Tuesday, April 7, 2015

குக்குறுவான்
                                     coppersmith




இந்த இனப்பறவை எப்படி என் மரமான குல்மோகஹருக்கு வந்து குடிபுகுந்தது என புலப்படவில்லை. எனது குடியிருப்புப்பகுதி சற்று சந்தடியான பகுதியாக மாறியது ஆச்சர்யம். குக்குறுவான் மரங்கள் கொண்ட சோலையில் உலாவித்திரியும் என நினைத்திருந்தேன்.ஆனால் சலிம் அலி சொல்கிறார்’ Habits: Found wherever there are fruiting trees, especially the various species of wild fig, be it in outlying forest or within a noisy city” இது போதுமே! மர்மத்துக்கு விடை கிடைத்தாயிற்று. சந்தடி குடியிருப்பானாலும், இங்கு நான் வைத்து வளர்த்த 100 மரநண்பர்கள் இருக்கிறார்கள். அரசமரம் பழங்கள் புஷ்பிக்கத்தொடங்கியதை நான் பார்க்கத்தவிறினேன். ஆனால் குக்குறுவான் பார்க்கத்தவறவில்லை. குக்குறுவான் ஒரு ஜோடி இங்கு வந்ததல்லாமல் ஜன்னலை எட்டிப்பார்த்தால் போதும், கூடு ரசிக்கும்படி குல்மோஹரில் துளையிட்டு கூடும் வைத்து விட்டது. மகிழ்ச்சிக்குரிய சங்கதி. குஞ்சுகளுக்கு உணவூட்ட அரசமரப்பழங்கள் போதுமே என குக்குறுவான் ஜோடி முடிவெடுத்து இரண்டு முட்டைகளை இட்டு அடைகாத்தது. குல்மோஹர் தண்டு மிருதுவானது. இருப்பினும் சில வாரக்கடின உழைப்பினால் மரத்தண்டு துளை தயாரானது. முதலில் இரண்டு அலகுகள் மரத்துளை வழியாக  வந்து அரசமரப்பழங்களை அன்னையிடம் பெற்றுக்கொண்டன. பிறகு ஒரு அலகு மட்டும் வர மற்றொன்று இறந்து விட்டதோ என நினைத்தது தவறு என சில வாரங்களுக்குப்பிறகு தெரிந்தது. இரண்டு அலகுகள் மரத்துளை வழியாக நீட்டினால் நெருக்கியடிக்க வேண்டுமென மாற்றி மாற்றி அலகை நீட்டியது தெரியவர அவற்றின் தகவமைப்பு மெய்சிலிர்க்க வைத்தது. எனது நூலான “Diary on the nesting behavior of Indian Birds”-ல் இதன் வாழ்க்கை சக்கரத்தை எழுதியிருக்கிறேன். ஆனால் ஒன்றிரண்டு விட்டுபோனது குறித்து வருந்துகிறேன். இந்தப்பறவை கூட்டினைச்சுத்தம் செய்கிறது. உள்ளே போன அப்பா () அம்மா வாய் நிறைய குஞ்சுளின் கழிவை எடுத்து தூரப்பறந்து எறிகிறது. மரத்துளை நிரம்பி வழிந்தால் இரண்டு குஞ்சுளுக்கு இடம் போதாது. மேலும் அம்மா () அப்பா பறவை பல சமயம் கூட்டுக்குள் தங்குகிறது. இன்னொரு விஷயம் குஞ்சு பறக்கத்தொடங்கும் போது பார்த்தால் கிரிம்சன் நிறம் முன் நெற்றியிலும், மார்பிலும் இல்லாதிருப்பது கவனித்தேன். அதை புகைப்படம் எடுத்த பதிவு மிக சிலாகிக்கக்கூடியது. உணவு ஊட்டல், குஞ்சுகள் அம்மா வாயிலிருந்து பிடுங்கிக்கொள்கின்றன. சிலசமயம் அம்மா ஊட்டி விடுகிறது. அம்மா அடுத்த வீதி குல்மோஹரில் அமர்ந்து ஒலி எழுப்ப இளையர் என் வீதி குல்மோஹர் கிளையிலிருந்து முதன்முதலாக இறக்கை விரித்து அம்மா இருக்கும் அடுத்த வீதி குல்மோஹருக்குபறந்ததும் நான் சந்தோஷத்தில் கைதட்டினேன். அடுத்த இளஞி ஒரு வாரம் கழித்து வானை அளக்கப்பறந்ததும் எனக்கு இரட்டை சந்தோஷம். வால்காக்கை கூட்டிலிருந்த குஞ்சுகளை கபளிகரம் பண்ணப்பார்த்த போது, பெற்றோர் பறவைகள் கத்த அது தயங்கி விலகியது. இந்த மாதிரி இடையூரிலும் வெற்றிகரமான வாழ்க்கை நிகழ்வது இறைவன் கிருபை.