Tuesday, September 11, 2012

மலர் அஞ்சலி


நிஷாகந்தி
வாடைக்காற்றில் வாடினாலும்
குளிர் மயிற்க்கால்களைச்சிலிர்த்தாலும்
ஜலதோஷம் இந்த ராவில் பற்றினாலும்
உனைவிட்டு அகலேன்! செல்லமே!

உறக்கத்தில் விழிகள் சொருகினாலும்
ராப்பொழுது ஏறிப் பயமுறுத்தினாலும்
மறுநாள் பணிக்குச்செல்வதானாலும்
உனைவிட்டு விலகேன்! காந்தமே!

விழிகள் அகலவிரித்து வலித்தாலும்
நிலவொளி இல்லாது போனாலும்
ஆடிக்காற்று மழைத்துளிகளை விசிறினாலும்
உனைவிட்டுப்பிரியேன்! வசீகரமே!

வீசும் குளிரலையில் நறுமணத்தோடு,
நடுநசியில் இதழ் விரித்து, காந்தப்பார்வையில்
விழிகள் விரித்து ,நோவுற நோக்க
சொக்கிவருகுதே! சொக்கக்கள்ளியே!

இதோ வருகிறேன் மலராமல் காத்திரு.
எனக்காக மலர்த்தாமல் வலிகாங்கிய
நடுநசிப்பூங்கொத்தே! ஆராதிப்பேன்
உனை விட்டு நீங்காதிருப்பேன்! தேனே!

மலர்த்தாமல் தாமதிக்க, நரம்புகள் வலித்ததோ
பதிவிரதையே! ஒரேயொரு இரவுதானே
என்னோடு இருப்பாய்! பிறகு தலைகவிழ்ப்பாய்
இம்மரணம் அகாலமரணம்! அய்யகோ!

ஆகவே உனை விட்டுப்பிரியாதிருப்பேன்.
ராமுழுதும் உன் விரிந்த விழி பார்த்து
கவிதை சொல்வேன்! உனக்கு என் செய்குவேன்?
இக்கவிதை மட்டுமே சமர்ப்பணமாகுமா?

சூரியனைக்காணாமல் பகல் உணராமல்
மலர்ந்தவுடன் மரிப்பது சாபமோ!
ஆகவே உனைவிட்டு நகராதிருப்பேன்! உன்னதமே!
பிரமிப்பே! நிலத்தில் பூத்த வெண்தாமரையே!

இந்த ரா முழுதும் உன்னோடிருப்பேன்
புலரும் போது நீ இருக்க மாட்டாயே!
என் செய்குவேன்? நீ வாங்கி வந்த வரமிதுவா?
அதிசயமே! இலை விளிம்பு மலரே!

நான் மன்னனாகில் ஆணையிடுவேன்!
நீ மலர்ந்த இரவு யாரும் உறங்காமல்
உன் நினைவாய் விழா எடுக்கவே
ஆணையிடுவேன்! தவறி உறங்கினால்
அவர் தலை கவிழும் உன் போலவே.

நடுநசி நழுவும் போது நின் விழிகள் சொருகும்
தலை கவிழும், நரம்புகள் துவளும்
துடித்துப்போகிறேன். என் சுகந்தமே!
மரித்தாலும் காற்றில் மணம் மரிக்காது.
ஆகவே ரா முழுதும் உனை விட்டு அகலேன்.

வினாடி தோறும் உன் மலர்ச்சியிலென்
இதயம் நின்று போகட்டுமே!
நீ இற்று தலை கவிழ்ந்ததும்
நான் நானாக அற்று தலை கவிழ்ப்பேன்.
நீ நானாக மலர்ந்து, நான் நீயாக விரிந்து
நீ நானாக கவிழ்ந்தும், நான் நீயாக வாடியும்
நறுமணமான இந்த ராக்காற்றில்—நாம்
சங்கமிக்கலாம்- உயிக்குள் உயிராக---………சின்னசாத்தன்



No comments:

Post a Comment