Saturday, June 28, 2014

நீர் காகம்

சூரியக்குளியலிடும் நீர்காகங்கள்

அரும்பு மீசையிலிருந்த போது நின்னை
காகமெனும் வகையென்றிருந்தேன்.
காகத்துக்கு மாறுபட்டவன் நீ!
தனியாகவமும் கூட்டமாகவும் சஞ்சரிப்பு
வானில் வரிசையாய் உயரே பறந்து
எங்கு போகிறீர் வேற்றூறுக்கா?
நீண்ட பொழுது தாமதிக்கும் பொறுமைசாலி
இலையுதிர்த்த மரங்களில் கும்பலாய் அமர்வு,
அதிசயமாயிருக்கும். நகலில் காகமென
நினைத்து தங்கள் எண்ணத்தோடு போவார்
ஒரேயொரு கருப்பு சேலை கொண்ட ஏழை
நனைந்த சேலை உலர்த்துவது போல,
காலை வெய்யிலில் உலர்த்தி நிற்பாய்.
மீனை மட்டுமே நம்பியிருப்பவளே!
நீரில்லாமல் நீயில்லையாதலின்
நீர் உன் நாமத்தில் முதன்மையாயிற்று.
நீரில் குதியாட்டமிடும் சிறாரென
கூட்டமாக குளத்தில் வரிசையில் விழுந்து
தெப்பமாய் நனைந்து, மிதந்து, தாவி
! உங்கள் களிப்பு இவனுக்கும் தாவட்டும்.
நீர் மூழிகிக்கப்பலென மாறும் காகமே!
மீனைப்பிடிக்க என்ன தந்திரம்!
நெடுங்கழுத்துப் பறவையே! நீர்க்காகமே!


Saturday, June 21, 2014


தினைக்குருவி தங்கும் விடுதி
Dormitory of Whitebacked Munia (Lonchura striata)
            
             
        மற்ற பறவைகளை ஒப்பிடும் போது வெண்முதுகு தினைக்குருவி இரவு தங்கும் விடுதி அலாதியானது. இப்பறவைகள் 3 () 4 அறைகள் கொண்ட கூடு வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களால் கட்டுகிறது. அது 5 அங்குலக் குறுக்களவும், ஒரு வட்ட குழாயமைப்புடனும் உள்ளது. இரண்டு அங்குல அளவுக்கு இரு முனைகளில் வழி அமைத்துள்ளது. பின்புற வழி முன்புற வழியை விட சற்று சிறியதுபின்புற வழி ஆபத்துக்காலத்தில் தப்பிச்செல்லும் வழி. யாராவது எதிரி கூட்டுக்குள் வந்தால் தப்பிச்செல்ல அது வழி கொடுக்கும். எந்த மாதிரி முன் ஜாக்கிரதை! பாருங்கள்இந்த கூட்டில் முட்டை வைத்து அடைகாத்து, குஞ்சு பொரித்த பிறகு உணவூட்டி அதைப் பிரிந்து விடும். இந்தக்கூடுகள் 6 () 8 அடி உயரத்தில் வேலமரத்தில் கட்டுமானம் செய்யும். குஞ்சுகள் வளர்ந்து சென்ற பிறகு இந்தக்கூடுகளை தங்கும் விடுதியாக உபயோகிக்கும் இப் பறவை.
            பல முறை இம்மாதிரியான கூடுகளைப் பார்த்துள்ளேன். ஒரு சூரிய அஸ்தமன நேரத்தில், நீரற்றுப்போன சூலூர் குளப்படுகையுள் நடந்து கொண்டிருந்தேன். ஆரஞ்சு சூரியன் கருநீல மலைப்பின்னே விழும் நேரம்அந்த இதமான நேரத்தில் நான் ஒரு தினைக்குருவியின் கூட்டினை அடையாளம் கண்டேன். அதற்குள் முட்டை அல்லது குஞ்சுகள் இருக்குமா எனப் பார்த்தேன். அந்த நேரம் பார்த்து ஒரு ஜோடி தினைக்குருவிகள் எங்கிருந்தோ வந்து என்னை ஆச்சர்யப்படவைத்தன. அவை நான் இருக்கிறேன் என கூட்டுக்குள் நுழையாமல் அருகிலிருந்த ஒரு வேல மரத்தில் அமர்ந்தன. தினைக்குருவிகள் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகக்காத்திருந்தன. நான் பத்தடி நகர்ந்து, ஒரு சிறு மரத்தின் பின்பு ஒளிந்து கொண்டேன். ஆனால் பறவைகள் கூட்டில் நுழையாமல் தயங்கின. சிறிது நேரத்தில், ஆதவன் மறைய இரவின் கருப்புத்துணி விரிய, ஜோடி தினைக்கருவிகள் மெதுவாக கூட்டுக்கருகில் வந்தமர்ந்தன. அவை இரவு தங்குவதற்கு காலியான கூட்டினை சில காலம் பயன் படுத்துவது எனக்கு வியப்பை வரவழைத்தது.

            இன்னொரு முறை தில்லி முட்காடான ஊர்வேலங்காட்டில் இந்த மாதிரியான இரவு தங்கும் விடுதியாக உபயோகப்படுத்தும் கூட்டினைப்பார்த்தேன். இதை எப்படி முனைவர் சலீம் அலி விவரிக்கிறார் எனப்படித்து ஆனந்தப்படுங்கள். “ The nests are used as dormitories by the family till long after the young have flown.”

Tuesday, June 10, 2014


பறவை விடு தூது


Rose-ringed Parakeet (பச்சைக்கிளி)

Red Shank (பவளக்காலி)

Painted Stork (செவ்வரி நாரை)


            சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் பறவைகளை தூது விட்டிருக்கிறார்கள். காதலன்(தலைவன்) காதலிக்கு(தலைவி) தூது, தலைவி தலைவனுக்குத்தூது எனவும் ஆன்மிகஞானிகள், சிவபெருமானுக்கு பறவையைத்தூதாக அனுப்பியுள்ளனர். ஞானிகள் பறவை தூதில் சிவன் மீது இருக்கும் அளவு கடந்த அன்பைவெளிப்படுத்தி தங்கள் குறையோடு முக்தியை வேண்டுவார்கள். காதலன், காதலி பரஸ்பரம் காதலோடு தங்கள் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.
            தூது பறவை மட்டுமல்லாது பணம், தமிழ், புகையிலை, காக்கையுடன் செருப்பு கூட தூது போயிருக்கிறது.
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோ தங்காள்
தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.
            பவளக்காலி என்றால் Red Shank(Ref: டாக்டர் . ரத்னம்- தமிழில் பறவை பெயர்கள்)இது காஷ்மிர், மற்றும் லடாக்கிலிருந்து தெற்கு வருவதை தொலைநோக்கி இல்லாத காலத்திலேயே ஞானசம்பந்தர் பவளக்காலியை  சம்பந்தர் தேவாரத்தில் 7-ம் நூற்றாண்டில் இப்படிப்பதிவு செய்துள்ளார். அழகுற அமைந்த, சிகப்பு நிறத்துப் பவளம் போன்ற கால்களையுடைய பவளக் காலியே! தேரோடும் நெடுவீதி கொண்டசீர்காழியில் உறையும் சிவபெருமானுக்கு, நீரில் நனைந்த சடையுடைய சிவபெருமானுக்கு எனதுப்பிரிவுத் துயரை சொல்லாயோ!

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளாரூரை
மறக்க்கில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.

பறந்து திரியும் கிளிகளே! பாடித்திரியும் கிள்ளைகளே! அறத்துக்கண்ணை உடைய சிவபெருமானை மறக்கமுடியாமல், எனது வளையல்கள் கைகளில் நிற்பதில்லை. இரவில் உறக்கம் வருவதில்லை என சிவனிடம் உணர்த்தக்கூடிய வலிமை உங்களிடம் உளது. ஆகையனால் எனது பிரிவாற்றாமையை உணர்த்துங்கள். என சுந்தரர் 9-ம் நூற்றாண்டில் பாடியுள்ளார்.

இலைகள்சோ லைத்தலை இருக்கும் வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதும் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.

என் கலைகள் அனைத்தும் சோர்வுருகின்றன. தண்டைகள் கழலும் அளவுக்கு உடல் மெலிவுற்றேன். முலைகள் உனது பிரிவால் விம்மித்தணிகின்றன. இலைகள் அடர்ந்த சோலைகளில் இருக்கும் வெண்ணாரைகளே! எனது பிரிவுப்பெருந்துன்பத்தை சிவபெருமானிடம் பகர்வாயா?
            இந்த பக்தி இலக்கியத்தில் சுந்தரர் தன்னை பிரிவாற்றாமையில் துயரப்படும் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடுகிறார். சிவபெருமான் ஒருவர் தான் இப்பிரபஞ்சத்தில் ஆடவர், மற்றெல்லா ஜீவராசிகளும் பெண்கள். எனவே எப்போதும் எந்த இன்பமும் நமக்கு நிலைத்திருக்காது. சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப நிலைக்குப் போகவேண்டும். அந்த உண்மை ஆடவனை அடைய பெண்களாகிய நாம் முயன்று பேரின்பநிலையில் அழுந்த வேண்டும். அது தான் முக்தி, மோட்சம்,கைலாச பிராப்திமற்றும் ஓஷோ சொல்லும் வெட்டவெளி யாகும்.