My book "Diary on the nesting behaviour of Indian Birds"-Author Chinna Sathan is now available in, on line shop amazon.in
சிட்டுக்குருவியைப்பற்றி சில உண்மைகள்
அம்பர் கோட்டை, பிகானிர் முன்புற வளாகத்தில் மாடப்புறாக்களும் சிட்டுக்குருவிகளும் |
ஜெய்ப்பூர் நகர வீதியில் சிட்டுக்குருவிகள் |
சிட்டுக்குருவி செல்போன் கோபுரத்தினால்,
அதன் ஜனத்தொகை குறைந்து விட்டது என்பதை விட அதற்கு கூடுகட்ட இடம் தற்போதைய RC கட்டிடங்களில்
இல்லை என்பதும், அதற்கு உணவாகும் தானியங்கள் சிந்துவதில்லை என்பதும் தான் உண்மையான
காரணங்கள். சூலூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அதாவது வெளியூர் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு
தென்புறம் இரண்டு வேப்ப மரங்கள் உள்ளன. இதற்கு அருகில் உள்ள பெரிய மாடி காம்ளக்ஸ் மேலும்
அதற்கு அருகில் உள்ள கட்டிடங்கள் மீதும் செல்போன் கோபுரங்கள் உள்ளன. இருந்தும் சூலூர்
ஊர் குருவிகள் 50 ஜோடியாவது இரவு இங்கு தங்குகின்றன. மாலையில் சென்றால் ‘கிச்,கிச்’
என இதமான ஒலி, குருவிகள் தூங்கப்போகும் முன்னம் கேட்டு மகிழலாம்.
இது போல அதிகாலையில் ‘கிச், கிச்’ ஒலி எழுப்பி
‘குழு குழு’வாக திசைக்கு ஒரு குழுவாக பறந்து சென்று, தோட்டி வேலை செய்வதில், தனது பசியை
ஆற்றிக்கொள்கின்றன. தினமும் இதைப்பார்க்கலாம். செல்போன் கோபுர பாதிப்பு இல்லாததனால்
தானே அங்கு தினமும்தங்குகின்றன. முன்பிருந்த ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் இப்போது
இல்லை. தாழ்வாரங்கள், ஓடு மற்றும் குடிசை பனை, தென்னை ஓலைகள் கூடுகட்ட இடமாயிருந்தது.
இப்போது அவை எங்கே? கிராமத்தில் கூட RC வீடுகள். தானியம் சிந்தாத மாதிரி பிளாஸ்டிக்
மூட்டைகள். அரிசியைத்தவிர மற்ற தானியங்கள் யாரும் உண்பதில்லை. குருவிகள் எண்ணிக்கை
குறைந்து போனதற்கு இது தான் காரணம். தாளப்பறக்கும் பறவை இது. ஆனால் விண்முட்டும் கட்டிடங்களின்
ஊடே எப்படிப்பறப்பது?
ராஜஸ்தானில் நான் ஜெய்சால்மிரிலிருந்து ஜோத்பூர்
ரயிலில் வரும்போது, ரயிலில் சிந்திய தின்பண்டங்களை தின்ன குருவிகள் சில வந்து ரயில்
பெட்டிக்குள் மேய்ந்து கொண்டிருந்தது பார்த்து வியந்து போனேன். ராஜஸ்தானில், மாடப்புறாக்களுக்கு
மக்காச்சோளம் போன்ற தானியங்களை, காரில் வந்தும், மோட்டர் சைக்கிளில் வந்தும் மூட்டையில்
விசிறி விடுகிறார்கள். பிகானிர், அம்பர் கோட்டை முன்பு இந்த மாதிரி தூவி விட்ட தானியங்களை
மாடப்புறாக்களோடு சிட்டுக்குருவிகளும் கொத்தித்தின்கின்றன. ராஜஸ்தான் மக்கள் இப்படி
தானியம் விசிறி விட்டிருப்பதைப் பல அரண்மனை முன்பு பார்த்தேன். அவர்கள் பறவைகளின் மேல்
அன்பு வைத்துள்ளனர். மாடப்புறாக்கள் அபரிமிதமாக உள்ளன.அதே வேளையில் குருவிகளும் தமிழ்
நாட்டை விட அதிகம் உள்ளன. மக்களை ஒட்டி வாழும் இந்தப் பறவை ராஜஸ்தானில் அதிகம் இருக்கும்
போது இங்கு குறைவு பட்டது மனிதனின் தங்குமிடக் கட்டிடமும், உணவு முறையும் மாறிப்போனதால்,
நம்மை நம்பியிருந்த சிட்டுக்குருவிகள் எங்கோயோ தொலைந்து போயின. இவைகளை மீட்டு எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment