Friday, January 16, 2015


ஹவேலி


Bikaner Havelies

ஹவேலி
            நான் என்னவோ இப்போது தான் ஹவேலி பற்றி கேள்விப்படுகிறேன்.இந்த வகை கலைநுணுக்கம் கொண்ட வீடுகள் ராஜஸ்தானில் உள்ளது. முழுக்க மணற்கற்களால் ஆனவை. மஞ்சள் மற்றும் பிங்க் நிறம் கொண்டவை. பிகானிரில் பிங்க் நிறம், ஜெய்சால்மிரில் சற்று மஞ்சள் நிறம். ராஜஸ்தானத்து வெப்பம் பூமிக்கடியில் இப்பேற்பட்ட மிருதுவான நிறக்கற்களை உருவாக்கியுள்ளது. அங்கு கிடைத்த கற்களைக்கொண்டே அரண்மனைகளும், மாளிகைகளும், வீடுகளும் மிருதுநிறக்கற்களில் மரத்தை செதுக்குவது போல செதுக்கியுள்ளனர். அங்குலம், அங்குலமாக இயற்கை ஓவியங்கள் வடித்துள்ளனர். ஜன்னல், அது ஜன்னலல்ல கலைப்பொக்கிஷம். ஆண்களுக்கு தனி அறைகள், பெண்களுக்கு தனி அறைகள். யானை, மலர், இலை, கொடி என அனைத்தும் நாம் அன்றாடம் பார்க்கும் இயற்கைகளை ஓவியங்களாகக் கல்லில் வடித்துள்ளனர்.
 கல்லில் ஒரு ரம்மியமான கவிதை எழுதியுள்ளனர். கற்களல்ல இவை இனிமையான இசை. உலகில் எந்த மூலையிலும் இப்படி மனதைக்கவரும் கல்ஓவியங்களில் செதுக்கப்பட்ட வீடுகளில்லை எனலாம். இவை கலைப்பொக்கிஷங்கள். வீதிகள் 20’ அடிக்குத்தானிருக்கும். ஆன்மிகர்கள் இவ்வீடுகளை கலைக்கோவில்களாக வைத்துள்ளனர். கிருஷ்ணர், கண்ணன், சிவன் என கல்லில் சித்திரங்கள் தீட்டியுள்ளனர். பெரும் செல்வந்தர்கள் ஹவேலிகளை வாங்கி பராமரிக்கின்றனர். நானும், நண்பர் வஜ்ரவேலும் வழிகாட்டி மனோஜ் ஆங்கிலத்தில் விவரிக்க ஆச்சர்யத்துடன் ஹவேலியைப்பார்த்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு புடைப்பு ஓவியங்களும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். நிறையவே மேற்கு வங்கத்து செல்வந்தர் ஹவேலிகளை வைத்துள்ளனர். ஒன்பது மாதங்கள் செல்வம் சேர்க்க உழைப்பு,
பிறகு மூன்று மாதங்கள் ஹவேலிக்கு வந்து ஓய்வில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஹவேலி பவித்திரமானதாக வைத்திருப்பதால் இதற்குள் கழிப்பறைகள் இல்லை. அதற்கு ஹவேலி விட்டு தனியான இடம் வைத்துள்ளனர்.ஜெய்சால்மிரில் ஹவேலிகள் வாடகைக்கு விட்டதை, காலி செய்யப்படுவதாக நண்பர் சொன்னார். மூடியேகிடக்கும் ஹவேலியில் பேய் நடமாட்டம் இருப்பதாக கைடு சொன்னார். இப்படித்தான் எதாவது ஒரு கதை உருவாகும். மொகல் கட்டிடக்கலையும், ராஜ்புத்திரர் கட்டிடக்கலையும் சங்கமிக்கும் கவி பாடும் ஹவேலிகள்.

வங்க சத்யஜித்ரே ஜெய்சால்மிர் ஹவேலிகளைப்பார்த்து, அங்கு நடப்பதாக ஒரு துப்பறியும் கதை எழுதி படமாக எடுத்துள்ளார். அதன் பெயர் சோனார் கேலா (Golden Fortress) படமும், நாவலும் அருமையாக இருக்கும். அவையிரண்டும் இப்போது பார்க்கப்படிக்க கிடைக்குமா என ஏக்கம் நிலவுகிறது. ஹவேலிகள் 400 வருஷம் பழமையானவை. நாம் இவைகளைப்படைத்த முன்னோர்களை நினைத்தும், அது இன்றளவும் நின்று கவிதை சொல்லி வெளிநாட்டினரையும் மயக்குவதைக்கண்டு பெருமையடையலாம்.

2 comments: