Monday, January 27, 2014

மாறுபட்ட கோணத்தில்
மயில்                 
Common Peafowl                                                        
(Pavo cristatus)                                                                  
              
சூலூர் அருகாமை ஆச்சான் குளத்தின் ஓரம் நடனம்

தைபூசத்திருநாளுக்கு இறகுகளை உதிர்த்த மயில்

            மயில் தேசியப்பறவை. மயில், ரயில், யானை எப்போதுமே வியப்பையும், மகிழ்வையும் எந்த வயதிலும் கொடுக்கக்கூடியவை. மயில் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பதெல்லாம் வாய் வழி, செவி வழி உலவும் கதை. ஆண் மயில் கழுத்து நீலநிறமும், பெண்மயில் கழுத்து பச்சை நிறமும் வெல்வட் போல நம்மை மயக்கும். ஆண்மயில் தோகை விரித்தாடும் போது நாம் மட்டும் மயங்குவதில்லை. விரிந்தாடி சிலிர்க்கும் தோகை அழகைப்பார்க்க தோகையற்ற பெண் மயில்கள் சில சுற்றி நின்று வேடிக்கை பார்த்து மயங்கும். நாமோ மயில் தோகைகளை இடுப்பில் ஏந்திக்கொண்டு கைகளால் தோகையைச்சிலிர்த்தாடும் மங்கையை திருவிழாவில் பார்க்க கூடுகிறோம்
                   பறவைகளில் ஆண் பறவைகளே அழகு படைத்தவை. இனிமையாக குரல் கொடுக்கவும் வல்லவை. அவைகள் பெண் பறவைகளைக் கவர இறைவன் கொடுத்தது. பரஸ்பரம் ஆணும்,பெண்ணும் கவரும் உத்திகள் மாநிடருக்கு மட்டும் உரியதல்ல. எல்லா உயிரினங்களுக்கும் இந்த யுக்தியை இறைவன் வைத்துள்ளார். மயில் இந்த கால கட்டத்தில் அதிகமாகிப்போக விவசாயிகள் தங்கள் காய்கறிகள் கொத்தப்படுகின்றன, என தாக்கீது கொடுக்கின்றனர். அவைகளுக்குரியதான அடவிய முட்காடுகள், இலையுதில் காடுகள், ஓடை, ஆறு கொண்ட மலை அடிவாரம் போன்றவற்றில் வாழக்கூடியவை. அவைகளுக்கு விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள தக்காளி, கத்தரி, போன்ற காய்கறிகள் அவசியமில்லை. இவை உண்ணுவது பூச்சியினம், பாம்பு, தானியம், தாவரத் தண்டு மட்டுமே. அவைகளுக்குரிய வாழிடங்களைச்சிதைத்ததால் விளைநிலங்களுக்கு வந்து விட்டன. மலை அடிவாரம் வரை ஆக்கரமித்து விளைநிலமாக்குவது, வீட்டுமனைகள் இடுவது, இப்படியே மயில் வாழிடம் போல யானை வாழிடத்தையும் குறுக்கிக்கொண்டே போனால் அவை எங்கு செல்லும்
                    மாநிடருக்கு மட்டும் இந்த புவியுலகு சமைக்கப்படவில்லை. எல்லா உயிர் இனங்களும் சமமாகப்பங்கிட்டு ஒருவருக்கொருவர் இடையூறில்லாமல் வாழ்வது சுவர்க்கம். மனிதன் ஆற்றிவு கொண்டு பேராசைப்படாமல், அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து மகிழ வேண்டும். எந்த உயிரையும் விஷம் வைத்துக் கொல்வது இரக்கமற்ற தன்மை. இறைவனில் கருணையும், அன்பும் இருப்பதால் தான் நீவர் புவியில் உயிர் தப்பி இருக்கிறீர்கள். இறைவன் போல நீங்களும் இருக்கவேண்டும். மயில் பறப்பது ஒரு விந்தை. இரவில் உயரமான மரத்தில் அமர்ந்து உறங்கும்
            அழகன் முருகனின் வாகனம். இந்த வாகனமான மயில் கார்த்திகை, மார்கழியில் முருகப்பெருமானின் தைப்பூசக்காவடிக்காக தோகைகளை உதிர்த்துவிடும். மார்கழி முடிந்த தை மாதத்தில் பழனிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் முட்காடுகளில் உதிர்ந்து கிடக்கும் இறகுகளை சேகரித்து காவடியை அலங்கரிப்பர். நானும் கூட சிறுவயதில் உதிர்ந்த மயில் இறகை பொறுக்கி ஒரு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடுமா எனக்காத்திருந்த காலமும் உண்டு. அது ஒரு ஆச்சர்யம் குமிழிடும் அழகிய கனா காலம். மயில் எனக்கு எப்போதும் வசிகரிக்கும் தேவதை. உங்களுக்கு அப்படி இல்லையா?

Friday, January 17, 2014


Kentish Plover flocks in Adayar estuary                         
(Charadrius alexandrinus)  

அடையார் முகத்துவாரத்தில் சிறிய உப்புகொத்திகள்

In flight a narrow white wing-bar and prominent white sides of tail distinctive-Dr. Salim Ali
முகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு கட்டியிருக்கும் கட்டிடங்கள்

அழகானதொரு கோவா கடற்கரை மணல்வெளியில் ........... 
சிறிய உப்புக்கொத்தி-                                                                        
மணல் கோழி

சிறிய உப்புக்கொத்திகளை நான் கோவாவின் ஒரு அழகான கடற்கரையில் முதன்முதலாக சந்தித்தேன். இவை நமது நாட்டுப்பறவைகள். மணலில் விளையாடியும், புதைந்தும், குடுகுடு வென ஓடியும் அழகு காட்டும் குருவி (+) பரிமாணப்பறவைகள். இவற்றினை குழுவாகத்தான் பார்க்கலாம். பலர் இவற்றை மோதிரக்கோழி(Little Ringed Plover)யென சத்தியமாக எண்ணி விடுவார்கள். இரண்டுக்கும் வேறுபாடு; மோதிரக்கோழிக்கு கழுத்தில் இடைவெளியற்று,வளையமிட்ட கருப்பு, நெற்றியில் கருப்புப்பட்டை. இது இருந்தால் அது கழுத்தில் மோதிரமிட்ட கோழி என அறிந்து கொள்ளலாம்.
சிறிய உப்புக்கொத்திக்கு முன் நெற்றியில் வெண்கோடு,குறுகிய கண் தீற்றல், மார்பில் சிறு கருப்புப் பட்டை. இப்படி இருந்தால் அது மணல் கோழி. மலையாளத்தில் தமிழை விட பொறுத்தமான பெயர்கள் பறவைகளுக்கு சூட்டியுள்ளனர், என்பதைச் சொல்லத்தான் வேண்டும். தொந்தரவு என உணர்ந்தால் குழுவாகப்பறந்து மீண்டும் மணலில் அமருமிவை பறக்கும் போது சன்னமாக ட்ர்ர்ர் என இரு முறை கத்தி, ’எந்திரிங்கடா, பறப்போம், மனுஷன் எவனோ வர்ரான்’ எனப்பறப்பது ஒரு கவிதை. இருவிடலைப்பையன்கள் அப்படி அடையார் முகத்துவாரத்து மணல்வெளியில் நடந்து வந்த போது தான், பறந்து போகும் நிலை நிழற்ப்படம் சாத்தியமானது.
இவை மணல் குழிவை அலை தொடாதவாறு ஏற்படுத்தி முட்டைகளை வைக்கும். அல்லது காய்ந்த ஆற்றுப்டுகையில் தாவரங்களுக்கிடையே வைக்கும். முகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு இந்த மாதிரி ராட்ச்சத்தனமாக(ன) கட்டிடம் கட்டலாமா? நீச்சலடிப்பவர், மீன்பிடிப்பவர், பிக்னிக் மக்களென பறவைகளை இறங்கவிடாமல் செய்தது பரிதாபம். சென்ற காலங்களில் நிறையப்பறவைகள் காணமுடிந்தது. இப்போது நான் பார்த்தது; Small green Bee-eater(1), Curlew(1), Common Sandpiper(1). Little Egrets (5) மட்டுமே. எனக்கு நிறைய ஏமாற்றம்.


Friday, January 10, 2014

Curlew
(Numenius arquata)                                                        Migrant Watch
குதிரை மலை கோட்டான்
           
இதற்கு குதிரை மலை கோட்டான் என்று ஏன் பெயர் வந்தது? என்று தெரியவில்லை. இப்பறவையும் நானும் முன்னமே புலிகாட் கடற்கரைப்பகுதியில் அறிமுகமாகி பல வருஷங்களாயிற்று. 5.01.2014 ஞாயிறு அடையார் முகத்துவாரத்தில் நானும் நண்பர் பாஸ்கரும் பார்த்து ரசித்தோம். அலகு வலைந்தும் நீளமாயும் உள்ளது இதன் தனித்துவம். இதன் மூக்கை ஸ்கேல் கொண்டு அளக்க அரை அடி எனப்பதிவு செய்திருக்கறார் Dr. சலிம்அலி. இது மிகவும் எச்சரிக்கையான பறவையாக இருப்பதால் புகைப்படம் எடுப்பது தூரத்திலிருந்து தான் முடியும். பறக்கும் போது கர்லு எனக்குரல் கொடுப்பதால், இதற்கு ஆங்கிலப்பெயர் Curlew எனவே வைத்து விட்டனரோ! இது என்னைப்பார்க்க வடக்கு ஐரோப்பா (அ) கிழக்கு சைபிரியாவிலிருந்து வந்திருக்க வேண்டும். இது குளிர்கால வருகையாளர். விஷா இல்லாமல் இப்பறவை எத்தனை காலமும் இங்கு தங்கலாம். ஆனால் இது மார்ச் மாதம் எனக்கு டாடா, பை….பை காட்டிவிடும். குழுவாக வரும். தனியாக இப்போது கண்டேன். ஆஹா! குதிரை மலை கோட்டான்கடல் அலை உள் வாங்கும் போது,அலை ஓரமாக ஓடியும், நடந்தும், நின்றும் கடல்நீர்அலைதிவளைகள் கொணறும் மிருது மணலில் லார்வா, நத்தை, ஆயஸ்டர் களைப் பிடித்து உண்ணும் அழகு நான்  சென்னையை விட்டு கோவை வந்தும் நினைவில் புரளுகிறது.