Tuesday, June 10, 2014


பறவை விடு தூது


Rose-ringed Parakeet (பச்சைக்கிளி)

Red Shank (பவளக்காலி)

Painted Stork (செவ்வரி நாரை)


            சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் பறவைகளை தூது விட்டிருக்கிறார்கள். காதலன்(தலைவன்) காதலிக்கு(தலைவி) தூது, தலைவி தலைவனுக்குத்தூது எனவும் ஆன்மிகஞானிகள், சிவபெருமானுக்கு பறவையைத்தூதாக அனுப்பியுள்ளனர். ஞானிகள் பறவை தூதில் சிவன் மீது இருக்கும் அளவு கடந்த அன்பைவெளிப்படுத்தி தங்கள் குறையோடு முக்தியை வேண்டுவார்கள். காதலன், காதலி பரஸ்பரம் காதலோடு தங்கள் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.
            தூது பறவை மட்டுமல்லாது பணம், தமிழ், புகையிலை, காக்கையுடன் செருப்பு கூட தூது போயிருக்கிறது.
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோ தங்காள்
தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.
            பவளக்காலி என்றால் Red Shank(Ref: டாக்டர் . ரத்னம்- தமிழில் பறவை பெயர்கள்)இது காஷ்மிர், மற்றும் லடாக்கிலிருந்து தெற்கு வருவதை தொலைநோக்கி இல்லாத காலத்திலேயே ஞானசம்பந்தர் பவளக்காலியை  சம்பந்தர் தேவாரத்தில் 7-ம் நூற்றாண்டில் இப்படிப்பதிவு செய்துள்ளார். அழகுற அமைந்த, சிகப்பு நிறத்துப் பவளம் போன்ற கால்களையுடைய பவளக் காலியே! தேரோடும் நெடுவீதி கொண்டசீர்காழியில் உறையும் சிவபெருமானுக்கு, நீரில் நனைந்த சடையுடைய சிவபெருமானுக்கு எனதுப்பிரிவுத் துயரை சொல்லாயோ!

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளாரூரை
மறக்க்கில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.

பறந்து திரியும் கிளிகளே! பாடித்திரியும் கிள்ளைகளே! அறத்துக்கண்ணை உடைய சிவபெருமானை மறக்கமுடியாமல், எனது வளையல்கள் கைகளில் நிற்பதில்லை. இரவில் உறக்கம் வருவதில்லை என சிவனிடம் உணர்த்தக்கூடிய வலிமை உங்களிடம் உளது. ஆகையனால் எனது பிரிவாற்றாமையை உணர்த்துங்கள். என சுந்தரர் 9-ம் நூற்றாண்டில் பாடியுள்ளார்.

இலைகள்சோ லைத்தலை இருக்கும் வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதும் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.

என் கலைகள் அனைத்தும் சோர்வுருகின்றன. தண்டைகள் கழலும் அளவுக்கு உடல் மெலிவுற்றேன். முலைகள் உனது பிரிவால் விம்மித்தணிகின்றன. இலைகள் அடர்ந்த சோலைகளில் இருக்கும் வெண்ணாரைகளே! எனது பிரிவுப்பெருந்துன்பத்தை சிவபெருமானிடம் பகர்வாயா?
            இந்த பக்தி இலக்கியத்தில் சுந்தரர் தன்னை பிரிவாற்றாமையில் துயரப்படும் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடுகிறார். சிவபெருமான் ஒருவர் தான் இப்பிரபஞ்சத்தில் ஆடவர், மற்றெல்லா ஜீவராசிகளும் பெண்கள். எனவே எப்போதும் எந்த இன்பமும் நமக்கு நிலைத்திருக்காது. சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப நிலைக்குப் போகவேண்டும். அந்த உண்மை ஆடவனை அடைய பெண்களாகிய நாம் முயன்று பேரின்பநிலையில் அழுந்த வேண்டும். அது தான் முக்தி, மோட்சம்,கைலாச பிராப்திமற்றும் ஓஷோ சொல்லும் வெட்டவெளி யாகும்.


            

No comments:

Post a Comment