Friday, August 22, 2014


தாழம்பூ
          
          சூலூரில் இரட்டைக்குளங்கள் வடக்குப்புறமாக உள்ளன. ஒன்று பெரியகுளம் இரண்டு செங்குளம் () சின்னக்குளம். இந்த மாதிரி சாக்கடைநீர் கலக்காத போது, உண்மையிலேயே நறுமணம் வீசிய பகுதி. குளத்து மேட்டில் நடந்து போனால் தாழம்பூ, தாமரை, அல்லி போன்ற மலர்களைக்கண்டு ரசிப்பதோடல்லாமல், நறுமணம் நுகர்ந்து இன்புறலாம். தற்போது, சாக்கடையின் முடை நாற்றம் வீசுகிறது. சாயம், அமிலம், மனிதனின் சிறுநீர், மலம், புலங்கிய நீர் இப்படி வந்து கலந்து, நறுமணம் வீசும் மலர்கள் காணாமல் போயின. தாழம்பூவில் சிறு பூநாகங்கள் இருக்கும்.

பிரம்மன் சிவபெருமானின் முடியை பார்த்து விட்டார் எனத் தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால், சிவபெருமான்இனி நீ எனக்குப்பூஜைக்கு உரிய பூ நியிருக்கமுடியாதுஎன சபித்து விட்டார். தாழம்பூ புதர் பெரியது. இலை விளிம்புகள் ரம்பம்போல  இருக்கும். இலைகள் நீளநீளமாக இருக்கும். போன மாதத்தில் கண்ணுக்கு ஒரே ஒரு புதர் தாழம்பூ என்னில் கண்ணில் பட்டது. இது பெரிய குளத்தின் கிழமேற்குக் கோடியில் உள்ளது. ‘ஓலைக்கா கொண்டையிலே ஒரு கூடை தாழம்பூஎன பாடியவாறு சிறுமிகளும், பெண்களும், இளைஞர்களும் குளத்து மேட்டில் காணும் பொங்கல் நாளில் குதூகலித்துத்திரிந்து வலம் வந்தது இப்போது எங்கே? இதே கதி தான் நிறைய கிராமங்கள் மற்றும் நகரங்களில் என உணரவேண்டும்.

அதை இப்போது தொலைக்காட்சி(இடியட் பாக்ஸ்)பெட்டியின் முன்பு அமர்ந்து பார்த்து ரசிப்பது அந்நியம். நீங்களாக அனுபவப்பட வேண்டும். நிஜ வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். நிழல் வாழ்க்கையில் நேரம் வீணடிப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை. குளத்தை வந்து அடையும் நீரை சுத்திகரித்து விட்டால் மீண்டும் நறுமணப்பூக்கள் மலரும். நிறைய மரங்கள் நட்டு வளர்த்து, மாதம் மும்மாரி பொழிய வைத்தால் வாசமான மலர்கள் பூக்கும். நம்மைச்சுற்றி நரகத்தையும், சுவர்க்கத்தையும் உருவாக்குவது நம் கையில் உள்ளது. சிந்தியுங்கள் தோழர், தோழியரே!

Friday, August 15, 2014

சுற்றுச்சூழல் protect our environment (POET)

ஆடி மாதத்தில் பட்டணம்புதூர் நொய்யல் மதகு

விஷமாகிப்போன ஆறு
            பட்டணம் புதூர் மேற்குப்புறத்தில் ‘எல் அண்டு டி’ புறவழிச்சாலை பிரிவின் உள்ளே நொய்யல் ஆறு செல்கிறது. ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து வெள்ளம் புரழும். அதைப்புகைபடம் எடுக்கலாமென ஒரு நல்ல காலைப்பொழுது மஃப்ளர் கழுத்தில் சுற்றிக்கொண்டு ஸ்கூட்டரில் சென்றேன். வீட்டிலிருந்து பத்து காத தூரம் இருக்கும். ஏமாற்றமே மிஞ்சியது. என்ன செய்ய? வெள்ளம் நுங்கும் நுரையுமாகச்செல்கிறது என எழுதுவதை மாற்றி, வேதிப்பொருட்கள் கலந்த நுரை பொங்கிக்கொண்டிருந்தது. மக்கள் புலங்கிய சாக்கடை நீர் கலந்தும், செல்வபுரம் போன்ற பகுதிகளில் பொறுப்பற்ற சாயப்பட்டறை அதிபர்கள் விடும் சாய நீர் கலந்தும், நீர் மாசுபட்டு நுரைத்துக்கொண்டு மெதுவாக நகர்ந்தது.
நீரில் விஷமேற்றப்பட்டு விட்டது. இதில் தவளை, மீன், நண்டு, தண்ணீர் பாம்பு, புழுப்பூச்சிகள் எப்படி வாழும்? இதில் பிடித்த மீன் சாப்பிடும் மனிதன் கதி என்ன? அங்கிருந்த பிரிந்த ராஜவாய்க்கால் பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சுலூர், ஆச்சான் குளம் என நிரப்பப் போகும் நொய்யல்நீர் விஷமாகிக் கருப்பாகத் தெரிந்தது. ராஜவாய்கால் எனில் குளத்துக்கு நீர் கொண்டுபோகும் கால்வாய். இது போல ஒவ்வொரு குளத்துக்கும் நீர் எடுத்துப்போகும் கால்வாய்கள் ராஜ வாய்க்கால்களென புரிந்து கொள்ளவேண்டும்.இதையேன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பார்த்துக்கொண்டு மெத்தனமாக உள்ளது?
நான் அந்த மதகில் ஆச்சர்யப்பட்டு நிற்க, ஒரு பெரியவர் ‘காத்து அடிக்கப்போகுது. நுரை மேலே பட்டுதுனா உடம்பெல்லாம் அரிக்கும். இந்தப்பக்கம் வந்து விடுங்கள்’ என்றார். விலகி ஓட நுரை சர்ஃப் போல திட்டுத்திட்டாகப்பறந்தன. இங்கு காதல் பாட்டு எடுக்கலாமா? கரையோர தாவரங்களின் கதி என்ன? நீர் அருந்தும் பறவைகளின் கதி என்ன? ஏன் மனிதன் பொறுப்புணர்வு இல்லாமல் இப்படி நீரை மாசுபடுத்துகிறான். இவன் எப்போது திருந்துவான்? புகைப் படத்தைப்பாருங்கள். நெஞ்சம் தீயாக கனழ்கிறது இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்…..

இதை சீர் செய்வது எங்ஙனம்? 1. சாயப்பட்டறைகளை இழுத்து மூடுவது 2. சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் சாய நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். 3.குளத்துக்கு நீர் விடும் போது இயந்திரம் மூலமாக சுத்திகரித்து விடவேண்டும். 4. மழைக்காடுகளை உருவாக்கி நீர்வளம் பெருக்க, வேதிப்பொருட்கள் சதவீதம் குறைந்து இவ்வளவு தீமை வராது.

Tuesday, August 12, 2014

அறுகி வரும் பச்சோந்தி

பட்டணம் புதூர் பாதையில் மாய்ந்து போன பச்சோந்தி

வாளையார் பகுதியில் நண்பர் ராமச்சந்திர மூர்த்தி எடுத்த படம்.

பச்சோந்தி (Chameleon)
            நண்பர் ராமச்சந்திரமூர்த்தி சார் பச்சோந்தியை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. நீங்கள் சமீபத்தில் பார்த்தீர்களா?’ எனக்கேட்டார். நானும் பார்த்து பல வருஷங்களாயிற்று,’ என்றேன். ‘நான் வாளையார் சென்ற போது எடுத்த புகைப்படம் என ஒரு பச்சோந்தி படத்தை மின் அஞ்சலில் அனுப்பி வைத்தார். அது சாதாரணமாகப் பச்சையாக இருக்கும். மெதுவாகத்தான் கால்களில் நடந்து நகரும். வேலி ஓணான் மாதிரிகுடுகுடுஎன ஓடாது. அடர்ந்த வேலிகளில் இதைப்பார்க்கலாம்.
            உடலில் இருக்கும் நிறமிகளைக்கொண்டு, இது எதிரியிடம் இருந்து தப்பிப்பிற்காக, இடத்துக்கு தக்கவாறு நிறம் மாற்றிக்கொள்ளும். இந்த நிறம் மாற்றும் தன்மை இரையைப்பிடிப்பதற்கும் பயனளிக்கிறது. நாக்கு நீட்டுமளவு (அதாவது ஒன்னரையடியாவது இருக்கும்) தூரத்திலிருக்கும் இரை இதனைக் காணமுடியாதவாறு இடத்தின் நிறத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும்.  ஓடி தப்பிக்க முடியாது என்பதற்காகவும் நாக்கை நம்பி வயிறு வளர்க்கும் உயிரினம் ஆதலின், இறைவன் செய்த உதவியிது. வேலி ஓணான் மாதிரி உடல், தலை அமைப்பு. செதில், செதிலாக உடல் மேற்பரப்பு உள்ளது. மற்றபடி கண்கள், தலை வித்தியாச அமைப்பு கொண்டது. வால் வட்டமாக சங்குசக்கரம் மாதிரி உள்ளது. நாக்கு ஒண்ணரை அடிக்கு நீட்டி பூச்சிகளப்பிடிக்கும். நாக்கு நுனி ஒட்டிக்கொள்ளும் தன்மையுள்ளது. இதன் உணவு பூச்சிகள்.
            அடிக்கடி நண்பர்கள் குழுவுக்குள் மாற்றி, மாற்றி ஒரு பக்கம் சாதகமாகப்பேசினால், ‘போடாப்பச்சோந்தி எனத்திட்டுகிறோம். ஒரு நாள் பட்டணம் புதூர் அருகில் மதகு ஒன்று உளது. ஆடியில்  நொய்யல் ஆற்றுநீர் வழிந்து போகும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதை புகைப்படம்எடுக்கலாம் எனஅதிகாலை ஸ்கூட்டரில்  போனால் ஏமாற்றம் மிஞ்சியது. மதகு வழியவில்லை. அங்கிருந்து பட்டணம் புதூர் வழியாக பள்ளபாளையம் குளத்துக்குப் போய் பின்பு ராமகிருஷ்ண மடத்தின் அனாதை விடுதிக்குப் போகலாம் என நினைத்து பட்டணம் புதூர் நுழைந்தேன். பாதையில் பச்சோந்தி அரைபட்டுக்கிடந்தது.இரவில் வாகனம் எதோ அதன் மேல் ஏற்றி விட்டது. அந்தோ! பச்சோந்தி மெதுவாக நகரும், நகர்ந்து பாதையின் அடுத்த பக்கம் போவதற்குள் விபத்தில் மாட்டி இறந்து கிடந்தது. நேரில் பார்த்து சந்தோஷம் கொள்ளாது துரதிஷ்டமாக இறந்து போனதைக்கண்டேன். பச்சோந்தி அறுகி வரும் ஊர்வன இனம்.
            கால்கள் வலுவற்றது அதனால் வால் புதர்ச்செடிகளில் நகர பிடிமானத்துக்கு பிடித்துக்கொள்கிறது. கண்கள் சுற்றிலும் பார்க்க ஏதுவாக துறுத்திக்கொண்டிருக்கும் அமைப்பு.
      மனிதனில் பச்சோந்தி வேண்டாம், ஆனால் நிறம் மாறும் இந்த பாவப்பட்ட பச்சோந்தி தேவை.


