Tuesday, February 26, 2013

இயற்கை அழகை விஞ்ச முடியுமா! 

இயற்கை போற்றி!

மலர்களின் நிறம் இயற்கையின் மொழியோ!
மகரந்தம் தங்கத் துகள்களோ! வாசனை மொளனமோ!

வானில் நிலாவைத்தேடி ஓடிய கண்கள்
நக்ஷ்சத்திரங்களிருந்தும் நிலாவைத் தேடக்காரணமென்ன?
கண்களே!கண்களே! இமைக்க மறப்பீரோ!                                                                                                 மண்ணில் கொஞ்சமே எடுத்து நிறையவே கொடுத்து
மரம் மாதிரி வாழும் மனிதமெங்கே?
தேடு!தேடு! கண்களே!

அடேங்கப்பா! இந்த நீர்காகங்களின்   மாநாட்டுக்கு                                      வாழ்த்துக்கவிதை நீங்கள் பாடுங்களேன்!Monday, February 25, 2013

 Asian Pied Starling- Rare Bird in Tamil Nadu ஏரி, குளங்களை நீ எப்படி நாறடிச்சாலும்
                       நாஙக
 வாழ்ந்து காட்டுவம்டா!

Pond Heorn's Rafts to catch prey are Human used and thrown tyre and foot wear sole into the Pond
பொரி மைனா                 (top picture)                                          
Asian Pied Starling (Sturnus contra)

இந்த வகை மைனாவை நான் பல வருடங்களுக்கு முன்பு புது தில்லியில் சுற்றுலாப்பயணிகள் கூடும் இடத்தின் புல்வெளியில் பார்த்தேன். இந்த மைனா நிழற்படம் அரக்கோணம் ஏரியில் எடுத்தது. சலிம் அலி நுலில் இது ஆந்திராவைத்தாண்டாது எனக்கண்டேன். ஆனால் என்னைப்பார்க்க ஆந்திர எல்லையைக்கடந்து ஒரு ஜோடி பொரி மைனா மட்டும் அரக்கோணம் வந்தது அதிசயம் தான். இது அவர் சொல்வது போல் கழிவு கடாசப்படும் ஏரியை விரும்பி வருவது இன்னும் ஆச்சர்யம்.இது வானம்பாடியிடம் அபகரித்த பாடலைப்பாடுவது உன்னத ஆச்சர்யம். அடுத்த முறை பாடச்சொல்லி நான் ஒன்ஸ் மோர்சொல்லவேண்டும். இதுவரை பார்க்காதவர் இதன் அழகில் மயங்கலாமே!

கைபேசி புரட்சி

Communication Revolution
          
    நீங்கள் காணும் அதிசயக்காட்சியோடு, என் கண்ணில் பட்டது இன்னொருவர் காலைக்கடனைக்கழிக்கும் போது முட்காட்டுக்குள் கைபேசியில் பேசிக்கொண்டே கழித்தார். மகிழுந்து, இருசக்கரமோட்டார் வாகனம் என இயக்கிப்போனாலும் கைபேசியில் பேசிக்கொண்டே விபத்தை ஏற்படுத்துகின்றனர். கைபேசி இல்லையெனில் அவன் மனிதனாக மக்கள் மதிப்பதில்லை. பல வரைமுறைகளற்ற தொடர்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டு பண்பாடு, மற்றும் சமுதாய சீர்கேடுகள் ஏற்படுகின்றன. நல்ல நூல்கள் வாசிப்பு அறுந்து போவது நிதர்சனமாகத்தெரிகிறது. ஏனெனில் கைபேசியும், இருசக்கரமோட்டார் வாகனம் இருந்தால் போதும், எங்கு வேண்டுமானாலும் தொடர்பு ஏற்படுத்திப்போகலாம்.கூட நாக்குக்கு மட்டுமே சுவைகூட்டும் துரித உணவு இருந்தால் போதும் என ஆகிப்போன சமுதாயத்தை என்னவென்பது?

          கைபேசி எண் தெரிந்தால் போதும் எதுவும் பரிமாறிக்கொள்ளலாம். ஆபாச வார்த்தைகள், படங்கள், உட்பட. தொலைதொடர்பு புரட்சி நம் தனிமையின் இனிமையை சீர்குலைத்து விட்டது. செய்தித்தொடர்புகளால் மக்கள் மனம் சஞ்சலப்பயணத்தில் உள்ளது. ஓய்வாக மனம், எண்ணம், உடல் இருப்பது சுகமா, இல்லையா? முடிவு உங்கள் கையில்……   உங்கள் கையில் இருக்கும் கைபேசியில் அல்ல……………..

Monday, February 18, 2013


Rare snap


தும்பி முட்டையிடுதல்
           Dragonfly lays eggs
               

தும்பி முட்டையிடுவதை பார்த்திருக்கிறீர்களா? நீரில் முட்டையிடும். அவை பொரிந்து லார்வாக்களாகும். பிறகு லார்வாக்கள் மீன்களுக்கு உணவாகிப்போகலாம். தப்பிப்பிழைத்தவை சிறகு முளைத்துப்பறக்க ஆரம்பிக்கும் போது, ஈ பிடிச்சான்கள்(Bee Eaters) குளத்தோர மரக்கிளைகளில் காத்திருக்கும். கூட்டம், கூட்டமாக தும்பிகள் குளநீர்ப்பரப்பை விட்டு வெளியேறும் போது காத்திருக்கும்  ஈ பிடிச்சான்கள்டைவ்அடித்துப்பறந்து வட்டமிட்டு தும்பிகளை பிடித்து மரக்கிளைகளில் அமர்ந்து தும்பி சிறகை உதிர்த்து உண்ணும் அழகை எம் சூலூர் குளத்தில் கண்டு ரசித்த காட்சிதனை மறக்கமுடியுமா? தும்பிகள் பறந்தவாறு கால்களாலேயே சிறு பறக்கும் பூச்சிகளைப்பிடித்து உண்ணும். இப்படி இயற்கையின் வினோதங்களை ரசிக்கவோ படிக்கவோ விரும்பாத மனிதன் நல்ல மானிடப்பிறவியை வீணாக்குகிறான். மழைக்கு முன்னும், பின்னும் சிறகு தோன்றி மாலை மஞ்சள் வெளிச்சத்தில் தும்பிகளின் சிறகடிப்பை ரசிக்க ரசனை வேண்டும் தோழா!

Thursday, February 14, 2013


சீழ்க்கை சிறகி
Fulvous Whistling Teal
(Dendrocygna bicolor)

                இந்த அழகு வாத்து விசிலடித்து நான் பார்த்ததில்லை. அதனால் சீழ்க்கை சிறகி என நாமகரணம் செய்விக்கப்பட்டது வாவ்.! தாழ பறக்கும் போது நெஞ்சை அள்ளும். பள்ளிக்கரணை IT காங்கிரிட் கட்டிடங்களுக்கிடையே தாழப்பறந்த போது கிழக்கு ஆதவன் தீவட்டி வெளிச்சத்தில் மிளிர்ந்த அடர் பழுப்பு வயிறு காண சொக்கிப்போனேன். ஆ! எங்கு இறங்கியது? ஓடு! பூங்கா புதர் மறைவில் ஒளிந்து கொண்டு, காமெரா கண்கள் மூடித்திறந்தது எத்தனை முறை அறியேன் என் நண்பரே! சீழ்க்கை சிறகி இரண்டு வகை;-.

அவை, சின்ன சீழ்க்கை சிறகி, பெரிய சீழ்க்கை சிறகி, எப்படி வேறுபாடு? சிறியதில் வால் மேல் பகுதி நல்ல பழுப்பு நிறம். பெரியதில் வால் மேல் பகுதி சற்று வெண்மை. ‘மேலும் கழுத்தில் கருப்பு கோடுகள் உன்னை அடையாளம் காட்டிக்கொடுக்குதடா செல்லம்!’ வருக! உன் வரவு நல்வரவு ஆகட்டும். திரும்ப எப்போது வலசை? படத்தில் மயக்குவது காணக்கிடைப்பது அரிது. என்னைக்காண பாங்ளாதேஷ்லிருந்து பல நாட்கள் பயணப்பட்டு வந்துள்ளது. சாக பட்க்ஷி. இந்த அழகு காட்சிதனை ரசிக்காமல் டாலரை ரசிக்கும் காங்கிரிட் காடுகள் சுற்றிலும் அந்நியமாகத்தெரிகிறது.

இந்த சீழ்கைச்சிறகி எப்போதோ இறந்து விட்டதை எழும்பூர் மியுசியத்தில் பதப்படுத்தி வைத்துள்ளனர். உயிர் உள்ள வரை அழகும், உயரப்பறத்தலும், விசிலடிப்பதும், நீந்துவதும்
பிறகு.............................................


