Sunday, October 18, 2015




 இயற்கை விரும்பிகள்
அன்பழகன் (தம்பி)


பார்த்தசாரதி( அண்ணன்)
இயற்கை விரும்பிகள்
பார்த்தசாரதியும், அன்பழனும் சகோதரரர்கள். இருவரும் போத்தனூர் எல்லை தாண்டிய ஒரு அத்துவானக்காட்டுக்குள் ஒரு க்ரில் வொர்க் சாப் வைத்துள்ளனர். எளிமையான வாழ்க்கை வாழும் இந்த சகோதரர்களை சந்திக்க வைத்தது இறைவன். நண்பர் துரை பாஸ்கர் மூலமாக….அமைதியான வாழ்க்கையைத்தேர்ந்தெடுத்து மகிழ்ந்தவாறு இருக்கும், இவர்களைப்பார்த்து வியக்காமல் என்ன செய்ய! வனத்துக்குள் இளமைப்பருவத்திலேயே சுற்றித்திளைத்துள்ளனர். இருவரும் 35 வயதுக்குள் தாம் இருப்பர். விரிந்த கண்களுடன் வனப்பயண அனுபவங்களை விவரிக்கின்றனர். நாங்கள் நாற்காலியில், ஆதவன் ஆரஞ்சு நிறத்துக்குப் போன போது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ரேசன் அரிசி வாங்கி தங்கள் வொர்க் சாப் முன்புறம் இட்டு பறவைகள் உண்டு மகிழும் அழகைப்பார்த்து ரசிக்கும் இளம் சகோதரர்களைப்பார்த்து வியக்காமல் என்ன செய்யச்சொல்கிறீர்கள்? மயில், காடை, கொளதாரி, வானம்பாடிக்குருவிகள், புறா, காகம், அண்டங்காகம் வந்து அரிசிகளைப்பொருக்கியவாறு இருப்பதைப்பார்த்த கணங்களை லகுவாக்கிப்போகின்றன.
சில வேளைகளில் எலி கூட அரிசி கொரிக்க வருகிறது. உடும்பும் பாம்பும் வருகிறது. நாங்கள் வொர்க் சாப் உள்ளே மறைந்து பார்த்தால் ஆஹா…! பனங்காடை, கீச்சான், வெண்தொண்டை முனியா, கரிச்சான் என திக்கு முக்காடவைக்கின்றன. இது தான் உண்மையான பறவை நோக்கல். பறவை என்னை நோக்கி வரவேண்டும். ஒரு பக்கம் அமர்ந்து கண்ணுற்று மகிழ வேண்டும். பறவைகளைத்துரத்திக்கொண்டு போவது அபத்தம். எத்தனை விதமான புகைப்படங்கள் வேண்டும், தோழியே! இதோ! உன்னைக்கூட அவ்வளவு படங்கள் எடுக்க மாட்டேன். இதோ! என் முன்னே அழகு தேவதைகள்! இறக்கை முளைத்த தேவதைகள். சந்தடியற்ற வெட்டவெளி. சமீபத்திய மழை மண்ணுக்கு பச்சைக்கம்பளம் போர்த்தியிருந்தது. குழுகுழவாக வந்து போனவைகளுக்கு கொஞ்சம் அச்சம் தாம். நாங்கள் புதியவர்கள். சகோதரர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உண்டு. இவர்கள் எங்களுக்கு சளைத்தவர்களல்ல. கொண்டு போயிருந்த 10 மரநாற்றுகள் வைத்து வளர்த்த ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டனர். மீண்டும் செல்ல வேண்டுமெனவும், கொளதாரியைப்படம் எடுக்கவும் ஆவல். இது அவ்வளவு சாமான்யமாக படத்துக்கு நிற்காது. இதுவரை இதை அம்சமாகப்புகைப்படம் எடுக்க முடியாது போகிறது. அடுத்த முறை வெல்லலாம்.

Tuesday, October 13, 2015

இராமநாதபுரத்தில் தம்பியோடு வசிக்கும் அம்மா குடை எடுத்துப்போகச்சொன்னாள், ஆனால் அதை அசட்டை செய்தவன் மழையில் நனைந்து காளான் விடைத்தது போல ஆனேன். சூலூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவன் நான் வசிக்கும் வீடு 15 நிமிசத்தில் போக வேண்டியது, இரண்டு மணிப்பொழுது ஆனது. அப்போது மழை கவனிப்பு என்னை மகிழ்வில் ஆழ்த்தியது.  எத்தனை பேர் மழையை வசை பாடியபடி இருந்தீர்கள்? ஓ! மக்களே! காய் கறிச்சாறு அருந்த, ஒரு கடையில் அமர்ந்தவன், சுண்டலும் உண்டவாறு பையிலிருந்த ஒரு காகித்த்தை எடுத்து கவிதை எழுத, நேரம் போனது தெரியவில்லை. பெருத்த மழை, தூரல் மழையாக மாற, சாலையில் நடந்தவாறு எழுதிய தமிழ் மழைக்கவிதையை பாடியபடி இல்லம் சேர்ந்தேன். இதோ! தமிழ் மழையில் நனையுங்கள்!

மழை நீர் வடித்தவை குழாய்களல்ல
அவை நீர் வீழ்ச்சிகள்
சாலையில் எழும்பியவை மழைத்துளிகளல்ல
அவை காதலி முத்தமிட்டுச்சிலிர்த்த மயிர்க்கால்கள்
மழை சாடியவை சவுக்கடிகளல்ல
அவை மத்தளம் வாசிக்கும் கோல்கள்
சாலையில் ஓடுயவை மழைக்கோடுகளல்ல
அவை விளையாடும் சிறார்கள்
சாலையோரம் நெழிந்தவை வெறும் நீரல்ல
அவை உயிர்ப்பிக்கும் அமுத தாரைகள்
சாலையில் புடைத்தவை மழைக்கொப்பளங்களல்ல
அவை அரிசியிட்ட பானையின் கொதிப்புகள்
சாலையில் வீழ்ந்தவை மழைக்கோடுகளல்ல





அவை விளையாடும் சிறார்கள்
மழைக்காற்றால் சிலிர்த்தவை மேனிமட்டுமல்ல
மழை கோதிவிட்ட கேசரங்களும்
அத்தோடு மழையிலாடும் இலைகளும் தாம்…….
எங்கும் அணைத்தவை குளிர் கரங்கள்
மழையை வாழ்த்தியபடி, அதை அனுபவித்த படி
ஒதுங்கிய கடையோரம் கவிதை பாடினேன் தமிழை
தேநீர் அருந்தியபடி………………………………….
நீங்களும் தமிழ் மழையில் நனையட்டுமேயென


                                                                        சின்ன சாத்தன்.