோடியோடு நெருங்கி அமர்ந்தும், கண்ணை உருட்டிப்பார்த்துக் கொண்டும், தனது அறையான மண் சட்டி அல்லது மரப்பெட்டி போய் வந்து கொண்டுமிருக்கும் .
முட்டை (குறுமட்டை) வலுவிழந்ததாக இருப்பின் அதை உணர்ந்து கீழே தள்ளி விட்டு விடும். அது உடைந்து நொறுங்கும். ஜோடி என்பது குறிப்பாக ஒன்றுடன் மட்டுமே இருப்பதில்லை. (Polygamy). மலட்டுத்தன்மையோடு இருக்கும் ஒரு காதல் பறவை தனது சக பறவையின் குஞ்சுகள் ஒன்றிரண்டை கொன்று விடுவதை பார்க்க முடிகிறது. ஊனமாகப்பிறந்த பறவை சாகவேண்டியது தான். சரிவரப்பறந்து கூட்டுக்குள் இருக்கும் மண்சட்டி அல்லது மரப்பெட்டிக்கு வர முடியவில்லையானால் தளமட்டத்தில் இருக்கும். அதிக நடமாட்டமில்லையெனில் எறும்புகள் கபளிகரம் செய்து விடும். குஞ்சுகளுக்கு தாய் பறவை தினை ஊட்டும்.அடைகாப்பது இரண்டு வாரம். இவற்றுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டு. இவை வாழ்வதோடு மாநிடரை சந்தோஷப்படுத்தவும் செய்கின்றன.


Friday, March 14, 2014


பருவ காலங்கள்




Pink poui (Tabebuia rosea)

பருவ காலங்கள்

தமிழ் மண்ணில் பருவ காலங்கள் ஆறு. கார் காலம், கூதிர் காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனிற் காலம், மற்றும் முதுவேனிற் காலம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் நான்கு பருவ காலங்கள். வசந்த காலம்(Spring), வேனிற் காலம்(Summer), குளிர் காலம்(Winter) மற்றும் இலையுதிர் காலம்(Autumn). மேற்கத்தியருக்கு மூன்று, மூன்று மாதங்களாகப் பருவ காலம். நமக்கு இரண்டு, இரண்டு மாதங்களாக பருவ காலம். கார்த்திகை, மார்கழி பின் பனிக்காலம். பங்குனி, சித்திரை முதுவேனிற் காலம், தை, மாசி இளவேனிற் காலம், புரட்டாசி, ஐப்பசி முன் பனிக்காலம், வைகாசி, ஆனி கார் காலம், ஆடி, ஆவணி கூதிர் காலம்.
உலக வெப்பமயமாதலில் நமது நாட்டில் பருவ காலங்கள் வெகுவாக மாறி விட்டன. ‘ஆடிப்பட்டம் தேடி விதைவைகாசி, ஆனியில் தென்மேற்குப்பருவ மழை அடை மழையாக இருக்கும். மழை விட்டதும் ஆனியில் விதைப்பார்கள். ஆடி, ஆவணி குளிர் காலம். மழை பெய்ததில் குளம், குட்டை நிறைந்திருக்கும், பூமி குளிர்ந்திருக்கும். ஆடிக்காற்று வீச கூதிர் எனும் குளிரில் சாளரம் திறக்கவிடாது. குளிர் காற்றில் நடுங்கிப்போய் தீமூட்டி குளிர் காய்வர். கார்த்திகை தீபம் வரிசையாக வீடு தோறும் ஏற்றும் போது அத்தோடு பனிக்காலம் முடிகிறது. சித்திரையில் கொழுத்தும் வெய்யில் முடிய முடிய இடி மின்னலுடன் மழை. ஐப்பசியில் வடகிழக்கு பருவ மழை. சார மழை, கொங்க மழை, அடை மழை, எனப்பெயர் வைத்து அழைத்த மழைகள் எங்கே? மக்கள் தொகை, வாகனப்பெருக்கம், காடு அழிப்பு, மாந்தரின் பேராசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிதையும் இயற்கை, இதுவெல்லாம் பருவ காலங்களை பாதித்து விட்டன.
வெப்பம், அதிவெப்பம், மிக அதிவெப்பம், அக்னிவெப்பம் என்று, தானே பருவ காலங்களை மனிதன் மாற்றி விட்டு, குளிர் சாதனப்பெட்டி வைத்து உட்கார்ந்து விட்டான். இந்த அவல நிலை மாற அடர்ந்த காடுகளை உருவாக்கவேண்டும். மலைகளில் ஊர் சமைத்ததை கைவிட்டு சமதளம் வந்து குடியேற வேண்டும். மீண்டும் மலைகளில் காடுகள் உருவாக்கினால் பருவ காலங்களை மீட்டு எடுக்கலாம். இல்லையெனில் வரும் காலங்களில் பருவ காலத்தை நாம் கணிக்க முடியாது திணருவோம்.
இப்போது இந்த மாசி மாதம் இளவேணிற்காலம். இது நமக்கு பனி முடிந்து கதிரவன் இதமான வெப்பம் தரும் பருவம். இலைகள் உதிர்ந்து, மலர்கள் வர்ஷிக்கத் தொடங்கி விட்டன.

மரங்களைப்போற்றுவோம்

Saturday, March 8, 2014

Purplerumped Sunbird - Male 

Female- Purplerumped Sunbird
dedicated to all women in the world on the eve of World women day

Purplerumped Sunbird- Female photo selected for '9'0 Clock Somewhere' Magazine (South Africa)


இயற்கையில் லயப்பு
விஜயவிநாயகர் வளாகத்தில் முப்பது மரங்கள் இருக்கும். கருப்பண்ணத்தேவர் அவர்கள் வளர்த்தார். பிறகு, நானும் சேர்ந்து கொண்டேன். வேறு எந்த குடியிருப்பு மக்களும் மரங்களின் மீது லயப்பு இல்லை. அவர்கள் லயப்பு காசு, பணம் சேர்ப்பதில் தான்.
பொன்னிறப்புற்கள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்க இரண்டு சாரைப்பாம்புகள் வலம் வர, ஆங்கிருந்த குழந்தைகள் பூங்காவில் குழந்தைகளும் விளையாடின. சுத்தம் செய்யலாமென தீ வைக்க கரிச்சான் ஜோடி பூச்சி பிடிக்க வந்து விட்டது. பாச்சான் பால் வேலி மரத்தின் அடவிய 25 அடி உயரத்தில் சிலம்பன்கள் கூடு வைத்து அடைகாத்துக்கொண்டிருந்தது. ஒரு வெண்மார்பு மீன்கொத்தி கேபிள் வொயரில் அமர்ந்து தரையில் புழுப்பூச்சி நெளிகிறதாவெனப் பார்த்துக்கொண்டிருந்தது. அது அதிகாலையில் கெக்கப்பிக்கெஎனக் கத்தி அருகில் வேறொரு மரத்துக்குப்போகும். அது இங்கு வசிக்கிறது.
வடபுலத்திலிருந்து வந்த மாங்குயில் மஞ்சள் சேலையில் அவ்வப்போது மர உச்சியில் மயங்கவைத்தது. குட்டிப்பூனை ஒன்று சிறுவர் கையில் கிடைக்க அதற்கு ஓரமாகக்கிடந்த செங்கற்களில் சிறிய வீடமைத்து அதற்குள் தேங்காய்த்தொட்டியில் பால் ஊற்றி அடைத்து விட்டனர். அது ம்யாவ் ம்யாவ்எனக்கத்திக்கொண்டே இருந்தது. நான் அதன் கதறல் தாளாமல் வெளியில் விட்டேன்.
ஆகாயத்தில் வில் போல மலை உழவாரன் ஒன்று பறந்தது. நல்ல காகம் துப்பறிந்து, சிலம்பன் கூடிருந்த பாச்சான் அமர்ந்திருந்ததோ இல்லையோ உடனே நான்கு சிலம்பன்கள் எங்கிருந்தோ வந்து பாச்சான் கிளைகளில் அமர்ந்து இறகை விரித்து, விரித்து’ ‘கிளிங்,கிளிங்என சப்தித்து காகத்தை விரட்டின. பூனைக்குட்டி! அந்தோ! அதை கொத்தி விழுங்க புள்ளி ஆந்தை வந்து புளிய மரத்தில் அமர்ந்தது. அத்தோடு ஒரு அண்டங்காகம் போட்டியாக அமர்ந்திருந்தது. மூன்று அணில்கள் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன.

நெருப்பு வைத்ததும், கரிச்சான் வருவதும், பூனைக்குட்டியை கபளிகரம் செய்ய புள்ளி ஆந்தை எங்கிருந்தோ வருவதும், கூடருகே வந்த காகத்தை விரட்ட கோஷ்டியாக சிலம்பன்கள் வந்ததும், இவையெல்லாம் இறைவனின் பிரபஞ்ச விளையாட்டு. நாம் இயற்கைக்கு தலை வணங்கும் விதமாக மரங்கள் வைத்து வளர்த்தால் மரங்கள் நம்மீது பூச்சொரிவதோடு இத்தகைய மனதுக்கினிய காட்சிகளைக்கொண்டு வரும். நாமும் மனஇறுக்கம் கொள்ளாமல் ஆரோக்யமாக வாழலாம்

Monday, March 3, 2014



நிழற்படக்கவிதை

                                               காலைப்புலர்வு


                                                                                      சின்ன சாத்தன்

இதோ! இந்த சுகந்த ஓவியம் ரசிப்பீர்!
ஒரு வினாடியில் அழிக்கப்பட்டுவிடும்
அள்ளி அள்ளிக் கண்களில் பருகிவீர்
இரவும் புலர்வும் சந்தித்த வேளை
இந்த ஓவியம் நாளைய சந்திப்பிலிருக்காது
மாறுபட்ட ஓவியங்கள் தீட்டப்படும்
புலர்வு அந்தியை நோக்கி நகரும்
அந்தி புலர்வை விரும்பிச் செல்லும்
இறப்பும் பிறப்புமாகச் சுழன்றோம்
ஓவியம் வானமெனும் தூரிகையில் தீட்டியது
அதைப் பிரதி பலிக்கும் கண்கள் ஒரு இரட்டைத்தடாகம்
நேற்றைய புலர்வைப் போல நாளையிருக்காது
அது எப்போதுமே புதுமை விரும்பி
விநாடிகள் ஒவ்வொன்றும் புத்தம் புதுசு
நாம் தான் இறந்த காலத்தில் வாழ்கிறோம்.