Saturday, October 25, 2014

மழையில் பயணம்


Dorai bhaskaran watches Birds at scrub land of Balaji, Palladam Puliampatti
Balaji P. Balachandaran and Me at scrub land

Beauty of Puliampatti village


மழையில் பயணம்
மழை எனக்குப்பிடித்தமானது. ஒவ்வொரு மழைத்துளியும் பூக்களாக என் மீதும், நண்பர் துரை பாஸ்கர் மீதும் சொரிய ஒரு ஆனந்தப் பயணம், அதுவும் ஸ்கூட்டரில்…… வானிலை அறிவிப்பு கணத்த மழை பெய்யும் என்று சொல்லியும், பயணம் மேற்கொண்ட தூரம் 60 கி.மீ இருக்கும். நண்பர் பாலாஜியின் வெல் வேலமரக் காட்டில் வரும் பறவைகளைக்காண மழையோடு மழையாக சாலையில் வழுக்கினோம். நகரத்தை விட கிராமம் அழகானது. இந்த வருஷப் பருவமழை எதிர் பாரா சந்தோஷத்தைக்கொண்டு வந்த விதம் அருமை. சென்றபாதை இருமருங்கிலும், பச்சைக் கம்பளம் போர்த்தியது போல பயிர்கள். இலக்கு பல்லடம் புளியம்பட்டி. பாதையெங்கிலும் மழையின் ஈரம், குளிர்வான காற்று, முகத்தில் வீழும் மழைப்பூக்கள். ஓ! மக்கள் மழையைக்கண்டு ஏன் பயந்து சாலையோரத்தேநீர்க்கடையில் ஒதுங்குகிறார்கள்! கரிய மேகப்போர்வைகள் எமக்குப்பொன்னாடை. எனக்காகவே எதிரில் யாருமற்ற சாலை. சில இடங்களில் செந்நீர் சேகாரமாகிய குட்டைகள். அதில் இரு முக்குளிப்பான்கள் நீந்தி, நனையும் போது நானும் நனைவதில் ஆனந்தம் தான்.
பாலாஜி சுடச்சுட தேனீர் தந்து விருந்தோம்பலைத் தொடங்கினார். குளிரில் நமத்த தீக்குச்சிகள் போலிருந்த விரல்கள், சூடேறும் விதமாக தேநீர் சுவைத்தோம். அத்தோடு பாலாஜியின் நூல் தொகுப்பு பிரமிப்பை வரவழைத்தது. அத்துனையும் பறவை பற்றிய அரிதான நூல்கள். இந்த அளவுக்கு பறவை நூல் தொகுப்பு கன்னிமாரா நூலகத்தில் கூட இல்லை என்றே சொல்வேன். நான்”Diary on the nesting behavior of Indian Birds” நூல் எழுத ரெஃப்ரன்ஸ் நூல்களுக்கு கன்னிமாரா நூலகத்தின் அலமாரிகளில் தேடியும், கன்னிமாரா கணனியில் தேடியும், கிடைக்காத நூல்கள் கூட இருந்தன. 200 வருஷத்திய பழமையான Douglas Devar. Stuart Baker நூல்கள் கூட அரும்பாடு பட்டு சேகரித்துள்ளார். இவர் ஒரு வித்தியாசமான நண்பர். எனக்குப் பரிட்சயமானதில், பெரும் மகிழ்வு கொள்கிறேன். அதுவும் வாசிப்புப்பழக்கமற்ற நண்பர்கள் தான் எனக்கு மிகை. எல்லாருமே காட்சியாளர்கள்(Viewers). நூல் வாசித்து கருத்துகளை பரிமாறிக்கொள்ள கிடைத்த வெகு சிலரில் இவர் கிடைத்தற்கரிய புதையல். அவரின் நூல் புதையலைப்போல என எடுத்துக்கொள்ளலாமே! வாசிப்புப் பழக்கமற்ற நண்பரிடம் நூல் விருந்தை எப்படிப்பரிமாறிக்கொள்வது?
மதிய நேரம் மழை,  சினிமாவில் இடைவேளை விடுவது போல விட்டதும், பாலாஜியின் 15 ஏக்கர் முட்காடுக்கு பயணித்தோம். வெல்வேல மரங்கள் அதுவும் லைக்கென்ஸ் படர்ந்த மாசற்ற முள் மரங்கள் எங்களை வரவேற்றன. உயர்ந்து நின்ற காற்றாடிகள் அழகூட்டின. வாலடி சிகப்பு கொண்டைக்குருவிகள், வெளிநாட்டு தாம்பாடிகள், உமாபட்சி(f), வெண்தலை சிலம்பன்கள், செண்பகம், மாட்டுக்கொக்கு, பெரிய சாம்பல் சிலம்பன்கள், கொண்டலாத்தி, கரிச்சான், செங்கண்ணி, குயில், புதர்க்குருவிகள், பச்சைக்கிளிகள், ஊதா தேன் சிட்டு என முட்காட்டினைக்கூட இறைவன் அழங்கரித்தார். நூற்றுக்கணக்கில் தாம்பாடிகள் மின்ஒயரில் மாநாடு நடத்தியது கண்ணைக்கவர்ந்தது. மாடுகளோடு தோழனாய்ச்சென்ற கொக்குகள், மேய்ச்சலில் இருந்த ஆடுகள் என, இயற்கைத் தோழமையோடு இருக்கும் போது காலம் அற்றுப்போவது விந்தை. ஈரமான உள்ளத்தில் அன்பு மலர்வது போல, ஈரமான மண்ணில் எதுவும் முளைவிட்டு நமக்குத்தரும்.
கிராமிய அழகு, அழகு தான். வெள்ளந்தியான சிறிதளவே தேவை கொண்ட எளிய மக்கள், எளிமையான வீடுகள், பெரிய நிழல் மரங்கள், பலதலைமுறைகண்ட கோயில், கண்மாய், குறுகிய வீதிகள் தரும் நிம்மதி, அனுபவித்தால் தான் தெரியும். நகரத்தின் வானளாவிய ஃப்ளேட்கள் உங்களுக்கு பிடிக்கிறதா என்ன? பாலாஜியின்மனைவி, விருந்தோம்பலில் மூன்று வகைப் பொரியல்களோடு பரிமாறியது உண்மையில் மாறுபட்ட சுவை கூட்டின. திருவள்ளுவரின் விருந்தோம்பல் குறலான கீழே தருவது என் நினைவுக்கு வந்தது,
‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு’-         திருவள்ளுவர்
பாலாஜியின் தந்தை எங்களுடன் அரைமணிப்பொழுது விருந்துண்டபிறகு அளவளாவிக்கொண்டிருந்தார். மைய ஆசாரம் பழமை மாறாமல் புதுப்பித்து வைத்திருந்தது மனதைக்கவர்ந்த ஒன்று. பாலாஜியின் முட்காட்டில் 60 வகையான பறவைகள் வந்ததை பட்டியலிலிட்டு, வைத்துள்ளார். மாலையில்  அந்தவெல்வேல முட்காட்டில் பறவைகள் அதிகம் வரவும். தங்கவும் செய்யுமென பாலாஜி சொல்ல, மாலை நேரம் ஒரு நாள் மழைவிட்ட பிறகு மஞ்சள் வெய்யிலில் வருவேன் என்றேன்.

            விடைபெற்று, மீண்டும் மழையோடு மழையாக ஸ்கூட்டரில் நண்ரும், நானும் மழைக்கோடுகள் நிழற்படத்தை சட்டமிட்டது போல மீண்டும் 30 கி.மீ பயணத்தை சந்தோஷம் குமிழிட அனுபவித்தோம்.

Friday, October 17, 2014

பெருமாள் மலை வனவலம்- Trekking ( 4.10.2014-சனிக்கிழமை)


Rough sketch map prepared by Guna

vellaipparai-  standing middle Dr.Gunasekaran,& Mohan prasadh: (sitting) Dinesh

            பெருமாள் மலை படு உயராமனதும், வெள்ளியங்கிரி மலையைப் போலவே பராக்கிரமம் வாய்ந்தது. இதன் ரகஷ்யங்கள் தெரியாமல் ஏறப்போக படு சிரமத்துக்கு ஆளானோம். இந்த கரடு முரடான மலை மீது ஏற புரட்டாசி சனிக்கிழமைகளில் காட்டு இலாக்கா அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் மூன்றாவது சனிக்கிழமை சென்றோம். ஏழு பேர் சென்றதில் ஒரே ஒரு நண்பர் வீரர் குணசேகரன் மட்டுமே மலை முகட்டை தொட முடிந்தது. இந்த பராக்கிமமலையை தெற்கிலிருந்து தேவராயபுரம் வழியாக நாங்கள் அணுகினோம். விராலியூர்காரர்கள் தென்மேற்கு திசையிலிருந்து வருவார்கள். கேரளத்திலிருந்து, வெள்ளக்குளம் கிராமத்தினர் மேற்கிலிருந்து வருவார்கள். வடக்குப்புறமாக அணுகக்கூடியவர்கள் தூமனூர் காரர்கள். (Please refer attached sketch map given by Dr. Gunasekaran- not for scale) வடக்கில் செம்பக்கரை வழி வந்தால் யானை துரத்தும். ஆயுள் கெட்டியாகஇருந்தால் தப்பிக்கலாம்.
            வடக்கில் Slim Ali Centre for ornithology and natural science (SACON) உள்ளது. நான் இங்கிருந்து இரண்டொரு முறை பறவை நோக்கலில் தூமனூர் சென்றிருக்கிறேன். அடிவாரப்பெருமாள் கோயிலில் இருந்து தீபம் காட்டினால் முகடுப்பெருமாள் கோயிலுக்குத்தெரியும். முன்னோர் திறமையைப்பார்த்துமெய்சிலிர்க்கிறேன். இச்சிக்குழி என்ற காட்டு ஓடை வழியாக அடிவாரப் பெருமாளை தரிசித்து விட்டு மலையெறலாம் வாருங்கள். முதலில் எங்களை தடுமாற வைத்தது அப்போது தான் அங்கிருந்து சென்ற ஒரு ஜோடி யானையும் அதன் குட்டியும்; குட்டியோடு இருப்பின் தாய் யானையும், தகப்பன் யானையும் கோபம் கொள்ளும். வழி மாற்றி நடந்தோம். காட்டுப்பன்றிகள் கிழங்கு சாப்பிட நிறைய இடங்களில் மண்ணைப்பறித்திருந்தன.

            விலாவாரியாக இப்போது எழுத மாட்டேன். அதை எனது எட்டாவது நூலாக,சந்தியாப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடயிருக்கும் மலைமுகடு (Trekking) எனும் நூலில் படித்து வியப்படையுங்கள்.  முதலில் எங்களை சிராய்த்தது முட்காடு(scrub jungle). நடந்தோம். மலைமேல் நீர் ஓடை ஒன்றுமே இல்லாதது வியப்புத்தான். அதனால் நா வரட்சி. பிறகு சைக்கஸ் (Cycus)நிறைய காணமுடிந்தது. இவை அறுகி வரும் தாவரம். வெளியில் இனப்பெருக்கம் நிகழ்த்தும் தாவரம். வெள்ளைப்பாறை வந்ததும் தண்டபாணி திரும்பினார். அதற்கு முன்னமே பிரகாஷ், சந்தோஷ் கழன்று கொண்டனர். வெள்ளைப்பாறைக்கு இடது பக்கம் சோத்தாபாளையம் வெகுசிறு கோயில். பிறகு வரண்ட இலையுதிர் காடு (Dry deciduous forest)தென்படுகிறது. வழி,மழை பெய்தால் இறங்கிவரும் சிற்றோடைகள் தாம். வழியெங்கிலும் யானைச்சாணம். நிறைய வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்தன. ஈரமான இலையுதில் காடு(Moist deciduous forest) ஆரம்பத்திலேயே இடி மின்னலுடன் மழை வெழுத்துக்கட்ட, எண்பது விழுக்காடு நடந்த நானும் மோகனும் திரும்பினோம். பிறகு தினேஷ் அரைமணிக்குப்பின்பு திரும்பினார். நான் நடந்த நேரம் ஆறரை மணிப்பொழுது.இலையுதிர் காட்டில் நான்கடிக்குப்புல்வெளி பரந்து கிடக்கிறது. குணா நடந்த நேரம் பதினோரு மணிப்பொழுது. கடைசி மலை படு பிரயத்னப்பட்டு ஏறிய நண்பர் குணா, மனைவி தொடுத்த துளசி மாலையை உச்சிப்பெருமாளுக்கு சாத்தி, வழிபட்டார் எங்களுக்காகவும், அவர் குடும்பத்துக்காகவும்……….

Wednesday, October 1, 2014


சுறுட்டைப்பள்ளி    ---          ஒரு பயணம்                                          

                    பயண சுகம் ஆன்மாவுக்கு தேவையானது. அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர் வரை ரயில், பிறகு ஆட்டோவுக்கு பத்து ரூபாய் கொடுத்து, பேருந்து நிலையம் சென்றேன்.அந்தப்பேருந்து பூண்டி நீர்த்தேக்கம் வழியாக உளுந்தூர் பேட்டை சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து மூலமாக சுறுட்டைப்பள்ளி போய்ச்சேர்ந்தேன். தனிமைப்பயணம். சுறுட்டைப்பள்ளியில் எம்பெருமான் ஆலகாலவிஷத்தை அருந்தி, சிறிது மயக்கத்தில் அம்பாள் பார்வதி மடியில் படுத்து ஓய்வு கொள்கிறார். தேவர்கள் சமுத்திரத்தைக்கடைந்து அமிர்தம் எடுக்க நினைக்க ஆலகாலவிஷம் வெளிப்பட்டதால் பயந்து அரற்றி சிவபெருமானிடம் வேண்ட, அவர் விஷத்தைஉள்ளகையில் வைத்து சிறியதாக்கி உட்கொள்ள, பார்வதி தேவி கழுத்தைப்பிடித்து உண்ணலாகாது எனப்பிடிக்க, விஷம் கழுத்துக்கண்டத்தில் தங்கி விட்டது. எனவே நீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.
தெய்வங்கள், சிவபெருமானிடம் ஓடோடி வந்து, அலறி உதவி கேட்டனர். யாவரும் அழியும் நிலைமை. அமுதம் கிடைக்காது போகும். விஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்கள் பயப்பட்டு, விஷத்தைப்பங்கி உண்ணலாம் எனக்கூடச்சொல்லவில்லை.உமாதேவி தடுத்தும் கேட்டாரில்லை. விஷத்தைத்தொண்டையில் அடக்கினார். இத்தகைய கருணையாளர். அவரால் தெய்வங்கள் பிழைத்தன.
அப்பர்பிரான்
பொங்கி நின்றெழந் தகடல் நஞ்சினைப்
பங்கி உண்டதோர் தெய்வமுண்டோ சொலாய்-  5-6-1,2

                கோயில் பழமையான கோவில் என்று சொல்லமுடியாது. புதுப்பித்துள்ளார்கள். சிற்பங்கள் இல்லை. அனந்தசயனர் விஷ்ணு பல கோயில்களில் Srirangam மாதிரி தரிசிக்கலாம். சிவபெருமான் பார்வதிதேவி மடியில் படுத்த நிலை ஒரு காணக்கிடைக்காத காட்சி. கோயிலில் கூட்டமில்லை. தரிசித்துவிட்டு வெளியில் வந்து நிழலில் அமர்ந்தேன். மண்டபத்தில் ஒரு அன்பர் மூன்று பழம் கொடுக்க ஒரு பழம் போதுமே என வாங்கிக்கொண்டேன். சந்நதியில் காசு கொடுத்து லட்டு ஒன்று வாங்கினேன். காகம் ஒன்று தையரியமாக, அருகில் வந்து லட்டு கேட்டது அந்நியம். அது பக்தர்களிடம் உணவு பெற்றே பழக்கப்பட்டு விட்டது. உணவு தேட எங்கும் போவதில்லை.

            திருப்பு பயணத்தில், ஒரு ஷேர் ஆட்டோவில் பின்புறம் லக்கேஜ் மாதிரி அமர்ந்து வந்தேன். ஒரு மணிப்பொழுது காத்துக்கிடந்து ஒரு பேருந்தைப்பிடிக்க திருவள்ளூர் வரை கூட்டநெரிசலில் நின்று கொண்டு வந்தேன். ஆட்டோ கேட்டால் ரூ 50 என ஒரு மினி பஸ்சைப்பிடித்து ரயிலடி வந்தேன். பசி எடுக்க, கடலைமிட்டாய் கிடைக்குமா என கடைகளில் பார்க்க கிடைக்கவில்லை. நல்லவேளை! ஆவின் பாலகம் ரயிலடியில் தென்பட பால் அருந்தினேன். மதியம் இரண்டைநெருங்கிக்கொண்டிருந்தது. ரயிலுக்காகக்காத்திருந்தேன். வாழ்க்கை ரயில் பாதை போல நீண்டிருக்கிறது என் முன்னே…………………….