Saturday, December 14, 2013

Habitat Loss


Large grey Babbler          பெரிய சிலம்பன்
(Turdoides malcolmi)
           
         நான் பத்து வருஷங்களுக்கு முன்பு சுற்றிவந்த ஊர்வேலன்காடு வேறு, இப்போது இருக்கும் காடு வேறு. அப்போது முழுவதுமாக தில்லி முட்காடு (Jhand). காட்டை நெருங்க, நெருங்க பெரிய சிலம்பன்களின் கேகே….கேகேஎன்ற ஒலி கேட்கும். இவை அந்தக்காட்டின் வசிப்புப் பறவையினம் (Resident bird). இவை தில்லி முள் மரத்தில் முட்களில் கோப்பை போல, வரண்ட முட்களில் கூடு 8 அடி உயரத்தில் வைக்கும். மிருதுவாக இருக்க நடுவில் கொஞ்சம் காய்ந்த புற்களை வைக்கும். மஞ்சள் மூக்கு சிலம்பன் (Yellow billed Babbler) போல நீல நிறத்தில் முட்டைகளை வைக்கும். அற்பமான தில்லி முட்காடு(!) இடைஇடையே புன்செய் பயிர் நடக்கும். நான் என் கண்களையே நம்பாமல், இங்கு கல்குருவிகளைக்(Indian Coursers) கூடப்பார்த்த நாளுண்டு. வானம்பாடிக்குருவிகள் ( Lark sp.) எனக்கு மேடையில்லாமல் பாடிக்காட்டி, என் கைதட்டலை வாங்கிய காலமது. ஒரு முறை 30 சிலம்பன்கள் ஒன்றாகச்சேர்ந்து, தரைக்கு 4 அடி உயரத்தில் கேகே….கேஎன சப்தித்தவாறு சுழன்று, சுழன்று அரை ஏக்கர் அளவு முழுவதும் சுற்றி, சுற்றி வந்தது இன்றும் என் மனதில் சுழலும் நினைவு. அதைப்பற்றி ஒரு கவிதை 1.1.2000-ல் எழுதினேன்.
ஆஹா அதென்ன கருமேகமா
பறந்து போகும் கம்பளமா
விசிறி வந்த தூசிப்புயலா
துள்ளிக் குதித்த மீன் கூட்டமா
எழுந்து வந்த கடலலையா
ஊர் தாண்டி ஊர்வேலன்காடு
யாருமற்ற அநாதைக்காட்டில்
கெக்கேயேன பெரும் சபதம்
நடந்தவன் துள்ளித்திரும்பினேன்.
கண்கள் கொள்ளாத காட்சி
நினைவில் நீங்கா நீளஅலைகள்
மனதையெடுத்துப் பறந்தோடின.

            தற்போது அவை பிழைக்க வழி தெரியவில்லை. ஏனெனில் ஊர்வேலன்காடு இப்போது Real Estate எனும் பூமி விற்பவர்கள், தில்லி முட்காடுளை கண்ணுக்கு எட்டியதூரம் JCB –எனும் அரக்கன்கள் உதவியோடு அழித்து ஊர்வேலன்காடு காணாமல் போனது. கல் நாட்டி வேலி இட்டு விட்டனர்.பெரிய சிலம்பன்கள் இப்போது இடம் பெயரவேண்டிய கட்டாயம். இவற்றின் கேகே.. ஒலி தற்போது மாலை தேரம் எனது வீட்டருகில் கேட்கிறது. நான் வைத்து, வளர்த்த விதவிதமான மரங்கள் 70 இருக்கையில், பெரிய சிலம்பன்கள் இங்கு தினம் மாலையில் வந்து இரவில் சவண்டால் மரம் மற்றும் வில்வ மரங்களில் அடைகின்றன். (Roosting) அடைவதற்கு முன்பு நான் பராமரிக்கும் அரை ஏக்கர் கோயில் வளாகத்தின் தரையில் இறங்கி, இரை பொறுக்கிய பிறகு 7 பெரிய சிலம்பன்கள் சவண்டால் மரத்தில் தங்கின. மற்றொரு குழு பறந்து போய் வில்வமரங்களில் தங்கின.
பெரிய சிலம்பன்களுக்கு இந்த வாழிடம் (Habitation) அன்னியமானது. இவை முட்காட்டிலும், ஊடே புன்செய் பயிர் இருக்கும் வரண்ட காடே விரும்பும். ஆனால் எனது இல்லமருகு மக்கள் வசிப்பிடம். நல்ல காகங்கள் இவற்றைத் துரத்துகின்றன(mobbing). மேலும் Yellow billed Babblers விரும்பி ஏற்றுக்கொண்டு, பலகாலம் இங்கு வசிக்கின்றன. எனது இல்லத்தின் தேக்கு மரத்தில் கூட இவை கூடு வைத்தது. மஞ்சள் மூக்கு சிலம்பன்களும் ,காகம் போதாது என இவையும், பெரிய சிலம்பன்களை குழுவாக சப்தித்துத் துரத்துகின்றன. ஆக, பெரிய சிலம்பன்கள் பஞ்சம் பிழைக்க வந்த அகதிகள் போல எங்கள் பகுதியில் ஒண்டியிருக்கின்றன.இவற்றோடு சேர்ந்து கிட்டத்தட்ட 20 வகையான பறவையினம் இடம் பெயர்ந்தாக வேண்டிய நிர்பந்தம். வற்றிற்க்குரிய வாழிடம் முட்காடு. பேராசை பிடித்த மனிதன் கபளிகரம் செய்ய, வேறு போக்கிடம் இன்றி, தனது வாழிடம் மரப்பூங்காவாக மாற்றும் பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளது. இவை எங்கு கூடு வைக்கும்? அதிக தூரம் பறந்து செல்ல இவைக்கு திறன் இல்லை. அதிகாலையில் எஞ்சியுள்ள ஊர்வேலன் காடுக்கு  ஒரேதம்மில்பறக்கமுடியாமல் பறந்து செல்லும். எங்கு வேண்டுமானாலும் Real Estate இடலாமா? இதையேன், அரசு வரையறுக்கக்கூடாது? நான் உங்களுடன் பகிர்வது போல ஏகமாக தமிழகத்தில் நடந்தேறுகிறது என்பது மிகையல்ல. மனிதர்களாகிய நாம் தான் மாற வேண்டும். அரசு, அடுத்துவருவதும் தமது ஆட்சியாக இருக்க, என்ன செய்யவேண்டுமோ அதை மட்டும் செய்யும். Am I correct?

2 comments:

 1. As far as residential lands, I feel it is time that each micro family consisting of husband and wife with children be given 3-5 cents of land only and certain types of building models which uses native building materials. It is already in force in Singapore. What for one should have more lands and thereby increasing real estate value and destroying the nature?

  ReplyDelete
  Replies
  1. Dear friend,
   People should not posses more than required residential land. Everybody should get space for dwelling. Why people investing their extra money on lands? That is ridiculous.

   Delete