Monday, December 30, 2013


      மாரிக்குருவி-மழைகுருவி


நீர் மேனியைக்கிள்ளிப்போகும் மாரிக்கருவி

மாரிக்குருவிகள் எவ்வளவு இருக்கும்? எனது வீட்டு முன்பு மாநாடு

Common Swallow
(Hirundo rustica)
மாரிக்குருவி
            
     இமயத்திலிருந்து வரும் இந்த குருவி பரிமாண, மாரிக்குருவிகளுக்கு மழையென்றால் பிடித்தமானது. தரையொட்டியும், வானத்து நீலவெளியிடையும் இவை அனாயசமாக பறந்தும், திரும்பியும், நம் மீது மோதவந்தது போல வந்து கடைசி நிமிஷத்தில் வளைந்தும் போகும் குறும்பு ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். இவை காஷ்மீரத்து கருப்பு ரோஜாக்கள் என்பேன். பறவை பிதாமகர் சலிம் அலிக்கு ஊதாத்தேன்சிட்டு (Purple Sunbird) பிடிக்குமெனில் என் குருநாதருக்கு மாங்குயில் (Golden Oriole) பிடிக்குமெனில் எனக்கு மாரிக்கருவி பிடிக்கும். ஏனெனில் இதன் குறும்புத்தனம். பறந்தவாறே இருக்கும். என்னே! சுறுசுறுப்பு! ஏரி நீர் பரப்பின் மேல் பறந்துவாறு நீர்மேனியைக்கிள்ளுவதும், தரையை மோப்பம் பிடித்தவாறு பறந்து கொசு பிடிப்பதும், நீல வானில் பறக்கும் சிறு பூச்சிகளை லாவகமாக வேட்டையாடுவதும் அட!அட! என்ன குதியாட்டம்! இந்த பறவைகள் பறப்பதில் ஒரு கம்பீரம், ஒரு நளினம், ஒரு தன்னம்பிக்கை இருக்கும்.
            
       மாரிக்குருவிகள் காஷ்மீர், மற்றும் இமயக்குளிரின் 3000 அடிக்கு மேல் தான் காதலும் பிறகு குஞ்சுகளும் பெற்றுக்கொள்ளும். மக்கள் இங்கு உலவித்திரியும் மாரிக்கருவிகளை ஒரு வகை சிட்டுக்குருவி என் நினைத்துக்கொள்வர். இவை எப்படி திடீரென ஆகஸ்ட் மாதம் நம் பகுதிக்கு வந்தன என்ற எண்ணமற்ற மக்கள் காசு தேடி ஓட்டமா ஓட்டம். மாரிக்குருவிக்கு சுறுசுறுப்பு பிடிக்கும், எனக்கும் தான். அவைக்கு மழைத்தூறலும், குளிரும் பிடிக்கும், எனக்கும் தான். அவற்றிற்கு குறும்புத்தனம் பிடிக்கும், எனக்கும் தான். மாரிக்குருவி என எனது வலைப்பூவிற்கு பெயர் வைக்க நினைத்து, ஆங்கத்தில் சிக்கலென பிறகு மழைகுருவி என நண்பர்களிடை கலந்து முடிவாயிற்று. இப்பறவைகள் ஏரிப்பரப்பு கன்னத்தை கிள்ளுவதை புகைப்படமெடுக்க பள்ளபாளையம் குளத்தில்  50 படமெடுத்தும் சரியாகவரவில்லை. புகைப்படக்கலைஞர் யாராவது இதை முயன்று பார்க்கலாமே! அப்படிக்கிடைத்தால் எனது e-mail: sukubird@gmail.comஅனுப்பலாம். அவருக்கு Rs. 10000 பரிசு பெற்றஇமயவலம்என்ற Trekking- நூல் பரிசாக வழங்குவேன்.
            
      மாரிக்கருவிக்கு தாம்பாடி, தகைவிலான், தலையில்லாக்குருவி, அடைக்கலான், தைலான் என்பதோடு நான் செல்லமாக வைத்த பெயர் மழைகுருவி. அதுவே எனது வலைப்பூவின் பெயர். இந்த துறுதுறுப்பறவைகள் அந்தி கருக்க, நீர் சூழ்ந்த முள் மரங்களில் குழுவாகத்தங்கும். அப்போதெல்லாம் என் இல்லம் அலாதியாயிருக்கும், இப்போது மாதிரி வீடுகள் இல்லை. மழைகுருவிகள் தொலைபேசிக்கம்பிகளில் மாநாடு நடத்தும். இப்போது அரிதாகிவிட்டது. ஒவ்வொரு வலசைப்பருவத்திலும் நான் முதன் முதலில் பார்க்கும் மாரிக்குருவியை  எங்கு? எப்படிஎந்தத்தேதி, மாதம், வருஷம்? யாருடன்? எந்த நேரம்? என என் டைரியில் பதிவு செய்வேன். வலசை எப்போது வந்தன எனத்தெரிந்து விடும். ஒன்று கூட தென்படவில்லையாயின் மீண்டும் இமயத்திற்கு திரும்பு பயணம் என உணர்ந்து டைரியில் பதிவு செய்வேன். இதை சென்ற வலசைப்பருவத்தில் மாரிக்குருவி எப்போது வந்தது? எப்போது திருப்பியது? என புள்ளிவிபரம் தெரியும். தனது டைரியில் பார்த்த பறவைகளைப் பதிவு செய்து life list வைப்பவர் மட்டுமே Sincere Bird Watcher. அவரிடமிருந்து சில உபயோகமான விபரங்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு மாரிக்குருவி இந்த வலசைப்பருவத்தில் அதிகமாக வரவில்லை! தாமதாக வந்தது. ஏன் தாமதம்? சும்மாவாவது லட்சங்கள் செலவு செய்த காமெராவில் படம் எடுத்து FB –ல் இடுபவர் Like-ல் அவர் Like. இவர்களெல்லாம் Photographers. நல்ல புகைப்டக்கலைஞராக வாழ்த்துகள்.
மாரிக்குருவிகளின் வரவு சென்ற வலசைப்பருவம் போலில்லை. ஏன்?

பருவநிலை மாற்றம் (Climate change)

Roosting-க்கு நீர்சூழ்ந்த முள்மரங்களை, பேராசை மக்கள் வெட்டி விட்டனர்.

     வேறு காரணம் இருக்கலாம். என்னுடன் கலந்துரையாடுங்கள். வலைப்பூ வந்து படித்துவிட்டுப்போனால் மட்டும் போதாது. ஒரு வலசைபருவத்தில், சிறுவர் சிலர், ஒயரில் அமர்ந்த மாரிக்குருவிகளை உண்டிவில்லால் சிலவற்றை வீழ்த்தி விட்டனர். இதை வழியில் வந்தவன் பார்த்து, அவர்களுக்கு போதனை வகுப்பு நடத்தினேன். இது போல பல பறவைகளைக்காப்பாற்றிய சம்பவங்கள்  Bird Rescue’  எனும், எனது நூலில் வெளிவரும்.


Monday, December 23, 2013

சோளக்குருவி
Rose-coloured Starling (Sturnus roseus)

