ஒரு பறவை உயிர் போனது
வெண்தலைச்சிலம்பன்கள் (White headed Babblers) நிறைய என் சின்னத்தோட்டத்துக்கு
வருகை தரும். அவைகளின் சங்கீத ‘க்லிங், க்லிங்’ ஒலி காதுகளில் விழத் தேன் பாய்வது போல
இருக்கும். அவைகளின் தாகம் தணிக்க ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு குடம் நீர் பிடிக்கும்
அளவில் தோட்டத்தில் வைத்திருந்தேன். தினம் சிலம்பன்கள் நான் வைத்து வளர்த்த எழுபது
மரக்கூட்டங்களில் ஆடித்திளைத்து, இரை பொறுக்கித் திரிந்து என் இல்லத்தோட்டதுக்கு வரும்.
இங்கும் வந்து காய்ந்த தேக்கு இலைகளுக்குக்கீழ் எட்டிப்பார்த்து, அவைகளை தள்ளி விட்டு,
மதிலில் அமரும். பிறகு இரண்டு, மூன்று என பிளாஸ்டிக் பாத்திரத்தின் விழிம்பில் அமர்ந்து,
சிலம்பன்கள் நீர் அருந்தும். சில சமயம் நீரைப்பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும்
குளிக்கும்.
பெரும்பாலும் அனைத்துப்பறவைகளும் குளிக்கும். உடம்புச்சூட்டைத்தணிக்கவும்,
இறகில் உற்பத்தியாகும் உண்ணிகளை நீக்கவும் இது உதவும். சில பறவைகள் உண்ணி நீக்க மண்
குளியலிடும். தேன்சிட்டு போன்ற சின்னப்பறவைகள், மலர்களில் முத்துக்களாய் அரும்பியிருக்கும்
காலைப்பனி முத்துக்களில், தேனுக்காக நுழையும் போது உரசி விடும். அதற்கு அதுவே போதுமானது.
இறகுளில் படும் ஈரத்தை கோதி விடும். ஆனால் பறவைகள் அதிகமாக நனைந்தால் அதனால் பறக்க
முடியாது. உடலில் உள்ள பொங்குகள், சிறகுகளில் உள்ள சின்னச்சின்ன பொங்குகள் அதிக ஈரத்தில்
இழுபட்டு உதிரும். உலர நேரமாகி, உடல் எடை கூடி பறக்க முடியாது. அதற்குள் கழுகு போன்ற
எதிரிகள் அவைகளை இரையாக்கி விடலாம்.
ஒரு வெள்ளிக்கிழமை நாள், பள்ளியில் இயற்கை
வகுப்பு எடுப்பது பற்றி வினவ கிளம்பிய போது, தோட்டத்தைச்சாளரம் வழியாக எட்டிப்பார்க்க,
ஒரு சிலம்பன் நீர் பாத்திர விளிம்பில் அமர்ந்து நீரில் படுத்து நீந்திக் கொண்டிருந்த
மற்றொரு சிலம்பனை எடுத்துத்தள்ளி விட,முயன்று கொண்டிருந்தது. இது எனக்கு திடீரெனப்புரியவில்லை.
ஆனந்தமாக குளியலிடுகிறது என இதைப்புகைப்படமாக்க மாடியிலிருந்த காமெராவை எடுக்க படிக்கட்டுகளில்
ஓடினேன். அதற்குள் நீரில் நன்கு ஊறிய சிலம்பன் மயிர்களை கால்களில் இழந்து உயிருக்குப்போராடி
கொண்டிருந்தது. நானும் இரு நிமிஷம் தாமதம்
செய்யது விட்டேன்.பாத்திரம் அருகே நெருங்கி பறவையை எடுத்த போது கிட்டத்தட்ட உயிர் போய்
விட்டது. அதை மீட்க பிரயத்தனப்பட்ட விளிம்பில் அமர்ந்திருந்த சிலம்பன் மதில் மேல் அமர்ந்து
என்னையும், இறந்த சகபறவையையும் பார்த்து சோகப்பட்டது எனது மனதைப் பிசைந்தது.
குடித்த நீர் வருமா எனப்பறவையைத்தலைகீழாகப்பிடித்து,
மார்பை சற்றே அழுத்தி, அலகு வழியே காற்றை ஊதி, ஒன்றுக்கும் சிலம்பன் கண்திறக்கவில்லை.
அதன்கதை முடிந்தது. ஒரு சிலம்பன் கண்மூட நானும் கால் பங்கு காரணமாகி விட்டது, என்னை
உறுத்தியது. அதன் தலைவிதி முடிந்தது என என்னை நானே தேற்றிக்கொண்டேன்.குற்ற உணர்வினால்
அன்று இரவு சரியாக உறக்கம் பிடிக்கவில்லை.
எப்போதும் தன்னிலையிலிருத்தல்
அவசியம். பல சிந்தனையிலிருந்தால் இப்படித்தான் விபரீதம் நடக்கும்.
No comments:
Post a Comment