மழையில் பயணம்
Dorai bhaskaran watches Birds at scrub land of Balaji, Palladam Puliampatti |
Balaji P. Balachandaran and Me at scrub land |
Beauty of Puliampatti village |
மழையில் பயணம்
மழை எனக்குப்பிடித்தமானது. ஒவ்வொரு
மழைத்துளியும் பூக்களாக என் மீதும், நண்பர் துரை பாஸ்கர் மீதும் சொரிய ஒரு ஆனந்தப்
பயணம், அதுவும் ஸ்கூட்டரில்…… வானிலை அறிவிப்பு கணத்த மழை பெய்யும் என்று சொல்லியும்,
பயணம் மேற்கொண்ட தூரம் 60 கி.மீ இருக்கும். நண்பர் பாலாஜியின் வெல் வேலமரக் காட்டில்
வரும் பறவைகளைக்காண மழையோடு மழையாக சாலையில் வழுக்கினோம். நகரத்தை விட கிராமம் அழகானது.
இந்த வருஷப் பருவமழை எதிர் பாரா சந்தோஷத்தைக்கொண்டு வந்த விதம் அருமை. சென்றபாதை இருமருங்கிலும்,
பச்சைக் கம்பளம் போர்த்தியது போல பயிர்கள். இலக்கு பல்லடம் புளியம்பட்டி. பாதையெங்கிலும்
மழையின் ஈரம், குளிர்வான காற்று, முகத்தில் வீழும் மழைப்பூக்கள். ஓ!
மக்கள் மழையைக்கண்டு ஏன் பயந்து சாலையோரத்தேநீர்க்கடையில் ஒதுங்குகிறார்கள்! கரிய மேகப்போர்வைகள்
எமக்குப்பொன்னாடை. எனக்காகவே எதிரில் யாருமற்ற சாலை. சில இடங்களில் செந்நீர் சேகாரமாகிய
குட்டைகள். அதில் இரு முக்குளிப்பான்கள் நீந்தி, நனையும் போது நானும் நனைவதில் ஆனந்தம்
தான்.
பாலாஜி
சுடச்சுட தேனீர் தந்து விருந்தோம்பலைத் தொடங்கினார். குளிரில் நமத்த தீக்குச்சிகள்
போலிருந்த விரல்கள், சூடேறும் விதமாக தேநீர் சுவைத்தோம். அத்தோடு பாலாஜியின் நூல் தொகுப்பு
பிரமிப்பை வரவழைத்தது. அத்துனையும் பறவை பற்றிய அரிதான நூல்கள். இந்த அளவுக்கு பறவை
நூல் தொகுப்பு கன்னிமாரா நூலகத்தில் கூட இல்லை என்றே சொல்வேன். நான்”Diary on the
nesting behavior of Indian Birds” நூல் எழுத ரெஃப்ரன்ஸ் நூல்களுக்கு கன்னிமாரா
நூலகத்தின் அலமாரிகளில் தேடியும், கன்னிமாரா கணனியில் தேடியும், கிடைக்காத நூல்கள்
கூட இருந்தன. 200 வருஷத்திய பழமையான Douglas Devar. Stuart Baker நூல்கள் கூட அரும்பாடு
பட்டு சேகரித்துள்ளார். இவர் ஒரு வித்தியாசமான நண்பர். எனக்குப் பரிட்சயமானதில், பெரும்
மகிழ்வு கொள்கிறேன். அதுவும் வாசிப்புப்பழக்கமற்ற நண்பர்கள் தான் எனக்கு மிகை. எல்லாருமே
காட்சியாளர்கள்(Viewers). நூல் வாசித்து கருத்துகளை பரிமாறிக்கொள்ள கிடைத்த வெகு சிலரில்
இவர் கிடைத்தற்கரிய புதையல். அவரின் நூல் புதையலைப்போல என எடுத்துக்கொள்ளலாமே! வாசிப்புப்
பழக்கமற்ற நண்பரிடம் நூல் விருந்தை எப்படிப்பரிமாறிக்கொள்வது?
மதிய
நேரம் மழை, சினிமாவில் இடைவேளை விடுவது போல
விட்டதும், பாலாஜியின் 15 ஏக்கர் முட்காடுக்கு பயணித்தோம். வெல்வேல மரங்கள் அதுவும்
லைக்கென்ஸ் படர்ந்த மாசற்ற முள் மரங்கள் எங்களை வரவேற்றன. உயர்ந்து நின்ற காற்றாடிகள்
அழகூட்டின. வாலடி சிகப்பு கொண்டைக்குருவிகள், வெளிநாட்டு தாம்பாடிகள், உமாபட்சி(f),
வெண்தலை சிலம்பன்கள், செண்பகம், மாட்டுக்கொக்கு, பெரிய சாம்பல் சிலம்பன்கள், கொண்டலாத்தி,
கரிச்சான், செங்கண்ணி, குயில், புதர்க்குருவிகள், பச்சைக்கிளிகள், ஊதா தேன் சிட்டு
என முட்காட்டினைக்கூட இறைவன் அழங்கரித்தார். நூற்றுக்கணக்கில் தாம்பாடிகள் மின்ஒயரில்
மாநாடு நடத்தியது கண்ணைக்கவர்ந்தது. மாடுகளோடு தோழனாய்ச்சென்ற கொக்குகள், மேய்ச்சலில்
இருந்த ஆடுகள் என, இயற்கைத் தோழமையோடு இருக்கும் போது காலம் அற்றுப்போவது விந்தை. ஈரமான
உள்ளத்தில் அன்பு மலர்வது போல, ஈரமான மண்ணில் எதுவும் முளைவிட்டு நமக்குத்தரும்.
கிராமிய
அழகு, அழகு தான். வெள்ளந்தியான சிறிதளவே தேவை கொண்ட எளிய மக்கள், எளிமையான வீடுகள்,
பெரிய நிழல் மரங்கள், பலதலைமுறைகண்ட கோயில், கண்மாய், குறுகிய வீதிகள் தரும் நிம்மதி,
அனுபவித்தால் தான் தெரியும். நகரத்தின் வானளாவிய ஃப்ளேட்கள் உங்களுக்கு பிடிக்கிறதா
என்ன? பாலாஜியின்மனைவி, விருந்தோம்பலில் மூன்று வகைப் பொரியல்களோடு பரிமாறியது உண்மையில்
மாறுபட்ட சுவை கூட்டின. திருவள்ளுவரின் விருந்தோம்பல் குறலான கீழே தருவது என் நினைவுக்கு
வந்தது,
‘செல்விருந்து
ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்
நல்விருந்து
வானத் தவர்க்கு’- திருவள்ளுவர்
பாலாஜியின் தந்தை எங்களுடன் அரைமணிப்பொழுது விருந்துண்டபிறகு
அளவளாவிக்கொண்டிருந்தார். மைய ஆசாரம் பழமை மாறாமல் புதுப்பித்து வைத்திருந்தது மனதைக்கவர்ந்த
ஒன்று. பாலாஜியின் முட்காட்டில் 60 வகையான பறவைகள் வந்ததை பட்டியலிலிட்டு, வைத்துள்ளார்.
மாலையில் அந்தவெல்வேல முட்காட்டில் பறவைகள்
அதிகம் வரவும். தங்கவும் செய்யுமென பாலாஜி சொல்ல, மாலை நேரம் ஒரு நாள் மழைவிட்ட பிறகு
மஞ்சள் வெய்யிலில் வருவேன் என்றேன்.
விடைபெற்று,
மீண்டும் மழையோடு மழையாக ஸ்கூட்டரில் நண்ரும், நானும் மழைக்கோடுகள் நிழற்படத்தை சட்டமிட்டது
போல மீண்டும் 30 கி.மீ பயணத்தை சந்தோஷம் குமிழிட அனுபவித்தோம்.
அன்பு தமிழ் உறவே!
ReplyDeleteவணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"மழை" யில்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!
வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)