            
         இப் பறவைக்குப் பெயர் தமிழில் ரோசா மைனா, சூரைக்குருவி, சோளக்குருவி என நாமகரணம் செய்துள்ளனர். சூரைக்கருவி என்று ஏன் பெயர் வந்தது? இவை 500 – க்கு மேற்பட்ட பறவைகள் கூட மேகம் மாதிரி சோளக்காட்டின் மேல் பறந்து வந்து சோளக்கதிர்களைச் சூரையாடுவதால், நம் விவசாயிகள் இப் பெயர் வைத்திருப்பார்களோ! அத்தோடு லோகஸ்ட் (Locust) களை அழித்து விவசாயிக்கு நன்மையும் செய்கின்றன, என்பதை மறந்துவிடக்கூடாது. இவை கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து, நமது நாட்டுக்கு வரும் பறவைகளில் முதலில் வலசை வரும் பறவைகள் என சலிம் அலி தனது The Book of Indian Birds-ல் One of our earliest winter visitors. Begins arriving July-August, depart by mid April-என்று பதிவு செய்துள்ளதை நினைவு கூறுகிறேன்.
            சோளக்குருவிகள் கோவைப்பகுதிக்கு இன்னும் வரவில்லை. இதை பல பறவை கண்காணிப்பாளர்கள் ஆமோதிக்கின்றனர். டிசம்பர் முடியப்போகிறது, அவை இன்னும் ஏன் வரவில்லை? நான் இப்பறவைகளை அரக்கோணத்தில் பட்டிமேடு குளத்தோர மின் கம்பி மற்றும் முட் செடிகளில் பத்து எண்ணிக்கையில் கண்டு தினத்தந்தியில் செய்தி கொடுத்தேன். ரயிலில் கோவை திரும்புகையில் ஊத்துக்குளி வரும் முன்னரே சோளக்காட்டுக்கு மேலே செல்லும் மின்கம்பிகளில் சொற்ப அளவில் பார்த்தேன்.
            சென்ற வலசைப்பருவங்களில் சூலூர் ஊர்வேலன்காடு, குளத்தில்(Roosting) இரவுத்தங்கல், சின்னக்குளப்பகுதி கிழக்கு குப்பை மேடு, குனியமுத்தூர் மேற்குப்புற குளம் என நிறைய சோளக்குருவிகளக்கண்டு களிப்புற்றேன். ஒரு பருவத்தில் எனது வீட்டு மதில் ஓரமிருந்த முள்முரங்கை(Erithrina indica) மரத்தில் மலர்ந்திருந்த கிரிம்சன் நிற மலர்களில் தேனுறிஞ்ச ஒரு கூட்டம் அமர்ந்தது.எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. அவைகள் நம்மூர் மைனாக்கள் துரத்தும் வரை இருந்து ஊர்வேலன்காடு நோக்கிப்பறந்தன. எத்தனைப்புகைப்படங்கள் எடுத்திருப்பேன்! கருமேகம் மாதிரி, ஒரு மாஜிக் கம்பளம் போல் ஆயிரக்கணக்கில் பறந்து வந்து சூலூர் குள நடு நீர்க்கருவேலமரங்களில், அந்தி சாயும் வேளையில் ஒருசேர அமரும். ஆதவன் மலைக்குள் மறைய, என்னால் நல்ல புகைப்படங்கள் எடுக்க முடியாமல் தவிப்பேன். ஏப்ரல் மத்தியில் சோளக்குருவிகள் ஐரோப்பா செல்ல ஆயத்தம். கொஞ்சம் கொஞ்சமாகக்  சோளக்கருவிகள் குறைய, நான் வழியனுப்பி குட்லக்சொன்ன நாட்களவை.
            இப்போது மருந்துக்குக்கூட சோளக்குருவி கோவைப்பகுதியில் இல்லை. யாருக்கு என்ன நஷ்டம்? அவை இங்கு வருகை புரியாததற்குக் காரணம், என் அறிவுக்கு எட்டியவை;-

     

சூறைக்காற்றோ!