சிறகொன்று உதிர்ந்து விட்டால் வானத்தில் மீண்டும் பறக்கலாம்
இறகே உதிர்ந்து விட்டால் வானத்தில் பறப்பதெப்படி! !-------  இனிமையான பாடல் கேட்டீர்களா?


Sunday, February 10, 2013Reading habit gone with the wind

விழிகளினோரம் பசி
விழிக்கு விருந்து இயற்கை காட்சி
நாக்குக்கு விருந்து அறுசுவை
இதழுக்கு விருந்து முத்தம்
காதுக்கு விருந்து இன்னிசை
நாசிக்கு விருந்து நறுமணம்
சிந்தனைக்கு விருந்து புத்தகம்
யுவன், யவதிகளே! மற்றெல்லா விருந்தும் ப்ரியமான போது
சிந்தனைக்கு விருந்தான புத்தகம் மட்டும் ஒவ்வாமை!


வாசிப்பு பழக்கம் காற்று அடித்துச்சென்றதா!
அல்லது சுனாமி புரட்டிச்சென்றதா?;
வலைதளம், கைபேசி இழுத்துச்சென்றதா?
தொலைக்காட்சியில் தொலைந்து போனாயோ!
சிந்தனைச்சிற்பிகளை புத்தகங்களே உருவாக்கும்
வழிதவறிப்போனவர்களே! திரும்ப நூலகத்தில் புகுவீர்.

7 பிப்ரவரி’13 அன்று கிருஷ்ணா கல்லூரி,கோவையில்
நடைபெற்ற புத்தக கண்காட்சியில் மாணவமணிகள்
 பொது நூல் ஒன்று கூட வாங்கிப்படிக்க
விருப்பமில்லாமை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
என்ன சமுதாயம் இது?


Tuesday, February 5, 2013
 Indian Great Horned Owl
      Action shots -கண்ணுக்கு விருந்து

நிழற்படங்கள் Action மற்றும் Rare ஆக இருந்தால் பாராட்டுதலைப்பெறும். நண்பர் ராதாகிருஷ்ணன்கண்இமைக்கும்நேரத்தில்படம்எடுத்துவிடுவார்.எனக்குஆச்சர்யமாகஇருக்கும்.இவர்தந்தை,சகோதரர்கள்உட்படபுகைப்படக்கலைஞர்கள். இவர் எதையும் கலை நுணுக்கத்துடனும், அழகுடனும் எடுத்து எனது பாராட்டுதலைப்பெற்றுக்கொண்டே இருப்பார். நமது கொம்பன் ஆந்தையை எப்படியெல்லாம் படம் எடுத்திருக்கிறார் பாருங்கள். 

Monday, February 4, 2013


கொம்பன் ஆந்தையுடன் அணில்

நானும் நண்பர் விஜயகுமாரும் அந்தி வானம் மேற்கில் சிவந்த போது ஒரு பெரிய கல்குழி ஓரம் அமர்ந்து பறவை நோக்கல் செய்து கொண்டிருந்தோம். Bird race என்பது தவறு. மோட்டர் வாகனத்தில் துரத்துவதல்ல பறவை நோக்கல். Dr சலிம் அலி நார்ட்டன் மோட்டர் சைக்கிளை தட,தடவென ஓட்டிச்சென்று ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்து தான் பறவை நோக்கல் செய்வார். பறவைகள் பெரிதும் வருகை புரியும் இடத்தில் அமைதியாக இருவர் அமர்ந்து பறவைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் தொலைநோக்கியில் இனம் கண்டு ரசிப்பது. 20 பேர் குழு அமைதிக்கு பங்கம் விளைவித்துச்செல்லும் Picnic அல்ல. ஊர்வேலன்காடு சோளக்காடும், முழங்கால் உயரம் வளர்ந்த பொன்னிற புற்களும் கொண்ட புன்செய் காடு. காற்று மட்டும் பேசும். நீலவானம், ஒத்தையடிப்பாதை, மாட்டுவண்டித்தடம், வானத்தை தலை துவட்டும் தென்னை மரங்கள் இதையெல்லாம் ரசிக்கும் போது மக்கள் Mall-ளில் சுற்றும்போது, மனமகிழ்வை இயற்கை மாதிரி அள்ளித்தருமா என்பது சந்தேகமே. நிழற் படம் விஜயகுமார். ஆந்தையை பயமில்லாமல் ஒரு அணில் சுற்றிச்சுற்றித்திரிந்தது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. இதுவே ஒரு இரவு நேரமாக இருந்தால் அணிலை ஆந்தையின் வலிமையான மூக்கு குத்திக்கிழித்திருக்கும். அப்போது எங்களுக்கு ஒரு குறல் ஞாபகத்துக்கு வந்தது. அது;-

