Sunday, February 2, 2014

வெண்தலைச்சிலம்பன்
White headed Babbler
(Turdoides affinis)
 தைமாதக்குளிர் பனியில் உறைந்து போன நிழற்ப்படம்

எனது இல்ல மதில் சுவர் மேல் 

மனிதருக்கு வாழும் கலை சொல்லித்தர வேண்டியது உள்ளது.
ஆனால் பறவைகளுக்குத்
தேவையில்லை.



                              நான் உங்களுக்கு கொடுப்பதெல்லாம் புதுத்தகவல்களாக சுவராஸ்யமாக இருக்கும். சொன்னதையே சொல்வது எனக்கு கூட அழுப்புத்தட்டும். Babbler- என்ற ஆங்கிலவார்த்தைக்குப்பொருள் ஒன்றுபட்ட பலகுரல்கள். வெண் தலை சிலம்பன்கள் ஆறு-ஏழு என குழவாகச்சுற்றுவது, வசிப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தாத்பர்யம் கடைப்பிடிக்கின்றன. இடையூறு தரும் பறவையாகட்டும், பூனையாகட்டும் ஒன்று பட க்ளிங், க்ளிங் என ஒரு சேரக்கத்தி அத்துடன் இறக்கையை விரித்துக்காட்டி, மூடி பயமுறுத்தி விரட்டும். சாதாரணமான மைனா, காகம், செண்பகம், கொண்டலாத்தி என்பன போன்றவற்றிற்கு பயப்படாதவை. 
           இவற்றில் ஆண் எது, பெண் எது எனக்கண்டு பிடிக்க தலை முடியைப்பிய்த்துக்கொள்ள வேண்டும். அவற்றின் குணாதிசயத்தை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது. எல்லாம் ஒன்று போலவே இருக்கும். கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு எல்லா சிலம்பன்களும் உணவூட்டும். எல்லாமும் காவல் காக்கும். அடை காக்கும். குஞ்சுக்குத்தான் எத்தனை அம்மாக்கள் எத்தனை அப்பாக்கள். யாரோடு யார் ஜோடி என்றும் தெரியாது. ஏழு சகோதரிகள் ஆனால் அதில் சகோதரர்களும் இருக்கிறார்கள். அதில் யார் யார் கணவன் மனைவி என்பதும் தெரியாது. வாஸ்தவத்தில் அதற்குள் ஜோடிகள் மாற்றிக்கொள்ளும் எனத் தோன்றுகிறது. குழுவுக்குள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சாயக்குறியிட்டு அவற்றோடே பல நாட்கள் சிறகடித்தால் தெரிய வரும். 
                             ஒரு சமயத்தில் மூன்று நீலநிற முட்டை மட்டும் வைக்கும்(பழைய காலத்தில் 4). இரு ஜோடி வைத்தால்  ஆறு இருக்கலாம். ஆனால் நான் பார்த்தது மூன்று தான்.ஏழு சிலம்பன் எனில் அவற்றில் மூன்றாவது பெண்ணாக இருந்து, ஒன்பது முட்டை வைக்கலாமே!அப்படியில்லை. அதனால் இந்தக்குழுவின் மர்மம் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. இந்தக்குழு மர்மம் பெரிய சாம்பல் சிலம்பன்(Large Grey Babbler), காட்டுச்சிலம்பன்(Jungle Babbler), குவாக்கர் சிலம்பன் (Quakker Babbler) போன்ற அனைத்து சிலம்பன் குழுவுக்கும் பொறுந்தும்.
                  குழு சிலம்பன் பூச்சி வேட்டையில் ஒரு ஆதாயம் என்னவெனில் ஏழு பறவைகளும் சூழ்ந்தும், குதித்தும், ஒரு சேர முன்னேறித் தேடும் போது நிறையப்பூச்சிகள் இடம் பெயறும். அப்போது லபக், லபக் என குழு உறுப்பினர் பிடித்துக்கொள்ளலாம். இவை இடம் பெயறும் போதெல்லாம் சப்திக்கிறது! ஏனெனில் ஒருவரையொருவர் பிரியாமல் இருக்கத்தான். குழு பிரியாமலிர்க்கத்தான். ஒரு குழு உறுப்பினர் இன்னொரு சிலம்பன் குழுவில் சேராது எனலாம். மனிதன் எப்படி வேண்டுமானாலும் கூட்டு வைத்துக்கொள்வான். 
                        இவை காகத்தைப்போல எதுவும் உண்ணும். என் வீட்டு முன்புள்ள விஜய விநாயகர் கோவில் படியில் வைக்கப்படும் சர்க்கரைப்பொங்கல், ஸ்தம்பத்தின் மீது வைக்கப்படும் சர்க்கரை அவல் என என் கண்பட பார்த்திருக்கிறேன். இவை தரையைக்கிளறி இரை தேடுவதால் தாழப்பறக்கும் விதமாக இறைவன் மெலிதான பலமற்ற சிறகுகளைத் தந்துள்ளார். ஒரு பர்லாங்கு கூட ஒரே சமயத்தில் பறக்க இயலாது. இவை ஏழு பேர் கொண்ட குழுவாக இருப்பினும் சுடலைக்குயில் (Pied crested Cuckoo)திருட்டுத்தனமாக தன் முட்டைகளை சிலம்பன் கூட்டிலிடுவது நல்ல தமாஷ்! இவை சுடலைக்குயில் சப் அடல்ட் எனத்தெரிந்தும் உணவு ஊட்டுவதை எனது இரண்டு கண்ணால் பார்த்துள்ளேன். தன் இனமாக இருப்பின் அடுத்த குழுவிடம் சண்டையில்லை. வெவ்வேறு குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இரை தேடுகின்றன். ஆனால் சிலம்பனில் பெரிய சாம்பல் சிலம்பன் குழு போல வேறு குழுவாக இருப்பின் விரட்டுகின்றன. இதை நான் என் இரண்டு கண்ணால் பார்த்தேன்.  
                             ஒரு முறை மீன்காரி மீனைச்சுத்தம் செய்யும் போது, அவளைச்சுற்றி நல்ல காகம், அண்டங்காகம்,பூனை, நாய், சிலம்பன் அமர்ந்திருந்தன. சிலம்பன் ,மீன் கூட உண்ணுமோ! பிறகு தான் தெரிந்தது, மீன் குடலை புழு என நினைத்து அமர்ந்திருந்தது உணர்ந்தேன். இன்னும் இவை எப்படி குளிக்கின்றன? இரவில் எங்கு தங்குகின்றன? சுடலைக்குயிலிடம் எப்படி ஏமாறுகிறது? மற்றும் கூடு பற்றிய தகவல்கள் அறிய எனது”Diary on the nesting behavior of Indian Bird” நீங்கள் படிக்கலாம்.

2 comments:

  1. அருமையான தகவள் வாழ்க வளமுடன்

    ReplyDelete