Wednesday, April 23, 2014

சோளக்கதிரில் ஊஞ்சலாடும் பச்சைக்கிளி
பச்சைக்கிளிகள்

கதிரவன் கிரணங்கள் தடவும் இறகுகள்

பச்சைக்கிளிகள்
            பச்சைக்கிளிகளைப்பற்றி நிறைய பாடல்கள் சங்கஇலக்கியங்களில் வருகின்றன. முக்கியமாக தினைப்புலத்தில் பச்சைக்கிளிகளை விரட்ட பரண் அமைத்து, மகளிர் கிளிகளை விரட்டுவது பற்றி செய்யுட்கள் வருகின்றன. தானியங்களை விரும்பி உண்ணும் கிளிகள் அதன் அலகு அமைப்பினால் பாதிக்கு மேல் வீணாக்குகின்றன. க்கீ….கீக்கீ… என கத்திக்கொண்டு கல்யாணத்துக்கு தாமதமானது போல துரித கதியில் பறப்பது எப்போதும் வாடிக்கை. பச்சைக்கிளி நிறம் என்றாலே தனித்து நிற்கும் நிறம். இளம் பெண்ணை பச்சைக்கிளிக்கு ஒப்பிடுவது கிளியின் அழகை சிலாகிக்கத்தான்.
            நான் நகரத்தில் வாழ்ந்தவனாதலால் தானிய விளைநிலங்களை அதிகமாகப் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது. அதற்கு இப்போது வாய்த்தது குறித்து நெஞ்சம் விம்மித்தணிகிறது.சூலூரின் ஊருக்குள்ளேயே ஒரு சோளக்காடு வைத்திருந்த விவசாயியை வாழ்த்தி விட்டு, புகைப்படம் எடுப்பதற்காக நாள் தவறாமல் காலை நேரம் சூர்ய கதிர்கள் வெளிச்சம் பெற்ற பிறகு செல்வேன். 1999-ல் பேராசிரியர் க. ரத்னம் எனக்கு கிடைக்கப்பெற பறவை நோக்கலில் என்னைப்புகுத்தினேன். அதிலிருந்து கிளி என்னிடம் சரியாக மாட்டவில்லை. அதாவது ஒரே ஒரு படம் சிங்காநல்லூர் குளத்தின் இரண்டாவது ஏரி மேட்டில் ரயில் தண்டவாளமருகில் கிடைத்தது. கிளி வெட்கப்பட்டு பறந்து விடும்.
            வினாயகர் கோயிலருகே கம்பி வேலிக்கருகில் இரண்டு அரளிப்பூச்செடிகள் என்னை மறைக்க, அதன் பின்புறம் நின்று கொண்டு தினமும் ஐம்பது படங்களாவது எடுத்தேன். மணி எட்டு தாண்டும் வெய்யிலில் புருவத்திலிருந்து வியர்வை கண்களில் வழிந்து கண்கள் ‘மச மச’ வென ஆகும். முதுகு சட்டை வியர்வையில் ஒட்டும். சோளக்கதிர்கள் பத்தடி உயரத்தில் நிற்க கிளிகள் வெறித்தனமாகப்பாய்ந்து வந்து விழுவதும், இறகுகள் விரித்த படி சோளக்கதிர்களைத்தேடுவதும், மையணிந்த பெண் கண்சிமிட்டுவது போல இருக்கும். அப்படி பத்து, இருபது பெண்கள் தங்கள் மையுண்டஇமைகளைத் திறந்து மூடினால் எப்படியிருக்கும், அப்படிப்பட்ட வசிகர, ரம்மியமிருந்தது.
            மயிலுக்கு அடுத்தபடி, கிளி இறகு விரிப்பு அற்புதம். க்கி…கீக்.. க்கீக்…உன்னைப்பற்றி பாடாத கவிஞர் யார்? நானும் உனக்கு ஒரு பாடல் தருவேன். கேட்பாயா? மூன்று முறை படமெடுக்கத் தவறவிட்டேன். அது சோளக்கதிரில், சின்னக்கதிராகப்பறித்துவிட்ட குதூகலத்தில் கிளி தன் அலகில் பிடித்துக்கொண்டு பறக்கும் பாருங்கள்…..அதற்கு வார்த்தைகளில்லை. சிலசமயம் மற்றொரு கிளி இதனைப்பிடுங்க துரத்தும்.
இயற்கைக்காட்சிகள் எப்போதும் பேரானந்தம். பச்சைக்கிளிகள் சோளத்தாள்களுக்கு படை எடுத்தது போல புகுந்து சோளக்கதிர்களை அலகு கொள்ளாத படி கடித்து சுவைப்பது பேரழுகு! சோளத்தட்டை கிளியின் எடை கூடத்தாங்காது சாய்வதும் மேலும் கீழுமாய்ப்போவதும் கிளிப்பச்சை சேலை உடுத்திய பெண் ஊஞ்லில் ஆடுவது போலிருந்து என்னைச்சொக்கியது.கதிர்களின் பச்சைக்கும், கிளிப்பச்சைக்கும் வித்தியாசம் தெரியாது. க்கிளிக்…..கிளிக்…'கிளி'க்காக 'கிளிக்'கிய படங்கள் இருநூறு இருக்கும். வலது கை ‘கிளிக்’கியதில் வலித்தது. ஒரு சேர சோளக் கொல்லைக்குப்பறந்து வரும், ஒரு சேர பறந்து அருகிலுள்ள வேப்ப மரத்துக்குப் பறக்கும் குழந்தைத்தனம் சுவையானது. காலைக்கதிரவன் கிரணங்கள் வருடிக்காட்டிய கிளிகளின் இறக்கை விரிப்பிலிருந்த அந்த மயக்கு பச்சை என்னை மயக்கியதை என்னென்று சொல்வேன் தோழி?

மெலிதான காடு, விளைநிலம், பழத்தோட்டம்
தேடிப்போனேன் அவளைக் காண
உயர்ந்த மரத்துளைகளில் கண்மேய
கிளிப்பச்சை சேலையடுத்தி-அதோ
தோழிகளோடு சப்தமிட்டு வந்தவளே
சிகப்பு ஆரம் கழுத்தில் காணேன்
காதலன் கழுத்திலதைக் கண்டேன்
கீக்கீஒலி உன்னிருப்பிடம் உணர்த்தியது
பறந்தாலும், அமர்ந்தாலும் கூவல்.
குஞ்சுகளைத்திருடி விற்பான் மனிதன்
எதையும் காசாக்கிடும் தந்திரம்
அழகு மாளிகையில் தங்கச்சிறை
கபட சமுதாயம் மகிழ சோதிடம்
பொம்மை பீரங்கி இயக்கி வித்தை
பசப்புக்காரன் மொழி பழகிய விந்தை
பச்சை அழகியை சிறையிடலாமா
அதற்கு சிறகேன் முளைத்தது
 வானில் பறந்து உலவத்தானே
அவை சுதந்திரக்காற்று சுவாசிக்கட்டும்
க்கீகீ..யென நெஞ்சம் வருடிப்பறக்கட்டும்.
                          சின்ன சாத்தன்- மாரிக்குருவி கவிதைத்தொகுப்பிலிருந்து...........


Sunday, April 20, 2014


GAY BIRDS


SEDUCE OTHER PEAFOWL WITH REAR BEAUTY


SEDUCE WITH FRONT BEAUTY


KISSING EACH OTHER





ஓரினச்சேர்க்கை பறவைகளில் !!!!!!

அன்று காலை 4.30 மணிக்கு விழிப்புத்தட்ட, அது ஒரு சனிக்கிழமை நாள். பறவை நோக்கலுக்கு வெகுதூரம் ஸ்கூட்டரில் சென்றேன். ஏமாற்றத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சோளக்கதிர்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. பச்சைக்கிளிகள் நூற்றுக்கணக்கில் ஆக்கிரோசமாக சோளக்கதிர்களை சூறையாடிக்கொண்டிருந்தன. அவைகளை நிழற்ப்படமெடுக்க முள்கம்பி வேலியோரம் நின்றேன். ‘சார்! அங்கே பாருங்க! மயில் தோகை விரித்து ஆடுது.’ என ஒரு பத்து வயதுப்பையன் சொல்ல, அவன் காட்டிய திசையில் பார்த்தேன். இரண்டு ஆண்மயில், அதில் ஒன்று இன்னொரு ஆண் மயிலுக்கு தன் வனப்பான தோகையை விரித்துக்காட்டி ஆடிக்கொண்டிருந்தது.
ஆண்மயிலுக்குத்தோகையிருக்கும். கழுத்து நீல நிறம். பெண் மயிலுக்கு பச்சை நிறம். தோகையிருக்காது. இதில் ஒரு ஆண் மயிலுக்கு சிறிதளவு தோகையிருந்தது. தோகை விரித்தாடிய மயில் தன்னருகில் இருந்த ஆண் மயிலுக்கு பின்னழகு, முன்னழகு என விடாமல் அதையே காட்டி, சுற்றிச்சுற்றி வந்தது. இதெப்படி சாத்தியம்? கொஞ்ச நேரத்துக்குப்பிறகு தோகை விரிக்காத ஆண் மயில், தோகை விரித்தாடிய மயிலின் கழுத்தை தனது அலகால் கோதியது. மறுநாள் அங்கு சென்று கவனித்த போது அந்த இரு ஆண்மயிலும் இணையாக உலவிக்கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெண்மயில் இரை தேடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்மயில்கள் மறுநாளும் ஒன்றுக்கொன்று பிரியாமல் உலவிக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது. இன்றும் தோகையைவிரித்து அருகிருந்த ஆண் மயிலை மயக்கியது மேலும் வியப்பைத் தந்தது. இவற்றை முதல் நாள் காமெராவில் பதிவு செய்தேன்.
மூத்த பறவை நிபுணர், நண்பர் ராமச்சந்திர மூர்த்தியை கருத்துக்கேட்ட போது, ‘இது போல் நடக்க வாய்ப்புண்டு. சூழல் தான் காரணம். மனிதனுக்கு முந்திய பரிணாம நிலை பறவை. மனிதர்களில் முறையற்ற உறவு போல் gay, Lesbian என்பது விலங்குளில், உள்ளது.பறவைக்கு ஏன் இருக்காது? Discovery channel, National Geography channel போன்றவை இரவு 11 to 12 மணிக்கு இந்த மாதிரி விலங்குகளுக்குள் இருக்கும் பால் மாறிய உறவை சில சமயம் ஒலி பரப்பியதை நான் பார்த்திருக்கிறேன்.’ என்றார்.
அடுத்து பேராசிரியர் நண்பர் சேகரிடம் கருத்துக்கேட்ட போது, பறவையிலிருந்து மனிதன் தோன்றினான். பரிணாம வளர்ச்சியில் அடிப்படைப் பதிவுகள் அப்படி அப்படியே இருக்கின்றன. மனிதன் ஓரினச்சேர்க்கை சூழல் காரணமாகவும், பாலுணர்வு மிகைப்படவும், மாற்று பாலினம் அரிதாக இருக்கையில் ஓரினப்பாலுணர்வு முறையற்றதாகிலும் அதில் விழுந்து விடுவது உண்டு. Reason is excess secretion of Neuro endocrime related to sexual relationship. பறவைகள் இதற்கு விதி விலக்கல்ல.
 “Anyway, your probe on this peculiar subject related to birds and photos are quite rare and interesting” எனப்பாராட்டினார்.

இந்த வலைதளத்துக்கு வருபவர்கள் தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.  

Tuesday, April 15, 2014


மாறுபட்ட நிழற்படங்கள்
Coot and chicks

            அரக்கோணம் பட்டிமேடு ஏரி கிழ மேற்காக அமைந்தது. இங்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரிக்குத் தெற்குப்புறமாகச்செல்லும் மோசூர் தார் சாலையில் நடந்தேன். காலை, மாலை என் மகள் வீட்டிலிருந்து ஒரு நடை இந்த ஏரிக்குப்போவேன். அது 2 கி.மீ-க்கு மேல் இருக்கும். மேற்குப்புறமாக சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பர். அந்த புல்வெளி முழுவதும் மக்கள் விசிறி விட்ட காரி பேக்ஸ் ஏரி நீர் உள்வாங்கிவிட்ட நிலையில் வெள்ளை,வெள்ளையாகக் கிடக்கும். அந்த சுகாதாரக்கேட்டிலும், சிறுவர் விளையாடிக்கொண்டிருப்பர்.
          அப்படி ஒரு நாள், நடு ஏரியில் நாமக்கோழி நீர்ப்பரப்பின் மீது கூடு வைத்திருந்ததைக்கண்டேன். என் காமெராவுக்கு எட்டாத தூரம். சரியாக வரவில்லை. பறவை அடை காத்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட பறவை வாழிடமான ஏரியை ஒரு பெரிய குப்பைத்தொட்டியாகக் கருதியிருப்பது வேதனை.டயர், நீர் குடுவை, பாலிதின் பை போத்தல் என எதுவானாலும்உபயோகி பின்னர் தூக்கி எறிஎன்ற கலாச்சாரத்தில் நீர் நிலைகளை சீரழிப்பது, அதை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையிலும் வேதனை. மக்களுக்கு குழாயில் நீர் வினியோகிக்கப்போய் அவர்கள் வீட்டுக்குள் 5 குழாய்கள் அமைத்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.அன்றைய காலங்களில் குடிநீருக்காக ஆறு, குளங்களை நம்பியிருந்தனர். சுத்தமாக வைத்திருந்தனர். இப்போது?
          பிறகு ஒரு மாலை நேரம் பட்டி மேடு ஏரிக்கு பைனாகுலர், காமெராவுடன்  சென்றேன். நாமக்கோழி தாயும், தந்தையும் பத்துக்குஞ்சுகளைக்கூட்டிக்கொண்டு ஏரி நீர்பரப்பில் போய்க்கொண்டிருப்பதைப்பார்த்தேன். என்ன அழகு! குஞ்சுகள் தலை சிகப்பு,நடு மண்டை சொட்டை, உடல் கருப்பு, இருந்து, நாமம் இன்னும் உருவாகவில்லை. ஏராளமான முக்குளிப்பான்கள் ஏரிப்பரப்பில் தட,தடத்தும்,குலவை விட்டுக்கொண்டும் இருந்தன. இவைகளும் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. இப்படிப்பட்ட ஏரியின் தெற்குப்புற மோசூர் சாலையில் கோழி இறகுகளை கரையோரமிட்டு தீ வைத்துக்கொலுத்துகின்றனர். பலர் மலம் கழிக்கின்றனர். நீர் நிலை, குளம், ஏரி களின் நிலை இதுவே. ஐம்பதாயிரம் ரூபாய் மோட்டர் பைக், ஐயாயிரம் ரூபாய் கைபேசி வைத்திருப்பவனும் ஏன் ஏரிமேட்டில் மலம் கழிக்கிறான். அவன் டாய்லட் கட்ட வசதி படைத்தவன் தானே!

          எப்படியாவது நாமக்கோழி தன் குஞ்சுக்கு இரை ஊட்டுவதை படம் எடுக்க அவா கொண்டு முப்பது படம் எடுத்தும் மாலை வெளிச்சம் கை விட்டது. மறு நாள் நான்கு மணி மாலையில் சென்று இருபது படங்கள் எடுக்க, நாமக்கோழி போஸ் கொடுத்து விடுமா, என்ன! உடனே குடும்ப்ப்பிள்ளைகளோடு ஏரி நடுவே நீந்தி கிழக்கே சென்றது. லென்ஸ் போதாது. இரண்டொரு படங்கள் கணனியில்  விரிக்கத் தேறின. மாறுபட்ட படங்களே பாராட்டுப்பெறும். ஜெயிக்கும். Face Book ID : Sukumar Arumugam

Monday, April 7, 2014

கொசு உள்ளான் My book "DIARY ON THE NESTING BEHAVIOUR OF INDIAN BIRDS" available in ON LINE http://www.marymartin.com/web/selectedIndex?mEntry=140646 -