காலம் அறிதல்.
பகல் வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.-481Sunday, February 3, 2013

Butterfly

 கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்சி.
Common Grass Yellow
(Eurema hecabe)

            

இது என் வீட்டு சுவற்றில் பிறந்தது. ஒரு பருவத்தில் என் வீட்டு சுவற்றைச்சுற்றிலும் கூட்டுப்பருவ ப்யூப்பாக்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.மனைவியிடமும், வேலைக்காரியிடமூம் அவைகளை துடைப்பத்தில் நீக்கி சுத்தம் செய்து விடாதீர்கள். வண்ணத்துப்பூச்சிகள் சிறகு விரிக்கட்டும் பிறகு சுத்தம் செய்யலாம் என்றேன். என் வீட்டில் இருக்கும் சரக்கொன்றை (Cassia fistula) மரத்தின் இலைகளில் பெண் வண்ணத்துப்பூச்சி முட்டையிட்டு சூரிய வெப்பத்தில் பொரியும். பச்சைப்புழுக்களாக நெளிந்து சரக்கொன்றை மரத்தின் இலைகளை நன்கு உண்டு கொழுத்து கூட்டுப்பழுபருவம் போய் தியானத்தில் இருந்துவிடும். பிறகு உலகில் சிறகடித்துத்திரிய வெளிவரும் தருணமிது. இது பறந்து திரியும் போது மனிதர் மனத்தைக் கவர்ந்திழுத்து மனதை லேசாக்கிறது. நீ சிறுவயதில் வண்ணத்துப்பூச்சி பின்னே ஓடியதைப்போல இப்போதும் ஓடினால் நீ வாழ்க்கையை முழுமையாக ரசிக்கிறாய், என அர்த்தம். இல்லையெனில் எந்திர வாழ்வில் நுழைந்து விட்டாய் என அர்த்தம். இதற்கு Common Grass Yellow எனப்பெயர். நிழலில் ஆனந்தமாகப்பறக்கும். மரங்கள் இதற்குப்பிடிக்கும். மலர்கள், ஈரமண் மேலும் உறவு. இவை கூட்டமாக வலசை போவதைப்பார்த்தால் ஓ! அதுவே சுவர்க்கம் மண்ணில் இறங்கிய தருணம்.

Friday, February 1, 2013


தோட்டிப்பறவை

                         Real Scavenger

                                                         

  நல்ல காகங்கள் நம் சேரி உட்பட கிராமம், நகர் என பிரித்துப்பார்க்காமல் எந்த இடத்தையும் தன்னால் முடிந்த அளவுக்கு சுத்தம் செய்கிறது. செத்த எலியிலிருந்து நாம் சிந்திய சளி வரை பாகுபாடு இல்லாமல் உண்டு சுத்தம் செய்கிறது. உலகத்தில் காகயினங்கள் இல்லை என்றால் அசுத்தம் நிலவும், இல்லையா? இதற்கு, மிக தந்திரம், அறிவு, ஒற்றுமை, எச்சரிக்கை, சூழலுக்கு ஏற்ப தகவமைதல், உணவை தேர்ந்தெடுக்காமை, தைரியம், முயற்சி என பல குணங்கள் மற்ற பறவைகளைக்காட்டிலும் அதிகம். மனிதனை ஒட்டியே தன் வாழ்வை அமைத்துக்கொண்டது. நாமும் காகம் முதாதையர் என நினைத்து, ஆடி, புரட்டாசி, தை அமாவாசைகளில் காகா.. என காகம் போல கரைந்து படையல் சோற்றை உண்ணக்கூப்பிடுகிறோம். வயதானதும் காகம் நம் கண்ணுக்குத்தெரியாமல் ஊருக்கருகாமைக்காட்டுக்குச்சென்று இறந்து விடுகிறது. அதை குள்ளநரி, நாய், காட்டுப்பூனை, கழுகு பொசுக்கி உண்டுவிடுகிறது. காகங்கள் கூட எண்ணிக்கை குறைவதைப் பார்க்க முடிகிறது. சாலையோர மரங்கள் அவைகளுக்கு உறைவிடம், கூடு அமைக்க இடம் தந்தது. சாலைஅகல, மனித மனம் குறுக விபரிதத்தை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறோம்.