Sunday, May 4, 2014



My book "DIARY ON THE NESTING BEHAVIOUR OF INDIAN BIRDS" available in ON LINE http://www.marymartin.com/web/selectedIndex?Entry=140646

மாடப்புறாக்கள்
Blue Rock pigeons (Columba livia)
            உலகம் முழுவதும் பரவியிருக்கும் இப்பறவைகள் விண்ணைத் தன் சிறகுகளால் வெற்றி கொண்டவை. நான் சிறு வயதில் அதாவது 5 வயதில் இருக்கும் போது, எங்கள் வீதியில் வெள்ளிங்கிரி என்பவர் இருந்தார். அவர் வீடுஅந்த வீதியின் கடைக்கோடி. அவர் புறா வளர்பார். அங்கு அடிக்கடி போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். அம்மா சோறு ஊட்ட அடிக்கடி வந்து என்னை கட்டாயப்படுத்திக்கூட்டிச்செல்வார்.
புறாக்களுக்கு விதம்விதமாக நாமகரணம் செய்து வைத்திருந்தார். மஞ்சக்குருமா, செங்கண்ணு, லகடு, லகான், இப்படிப்பெயர். புறாக்காரர் இடையே போட்டி கூட நடக்கும். எந்தப்புறா அதிகம் நேரம் பறக்கிறதோ அதன் சொந்தக்காரருக்குப்பரிசு. ‘கொட்ரு…க்ட்ரு…ட்ரு..கொட்ரு…’ என சப்தம் வெள்ளிங்கிரி வீட்டில் வந்து கொண்டிருக்கும். அவர் சாதாரண குடும்பஸ்தர். அவர் வீட்டின் முன்பு புறாக்கழிவு, இறகுகள், அலுமினியநீர்க்குவளை இருக்கும். ஒரு பக்கம் புறாக்களை அடைக்கும் மரத்தாலான புறாக்கூண்டுகள். அதில் இரண்டு புறா அடைப்பார். குறும்புக்காரப்புறாவாக இருந்தால் ஒன்றினை அடைப்பார். இணைசேர்த்த,ஆண், பெண் புறாக்களை ஒரு கூண்டில் அடைப்பார். சோளம், ராகி உணவாக சிதறிக்கிடக்கும்.
ஆண் புறா, பெண் புறாவை விட உருவத்தில் பெரியதாக இருக்கும். பளபளவென்ற பச்சை சிவப்பு பட்டை மாலை கழுத்திலிருக்கும். இவை ஜோடி சேர்ந்தால், பிரியாது. ஜோடியாகவே இருக்கும்…தமிழர் பண்பாடு போல…  அவை சுதந்திரப்பறவைகளாக இருக்கும் போது கோவில் கோபுரங்கள், பாறை முகடுகள், பாளடைந்த கோட்டைகள், தானியக்கூடங்கள், தற்போது அடுக்குமாடிக்கட்டிடங்கள் என வியாபித்துள்ளன. புறாக்களுக்கு பறப்பது பிடிக்கும், அதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும். காலை வேளையில் குழுவாகப்பறக்கும் அழகையும், சூரிய கிரணங்கள் அதன்சிறகுகளில் மிளிர்வதையும் பார்க்க எனக்கு கவிதை எழுதத்தோணுகிறது.      
           நகரமாகட்டும், முட்காடாகட்டும் இவை சஞ்சலமின்றி பறப்பது நமக்கு உற்சாகமூட்டும். இவற்றைப்புகைப்படம் எடுப்பது என்பது அசாத்தியம். அதுவும் பறக்கும் நிலையில் லாட்டரி விழுந்த மாதிரி தான். சோளக்காடு அதிஷ்டவசமாக எனது நகரமும், கிராமும் அல்லாத ஊரில் கிடைக்க உற்சாகமானேன். பல நாட்கள் முயன்று வியர்வை முதுகில் வழிய, புருவத்தில் வழிந்து கண்கள் ‘மச, மச’ வென ஆக கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு  50, 100 என எடுக்க 5 படங்கள் தேறியது தான் உண்மை. வேகம்… வேகம் …வேகச்சிறகடிப்பு…. என் செய்வது? ஒவ்வொரு முறையும் மாடப்புறாக்கள் பறக்கும் காட்சியைப் பார்க்கும் தோறும் என்இதயமும் சிறகடித்து அவைபின்னே போகும், காதலி பின்னே போவது போல…………

மாடப்புறா
ஆலயம், கோயில், மசூதி உச்சி
மிச்சமின்றி நீவிர்தான்! மனிதரோ
ஏதோ வொரு மதத்தில் மீந்தவர்
காதலர் கை கோர்த்து இந்தியா ‘கேட்’ அருகில்;
நூற்றுக்கணக்கில் தரை மேய்ந்த நீவிர்,
‘பட, பட’ வென சிறகடித்து இடம் மாறி அமர
மனம் அள்ளிக்கொண்டு போனீர்!
கருஞ்சாம்பல் நிற இறகுகளும்
பசுஞ் சிகப்புத் தகடுக் கழுத்தும்
மனம் கொள்ளை கொண்டு போகுதே!
சங்க காலம் தொட்டு மனிதன் நேசித்தானுன்னை.
கோப்புகளில் மூளை சூடாயின்,
அலுவலகப் பலகணி துறுத்திய குளிர் பெட்டி
அமர் மாடப்புறாவே! நின்னைப் பார்க்க
மணிக்கொருதரம் எட்டிப் பார்ப்பேன்
மூளை குளிர்ந்து போகுமுன் தலையசைப்பில்…….

                                                            --சின்ன சாத்தன்

No comments:

Post a Comment