Tuesday, August 12, 2014

அறுகி வரும் பச்சோந்தி

பட்டணம் புதூர் பாதையில் மாய்ந்து போன பச்சோந்தி

வாளையார் பகுதியில் நண்பர் ராமச்சந்திர மூர்த்தி எடுத்த படம்.

பச்சோந்தி (Chameleon)
            நண்பர் ராமச்சந்திரமூர்த்தி சார் பச்சோந்தியை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. நீங்கள் சமீபத்தில் பார்த்தீர்களா?’ எனக்கேட்டார். நானும் பார்த்து பல வருஷங்களாயிற்று,’ என்றேன். ‘நான் வாளையார் சென்ற போது எடுத்த புகைப்படம் என ஒரு பச்சோந்தி படத்தை மின் அஞ்சலில் அனுப்பி வைத்தார். அது சாதாரணமாகப் பச்சையாக இருக்கும். மெதுவாகத்தான் கால்களில் நடந்து நகரும். வேலி ஓணான் மாதிரிகுடுகுடுஎன ஓடாது. அடர்ந்த வேலிகளில் இதைப்பார்க்கலாம்.
            உடலில் இருக்கும் நிறமிகளைக்கொண்டு, இது எதிரியிடம் இருந்து தப்பிப்பிற்காக, இடத்துக்கு தக்கவாறு நிறம் மாற்றிக்கொள்ளும். இந்த நிறம் மாற்றும் தன்மை இரையைப்பிடிப்பதற்கும் பயனளிக்கிறது. நாக்கு நீட்டுமளவு (அதாவது ஒன்னரையடியாவது இருக்கும்) தூரத்திலிருக்கும் இரை இதனைக் காணமுடியாதவாறு இடத்தின் நிறத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும்.  ஓடி தப்பிக்க முடியாது என்பதற்காகவும் நாக்கை நம்பி வயிறு வளர்க்கும் உயிரினம் ஆதலின், இறைவன் செய்த உதவியிது. வேலி ஓணான் மாதிரி உடல், தலை அமைப்பு. செதில், செதிலாக உடல் மேற்பரப்பு உள்ளது. மற்றபடி கண்கள், தலை வித்தியாச அமைப்பு கொண்டது. வால் வட்டமாக சங்குசக்கரம் மாதிரி உள்ளது. நாக்கு ஒண்ணரை அடிக்கு நீட்டி பூச்சிகளப்பிடிக்கும். நாக்கு நுனி ஒட்டிக்கொள்ளும் தன்மையுள்ளது. இதன் உணவு பூச்சிகள்.
            அடிக்கடி நண்பர்கள் குழுவுக்குள் மாற்றி, மாற்றி ஒரு பக்கம் சாதகமாகப்பேசினால், ‘போடாப்பச்சோந்தி எனத்திட்டுகிறோம். ஒரு நாள் பட்டணம் புதூர் அருகில் மதகு ஒன்று உளது. ஆடியில்  நொய்யல் ஆற்றுநீர் வழிந்து போகும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதை புகைப்படம்எடுக்கலாம் எனஅதிகாலை ஸ்கூட்டரில்  போனால் ஏமாற்றம் மிஞ்சியது. மதகு வழியவில்லை. அங்கிருந்து பட்டணம் புதூர் வழியாக பள்ளபாளையம் குளத்துக்குப் போய் பின்பு ராமகிருஷ்ண மடத்தின் அனாதை விடுதிக்குப் போகலாம் என நினைத்து பட்டணம் புதூர் நுழைந்தேன். பாதையில் பச்சோந்தி அரைபட்டுக்கிடந்தது.இரவில் வாகனம் எதோ அதன் மேல் ஏற்றி விட்டது. அந்தோ! பச்சோந்தி மெதுவாக நகரும், நகர்ந்து பாதையின் அடுத்த பக்கம் போவதற்குள் விபத்தில் மாட்டி இறந்து கிடந்தது. நேரில் பார்த்து சந்தோஷம் கொள்ளாது துரதிஷ்டமாக இறந்து போனதைக்கண்டேன். பச்சோந்தி அறுகி வரும் ஊர்வன இனம்.
            கால்கள் வலுவற்றது அதனால் வால் புதர்ச்செடிகளில் நகர பிடிமானத்துக்கு பிடித்துக்கொள்கிறது. கண்கள் சுற்றிலும் பார்க்க ஏதுவாக துறுத்திக்கொண்டிருக்கும் அமைப்பு.
      மனிதனில் பச்சோந்தி வேண்டாம், ஆனால் நிறம் மாறும் இந்த பாவப்பட்ட பச்சோந்தி தேவை.


No comments:

Post a Comment