                                         
Winter visitor

Little Stint (Calidris minuta)                                              Migrant watch
            
     இந்த சின்னஞ்சிறிய பறவைகள் வடகிழக்கு, மற்றும் சைபிரியாவிலிருந்து வருவது ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. 2கிலோ கூடஇருக்குமா என எண்ணவைக்கும் கோழிக்குஞ்சு போன்ற பறவை 3000 மைல்களுக்கு மேல் பறந்து என்னை பார்க்க வருவது மேலும் அதிசயம். என்னை என்றால் எமது சூலூர் குளத்துக்கு வந்து, மற்ற வேடர்(Waders)களோடு கரையோரம் சிறு பூச்சி, சிப்பிப்பூச்சி,நத்தை போன்றவற்றை தேடித்தேடி, ஓடி உண்ணுவது அழகு. ஞாயிறுப்பொழுது காலை, ஒரு முதுவேனிலில் குளத்துக்கு நடந்து, தெற்குப்புற வழியில் எனது வனப்பு காதலியான குளத்தை அணுகினேன்.
            மேற்குப்புறம் அமர்ந்து தொலை நோக்கியில் பார்த்துக்கொண்டிருந்போது ஒரு மாயக்கம்பளம் மேற்கிலிருந்து மிதந்தும் வேகமாகவும் வந்தது. நீர் சூழ்ந்த சிறு திட்டில் ஒவ்வொன்றாக அமர, நான் கண்கொட்டாமல் பார்த்திருந்தேன். உலகில் நானும் கொசு உள்ளான்கள் மட்டுமே இருந்தோம். அந்த நிமிஷம் நழுவியது எதுவும் இவனுக்குத்தெரியவில்லை. இந்தக்குழுவில் 50 பறவையாவது இருக்கும். ஓடியும், நின்றும், அலகை நீரில் மூழ்கடித்தும் காலை வேளை உணவை எடுப்பது  கண்சிமிட்ட முடியாத கனவுக்காட்சி. என்னே! சுறுசுறுப்பு!
முதுகு தீற்றலான மரநிறம், வயிறு வெள்ளை, கால்களும், அலகும் கருப்பு.அலகு ஒரு அங்குலத்தில் நேர். தொந்தரவுக்கு ஆளானால், ஒருசேர, ஒருமித்தும், கட்டுக்குலையாமல் பறப்பதும், அப்படிப் பறக்கும் போது வெண்வயிறு கதிரவனின் கிரணங்களில் பளீரிடுவது பெண் வெள்ளை இடை போல கிரக்கமான சங்கதி. இவை சிறியவையாக இருப்பதால், பெரிக்ரன் ஃபால்கன் (Peregrine Falcon)போன்ற கழுகுகளுக்கு இரையாவது பரிதாபம். எதிரியைப்பார்க்கின் உடனே மனோவேகத்தில் பறக்குமிவை சதுப்பு நிலத்தில் தரைக்கூடுகளை இடுவது சைபிரியாவில் தான். மேலும் இவை பறக்கையில் கூர் இறக்கைகளில் வெள்ளை நிற லேசான கோட்டினைக் காணலாம். சலிம் அலியின் திறமையான ஆங்கில புலமையில் குழுப்பறக்கும் விதத்தை எப்படி வருணிக்கிறார்.ரசியுங்கள்! ‘When disturbed, the birds fly off swiftly all together in an orderly compact mass, their white undersides flashing in the sun from time to time as they turn and twist in unison”

            ஒரு நன்கு வளர்ந்த பறவையை Alma-Ata region, USSR பிடித்து, 9.8.1977 –ல் வளையமிட்டுப்பறக்கவிட்டதில், அதை 25.8.1990 –ல் தமிழ் நாடு கோடியக்கரையில் பிடித்துள்ளனர். அதாவது 13 வருஷம் 16 நாட்களுக்குப்பின்…. சைபீரியாவிலிருந்து, தமிழ்நாடு வருகை தர இவ்வளவு நாட்கள் ஆகியிருக்காது. நமக்கு கிடைத்தது அப்போது தான்…….