இரவுத்தங்கல்

மாஜிக்கம்பளமோ! சூலூர் குளத்துக்கு இரவு தங்குலுக்காக வருகை

அரக்கோணம், வேலூர் மற்றும் சித்தூர் தினத்தந்தி செய்தி
1.    இருந்த சோளக்காடுகள் வீட்டுமனைப்பிரிவுகளாகிவிட்டன.
2.    எனது குருநாதர் ரத்னத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் இப்படிச்சொன்னார்; ‘வடகிழக்குப்பருவ மழை குறிப்பிட்ட நேரத்தில் வந்தாலும், கோவைப்பகுதிகளில் தாமத மழை அதனால் சோளம் விதைப்பு தாமதமானது. சோளக்குருவி களும் இன்னும் வரக்காணோம்.’
3.    சோளக்குருவிகள் தங்க முள்மரங்கள் இல்லாதபடி மக்கள், மீன்பிடிப்பவர் குளத்துக்குள்ளிருந்ததை, வெட்டி தண்ணீர் காயவைத்து உடம்புக்கு ஊற்றிவிட்டனர். இதை பஞ்சாயித்து, கார்பரேசன், பொதுப்பணித்துறை என்ற அரசு இயந்திரம் எதுவும் தடுக்கவில்லை. சோளக்குருவி பாதுகாப்பாகத்தங்க நீர் சூழ்ந்த வேலமரங்களை விரும்புகின்றன.

வேறு காரணம் எதாவது இருந்தால் நீவிர்  எனது வலைப்பூவில் சொல்லலாம்.

First three snaps used from other co-bloggers for environmental education purpose. Thanks for them.

Wednesday, December 18, 2013


Brood parasitic Bird


Nidicolous Koels
                Nidicolous means young ones look like the adults but still beg their parents for food with bills wide open while flying with them.
                இரண்டு வார காலமாக எனது இல்லத்தைச்சுற்றி நிடிக்கோலஸ் குயில்களைப்பார்த்து ரசிக்க முடிகிறது. இரண்டு மூன்று, அந்தவிதமான குயில்கள் step mother-ஆன காகத்திடம் உணவுக்காக துரத்தித், துரத்தி கர்ர்ரு……கர்ர்ரு……என வாயைப்பிளந்தவாறு தேக்கு, வேம்பு மரங்களின் கிளைகளில் தாவுகின்றன. இவை ‘சட்’ டெனப்பார்த்தாலே நமக்குத்தெரியும் குயில் தாமென்று….. அதுவும் ஆண்குயில்கள், வெளிர் பச்சை மூக்கு, கருத்த மேனி மற்றும் க்ரிம்சன் கண்கள். பெண்குயில்கள் பொரி உடல். அப்படியிருக்க, நல்ல காகம் பறவைகளிலேயே அறிவானது. குயிலென அதற்குத்தெரியாமலாயிருக்கும். அப்படியிருந்தும் சில வாரங்களாகவே நிடிக்கோலஸ் ஆண்குயில்களுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருக்கின்றன.
குயிலின் முக்கிய உணவு பழம், பெர்ரி, அத்தி, சில சமயம் மட்டும் புழு, பூச்சி உண்ணும். step mother காகத்தின் உணவு, கிடைக்கும் எதுவும் உண்ணும்.(Omnivorous)  அப்படியிருக்க, நிடிகோலஸ் குயில்களுக்கு நிச்சயமாக காகம் பழவர்க்கங்களைத்தேடிப்பிடித்து, வந்து ஊட்டாது. கிடைக்கும் எதுவும் ஊட்டும், குயில்களும் அதை வாங்கி பசியாற்றுகிறது. நிடிக்கோலஸ் பறவைகள் சோம்பேரிகள். அவை இரைதேடிக்கற்றுக்கொள்ளத்தயக்கம் காட்டுகின்றன.
காகத்தைப்போல கள்ளம், தைரியம்,எச்சரிக்கை உணர்வு எந்தப்பறவைக்கும் வராது. அப்படியிருக்க, குயில் எனத்தெரிந்தும் காகம் ஊட்டுகிறது எனில் இயற்கையை வியந்துதான்ஆக வேண்டும் தோழா! சிலம்பன்கள்(Babblers) சுடலைக்குயில்(Pied crested Cuckoo) களுக்கு உணவு ஊட்டுகின்றன. அதாவது ஐந்தறிவுக்குள்ளிருக்கும் ஜீவன்கள் எந்த இனமாகயிருந்தாலும் மற்றயின ஜிவன்களைக்கூட பேணிப்பாதுகாத்து உணவு அளிக்கின்றன. மானுக்கு பசுமாடு பால் ஊட்டுகிறது. கோழி, மயில் குஞ்சுகளை கூட்டிக்கொண்டு இரைதேடுகிறது. சிங்கம், புலி மான்குட்டி, காட்டெருமைக்குட்டி, குரங்குக்குட்டியோடு விளையாடித்திளைக்கின்றன,
ஆனால் ஆறு அறிவு படைத்த தாய் தன்குழந்தையை குப்பைத்தொட்டியில் போடுவாள். தந்தை தன் குழந்தைகளைக்கைவிட்டு இன்னொரு பெண்ணோடு ஓடிவிடுவான். ஏன் இப்படிதோழி?
House Crow snap: Courtesy to my chum N. Radhakrishnan
$ You all knew koel is a Brood-parasitic Bird.

