Tuesday, March 25, 2014

நினைவேந்தல்

சுனில் லால்ஜி

இவர் ஒரு இயற்கை விரும்பி. மும்பயிலிருந்து 50 வருடங்களுக்கு  முன்பு கோயம்புத்தூர் வந்தார். சுனில் லால்ஜி B.A.,(Psychology) படித்தவர். இவர் இளமைக்காலங்களிலேயே இயற்கை நாட்டம் கொண்டவர். மும்பயிலிருக்கும் போதே பல வனவலம் (Trekking) சென்றவர். வயது வரம்பில்லாமல் எல்லா வயதினர் கூடவும் பழகக்கூடியவர். முதன் முதல் Youth Hostel of India (YHAI) உறுப்பினர். அதன் மூலம் பல வனவலம் சென்றவர். ஐம்பது வருடங்களாக கார் ஓட்டிவர், 75 வயதுக்கு மேலும் மலைப்பாதைகளில் கார் ஓட்டிய திறமைசாலி.
            
                கோவை வந்தவர் பாஸ்மதி அரிசி, பருப்புஆகியவற்றிற்கு தனி முத்திரை (Brand) பதித்து வியாபாரம் செய்து செல்வம் ஈட்டியவர். தன் வியாபரத்துடன் அவருக்கு இஷ்டமான பொழுது போக்கு இயற்கையோடு இருப்பது தான்.ஒரு நிலைப்பாடு வந்ததும் வியாபாரத்தை குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டு முழுக்கவும் இயற்கையில் ஒன்றி, வாழ்வில் ஈடுபட்டார். கோவையைச்சுற்றியுள்ள இயற்கை கொஞ்சும் இடங்களுக்குச் செல்வார். அவர் தன்னுடன் இயற்கை விரும்பிகளையும் அழைத்துச்செல்வார். பறவையியல் நூல்களை எனது அப்போதைய அலுவலகம் (Central Excise & Customs) கூட வந்து என்னைச்சந்தித்து கொடுப்பார். அவர் எதையுமே இலவசமாகப்பெறக்கூடாது என்பார்.
            கடின முயற்சியும்,உழைப்பும் அவரது மூலதனம். மனவியல் (Pshchology) சம்பந்தமான கட்டுரைகளை கோப்பில் வரிசையாக கோர்த்து வைப்பார். வீட்டின் பின்புறம் பூந்தோட்டம் அமைத்திருந்தார். நண்பர்கள் சென்றால் அதை சுற்றிக் காட்டுவார். அத்துடன் தேனீர் பரிமாறலுடன் இயற்கை சம்மந்தப்பட்ட பத்திரிகை மற்றும் சஞ்ஞிகைகளில் வந்த படங்கள், செய்திகளை ஒட்டி வைத்துள்ள பெரிய டைரிகளைக் காட்டி மகிழ்வார். இது குறித்து தி இந்துநாளேட்டில் செய்தி வந்துள்ளது. அவரது இல்லத்தில் பலமுறை இயற்கை நாட்டமுள்ளவர் குழுமி கூட்டம் நடந்த காலம் மிகை.

இவர் இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு நண்பர்களோடு செல்லும் போது இவரது காரில் அனைத்து பொருட்களையும் கொண்டு வருவார். உணவு, தின்பண்டம், குடிநீர் என எதுவும் விடுபடாமல் கொண்டு வருவார். எல்லோரையும் ஒருங்கிணைத்து, திட்டமிட்டு அழைத்துச் செல்வதில் வல்லவர். இறுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஆனைகட்டியில் நம்மை வந்து சந்தித்தார். விடையும் பெற்றுக் கொண்டார்
கோயம்புத்தூர் இயற்கை சமூகம் (Coimbatore Nature Society) மூத்த உறுப்பினர்.இதற்கு முன்பு இயற்கை விரும்பிகள் சமூகம் (Nature lovers Forum) என்ற அமைப்பை நடத்தி வந்தார். 23.03.14 அன்று Salim Ali Centre for Ornithology and Nature Science –ல் காலை 10.00 மணிக்கு மெளவுன அஞ்சலியோடு திருவாளர்கள் பிரமோத், மதுர், சுகுமார், செல்வராஜ், பரமேஷ்வரன்,விஜயராஜ்,ஜோஷி மற்றும் பல நண்பர்கள் சுனில் லால்ஜியை நினைவு கூர்ந்தனர்.இவரது ஆன்மா இனி வரும் காலங்களில் நம்மை வழி நடத்திச் செல்லும். இவரது ஆன்மா இயற்கையோடு இயைந்து அமைதி பெற, இறைஞ்சும் நண்பர்கள் என்றும் சுனில் லால் மாதவராவ்-வை மறக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment