Sunday, February 23, 2014

Migrant watch
Common Tern (Sterna hirundo)

ஆலா

Common Terns from Ladak visited Sulur Lake today (23.02.2014)


                வலசை புதிரானது. அதிகாலை எழுந்து மதில் எட்டிக்குதித்து சூலூர் குளத்தை தெற்குப்புறமாக அணுகினேன். பார்த்த பறவைகளே என்னை வலம் வந்தன. திடீரென மேற்குப்புறம் ஆலாக்கள், ஒரு குழு பறந்து கிழக்கு நோக்கிப் பறந்து வந்தன. இவை எந்த வகை ஆலாக்கள்! கருப்பு வயிற்று ஆலாவா! ஆற்று ஆலாவா! மீசை ஆலாவா! சாதா ஆலாவாக இருந்தால் எனக்கு அதிஷ்டம் அடித்தது. சாதா ஆலா லடாக்கிலிருந்து வருவன. அம்மாடி தொலை தூரம்! முதல் முறை இவற்றின் அலம்பலில் என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தடதடவென வரிசையாக மின் கம்பியில் அமர்ந்தன. சில பறந்தவாறு அருகில் வந்தன. தவறி விட்டேன். பறந்து வடகிழக்கு பறந்தன.
ஆலாக்களை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம். குளத்து விளிம்பில் நடந்தேன். ஆதவன் எழ, குளப்பரப்பு வெள்ளி நிறமானது. பறவை நோக்கலும், புகைப்படம் எடுத்தலும் பொறுமையை நிறைய கற்றுக்கொடுக்கும். அரை மணிக்காத்திருத்தலுக்குப்பிறகு மீண்டும் அதிஷ்டமடித்தது. ஆலாக்கள் அலம்பல் மிக அழகானது. பறக்கும் அழகிருக்கே இன்றைக்கெல்லாம் பார்த்து பரவசப்படுவேன். இவை பல நிமிஷங்களுக்கு மரக்கிளையில் அல்லது கம்பியில் அமர்ந்திருக்க முடியாது. ஏனெனில் குட்டையான கால் மேலும் வலுவற்றது. சும்மாங்காட்டியும் விளையாட்டாக மின்கம்பியில் அமர்ந்து எழுகின்றன.
இவை லடாக்கிலிருந்து வந்த சாதா ஆலாக்களே தான். வால் பிளவு பட்டுள்ளது. சிறகுகள் வாலை விட நீண்டுள்ளன. அலகு கருப்பு, உடல் மேற்புறம் சாம்பல் நிறம். முன் நெற்றி வெள்ளை பிறகு கருப்பு தீற்றல். ஆஹா! சந்தோஷம் கொண்டேன். லடாக்கிலிருந்து இம்மாம் தூரம் எப்படி கண்ணுகளா வந்தீங்க? நீர் சூழ்ந்த திட்டில் கூடு வைக்கும் அழகு ஆலாக்களே! தரையில் இறங்கி, என்னருகில் வாருங்கள்! தங்கள் வரவு நல்வரவு ஆகுக, என கைகுலுக்க வேண்டும். Come on my beloved Common Terns!  

            

1 comment:

  1. common terns have a good forked tails. I request you to see some photos of " common terns in flight" in google search and come to conclusion.

    ReplyDelete