Saturday, December 14, 2013

Habitat Loss


Large grey Babbler          பெரிய சிலம்பன்
(Turdoides malcolmi)
           
         நான் பத்து வருஷங்களுக்கு முன்பு சுற்றிவந்த ஊர்வேலன்காடு வேறு, இப்போது இருக்கும் காடு வேறு. அப்போது முழுவதுமாக தில்லி முட்காடு (Jhand). காட்டை நெருங்க, நெருங்க பெரிய சிலம்பன்களின் கேகே….கேகேஎன்ற ஒலி கேட்கும். இவை அந்தக்காட்டின் வசிப்புப் பறவையினம் (Resident bird). இவை தில்லி முள் மரத்தில் முட்களில் கோப்பை போல, வரண்ட முட்களில் கூடு 8 அடி உயரத்தில் வைக்கும். மிருதுவாக இருக்க நடுவில் கொஞ்சம் காய்ந்த புற்களை வைக்கும். மஞ்சள் மூக்கு சிலம்பன் (Yellow billed Babbler) போல நீல நிறத்தில் முட்டைகளை வைக்கும். அற்பமான தில்லி முட்காடு(!) இடைஇடையே புன்செய் பயிர் நடக்கும். நான் என் கண்களையே நம்பாமல், இங்கு கல்குருவிகளைக்(Indian Coursers) கூடப்பார்த்த நாளுண்டு. வானம்பாடிக்குருவிகள் ( Lark sp.) எனக்கு மேடையில்லாமல் பாடிக்காட்டி, என் கைதட்டலை வாங்கிய காலமது. ஒரு முறை 30 சிலம்பன்கள் ஒன்றாகச்சேர்ந்து, தரைக்கு 4 அடி உயரத்தில் கேகே….கேஎன சப்தித்தவாறு சுழன்று, சுழன்று அரை ஏக்கர் அளவு முழுவதும் சுற்றி, சுற்றி வந்தது இன்றும் என் மனதில் சுழலும் நினைவு. அதைப்பற்றி ஒரு கவிதை 1.1.2000-ல் எழுதினேன்.
ஆஹா அதென்ன கருமேகமா
பறந்து போகும் கம்பளமா
விசிறி வந்த தூசிப்புயலா
துள்ளிக் குதித்த மீன் கூட்டமா
எழுந்து வந்த கடலலையா
ஊர் தாண்டி ஊர்வேலன்காடு
யாருமற்ற அநாதைக்காட்டில்
கெக்கேயேன பெரும் சபதம்
நடந்தவன் துள்ளித்திரும்பினேன்.
கண்கள் கொள்ளாத காட்சி
நினைவில் நீங்கா நீளஅலைகள்
மனதையெடுத்துப் பறந்தோடின.

