Thursday, January 29, 2015


எலிக்கோயில்




எலிக்கோயில்
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஒரு முறை டிஸ்கவரி சானலில் பார்த்திருக்கிறேன். நாங்கள் பிகானிர் இறங்கிய முதல் நாளிலேயே நண்பர் வஜ்ரவேலு எலிக்கோயில் செல்ல திட்டம் தீட்டுவார் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தங்கிய பிகானிர் ரயில்வே ஓய்வு விடுதியிலிருந்து வெளிவந்ததும், சுற்றுலா ஆட்டோக்காரர் மனோஜ் எங்களை ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டார். அங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து கருணை மாதாக்கோயிலுக்கு 16 கி.மீ. பயணமானோம். போகும் வழி நெடுக பாலையும் அதில் வரும் தாவரங்கள் மட்டுமே காட்சி  தந்தன. எங்கு போனாலும் உறிக்காத கடலை வஜ்ரம் வாங்கி, என்னுடன் பகிர்ந்து கொள்வார். எனக்கு எலியைப்பார்த்தாலே அருவருப்பு. பிகானிரில் பார்க்க எவ்வளவோ இடங்கள் இருக்க, இதைப்பார்க்க நண்பருக்கு ஆவல். எனக்கு எலிகள் உடம்பெல்லாம் ஊறுவது போல ஒரு உணர்வு பேருந்திலேயே ஆரம்பித்து விட்டது.
சிறிய கிராமம். இந்தக் கோயிலுக்கு வெளியில் ஒரு எலியையும் பார்க்க முடியாது. இது வியப்புத்தான். இந்தக்கோயிலைப்பார்க்க நிறைய வெளிநாட்டினர் வருகின்றனர். கோயிலுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் மொலு, மொலு என சுண்டெலிகள் ஊர்ந்து கொண்டும், கும்பலாக அரிசி கொரித்துக்கொண்டும், வாயகன்ற இரும்புச்சட்டியில் பால் அருந்திக்கொண்டும் இருந்தன. கருவறையைக்கூட விட்டு வைக்கவில்லை. எலிகள் தங்க சுவற்றில் தரை ஒட்டி, ஆங்ஙாங்கே வளை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு பக்கம் செனாய் போல ஊதி இசை எழுப்பிய ஒருத்தரின் அருகில் இன்னொருவர் மத்தளம் தட்டினார். இரண்டுமே ஓசை அளவான கதியில் எழுப்பினர். விரித்த துண்டில் காசுகள் சிதறியிருந்தன.
வெளிநாட்டினர் புகைப்படம் எடுத்தது எலிகளைத்தாம், அத்தோடு எலிகளோடு  தங்களைப்புகைப்படம் எடுத்தனர். யாவர் கையிலும் செல்போன் காமரா.கருண மாதா இருநூறு வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்து பல அதிசயங்களை இந்த பிராந்தியத்தில் நிகழ்த்தியுள்ளார். அவைகளை விளக்க எதிரில் ஒரு கண்காட்சி உள்ளது. எங்கு போனாலும் பறவைகளை வரவேற்று தானியங்கள் விசறப்படுகின்றன. மாடப்புறாக்கள், பச்சைக்கிளிகள் இந்த அன்பை ஏற்றுக்கொள்கின்றன. கோயிலில் கொஞ்சம் அமரலாம் என்றாலே எலிகள் நம் மேலே ஊர்கின்றன. எலிகள் நக்கி உறிஞ்சிய பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். வெள்ளை எலி எனில் இன்னும் அதிஷ்டம்.
எலிகள் ஆராய்ச்சிக்குப் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் பிளேக் நோய் எலி பரப்பியதாம். இவை கிருமிகளைப்பரப்புகின்றன எனவும் நம்பப்படுகிறது. எலியைக்கட்டுப்படுத்த இயற்கை  கழுகுகளையும், ஆந்தைகளையும், பாம்புகளையும் படைத்தது. மனிதன் எலிப்பொறி, விஷமருந்து என்று சமாளிக்கிறான். இவை இல்லையானால் எலி சாம்ராஜ்யம் முழு உலகத்தையும் அடைத்துக்கொள்ளும். தானியங்களை கபளிகரம் செய்யும் எலிகளை இவற்றினிடமிருந்து காப்பது கருணை மாதா தான் (இக்கோயில் எலிகளை மட்டும்!) ரயில்வே ஓய்வு விடுதி வந்ததும் ஓய்வு விடுதி கண்காணிக்கும் மூதாட்டி என்னை கருணை மாதாஜி தேக்கனா? என இந்தியில் விளித்தார்.


No comments:

Post a Comment