Thursday, August 30, 2012

பறவைக்கு நன்றி


பறவைகள் நமக்கு உதவுகிறது-நாம் பறவைகளுக்கு உதவுகிறோமா?
·       

 


·          பறவைகள் பூச்சிகளை உண்டு அவை பெருகாமலிருக்க உதவுகிறது
·          விதைகள் பரவ
  அயல் மகரந்தச்சேர்க்கைக்கு
·         எலிகள் பல்கிப்பெருகுவதைத்தடுக்க
·         தோட்டிகளாக ஊரைச்சுத்தம் செய்ய
·         விவசாயம் செழிக்க
·         சுற்றுச்சூழல் நிலைமையை உணர்த்த

     இப்படி பல வகையில் உதவும் பறவைகளுக்கு நாம் விவசாய பூமியிலும், காடுகளிலும் பிளாட் போடுதல், குளங்களில் சாக்கடை விடுதல், ஆறுகளில் சாயம் கலக்குதல், மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டுதல், பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தல், கூண்டுப்பறவைகளை ரசித்தல் மூலமாக பல வகையில் நன்றி சொல்கிறோம். நன்றி சொன்னது போதும். படத்தில் ரசிக்கும் பறவை காணாமல் போகணுமா? விவசாய பல்கலைகழகத்தின் பண்பலையில்  எனது உரை    -கேட்டு சிந்தியுங்கள்.

இமயவலம்


இமயவலம்
Himalaya Trekking

நாகருவில் காலை 3.15 மணிக்கு கேம்ப் உதவியாளர் எழுப்பிவிட்டார். பல் தேய்க்க முடியாது.சுற்றிலும் நேற்றைய பனிப்பொழிவில் மூன்றடிக்கு பனி படிந்துவிட்டது. எங்கள் கேம்ப் கூடாரங்கள் இடமின்மையால்சரிவிலிருந்தது. எங்கு நோக்கிலும் பனிமலைகள்.20 கிலோ மூட்டை முதுகில் ஏற்றி வரிசையாக நின்றோம். எண்ணிக்கை முடிக்க தடுமாற்றம்.இரவு தூக்கமின்மை தான் காரணம்.மூன்று முறை தப்பிதமாகி பிறகு சரியாகியது.காலை 5 மணிக்கே வெளிச்சம். எங்கும் பனிக்கட்டி. நடந்தோம் பனியில் ஒரு அடி புதைந்த நடை. உயரமான பனி மலை உச்சிகள், சரிவுகள, ஊடே ஊடே தாள நெகிழ்ந்த தடாகங்கள்.
மரமற்ற பனி வெளி. பத்தாயிரம் அடி உயரத்துக்கு மேல் தாவரங்கள் வளராது. நான் உலாப்போனது 13800 அடி உச்சி. சார்ப்பாஸ் எனும் இமயம். கண்களில் பனிக் கண்ணாடி. இது இல்லையானால் கண் கூசும். அனைத்து வெப்ப உடைகளும் உடலில் இட்டுக்கொண்டு, குளிரில் நடுங்கியவாறு நடந்தோம். மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் உடம்பின் சூடான புகை வெளியானது. பனிமலையில் ஏறினாலும் சில சமயம் தாகமெடுத்தது. பனிக்கட்டியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். சார்பாஸ் எனும் இடம் இரு மலைகளுக்கிடையே பனி வெட்டவெளி. வாழ்வில் இது போல மகிழ்வும், துக்கமும் கொண்டதில்லை. பனிமலைகளை உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஏறுவது, பிறகு கி.மீ கணக்கில் பனி சமவெளியில் நடப்பது என காலை 5 முதல் மதியம் ஒரு மணி வரை நடந்தேன், ஏறினேன். பல முறை வழுக்கினேன்.கைகளில் உறையோடு பனிப்பாறைகள் பற்றி ஏறினேன். கடப்பேனா? இல்லை சமாதியாகி விடுவேனா?
ஒரு முறை பனிப்புயல் எழுந்து சரிவிலிருந்து, மேலே அலை அலையாகச்சென்றன.வயிற்றில் பயப்பந்து எழந்து அடங்கியது.சரிவில் வழுக்கிப் போனால் யாரும் அவரைத்தூக்கி வரமுடியாது. எங்கு போய் விழுவாரோ! மேலே ஏறி வர பிடிமானம் கிடையாது. பனிப்பொழிவு ஏற்பட்டால் நாங்கள் அதோகதி தான். ‘அவலான்ச் ஒரு சின்ன கோலி குண்டு போல புறப்பட்டால் பெரிய கால்பந்து போல வந்து மோதினால் கதை முடிந்த்து. பனிக்கட்டி எடையிருக்காது என்று எண்ண வேண்டாம். அடித்தால் கால் முறிந்து விடும். கால்கள் நடுங்கிக்கெஞ்சின. பல சமயம் விலங்கு போல ஏறினேன். நான் காலுக்கு ஒரு சாக்ஸ் தான் அணிந்திருந்தேன். Frost bite எனும் பனிக்கடி கால் விரல்களுக்கு ஏற்பட்டால் அந்தப்பகுதி விரலில் மட்டும்இரத்த ஓட்டமிருக்காது.பிறகு கால் விரல் எடுக்க வேண்டியது தான்.
திடீரென மூடுபனி எழுந்தது. பயம் வயிற்றைக்கவ்வியது. வழி தெரியாமல் எப்படிப்போவது? சில வினாடி ஸ்தம்பித்துப்போனேன் பனி ஓரடி தான் இருக்குமென கால் வைத்தால் சில இடத்தில் முழங்கால் வரை போனது அச்சமூட்டியது. மெல்ல என்முன்னே பள்ளத்தாக்கு விரிந்தது. மூன்றடி அகலத்துக்கு சறுக்கு பாதையமைக்க, மலை உச்சியிலிருந்து முதலில் ஒருவர் செல்வார். அதன்பின் நான். பின்பிட்டத்தைப்பனிக்கட்டியில் பதித்து, கால்கள் இரண்டையும் அகலவிரித்துக்கொண்டு,  ஓ! சொர்க்கமே! இது தான் சொர்க்கம். சாய்வாக படுத்துச்சென்றால் வாவ! என்ன வேகம்! நான் நானாக இல்லாத கணங்களிவை. பின்தள்ளி நின்று பார்த்தால் சறுக்கி வந்த பாதை (சுமார் 5 கி.மீ இருக்கும்) பிரமிப்பாக இருந்தது.

பறவை அறிமுகம்


கல்குருவி
Indian Courser
(Cursorius coromandelicus)


கல்குருவிகளை கிராமத்தை ஒட்டியுள்ள பாறை, தங்கநிறப்புற்கள், கொஞ்சமே விளைச்சல், சொற்ப நீர் தேங்கும் கல்லுக்குழிகள் கொண்ட மேட்டுக்காடுகளில் காணலாம். இவை குழுவாக வாழும். மனிதன் கண்ணில் பட்டால் உடனே ஓடிப்போய் காய்ந்த புற்களுக்குப்பின் ஒளிந்து கொள்ளும். இது கரையான் மற்றும் பூச்சிகளை உண்ணும். உணவும் கிடைத்து இடையூறும் இல்லாதிருந்தால் ஒரே பகுதியில் நீண்ட நாட்கள் இருக்கும். ஆபத்து எனத்தெரிந்தால் கற்களுக்கிடையில் அல்லது சிறிய குழிக்குள் அசையாமல் படுத்துக்கொள்ளும். இரவு நேரத்தில் பாறைகளில் தங்கும். கால்கள் குட்டையாக இருப்பதால் இவை மரத்தில் தங்க முடியாது, பூச்சிகளைப்பிடிக்க இப்பறவை சொற்பமே ஓடிப்பின் தலையைக்குனியும். கண்ணுக்கு விருந்தளிக்கும் இப்பறவை அரிதாக காணலாம். இந்தப்படம் நண்பர் அருந்தவச்செல்வன் எடுத்தது.

Wednesday, August 29, 2012

வனவலம் (Trekking)


குளவிக் கூடு
பெருமாள்முடி கோவை, தொணடாமுத்தூருக்கு அப்பால் உள்ளது. அந்த வனத்துக்குள் பாஸ்கர், குணா என்ற தோழர்களோடு வனவலம் சென்ற போது பார்த்த பிரமாண்ட குளவிக்கூட்டை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். கூடு, மரக்கூழ் மற்றும் மண் சேர்த்துக்கட்டும்.ராணிக்குளவி முட்டைகளிட்டபின் அவை பிறகு புழுக்களாகும். மூன்றாவது அவதாரமெடுத்து, நூற்றுக்கணக்கில் குளவிகள் வெளிவரும். நல்லவேளை! நாங்கள் அந்த பிரமாண்ட கூட்டைக்கடக்கும்போது கொடுக்கோடு அவதரிக்கும் குளவிகள் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறி எங்களைத் துரத்தவில்லை. அப்படித் துரத்திஇருந்தால் அதோகதி தான். அருகில் குளம், அல்லது ஆறு இருந்தால் தப்பிக்கலாம். இயற்கை அவைகளை மலர்களின் மகரந்த சேர்க்கைக்கும், பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் படைத்துள்ளது.

