பூனைகளின் உட்சண்டை.... INFIGHTING OF CATS
பூனைகளை புலியினம் எனலாம். அதனுடைய குணாதிசயங்கள்
இதற்கும் இருக்கிறது. எங்கள் குடியிருப்புப் பகுதியில் பல பூனைகள்
வயதுவாரியாக உலவுகின்றன. யாரும் எடுத்து வளர்த்தவில்லை.எப்படி வயிற்றை வளர்க்கின்றன, எங்கு தூங்குகின்றன
, எங்கு போய் இறந்து போகின்றன என்பன மர்மமாக உள்ளது. ஒரு நாள் இரவு எட்டு இருக்கும், எனது தங்கை பெண்கள்,கல்லூரி மற்றும் பள்ளியில் படிப்பவர்கள், கோடை விடுமுறையில்
விருந்தினராக வந்தவர்கள் கீழ் தளத்திலிருந்து மாடிக்கு ஓடி வந்தனர். நான் கணனியில் முகநூலில் பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன்.
பரபரப்பாக, ‘ முன்னறையில் பெரியபூனை,குட்டிப்பூனையைக்கடிச்சுக் கொதறுது, வாங்க!’ என்றனர். நான் கீழ் தளம் செல்ல அங்கு குட்டிப்பூனை பயத்தில்
மலஜலம் கழித்து, கழுத்திலும், பக்கவாட்டு
வயிற்றிலும் பெரிய பூனையின் நகங்கள் பதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
நாங்கள் சென்றதும் மஞ்சள், வெள்ளைப் பெரிய பூனை
தப்பித்து ஓடியது. ‘நான் குட்டிப்பூனை இறந்து விடும்,
இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?’ என புலம்பி,
வருத்தப்பட்டுச்சொன்னேன். ‘க்ரில் மேல்,
அறைக்கூரைப்பகுதியெல்லாம் தாவிப்பாய்ந்து தப்பிக்கப்பார்த்தும்,
அந்த அரக்கத்தனமான பூனை விடவில்லை. கடித்துக்குதறியிருக்கிறது.’
என உறவுப்பெண்டிர் பயந்த குரலில் சொன்னார்கள். மலஜல நாற்றம் அடித்தது. ‘காலைக்குள் பூனை இறந்து விடும்.
காலையில் அடக்கம் செய்யலாம். நாம் செய்ய ஒன்றுமில்லை.
மோசமான நிலையில் உள்ளது’என நகர்ந்தேன்.
காலையில் பூனையை அடக்கம் செய்ய
மண்வெட்டியெடுத்து எதிர்புறத்தோட்டத்தில் இரண்டடிக்
குழி வெட்டிவிட்டு பூனையைத்தூக்கினால் அது லேசாக நெளிந்தது. பூனை பாவம் பொல்லாதது,
உயிரோடு புதைப்பது மகா பாவம் என ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு கார் ஷெட்டில்
காருக்கு அடியில் வைத்தேன். அது மறுநாள் பார்த்தால், மூன்றடி தள்ளிக்கிடந்தது. நாய், மற்றும் திரியும் பூனைகள் மீண்டும் கடித்துக்குதறிவிடுமோ என பயம் வாட்டியது.
மறுநாள் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து, சுற்றிலும்
பினாயில் தெளித்து வாசம் வராமல் சுத்தமாக அந்த இடத்தை வைத்தேன்.
தம்பி 15 கி.மீ தாண்டியுள்ள ஊரில் வசிக்கிறான். அவன் வீட்டில் பூனை
ஒன்றுபோக ஒன்று வளர்த்துவர். அவனை வரச்சொன்னேன். அவன் ‘நீயோசல்ப்’ காயத்துக்கு மருந்துப்பொடியும்,
பால் கொடுக்க ஒரு ‘சிரின்ச்’ சும் கொண்டு வந்தான். பால் சிரின்ச் ஊசியில் கொடுத்தான்.
பால் இறங்குவது கழுத்து அசைவில் உணர்ந்தேன். காயத்துக்கு ‘நீயோசல்ப்’ பொடி தூவினான். ‘இப்படியே
பராமரியுங்கள்’ எனச்சொல்லிப்போய் விட்டான். நானும் ஆறு நாள் போராடிப்பார்த்தேன். பினாயில்,
நீர், சிரின்ச் ஊசிபால், ‘நீயோசல்ப்’ பொடி, எனக்கவனித்துப்பார்த்தேன்.
பால் கொடுத்தால் உடல் முழுக்க நனைந்து போனது. அது
பாதி உள்ளிறங்க, பாதி வெளியில் வழிந்தது. பாலுக்கு கட்டெறும்பு, சின்ன எறும்பு என வந்து பூனை வாயிலும்,
உடம்பிலும் ஏறின. பார்க்கப்பரிதாபமாக இருந்தது.
இந்த கருப்புவெள்ளை நிறக் குட்டிப்பூனையின்
தகப்பன் பூனைக்கும், வேறொரு வெள்ளை, மஞ்சள்
நிறப் பூனைக்கும் விரோதம். அதை நீங்கள்
புகைப்படங்களில் பார்க்கலாம். (படம்; 1,2) ஒன்றையொன்று அடிக்கடி கத்திக்கொண்டும் உறுமிக்கொண்டும் சண்டையிடும்.
அதன் மையமாக வைத்து கருப்புவெள்ளை தகப்பனது,மஞ்சள் வெள்ளை பூனை, கருப்பு வெள்ளை குட்டிப்பூனையை குதறிவிட்டது.
இப்படியும் நடக்குமா! நடக்கும். விலங்குகளின் பதிவுகள் நம்மிடமும் உள்ளது. இப்போதும் இது மாதிரி நடந்து
கொள்கிறோமா, இல்லையா?
குட்டிப்பூனை இறந்துபட்ட பிறகு விரோதப்பூனைகளிரண்டும்
ஆக்ரோசமாக புலிகளைப்போல சண்டையிட்டுக் கொள்வதைப் பாருங்கள். (படம்;
3)
அடிக்கடி உயிர் இருக்கிறதாவென
என் கண்கள் பூனையின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியைப் பார்க்கும். பூனை சில பொழுது
விழித்துப்பார்க்கும், முணகிநெளியும். அது
படும் அவஸ்தை, உயிர் விடப்போராட்டமா? உயிர்
தக்க வைத்துக்கொள்ளப்போராட்டமா? எனத் தெரியாது, நானும் கண்ணீர் விடாத சோகத்திலிருந்தேன். நாற்றம்….
எனக்கு கிருமிகள் ஒட்டிக்கொள்ளுமோ! பூனை மெலிந்தது.
நிற்க வைத்தேன் பல முறை அது கீழே சரிந்து, சரிந்து
விழுந்தது. நான்கு பூனைகள் தனித்தனியாக வந்து பார்த்துச்சென்றன.
நமது வேண்டப்பட்டவர் மருத்துவ மனையில் இருந்தால் ரொட்டி, ஆப்பிளோடு சென்று பார்ப்பதில்லையா! அது போல வாயில்லா
ஜிவன்களுக்கும் அந்த உணர்வு இருக்கிறது.
திருப்பிப்போட அது எப்போதோ கழித்த
சிறுநீர் அடர் மஞ்சலாக இருந்து,
ஒரு பக்க உடலில் பரவி ஒட்டியிருந்தது. வாய் பிளந்திருந்தது.
வெளிரியிருந்தது. இறைவனுக்குத்தெரியும்.
எந்தக் கானகத்தில், எந்த மரத்தில், எந்தக்கிளையில் எந்தச்சிமிறில், எந்த இலை வாடி வீழும்
என அவரைத்தவிர யாவருக்கும் தெரியாது, என கண்ணதாசன் அர்த்தமுள்ள
இந்த மதத்தில் எழுதியுள்ளார். அது நினைவுக்கு வந்தது.மனம் சங்கடமாக இருந்தது. மஹாத்மா காந்தி ஒரு ஆடு படும்
மரணப்போராட்ட அவஸ்தையைப்பார்த்து மனம் புண்ணாகி, சகிக்காது ஊசி
போட்டு கொன்று விடச்சொன்னார்,என நண்பர் சொன்னார்.
பூனையை இனி என்னால் காப்பாற்ற
முடியாது என உணர்ந்தேன்.
இயற்கை நியதியில் தலையிடுகிறேன், இது கூடாது எனவும்
மனதுக்குப் பட்டது. ஆறு நாள் முயற்சி பலன் தரவில்லை. ஒரு பாதி உடைந்த பிளாஸ்டிக் குடத்திலிட்டு பூனையை 50 செண்ட் மைதான மூலை தில்லி முட்புதருக்கடியில்
வைத்தேன். கடைசியாக அந்தப்பூனை என்னை பச்சைக் கண்ணில் விழித்த
விதம் என் இதயத்தை பிழிந்தது. சர்வம் சிவமயம்.
No comments:
Post a Comment