Thursday, January 29, 2015


எலிக்கோயில்
எலிக்கோயில்
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஒரு முறை டிஸ்கவரி சானலில் பார்த்திருக்கிறேன். நாங்கள் பிகானிர் இறங்கிய முதல் நாளிலேயே நண்பர் வஜ்ரவேலு எலிக்கோயில் செல்ல திட்டம் தீட்டுவார் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தங்கிய பிகானிர் ரயில்வே ஓய்வு விடுதியிலிருந்து வெளிவந்ததும், சுற்றுலா ஆட்டோக்காரர் மனோஜ் எங்களை ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டார். அங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து கருணை மாதாக்கோயிலுக்கு 16 கி.மீ. பயணமானோம். போகும் வழி நெடுக பாலையும் அதில் வரும் தாவரங்கள் மட்டுமே காட்சி  தந்தன. எங்கு போனாலும் உறிக்காத கடலை வஜ்ரம் வாங்கி, என்னுடன் பகிர்ந்து கொள்வார். எனக்கு எலியைப்பார்த்தாலே அருவருப்பு. பிகானிரில் பார்க்க எவ்வளவோ இடங்கள் இருக்க, இதைப்பார்க்க நண்பருக்கு ஆவல். எனக்கு எலிகள் உடம்பெல்லாம் ஊறுவது போல ஒரு உணர்வு பேருந்திலேயே ஆரம்பித்து விட்டது.
சிறிய கிராமம். இந்தக் கோயிலுக்கு வெளியில் ஒரு எலியையும் பார்க்க முடியாது. இது வியப்புத்தான். இந்தக்கோயிலைப்பார்க்க நிறைய வெளிநாட்டினர் வருகின்றனர். கோயிலுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் மொலு, மொலு என சுண்டெலிகள் ஊர்ந்து கொண்டும், கும்பலாக அரிசி கொரித்துக்கொண்டும், வாயகன்ற இரும்புச்சட்டியில் பால் அருந்திக்கொண்டும் இருந்தன. கருவறையைக்கூட விட்டு வைக்கவில்லை. எலிகள் தங்க சுவற்றில் தரை ஒட்டி, ஆங்ஙாங்கே வளை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு பக்கம் செனாய் போல ஊதி இசை எழுப்பிய ஒருத்தரின் அருகில் இன்னொருவர் மத்தளம் தட்டினார். இரண்டுமே ஓசை அளவான கதியில் எழுப்பினர். விரித்த துண்டில் காசுகள் சிதறியிருந்தன.
வெளிநாட்டினர் புகைப்படம் எடுத்தது எலிகளைத்தாம், அத்தோடு எலிகளோடு  தங்களைப்புகைப்படம் எடுத்தனர். யாவர் கையிலும் செல்போன் காமரா.கருண மாதா இருநூறு வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்து பல அதிசயங்களை இந்த பிராந்தியத்தில் நிகழ்த்தியுள்ளார். அவைகளை விளக்க எதிரில் ஒரு கண்காட்சி உள்ளது. எங்கு போனாலும் பறவைகளை வரவேற்று தானியங்கள் விசறப்படுகின்றன. மாடப்புறாக்கள், பச்சைக்கிளிகள் இந்த அன்பை ஏற்றுக்கொள்கின்றன. கோயிலில் கொஞ்சம் அமரலாம் என்றாலே எலிகள் நம் மேலே ஊர்கின்றன. எலிகள் நக்கி உறிஞ்சிய பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். வெள்ளை எலி எனில் இன்னும் அதிஷ்டம்.
எலிகள் ஆராய்ச்சிக்குப் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் பிளேக் நோய் எலி பரப்பியதாம். இவை கிருமிகளைப்பரப்புகின்றன எனவும் நம்பப்படுகிறது. எலியைக்கட்டுப்படுத்த இயற்கை  கழுகுகளையும், ஆந்தைகளையும், பாம்புகளையும் படைத்தது. மனிதன் எலிப்பொறி, விஷமருந்து என்று சமாளிக்கிறான். இவை இல்லையானால் எலி சாம்ராஜ்யம் முழு உலகத்தையும் அடைத்துக்கொள்ளும். தானியங்களை கபளிகரம் செய்யும் எலிகளை இவற்றினிடமிருந்து காப்பது கருணை மாதா தான் (இக்கோயில் எலிகளை மட்டும்!) ரயில்வே ஓய்வு விடுதி வந்ததும் ஓய்வு விடுதி கண்காணிக்கும் மூதாட்டி என்னை கருணை மாதாஜி தேக்கனா? என இந்தியில் விளித்தார்.


Friday, January 16, 2015


ஹவேலி


Bikaner Havelies

ஹவேலி
            நான் என்னவோ இப்போது தான் ஹவேலி பற்றி கேள்விப்படுகிறேன்.இந்த வகை கலைநுணுக்கம் கொண்ட வீடுகள் ராஜஸ்தானில் உள்ளது. முழுக்க மணற்கற்களால் ஆனவை. மஞ்சள் மற்றும் பிங்க் நிறம் கொண்டவை. பிகானிரில் பிங்க் நிறம், ஜெய்சால்மிரில் சற்று மஞ்சள் நிறம். ராஜஸ்தானத்து வெப்பம் பூமிக்கடியில் இப்பேற்பட்ட மிருதுவான நிறக்கற்களை உருவாக்கியுள்ளது. அங்கு கிடைத்த கற்களைக்கொண்டே அரண்மனைகளும், மாளிகைகளும், வீடுகளும் மிருதுநிறக்கற்களில் மரத்தை செதுக்குவது போல செதுக்கியுள்ளனர். அங்குலம், அங்குலமாக இயற்கை ஓவியங்கள் வடித்துள்ளனர். ஜன்னல், அது ஜன்னலல்ல கலைப்பொக்கிஷம். ஆண்களுக்கு தனி அறைகள், பெண்களுக்கு தனி அறைகள். யானை, மலர், இலை, கொடி என அனைத்தும் நாம் அன்றாடம் பார்க்கும் இயற்கைகளை ஓவியங்களாகக் கல்லில் வடித்துள்ளனர்.
 கல்லில் ஒரு ரம்மியமான கவிதை எழுதியுள்ளனர். கற்களல்ல இவை இனிமையான இசை. உலகில் எந்த மூலையிலும் இப்படி மனதைக்கவரும் கல்ஓவியங்களில் செதுக்கப்பட்ட வீடுகளில்லை எனலாம். இவை கலைப்பொக்கிஷங்கள். வீதிகள் 20’ அடிக்குத்தானிருக்கும். ஆன்மிகர்கள் இவ்வீடுகளை கலைக்கோவில்களாக வைத்துள்ளனர். கிருஷ்ணர், கண்ணன், சிவன் என கல்லில் சித்திரங்கள் தீட்டியுள்ளனர். பெரும் செல்வந்தர்கள் ஹவேலிகளை வாங்கி பராமரிக்கின்றனர். நானும், நண்பர் வஜ்ரவேலும் வழிகாட்டி மனோஜ் ஆங்கிலத்தில் விவரிக்க ஆச்சர்யத்துடன் ஹவேலியைப்பார்த்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு புடைப்பு ஓவியங்களும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். நிறையவே மேற்கு வங்கத்து செல்வந்தர் ஹவேலிகளை வைத்துள்ளனர். ஒன்பது மாதங்கள் செல்வம் சேர்க்க உழைப்பு,
பிறகு மூன்று மாதங்கள் ஹவேலிக்கு வந்து ஓய்வில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஹவேலி பவித்திரமானதாக வைத்திருப்பதால் இதற்குள் கழிப்பறைகள் இல்லை. அதற்கு ஹவேலி விட்டு தனியான இடம் வைத்துள்ளனர்.ஜெய்சால்மிரில் ஹவேலிகள் வாடகைக்கு விட்டதை, காலி செய்யப்படுவதாக நண்பர் சொன்னார். மூடியேகிடக்கும் ஹவேலியில் பேய் நடமாட்டம் இருப்பதாக கைடு சொன்னார். இப்படித்தான் எதாவது ஒரு கதை உருவாகும். மொகல் கட்டிடக்கலையும், ராஜ்புத்திரர் கட்டிடக்கலையும் சங்கமிக்கும் கவி பாடும் ஹவேலிகள்.

வங்க சத்யஜித்ரே ஜெய்சால்மிர் ஹவேலிகளைப்பார்த்து, அங்கு நடப்பதாக ஒரு துப்பறியும் கதை எழுதி படமாக எடுத்துள்ளார். அதன் பெயர் சோனார் கேலா (Golden Fortress) படமும், நாவலும் அருமையாக இருக்கும். அவையிரண்டும் இப்போது பார்க்கப்படிக்க கிடைக்குமா என ஏக்கம் நிலவுகிறது. ஹவேலிகள் 400 வருஷம் பழமையானவை. நாம் இவைகளைப்படைத்த முன்னோர்களை நினைத்தும், அது இன்றளவும் நின்று கவிதை சொல்லி வெளிநாட்டினரையும் மயக்குவதைக்கண்டு பெருமையடையலாம்.