Tuesday, August 21, 2012


மயில் 
Common Peafowl (Pavo cristatus)
இருபது நிமிடகோடை மழை பொழிய
பூமி நனைய என் உள்ளமும் குளிர்ந்தது.
மழை பெய்யின் புழுப்பூச்சி வருமே!
வந்தன பறவைகள்! சந்தோச இரைதேடல்
அதோ! தோகை மயில் படிக்கட்டு ஏறி வருகுது,
அழகு தேவதை அசைந்து வருகுது.
கண்கொள்ளாத காட்சி இதுவல்லவோ!
வர்ண வாண வேடிக்கை கண்டது போல
நீர்வீழ்ச்சி குளிர்ச்சி கவர்ந்ததென
யானை பார்த்து வியந்ததொக்க
வைத்த கண் எடுக்க மனமில்லை.
தோகையிலிருக்கும் கண்களனைத்தையும் தா!
உன்னைப்பார்த்து விட்டுத்தருகிறேன்.
மயில் போலொரு அழகுப்பறவை வேறெதுவுமுண்டோ!
தூண் மறைவில் ஒளிந்து கொண்டே நின்னை
உறைய வைத்தேன் புகைப்படப்பெட்டியில்-நன்றி!
மயிலுக்கும் மயில்வாகனனுக்கும் வந்தனம்.           
சின்ன சாத்தன்


Sunday, August 19, 2012நீலகந்தா (அ) பனங்காடை
Roller Bird 
(Coracias benghalensis)                                   
வெட்டவெளி போகும் மினசாரக்கம்பியில்
தனியாயமர்ந்து தவம் புரியும் காட்டுக்காடையே!
எப்போதும் உனது வேட்டை தனியாகவே.
காடுதனில் உலவும் ஆகாயக்காடையே!
நீ பறந்தால் நீலக்கடல் விரியும்.
வாய் கருப்பு, தலை மிகை, உடல் பழுப்பு
கரணமிட்டு தலை குப்புறப் பாய்வது எதறகு?
நீலச்சிறகு விரித்து குட்டிக் கரணம் யாருக்கு?
அறிவேன்; எல்லாமேவுன் காதலிக்குத்தானே!
காதல் கோட்டை பிடிக்க கோட்டைக்கிளி
வித்தை செயவது பாரக்க குதூகலம்.
ஆனந்தக் குட்டிக்கரணம் பெரும் குரலெழப்பி;
வெட்டவெளி விவசாய நிலம் பிடித்தமானது.
கண்ணில் படும் பூச்சிகளே உணவாகும்
உழவருக்குப் பேருதவி உன்னால்! நன்றி நீலகந்தா!
விடமருந்திய சிவன் கழுத்து நீலம்
அத்துவானக்காடு உலாவும் நீலக்கண்டனே!
உன்கழுத்தும் நீலமானதால் நீ நீலகந்தா!
சின்ன சாத்தன்


கொள்ளாதவன் வாயில் கொலுக்கட்டை

கோவை பள்ளபாளையம் குளத்தில் பறவை நோக்குதலில் இருந்தபோது ஒரு அரியகாட்சி கண்ணில் தென்பட்டது. குளத்தின் வடகரைக்கு அருகாமையிலிருந்த விவசாயக்கிணற்றின் படியில் தண்ணீர் பாம்பு வெய்யிலுக்கு படுத்திருக்கிறது என்று படம் எடுத்து, வீட்டுக்கு வந்து படத்தைப்பெரிதாக்கிப்பார்த்தால் வியப்பு. கிணற்றில் ஒரடி நீளமீன்கள் நீந்திக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பொதுவாக தண்ணீர் பாம்பு தவளைகளைச்சாப்பிடும். இப்படியும் நடக்குது!!