Tuesday, October 16, 2012

வலசைபறவை


சின்ன உப்பு கொத்தி
Lesser Sand Plover
(Charadrius mongolus)


                
இந்த குழுப்பறவைகள் லடாக்,சிக்கிம்-லிருந்து எனது சூலூர் கிராம ராமச்சந்திரா குளத்துக்கு வந்திருக்கிறது எனில் வியப்புத்தான். சின்னஞ்சிறிய பறவைகள் மழை, வெய்யில், புயல் எனப்பாராமல் எத்தனை தொலை கடந்து வந்திருக்கிறது பாருங்கள். வழியில் வல்லூறு, பருந்து துரத்தியிருக்கும். எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள் ஆயிற்றோ! தடத்தில் நண்டு, புழு, மணல் வெட்டுக்கிளி கிடைத்திருக்கலாம். பசியுடனும் பறந்திருக்கலாம். வலசை உயிருக்குத் துணிந்த தேடல்.இவை மற்ற உள்ளான், மோதிரக்கோழிகளோடு குளக்கரையோரம் துறுதுறுவென இரை தேடியது கண்டு நானும் நண்பர் விஜயகுமாரும் கண்இமைக்காமல் ரசித்தோம். இதன் தலையும், அலகும், கால்களும் மற்றும் இரை தேடல் விதமும் இன்ன இனம் என தெரியப்படுத்துகிறது.

வலசைபறவை


வலசை(Migration)
கொசு உள்ளான்
Little Stint
(Calidris minuta)

Little Stint
ஐரோப்பா மற்றும் சைபிரியாவிலிருந்து கோவை, சூலூருக்கு வருகை புரிந்த  கொசு உள்ளான் குழுவே வருக! சனிக்கிழமை 13.10.2012 அன்று அதிகாலை நானும் நண்பர் விஜயகுமாரும் ராமச்சந்திரா குளத்தில் வரவேற்றோம். சிங்கைக்குளத்தில் முன்பே பார்த்தேன். ஆனால் வரவேற்புக்கு தொலைவில் குழு இருந்தன. நிழற்ப்படத்துக்கு நிற்கவுமில்லை. இத்தனை சிறியவர்கள் எப்படித்தான் ஐயாயிரம் மைல்களுக்கு மேல் பறந்து வருகிறார்களோ! வலசை ஒரு புதிர். நீர்கரை ஓரங்களில் நடந்தும், ஓடியும், நத்தை, நீர்ப்பூச்சி, சங்குப்பூச்சி உண்ணும். குழு நீர் பரப்பின் மீது துரிதமாகவும், நெருக்கமாகவும், வளைந்து, ஒன்றுசேர்ந்து திரும்பிப்பறக்கையில் சூரியஒளியில் சின்னப்பறவைகளின் அடிப்பாகம் பளீரிடும்,அழகைச்சொல்ல வார்தைகள் இல்லை. ரஷ்யாவில் 9.8.77ல் காலில் வளையமிட்டது தமிழ்நாடு கோடியக்கரைக்கரையில் 25.8.90 அன்று காணக்கிடைத்தது.  

Thursday, October 11, 2012

பிற உயிரினம்


பழம் திண்ணி வொளவால்
(Flying Fox)


 வொளவால், பறவை இனம் என்று நினைப்பவர் உண்டு. இது பாலூட்டி இனம். இவைகளை கோவை சிதம்பரம் பூங்காவில் பார்க்கலாம். பல வருடங்களுக்கு முன்பு, அலுவலகம் விட்டு மாலைநேரமானால் பூங்காவுக்கு சென்று விடுவேன்.வொளவால்களின் சேட்டைகளைப்பார்த்துக்கொண்டேயிருப்பேன். வேறு கவனம் எங்கும் சிதறாது. இதற்கு பதஞ்சலி அட்டாங்க யோகாவில் தாரணா என்று பெயர். இவை பகல் பொழுது முழுதும் பெரிய உயர்ந்த மரங்களில் தலைகீழாகத்தொங்கிக்கொண்டு தூங்கும். மாலை மயங்கியதும் இவை மேற்கு, தெற்கு திசைகளில் பறந்து செல்லும். திகில் சினிமாவில் பாழடைந்த கோட்டை, இரவும் பகலும் சந்திக்கும் வேளையில் வொளவால்கள் பறந்து போவது போல போகும். செவ்வானம் கருத்துக்கொண்டு வர,வர வொளவால்கள் உயர சற்று சாய்ந்த கோணத்தில் பக்கவாட்டில் பறந்து போவது பார்க்க எனக்கு ரம்மியமாகத்தெரியும்.இவை பழங்கள் மட்டுமே உண்ணும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பழமரங்கள் இருப்பதால் அதை நோக்கிப்போகின்றன. இது பெரியது. முகம் நரி போல இருப்பதால் இதற்கு  Flying Fox  எனப்பெயர். வருஷத்தில் ஒரு குட்டி ஈன்று மரத்தில் தலை கீழாகத்தொங்கியவாறு பாலூட்டும். இவை அல்ட்ராசானிக் ஒலியைப்பயன்படுத்தாது. பகலிலும் இரவிலும் பார்வை தெரியும். நீர் நிலைகளில் நீர் குடிக்கும். இதன் வாழிடச்சூழலை சீரழிக்கும் விததில் வயதான பெரிய மரங்களை வெட்டுவது, இவைகளை அடித்து திண்ணுவது போன்ற செயல்களை மனிதன் நிறுத்திக்கொள்ளவேண்டும். நிழற்படம்; நண்பர் சிவப்பிரஷாத்.

Monday, October 8, 2012

பறவை அறிமுகம்


அன்றில் பறவை
Black Ibis (Pseudibis papillosa)

தண்மதிக் கண்ணியி னானைத் தையல்நல் லாளோடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றி* லொ டாடி வைகி வருவன கண்டேன்
     கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
                                   திருவாரூர் பதிகம்அப்பர் தேவாரம். 4-ம் திருமுறை
                                                  
பகன்றி எனில் அன்றில் Black Ibis (Pseudibis papillosa) பறவை. 5-ம் நூற்றாண்டிலேயே அப்பர் தொலை நோக்கி இல்லாமல் பல பறவைகளை தேவாரத்தில் பதிவு செய்துள்ளார். இப்பறவைகள் ஆணும் பெண்ணுமாக புன்செய் நிலங்களில் இரை தேடும்.  மாலை நேரங்களில் நீர் அருந்த நீர் நிலை நாடிச்செல்லும். உயர்ந்த பனை,தென்னை மரங்களில் தங்கும். இணையில் ஒன்று மரித்தால் மற்றது உயிர் வாழாது. அதனால் இலக்கியவாதிகளுக்கு இதன் மேல் காதல்.  உயர்ந்த மரத்தில் பெரிய மேடை  போல குச்சிகளை வைத்து கூடு கட்டும். வரண்ட புல்வெளி, தரிசு நிலங்களில் இரை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கும். நான் இப்பறவைகளை கூந்தகுளத்தில்  பார்த்து  ரசித்துள்ளேன்.

Saturday, October 6, 2012

பறவை அறிமுகம்


                                                       female
top
male


குயில்-கோகிலம்
Koel (Eudynamys scolopacea)
குயில் கூவல் இனிமையாக இருக்கும். உங்கள் வீட்டைச்சுற்றி மரங்களிருந்தால்,அதிகாலையில் இந்த தேன் பாடல் உங்களை எழுப்பி விடும். பல கவிஞர்கள் குயில் போல அவள் பாடினாள் என கவிதை எழுதுவார்கள். ஆனால் ஆண் குயிலுக்கு மட்டுமே இனிமை குரல் இறைவன் அமைத்துள்ளார். பெண் குயிலுக்கு இனிமை சாரீரம் இல்லை. குயில் மறைந்து வாழ்வதால் நிறையப்பேர் அதைப் பார்த்துக்கூட இருக்க மாட்டார்கள். இதோ! புகைப்படத்தில் ஆண்-பெண் பறவைகள். இப்பறவைகள் வெளியில் தலை காட்டினால் காகம் துரத்தித்துரத்தி அடிக்கும். காரணமிருக்கு!  குயில் கூடு கட்டாது, தன் முட்டைகளை காகம் கூட்டில், காகம் இல்லாத போது வைத்து விடும். காகம் மற்றும் குயிலின் முட்டை ஒரே மாதிரி வெளிர் நீலநிறம். குயில் ஒன்றிரண்டு காகத்தின் முட்டைகளைக்கூடக்கூட்டிலிருந்து தள்ளி விட்டு விடும். காகம் குள்ளநரித்தனதானது, ஆனால் குயிலிடம் ஏமாற்றப்படுவது இயற்கையின் நியதி. அப்பாவி காகம் குயில் முட்டையை அடைகாத்து பொரித்து, ஆளாக்கும். நிறம், குரல் காட்டிக்கொடுக்க இளைய குயிலை காகம் விரட்டி விடும். காகத்துக்கு குயிலிடம் ஏமாறுவதும், அதை ஜன்ம விரோதியாகத்துரத்துவதும் வாடிக்கை. குயில் யாவர் வாயிலும் சொல்லப்படுவது, ஆனால் அதைப்பற்றித்தெரிந்து கொள்ள யார் நினைக்கிறார்கள்? இதற்கு கோகிலம் என்ற அழகான பெயரும் உண்டு. குயிலைப்பற்றி பாடாத பக்தி-சங்க இலக்கியங்கள் இல்லை. பாடாத கவிஞனில்லை. என் இல்லத்தோட்டத்து ப்ப்பாளி, மா, கருவேப்பிலைப் பழங்கள் சாப்பிடவரும். பூச்சிகளும் உண்ணும். காகம் குயிலைத்துரத்துவதை எனது வளர்ப்பு மரங்களிடையே தினசரி பார்க்கலாம்.

இதோ! தேவாரத்திலிருந்து இரண்டு வரிகளைச்சுவையுங்கள்.

குன்றெலாம் குயில் கூவக் கொழும்பிரச மலர்
                பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும்
                திருவையாறே.                                                     திருஞானசம்பந்தர்Thursday, October 4, 2012


ஆலா
Gull-Billed Tern
(Gelochelidon nilotica)

கோவை சிங்கை மற்றும் சுலூர் குளத்தில் ஆலாவை இந்த வலசைப்பருவத்தில் பார்த்தேன். சுலூர் குளத்தில் ஆலாவை நெருக்கத்தில் நிழற்ப்படம் எடுக்கமுடிந்தது. இது பருத்த அலகு ஆலா. மேற்கு வங்கம், பாங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வலசை வந்தது. காகத்தின் பரிமாணம். நிறம் வெள்ளையும் சாம்பலும் கலந்தது.தலை கருப்பு. கடற்காகம் (Gull) போல பருத்த அலகு. இதன் கால்களும், பருத்த அலகும் கருப்பு. குளிர் பருவத்தில் கண்ணைச்சுற்றி கருப்பு திட்டு. தனியாக அல்லது சிறு குழுவாக நீர் மேல் பறந்து, திடீரென நீர்ப்பரப்பில் பாய்ந்து நீர்ப்பூச்சி/ நண்டு பிடிக்கும்.  கடற்கரைப்பறவையானாலும் உள்நாட்டு நீர்நிலைகளுக்கும் வலசையின் போது வருவதுண்டு.