Friday, August 22, 2014


தாழம்பூ
          
          சூலூரில் இரட்டைக்குளங்கள் வடக்குப்புறமாக உள்ளன. ஒன்று பெரியகுளம் இரண்டு செங்குளம் () சின்னக்குளம். இந்த மாதிரி சாக்கடைநீர் கலக்காத போது, உண்மையிலேயே நறுமணம் வீசிய பகுதி. குளத்து மேட்டில் நடந்து போனால் தாழம்பூ, தாமரை, அல்லி போன்ற மலர்களைக்கண்டு ரசிப்பதோடல்லாமல், நறுமணம் நுகர்ந்து இன்புறலாம். தற்போது, சாக்கடையின் முடை நாற்றம் வீசுகிறது. சாயம், அமிலம், மனிதனின் சிறுநீர், மலம், புலங்கிய நீர் இப்படி வந்து கலந்து, நறுமணம் வீசும் மலர்கள் காணாமல் போயின. தாழம்பூவில் சிறு பூநாகங்கள் இருக்கும்.

பிரம்மன் சிவபெருமானின் முடியை பார்த்து விட்டார் எனத் தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால், சிவபெருமான்இனி நீ எனக்குப்பூஜைக்கு உரிய பூ நியிருக்கமுடியாதுஎன சபித்து விட்டார். தாழம்பூ புதர் பெரியது. இலை விளிம்புகள் ரம்பம்போல  இருக்கும். இலைகள் நீளநீளமாக இருக்கும். போன மாதத்தில் கண்ணுக்கு ஒரே ஒரு புதர் தாழம்பூ என்னில் கண்ணில் பட்டது. இது பெரிய குளத்தின் கிழமேற்குக் கோடியில் உள்ளது. ‘ஓலைக்கா கொண்டையிலே ஒரு கூடை தாழம்பூஎன பாடியவாறு சிறுமிகளும், பெண்களும், இளைஞர்களும் குளத்து மேட்டில் காணும் பொங்கல் நாளில் குதூகலித்துத்திரிந்து வலம் வந்தது இப்போது எங்கே? இதே கதி தான் நிறைய கிராமங்கள் மற்றும் நகரங்களில் என உணரவேண்டும்.

அதை இப்போது தொலைக்காட்சி(இடியட் பாக்ஸ்)பெட்டியின் முன்பு அமர்ந்து பார்த்து ரசிப்பது அந்நியம். நீங்களாக அனுபவப்பட வேண்டும். நிஜ வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். நிழல் வாழ்க்கையில் நேரம் வீணடிப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை. குளத்தை வந்து அடையும் நீரை சுத்திகரித்து விட்டால் மீண்டும் நறுமணப்பூக்கள் மலரும். நிறைய மரங்கள் நட்டு வளர்த்து, மாதம் மும்மாரி பொழிய வைத்தால் வாசமான மலர்கள் பூக்கும். நம்மைச்சுற்றி நரகத்தையும், சுவர்க்கத்தையும் உருவாக்குவது நம் கையில் உள்ளது. சிந்தியுங்கள் தோழர், தோழியரே!

No comments:

Post a Comment