            தற்போது அவை பிழைக்க வழி தெரியவில்லை. ஏனெனில் ஊர்வேலன்காடு இப்போது Real Estate எனும் பூமி விற்பவர்கள், தில்லி முட்காடுளை கண்ணுக்கு எட்டியதூரம் JCB –எனும் அரக்கன்கள் உதவியோடு அழித்து ஊர்வேலன்காடு காணாமல் போனது. கல் நாட்டி வேலி இட்டு விட்டனர்.பெரிய சிலம்பன்கள் இப்போது இடம் பெயரவேண்டிய கட்டாயம். இவற்றின் கேகே.. ஒலி தற்போது மாலை தேரம் எனது வீட்டருகில் கேட்கிறது. நான் வைத்து, வளர்த்த விதவிதமான மரங்கள் 70 இருக்கையில், பெரிய சிலம்பன்கள் இங்கு தினம் மாலையில் வந்து இரவில் சவண்டால் மரம் மற்றும் வில்வ மரங்களில் அடைகின்றன். (Roosting) அடைவதற்கு முன்பு நான் பராமரிக்கும் அரை ஏக்கர் கோயில் வளாகத்தின் தரையில் இறங்கி, இரை பொறுக்கிய பிறகு 7 பெரிய சிலம்பன்கள் சவண்டால் மரத்தில் தங்கின. மற்றொரு குழு பறந்து போய் வில்வமரங்களில் தங்கின.
பெரிய சிலம்பன்களுக்கு இந்த வாழிடம் (Habitation) அன்னியமானது. இவை முட்காட்டிலும், ஊடே புன்செய் பயிர் இருக்கும் வரண்ட காடே விரும்பும். ஆனால் எனது இல்லமருகு மக்கள் வசிப்பிடம். நல்ல காகங்கள் இவற்றைத் துரத்துகின்றன(mobbing). மேலும் Yellow billed Babblers விரும்பி ஏற்றுக்கொண்டு, பலகாலம் இங்கு வசிக்கின்றன. எனது இல்லத்தின் தேக்கு மரத்தில் கூட இவை கூடு வைத்தது. மஞ்சள் மூக்கு சிலம்பன்களும் ,காகம் போதாது என இவையும், பெரிய சிலம்பன்களை குழுவாக சப்தித்துத் துரத்துகின்றன. ஆக, பெரிய சிலம்பன்கள் பஞ்சம் பிழைக்க வந்த அகதிகள் போல எங்கள் பகுதியில் ஒண்டியிருக்கின்றன.இவற்றோடு சேர்ந்து கிட்டத்தட்ட 20 வகையான பறவையினம் இடம் பெயர்ந்தாக வேண்டிய நிர்பந்தம். வற்றிற்க்குரிய வாழிடம் முட்காடு. பேராசை பிடித்த மனிதன் கபளிகரம் செய்ய, வேறு போக்கிடம் இன்றி, தனது வாழிடம் மரப்பூங்காவாக மாற்றும் பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளது. இவை எங்கு கூடு வைக்கும்? அதிக தூரம் பறந்து செல்ல இவைக்கு திறன் இல்லை. அதிகாலையில் எஞ்சியுள்ள ஊர்வேலன் காடுக்கு  ஒரேதம்மில்பறக்கமுடியாமல் பறந்து செல்லும். எங்கு வேண்டுமானாலும் Real Estate இடலாமா? இதையேன், அரசு வரையறுக்கக்கூடாது? நான் உங்களுடன் பகிர்வது போல ஏகமாக தமிழகத்தில் நடந்தேறுகிறது என்பது மிகையல்ல. மனிதர்களாகிய நாம் தான் மாற வேண்டும். அரசு, அடுத்துவருவதும் தமது ஆட்சியாக இருக்க, என்ன செய்யவேண்டுமோ அதை மட்டும் செய்யும். Am I correct?