Saturday, December 6, 2014


பரத்பூர் பறவை சரணாலயம்


சரணாலயத்துக்குள் நான் சுற்றிய சைக்கிள்

Lessor whistling Teal

Nilgai

            1938-ல் இந்தியாவுக்கு வியாபாரியாக வந்த ஆங்கிரலேயன் வைஸ்ராய் லின்லில்த்கோ என்ற கிங்கரன் 12 நவம்பர் அன்று 4273 பறவைகளை சுட்டு மாபெரும் பாவத்தை வாங்கிக்கொண்டான். ஜாலியன்வாலா படுகொலைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம். இந்த இரத்தப் பீரிட்ட, பறவைக்கதறல் எதிரொலித்த 29 .கி.மீ இடத்தில் நான் இன்று சைக்கிளில் உலவிக் கொண்டு இருக்கிறேன். காலை 07.30-க்கு இன்னும் காற்றில் பனிக் குளர் இருந்தது. தேநீர் மட்டும் எனது அலுவலக ஊழியர் தயாரித்துக் கொடுத்ததை அருந்தியிருந்தேன். மதியம் 12.00 மணி வரை சைக்கிளில் தனியாக நின்று, மிதித்து, தள்ளி, நடந்து உலவினேன்.என்னோடு வந்த ஒரே ஒரு நண்பரும் சைக்கிளில் வேறு மார்க்கத்தில் சுத்திக்கொண்டிருந்தார். பசியிருப்பினும் பறவைகளின் நேசத்தின் மிகை, அதை அசட்டை செய்தது.
அங்கங்கே காய்ந்த மடுக்கள், இடையே அகன்ற கால்வாய், குளம் என வித்தியாச முகம் கொண்டு எனைப்பார்த்த பூமியில் பான்கங்கா, காம்பில் என்ற இரு நதிகள் நீரை ஊட்டுகின்றன. மரங்கள், முட்காடுகள், நீர் நிலை என அப்சரஸ் நாட்டிய மேடை இது. இங்கு மான்கள் வேட்டை, சிறுத்தை வேட்டை நடந்த காட்டுமிராண்டிக்காலமும் உண்டு. ஆங்கிலேயன் துப்பாக்கியோடு இந்தியாவுக்கு வந்ததிலிருந்து, அரக்க குணத்தால் 50 ஆண்டுகள் வேட்டை, சகட்டுமேனிக்கு நடந்துள்ளது. 1902-1965 வரை இந்த Keoladeo bird sanctuary-ல் வாயில்லா ஜீவன்களின் கொலைகள் நடந்தது. 1965-ல் கடைசி சிறுத்தை, பலி கொண்டபிறகு நாகரிகம் தலைதூக்கியது. 1967-ல் வனக்கட்டுப்பாட்டில் வந்தது. 1981-ல் ராம்சர் சைட் பிறகு 1985-ல் World heritage site-ஆனது.
வலசைப்பறவைகள் இந்த வருஷம் நிறைய மழை பெய்ததால் பல்வாறு இடங்களுக்குப் பிரிந்து பறந்துவிட்டன. அதனால் எனக்கு ஏமாற்றமே நிலவியது. 2500 கி.மீ தாண்டி வந்தும் எனதருமைப்பறவைகள் என்னைக்காணாது வேற்று நிலம் போனது. எல்லாமே அறிமுகமான பறவைகள். Blue throat, Scope Owl இரண்டு மட்டுமே எனக்கு புது வரவு. Lessor whistling Teal, Shovellor, White cheeked bulbul மற்றும் Nilgai (மான்இனம்!) கண்ணுக்கு விருந்தளித்தன. கானா கேட் எனும் இடம், சரணாலயப்பகுதி. இது ஆக்ரா--ஜெய்பூர் பிரதானசாலையில் உள்ளது. சரணாலயத்துக்குள் நடக்கலாம். ரூ 40 கொடுத்து சைக்கிளில் அலையலாம். சைக்கிள் ரிக்ஷா, ஒட்டக வண்டி, குதிரை வண்டி என வாடகைக்கு எடுத்து, உள்ளே பறவை கண்காணிப்பு செய்யலாம்.

மற்ற வண்டிகள் பறவைகளை, தொந்தரவுக்கு தள்ளும் என அனுமதி இல்லை. நீறைய வெளிநாட்டினர் வருகை புரிகின்றனர். நுழைவுக்கட்டணம் ரூ 50.  உள்ளே கைடுகள், வாட்ச் டவர், தொந்தரவு ஏற்படுத்தாத கேண்டீன் உள்ளன. கோவையிலிருந்து நேராக ஆக்ரா, அங்கிருந்து பஸ்-சில் பரத்பூர் 61 கி.மீ. சரணாலயம் ஒட்டியே,நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. Pelican, Robin, King fisher என்ற பெயர்கள் விடுதிக்கு வைத்து அசத்தியிருக்கிறார்கள். வசதிக்குத் தக்க விடுதி அறைகள் உண்டு. பறவை அன்பர்கள் கண்டிப்பாக கண்டு களிக்க வேண்டிய பறவை சரணாலயம். வாழ்நாளில் இன்னொரு முறை போவேனா என்பது சந்தேகமே……..

No comments:

Post a Comment