Monday, December 31, 2012


பறவை அறிமுகம்


Indian Great Horned Owl (Bubo bubo)
கொம்பன் ஆந்தை


            

           பார்த்தாலே பயம் கொள்ள வைக்கும் கொம்பன் ஆந்தையை முதன் முதலில் சென்னை நன்மங்கலம் ரிசர்வ் முட் காட்டில் சில வருஷங்களுக்கு முன்பு பார்த்தேன்.அதுவும் ஒற்றையாக ஒரு கல் குவாரியில் பார்த்தேன். தற்போது சூலூர் ஊர்வேலங்காடு கல் குவாரியில் இரட்டையாகப்பார்த்தேன். ஆண், பெண்ணுக்கு வித்தியாசம் தெரியாது. பூபோ என அலறல் குரல் எழுப்பியும், கண்கள் உருட்டியும் பார்த்து பயத்தை ஏற்படுத்தும். இது பகல் முழுக்க கல் குவாரியில் ஓய்வு கொண்டு, இரவில் எலி, முயல், பறவை, ஓணான் போன்றவற்றை வேட்டையாடும். முதலில் பார்த்த போது அது தொந்தரவுக்கு உள்ளாகி குவாரியின் மறுபக்கம் பறக்க நான் கழுகு இனம் என நினைத்தேன். இரண்டடி உயரம் இருக்கும். பறந்து சென்று உட்கார்ந்த இடம் தெரியவில்லை. குத்து மதிப்பாக ஒரு குவாரி பாகத்தினை படம் எடுத்து வந்து கணனியில், உருப்பெருக்கி பார்த்த போது கொம்பன் ஆந்தை எனத் தெரிந்தது. இது காலையில் நிகழ்ந்தது. உடனே மதியம் 3 மணிக்கு மேல் சென்று புகைப்படம் எடுத்து வந்தேன். இரண்டு ஆந்தைகளைப்பார்த்து ரவசம் கொண்டேன். ஆந்தை என்றாலே நம்மை வசிகரிக்கக் கூடிய பறவை. அதைப்பற்றிய கட்டுக்கதைகள் உண்டு. பார்த்தால், அதன் குரல் கேட்டால் நல்லது இல்லை என்பது அபத்தம். யாராவது கோவைவாசிகள் கொம்பன் ஆந்தையை பார்க்க ஆவல் இருப்பின் என் கைபேசி எண்; 98421 06430 தொடர்பு கொள்ளவும். அழைத்துச்செல்கிறேன்.

Monday, December 24, 2012   பறவை குணாதிசயம்


 பாம்புத்தாரா
Snake Bird or Darter
(Anhinga melanogaster)                 


        


பாம்புத்தாரா நீர்மூழ்கிக் கப்பலைப் போல நீருக்குள் நீந்தி மீனைப்பிடிக்கும். பிடித்துவிட்டால் நீர் பரப்புக்கு வந்து பல சமயம் மீனை இரண்டடி உயரத்துக்கு தன் தலைக்கு மேலே விசிறி விடும். மீனின் தலை பாகம் கீழ்நோக்கி வருமாறு பார்த்துக்கொள்ளும். அப்போது தான் மீனை விழுங்குவதற்கு எளிதாக இருக்கும். அலகிலிருந்து நழுவி விடாது. பொதுவாகவே கொக்கு, நாரை, மீன்கொத்தி, நீர்காகம் போன்ற மீன் உண்ணும் பறவைகள் அலகுக்குள் முதலில் மீனின் தலையைத்தான் செலுத்தும். பாம்புத்தாரா மீனை இரண்டடி உயரத்துக்கு தன் தலைக்கு மேலே விசிறி விடும் காட்சியை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம்.அதனால் நான் எழுதிய Diary on the nesting behavior of Indian Birds- நூலில் பாம்புத்தாராவின் இந்த வியக்கத்தக்க குணாதிசயத்தை நானே சித்திரம் வரைந்து வெளியிட்டேன். தற்போது தான் அதிஷ்டகரமாக இந்த புகைப்படம் கோவை பள்ளபாளையம் குளத்தில் கிடைத்தது. பறவை அன்பர்களே! சித்திரங்களையும், புகைப்படத்தையும் பார்த்து ரசியுங்கள். இதை விட நல்ல படம் எடுக்க முடிந்தால் எனக்கு sukubird@yahoo.comக்கு மெயில் செய்யவும்.

Thursday, December 20, 2012பூச்சிகள் ராஜ்ஜியம்


 கட்டெறும்பும் அதன் பசுமாடும்
Ant and its Cowbug

 புகைப்படத்தில் பசு பூச்சி மெர்ன்பிரேசிட் (Cowbug Mernbracid) என்ற டெலங்கானா (Telengana) பறக்கும் பூச்சியை சீமகருவேல் மரத்தில்(Acacia) பார்க்கிறீர்கள். இந்தக் கட்டெறும்பு அதை என்ன செய்து கொண்டிருக்கிறது?  பசு பூச்சியிடமிருந்து பால் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. எறும்புகளில் சில பூஞ்சை, சில எறும்பு, இலை, தாவரம், மற்றும் சில, பூச்சி உண்ணும். கூட்டைக்கலைத்தால் கடியுடன் ஃபார்மிக் அமிலத்தை உமிழ்ந்து கடித்த இடத்தில் எரிச்சலை உண்டாக்கும். குழு வாழ்க்கை ஸ்வராஸ்யம் நிரம்பியது. பசு பூச்சிகள் இலை, தண்டுகளில் உறிஞ்சும் தாவரரசமே எறும்புகளுக்கு இனிப்பு ரசமாகிறது. நாம் வீட்டில் கொல்லைப்புறத்தில் பசு மாட்டைக்கட்டி வைத்துக்கறப்பது போல் எறும்புகள் அவ்வப்போது தன் இலைக்கூட்டுக்கு பசு பூச்சியை இழுத்து வந்து இனிப்பு திரவத்தை உறிஞ்சும். இயற்கையில் ஆச்சர்யங்கள் நிறைய உள, எனவே இயற்கையை பேணிப்பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை, அதை சீரழிக்காதீர்கள். இயற்கையை அளவோடு நுகர்ந்தால் மகிழ்வோடு வாழலாம்.

Monday, December 17, 2012


பறவை அறிமுகம்

கதிர் குருவிகள்
(Warblers)

Paddy Field Warbler


கதிர் குருவிகள் குருவி அளவில் சிறியதாக இருக்கும். புதர்களில் மறைந்தும், சற்றே வெளிப்பட்டும் ஒரு இடத்தில் நில்லாது இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். இருபது வகைகள் இருக்கும். இவைகளை இனம் காண்பது பரம கஷ்டம். புகைப்படத்துக்கு சிக்காது. கதிர்குருவி வழக்கமாக வரும் புதர் அருகில் மறைவாக பொருமையாகக்காத்திருந்தால் புகைப்படத்துக்கும் மாட்டும், அடையாளமும் கிடைக்கும். இவற்றின் வாழிடம் மற்றும் குணாதிசயங்களை வைத்து இனம் கண்டு பிடிக்கலாம். மேலும் பொதுவாக நிறம், பரிமாணம், கண்புருவம், வால் அமைப்பு, தனித்து, அல்லது ஜோடி என்பன வைத்து இனம் கண்டு பிடிக்கலாம். முதலில் பறவை கண்காணிப்புக்கு, தொலைநோக்கி தான் பிரதானம். ஒரு புதுப்பறவையை இனம் கண்டு, சலிம் அலி நூலில் அது பற்றி மேலும் விபரங்கள் படிக்கும் போது பரவசம் கொள்கிறோம். அன்று இரவு தலையணையில் முகம் புதைக்கும் போது கூட பறவையும், அதன் நளினஅசைவும், அழகும் நினைவில் ததும்பி வழிகிறது. பல நாட்களுக்கு மனதில் நினைவு மணக்கிறது. அது போல வயல்வெளி கதிர்குருவி (Paddy Field Warbler) என்னை பரசத்தில் மூழ்கடித்தது.

Sunday, December 16, 2012


பூச்சிகளின் ராஜ்ஜியம்

Caterpillar of psychid moth
(Clania crameri)

            பூச்சிகளின் ராஜ்ஜியம் மிக ஸ்வராஸ்யமானது. அவை 30000 வகை வரை நீளும். உங்கள் வீட்டைச்சுற்றி பார்த்தாலே போதும். பல பூச்சிகள் கண்ணில் படும். பூச்சி, புழுக்கள் இருந்தால் தான் உலகம் சரிவர இருக்கும். அவைகளைப்பார்த்து அருவருப்பு படாதீர். எனது வீட்டின் வெளி மாடிப்படிக்கட்டுக்குக்கீழ்புறம் ஸ்விட்ச் பெட்டிக்கடியில் எடுத்த புகைப்படமிது. இது ஒரு புழு. தன்னைச்சுற்றிலும் சின்ன, சின்ன குச்சிகளை சிலந்தி நூலைப்போல சுரந்து, வட்டமாக இணைத்துக்கொள்கிறது. இது புழுவுக்கு பாதுகாப்பைத் தருகிறது. புழு உட்புறம் வாழ்ந்து, எங்கு போனாலும் இந்த குச்சிக்கூட்டுடன் நகர்கிறது. உண்ணும் போது மட்டும் தலையை வெளியே நீட்டுகிறது. ஆரம்பத்தில் சின்ன முள் மரம், மற்றும் படத்தில் காண்பது போலத்தொங்கும். ஆனால் என் வீட்டு சைச்சிட் மாத் புழு ஏனோ இறந்து மூன்று மாதமாக அப்படியே தொங்கிக்கொண்டிருக்கிறது. நீங்களும் வீட்டைச்சுற்றி கவனியுங்கள். இயற்கையின் வினோதங்களை கண்டு பிடித்து பரவசம் கொள்ளுங்கள்.

Thursday, December 6, 2012


பறவைகள் இணையைக் கவர செய்யும் யுக்திகள்

                               வீட்டுக்கொல்லைப்புறத்தில் கண்ட காட்சிபறவைகளில் ஆணினம் தன் காதலியை கவர பல யுக்திகளைக் கையாழும். காதலிக்கு இரை ஊட்டி விடும். அவள் முன்னே நாட்டியமாடும். குட்டிக்கரணம் அடித்துக்காட்டும். தன் இறகு வண்ணத்தைக்காட்டும்,கானம் பாடும், அழகிய கூடு கட்டி இணைக்கு காட்டும், தலை, கழுத்து அலகால் வருடி விடும்,ஓடிப்பிடித்து விளையாடும், காதல் சில்மிஷங்கள் பறவைகளிலும் உண்டு. கிளிகள் ஒருபடி மேலே போய் இணை இருக்குமிடம் மெதுவாக நகர்ந்து போய் உரசும், கண்களை உருட்டிக்காட்டும், விசிலடித்துக்கூப்பிடும், அருகில் வந்தால்  முத்தமிடும்.நம்மைப்போல், திரைப்படத்தில் வரும் கதா நாயகன், கதா நாயகி போல் எல்லா காதல் விளையாட்டுக்களும் பறவை சாம்ராஜ்ஜியத்திலும் உண்டு. இதை ஆங்கிலத்தில்  courtship என்பார்கள். ஒவ்வொரு இனப்பறவையும் ஒவ்வொரு விதமாக இணையைக்கவர யுக்திகளை கைவசம் வைத்திருக்கிறது. இந்த அந்தரங்க பறவை காதலை 51 இனப்பறவைகளில் நேர்பட கண்டு, ரசித்ததை Diary on the nesting behavior of Indian Birds- என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபரம் அறிய www.nestingbook.webs.com- தளத்திற்கு விஜயம் செய்யலாமே.

மீன் பிடிப்பு                     
ஏரி, குளங்கள் மாசுபாடு
                                     கண்ணம்பாளையம் குளத்தில் செத்து மிதக்கும் cat fish


நமது ஏரி, குளங்களின் அவலம் சொல்லி மாளாது. நீர் வணங்கக்கூடியது. ஆடிபண்டிகையில், மலர்களை நீர் பரப்பில் தூவி வழிபாடு நடத்துகிறோம். ஆனால் குளங்களில் வேதியல் சாயம் பூசிய வினாயகரைக்கரைப்பது, சடங்குகள் செய்து முடித்த பொருட்களை சேர்ப்பது, கட்டிடக்கழிவுகளைக்கொட்டுவது, சாக்கடை நீரை கலப்பது, சாயக்கழிவை விடுவது, மலஜலம் கழிப்பது,மருத்துவக்கழிவு கொட்டுவது என எல்லாவிதத்திலும் மாசுபடுத்தி விடுவது நடந்து கொண்டே இருக்கிறது. நீர் நிலை தான் நிலத்தடி நீர், மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரம். பஸ் டிப்போ, பஸ் ஸ்டேண்ட், பவர் ஹவுஸ், குடிசைகள் அரசு, தனியார் என ஆக்கிரமிப்பு. தூர் வாறுவது கிடையாது. சாக்கடை நீரில் ஆகாசத்தாமரை சத்தாக வளரும். இத்தனை மாசுபாட்டிலும் வருடம் முழுக்க மீன் பிடிப்பு. இந்த விஷமேறிய மீன்களும் வியாபாரம் செய்யப்படுகின்றன. மக்களும் மசாலா மயக்கத்தில் உண்ணுகிறார்கள். இதை சுகாதரத்துறை கண்டு கொள்வதில்லை. குளங்கள் விஷமேறிக்கொண்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அசட்டை செய்கிறது. PWD – யிடமிருந்து நகரக்குளங்களைப் பொறுப்பேற்ற மாநகராட்சி கையைக்கட்டிக்கொண்டு வாலா இருப்பது என்பதெல்லாம் எதைக்குறிக்கிறது? அரசு நிர்வாகங்கள் செயல் படுவதில்லை, எனக்காட்டுகிறது. இருகூர் குளத்தை, இருகூர் பஞ்சாயத்து சாக்கடை குளமாக்கியது, அவர்கள் சாதனை. அங்கிருந்து நுரைத்து பொங்கிப்போகும் சாக்கடை நீர், ஆச்சான் குளம் செல்கிறது. சூழல் ஆர்வலர் கரடியாகக்கத்தியும் பயனில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் இருகூர் குளம் மாதிரி அனைத்து நகரக் குளங்களும் சாக்கடைக் குளங்களாகும்.எந்தஉயிரினமும் விஷச்சாக்கடை குளங்களில் வாழாது. மக்கள் பயன்படுத்தும் கிணறுகளின் நீர் மஞ்சலாகி பயன்படுத்த முடியாத விஷ நீராகும். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.