Tuesday, January 13, 2015


காதலியே……….
வண்ணத்துப்பூச்சி இறகைப் பரிசளிக்கலாம்
ஆயின் இறகு உதிர்த்தால் மட்டுமே…..
மயில் கழுத்து நிறப்பொட்டு வைக்கலாம்
ஆயின் அது கனவில் மட்டுமே……
வானவில் சேலை நெய்து தரலாம்
ஆயின் அது சாத்தியமா……
நீலோற்பல மலர் விழிகள் ஆக்கலாம்
ஆயின் அது கை கூடுமா…..
கொவ்வைக் கனி உதடு கொடுக்கலாம்
ஆயின் அது நிறைவேறுமா….
வஞ்சிக்கொடி இடை வைக்கலாம்
ஆயின் அது சந்தேகமே…….
தாமரை மொட்டில் கொங்கை உருவாக்கலாம்
ஆயின் அது முடியுமா……..
காயாம்பூ போன்று கூந்தலை வளர்க்கலாம்
ஆயின் அது மெய்ப்படுமா….
முத்துப் போன்று பற்களை கோர்க்கலாம்
ஆயின் அது இணையுமா……
பிறைநிலா நெற்றி செய்யலாம்
                                                                   ஆயின் அது மெய்யா…….
                                                                   பாம்பின் படம் போல அல்குல் அளிக்கலாம்
                                                                   ஆயின் அது உண்மையா…..
                                                                   முழு மதியென வதனம் பூசலாம்
                                                                   ஆயின் இதுவெல்லாம் கவிதையில் மட்டுமே
                                                                   சாத்தியம் காதலியே…….

Sunday, January 4, 2015


Diary on the nesting behavior of Indian Birds
           

Contact link: http://www.amazon.in Diary on the nesting behaviour of Indian Birds


Small Bee Eater pair- One bird excavates nest at the side of sand bund, another bird guard the place and gives caution while intruders approaching.

Diary on the nesting behavior of Indian Birds
           
இது ஒரு மாறுபட்ட ஆங்கிலப்பறவை நூல். ஐந்து வருடங்களாக குளம், ஆறு, கடல், காடு என அலைந்து திரட்டிய தகவல்கள். இது வரை அறியப்படாத பறவைகளின் கூடு ரகசியங்களை பதிவு செய்த நூல். இது நாள் வரை வெளி வராத அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. நேரடியாக களத்தில், வெவ்வேறு புகைப்டக்கலைஞர்கள் எடுத்த 300 அரிய புகைப்படங்கள் உள்ளன. அது மட்டுமா!  50 கோட்டு ஓவியங்கள் பறவைகளின் ரகசிய வாழ் முறைளை வெளிக்கொணர்கின்றன. 223 பக்கங்கள் டயரி வடிவில் அத்தனையும் பளபளப்பான ஆர்ட் காகிதத்தில் தயாரித்த நூல். இதுவரை 1000 படிகள் விற்று சாதனை படைத்துள்ளது. Rajaram Mohan Roy Library Foundation, Calcutta, தேர்வு செய்து 340 நூல்களை வாங்கி இந்தியா முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கொடுத்துள்ளது, பெருமை தரக்கூடிய விஷயம்.
          Bombay Natural History Society, WWF, Salim Ali Centre for Ornithology and Natural History, India Birds விலைக்கு வாங்கி, மாணவர்களின் Reference-க்காகவும், Phd-மாணவர்களுக்காகவும் வைத்துள்ளது, இந்த நூலின் முக்கியத்துவத்தை பறை சாற்றுகிறது. The Hindu, Times of India, New Indian Express, Deccan Chronicle, India Birds என பத்திரிகை உலகு பாராட்டியுள்ளது. இத்தகைய ஒரு நூலை ஒவ்வொருவரும் பார்த்து ரசித்துப்படித்திட வந்து விட்டது on line amazon.in விற்பனையில்………..
          Small Green Bee Eater ஜோடியின் கூடு மண் திட்டினை இரண்டு அடிக்குக் குடைந்து முட்டைகளை வைக்கும். ஆண் Bee Eater மேல் சிமிறில் அமர்ந்து யாராவது வந்தால் எச்சரிக்கை செய்யும். இதை இந்தப்படம் நுணுக்கமாக சொல்லாமல் சொல்கிறது. இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத்தூண்ட வில்லையா?

           இதுவரை எந்த நூலும் இது மாதிரி பறவை குணாதிசயங்களை வெளியிடவில்லை. இது 5 வருஷத்திய களப்பணி. தற்போது அகில உலக அளவில் முதலிடம் வகிக்கும் amazon.in நிறுவனம் இதை விற்பனை செய்ய முன் வந்துள்ளது, இந்த நூலின் தரத்தையும், வடிவத்தையும், தகவல் களஞ்சிய நிலையையும் பாராட்டும் விதமாக உள்ளது. பறவை ஆர்வலர்கள் ஒவ்வொருவர் புத்தக அலமாரியையும் அலங்கரிக்க இதோ வந்து விட்டது On line விற்பனையில்…………