Friday, August 1, 2014

ஒரு பறவை உயிர் போனது

            வெண்தலைச்சிலம்பன்கள் (White headed Babblers) நிறைய என் சின்னத்தோட்டத்துக்கு வருகை தரும். அவைகளின் சங்கீத ‘க்லிங், க்லிங்’ ஒலி காதுகளில் விழத் தேன் பாய்வது போல இருக்கும். அவைகளின் தாகம் தணிக்க ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு குடம் நீர் பிடிக்கும் அளவில் தோட்டத்தில் வைத்திருந்தேன். தினம் சிலம்பன்கள் நான் வைத்து வளர்த்த எழுபது மரக்கூட்டங்களில் ஆடித்திளைத்து, இரை பொறுக்கித் திரிந்து என் இல்லத்தோட்டதுக்கு வரும். இங்கும் வந்து காய்ந்த தேக்கு இலைகளுக்குக்கீழ் எட்டிப்பார்த்து, அவைகளை தள்ளி விட்டு, மதிலில் அமரும். பிறகு இரண்டு, மூன்று என பிளாஸ்டிக் பாத்திரத்தின் விழிம்பில் அமர்ந்து, சிலம்பன்கள் நீர் அருந்தும். சில சமயம் நீரைப்பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் குளிக்கும்.
             பெரும்பாலும் அனைத்துப்பறவைகளும் குளிக்கும். உடம்புச்சூட்டைத்தணிக்கவும், இறகில் உற்பத்தியாகும் உண்ணிகளை நீக்கவும் இது உதவும். சில பறவைகள் உண்ணி நீக்க மண் குளியலிடும். தேன்சிட்டு போன்ற சின்னப்பறவைகள், மலர்களில் முத்துக்களாய் அரும்பியிருக்கும் காலைப்பனி முத்துக்களில், தேனுக்காக நுழையும் போது உரசி விடும். அதற்கு அதுவே போதுமானது. இறகுளில் படும் ஈரத்தை கோதி விடும். ஆனால் பறவைகள் அதிகமாக நனைந்தால் அதனால் பறக்க முடியாது. உடலில் உள்ள பொங்குகள், சிறகுகளில் உள்ள சின்னச்சின்ன பொங்குகள் அதிக ஈரத்தில் இழுபட்டு உதிரும். உலர நேரமாகி, உடல் எடை கூடி பறக்க முடியாது. அதற்குள் கழுகு போன்ற எதிரிகள் அவைகளை இரையாக்கி விடலாம்.
            ஒரு வெள்ளிக்கிழமை நாள், பள்ளியில் இயற்கை வகுப்பு எடுப்பது பற்றி வினவ கிளம்பிய போது, தோட்டத்தைச்சாளரம் வழியாக எட்டிப்பார்க்க, ஒரு சிலம்பன் நீர் பாத்திர விளிம்பில் அமர்ந்து நீரில் படுத்து நீந்திக் கொண்டிருந்த மற்றொரு சிலம்பனை எடுத்துத்தள்ளி விட,முயன்று கொண்டிருந்தது. இது எனக்கு திடீரெனப்புரியவில்லை. ஆனந்தமாக குளியலிடுகிறது என இதைப்புகைப்படமாக்க மாடியிலிருந்த காமெராவை எடுக்க படிக்கட்டுகளில் ஓடினேன். அதற்குள் நீரில் நன்கு ஊறிய சிலம்பன் மயிர்களை கால்களில் இழந்து உயிருக்குப்போராடி கொண்டிருந்தது. நானும்  இரு நிமிஷம் தாமதம் செய்யது விட்டேன்.பாத்திரம் அருகே நெருங்கி பறவையை எடுத்த போது கிட்டத்தட்ட உயிர் போய் விட்டது. அதை மீட்க பிரயத்தனப்பட்ட விளிம்பில் அமர்ந்திருந்த சிலம்பன் மதில் மேல் அமர்ந்து என்னையும், இறந்த சகபறவையையும் பார்த்து சோகப்பட்டது எனது மனதைப் பிசைந்தது.

            குடித்த நீர் வருமா எனப்பறவையைத்தலைகீழாகப்பிடித்து, மார்பை சற்றே அழுத்தி, அலகு வழியே காற்றை ஊதி, ஒன்றுக்கும் சிலம்பன் கண்திறக்கவில்லை. அதன்கதை முடிந்தது. ஒரு சிலம்பன் கண்மூட நானும் கால் பங்கு காரணமாகி விட்டது, என்னை உறுத்தியது. அதன் தலைவிதி முடிந்தது என என்னை நானே தேற்றிக்கொண்டேன்.குற்ற உணர்வினால் அன்று இரவு சரியாக உறக்கம் பிடிக்கவில்லை. எப்போதும் தன்னிலையிலிருத்தல் அவசியம். பல சிந்தனையிலிருந்தால் இப்படித்தான் விபரீதம் நடக்கும்.