Monday, April 4, 2016


இரக்கம் என்பது சிறிதும் இல்லையடா……!

Both Photo taken by Sri T.R.A. Arunthavaselvan

கொண்டலாத்தி (Hoopoe) 
 இரக்கம் என்பது சிரிதும் இல்லையடா……!
பொள்ளாச்சி, பணிக்கம் பட்டி மஹா சைவம் ஆசிரமத்துக்கு போயிருந்தேன். தோப்புகள்  மற்றும் வானம் பார்த்த நிலங்கள், மழை பெய்தால் புற்கள் தோன்றும் பூமியாகிப்போயின.அங்கு நானும் நண்பரும் உணவுக்காக ஸ்கூட்டரை உருட்டிப்போகும் மண் பாதை தெற்குப்புறம் தோகைகள் உதிர்ந்து போன மொட்டைத் தென்னை மரங்கள். அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது. விசாரித்துப்பார்த்த போது, வீட்டு மனைகள் பிரிப்பதாக சொன்னார்கள். எனக்கு ‘திக்’கென ஆயிற்று.
தென்னை காய்ந்து போன மரங்கள் தாம், ஆனால் அதன் உயரமான தண்டுகளின் துளைகளில்  புள்ளி ஆந்தை, பச்சைக்கிளி, பனங்காடை, மைனா, மரங்கொத்தி, கொண்டலாத்தி  என சாதாரணமாக நாம் பார்க்கக்கூடிய பறவைகள் முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கும்.  துளைகள் இப்பறவைகளால் ஏற்படுத்துவதல்ல, ஏனெனில் இதன் அலகுகள் அப்படியொன்றும் வலிவில்லை. காய்ந்த மரங்களின் தண்டுகள் வெய்யிலுக்கும், மழைக்கும் இளகிப்போய் துளை ஆவதுண்டு. இந்த பொந்துகளை இப்பறவைகள் பயன்படுத்திக்கொள்ளும். தற்போது மார்ச் (பங்குனி). இன்னும் ஒரு மாதத்தில் சித்திரை சுழி மழை வரும். பிறகு தென்மேற்குப்பருவ மழை. அப்போது நிறையப்பூச்சிகள் கிளம்பும். பிப்ரவரி நமக்கு வஸந்த பருவம். குளிர் முடிந்து கதிரவன் கதிர்கள் உக்கிரமாக எத்தனிக்கும் போது பழங்கள், மலர்கள் அரும்பி மலரும், காய்க்கும். எனவே இப் பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் காலமிது.
இந்த ரியல் எஸ்டேட் பேராசைக்காரகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டத்தொடங்கினர். நானும் நண்பரும் உணவுக்குச்செல்லும் போது பேசிப்பார்த்த போது,குஞ்சோ அல்லது முட்டையோ இருந்தால் அந்த மரங்களை வெட்ட மாட்டோம் என்றார். ஆனால் மூன்று வாரம் கழித்து வெட்டி சாய்த்தார்கள். எமக்குத்தெரிந்து மூன்று கிளிக்குஞ்சுகள் மண்ணோடு மண்ணாகின.

பொள்ளாச்சிநெடுஞ்சாலை நான்கு வழிப்பாதை ஆகிக்கொண்டிருக்கிறது. நான் போன மாதம் சென்றிருந்த போது நானும் நண்பரும் நெடுஞ்சாலை ஓரம் மேற்குப்புறமாக நின்றிருந்த மழை மரத்தில் அதாவது தூங்க வாகை மரத்தின் கிளைகளில் நான்கைந்து காகத்தின் கூடுகள் பார்த்தோம். அப்போது இரு சிறுவர்கள் உண்டிவில்லில் கூட்டை அடிக்க, நாங்கள் அவர்களைத்துரத்தினோம். கைபேசி படம் எடுக்கப்பின்னால் ஓட, அவர்கள் பயந்து பாதம் பிடரியில் பட ஓடினர். அப்பாடா! நான்கு கூடுகள் காப்பாற்றி விட்டோம். சரி! கண்ணுகளா! நெடுஞ்சாலை அகலமாகிக்கொண்டிருக்கிறது, தெரியுமில்லே! இப்ப என்ன செய்வே மக்கா? மனிதன் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். செய்யத்தயங்கவும் மாட்டான். இயற்கை மவுனமாக கண்காணித்துக்கொண்டு தான் உள்ளது. இயற்கையின் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.  

3 comments:

  1. நலமா. உங்கள் நூல் படித்தேன். மலை முகடு சிறப்பான , சுவாரஸ்யமான நூல் . உங்கள் தொடர்பு எண் என்ன.. subrabharathi@gmail.com சுப்ரபாரதிமணியன் 9486101003

    ReplyDelete
  2. மைனா குருவியின் இனப்பெருக்க காலம் எது தெரிந்தவர்கள் எனக்கு தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  3. //துளைகள் இப்பறவைகளால் ஏற்படுத்துவதல்ல, ஏனெனில் இதன் அலகுகள் அப்படியொன்றும் வலிவில்லை. காய்ந்த மரங்களின் தண்டுகள் வெய்யிலுக்கும், மழைக்கும் இளகிப்போய் துளை ஆவதுண்டு. இந்த பொந்துகளை இப்பறவைகள் பயன்படுத்திக்கொள்ளும்.//

    அப்படியா?...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete