Tuesday, August 12, 2014

அறுகி வரும் பச்சோந்தி

பட்டணம் புதூர் பாதையில் மாய்ந்து போன பச்சோந்தி

வாளையார் பகுதியில் நண்பர் ராமச்சந்திர மூர்த்தி எடுத்த படம்.

பச்சோந்தி (Chameleon)
            நண்பர் ராமச்சந்திரமூர்த்தி சார் ‘பச்சோந்தியை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. நீங்கள் சமீபத்தில் பார்த்தீர்களா?’ எனக்கேட்டார். நானும் ‘பார்த்து பல வருஷங்களாயிற்று,’ என்றேன். ‘நான் வாளையார் சென்ற போது எடுத்த புகைப்படம்’ என ஒரு பச்சோந்தி படத்தை மின் அஞ்சலில் அனுப்பி வைத்தார். அது சாதாரணமாகப் பச்சையாக இருக்கும். மெதுவாகத்தான் கால்களில் நடந்து நகரும். வேலி ஓணான் மாதிரி ‘குடுகுடு’ என ஓடாது. அடர்ந்த வேலிகளில் இதைப்பார்க்கலாம்.
            உடலில் இருக்கும் நிறமிகளைக்கொண்டு, இது எதிரியிடம் இருந்து தப்பிப்பிற்காக, இடத்துக்கு தக்கவாறு நிறம் மாற்றிக்கொள்ளும். இந்த நிறம் மாற்றும் தன்மை இரையைப்பிடிப்பதற்கும் பயனளிக்கிறது. நாக்கு நீட்டுமளவு (அதாவது ஒன்னரையடியாவது இருக்கும்) தூரத்திலிருக்கும் இரை இதனைக் காணமுடியாதவாறு இடத்தின் நிறத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும்.  ஓடி தப்பிக்க முடியாது என்பதற்காகவும் நாக்கை நம்பி வயிறு வளர்க்கும் உயிரினம் ஆதலின், இறைவன் செய்த உதவியிது. வேலி ஓணான் மாதிரி உடல், தலை அமைப்பு. செதில், செதிலாக உடல் மேற்பரப்பு உள்ளது. மற்றபடி கண்கள், தலை வித்தியாச அமைப்பு கொண்டது. வால் வட்டமாக சங்குசக்கரம் மாதிரி உள்ளது. நாக்கு ஒண்ணரை அடிக்கு நீட்டி பூச்சிகளப்பிடிக்கும். நாக்கு நுனி ஒட்டிக்கொள்ளும் தன்மையுள்ளது. இதன் உணவு பூச்சிகள்.
            அடிக்கடி நண்பர்கள் குழுவுக்குள் மாற்றி, மாற்றி ஒரு பக்கம் சாதகமாகப்பேசினால், ‘போடாப்பச்சோந்தி’ எனத்திட்டுகிறோம். ஒரு நாள் பட்டணம் புதூர் அருகில் மதகு ஒன்று உளது. ஆடியில்  நொய்யல் ஆற்றுநீர் வழிந்து போகும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதை புகைப்படம்எடுக்கலாம் எனஅதிகாலை ஸ்கூட்டரில்  போனால் ஏமாற்றம் மிஞ்சியது. மதகு வழியவில்லை. அங்கிருந்து பட்டணம் புதூர் வழியாக பள்ளபாளையம் குளத்துக்குப் போய் பின்பு ராமகிருஷ்ண மடத்தின் அனாதை விடுதிக்குப் போகலாம் என நினைத்து பட்டணம் புதூர் நுழைந்தேன். பாதையில் பச்சோந்தி அரைபட்டுக்கிடந்தது.இரவில் வாகனம் எதோ அதன் மேல் ஏற்றி விட்டது. அந்தோ! பச்சோந்தி மெதுவாக நகரும், நகர்ந்து பாதையின் அடுத்த பக்கம் போவதற்குள் விபத்தில் மாட்டி இறந்து கிடந்தது. நேரில் பார்த்து சந்தோஷம் கொள்ளாது துரதிஷ்டமாக இறந்து போனதைக்கண்டேன். பச்சோந்தி அறுகி வரும் ஊர்வன இனம்.
            கால்கள் வலுவற்றது அதனால் வால் புதர்ச்செடிகளில் நகர பிடிமானத்துக்கு பிடித்துக்கொள்கிறது. கண்கள் சுற்றிலும் பார்க்க ஏதுவாக துறுத்திக்கொண்டிருக்கும் அமைப்பு.
      மனிதனில் பச்சோந்தி வேண்டாம், ஆனால் நிறம் மாறும் இந்த பாவப்பட்ட பச்சோந்தி தேவை.


Friday, August 1, 2014





ஒரு பறவை உயிர் போனது

            வெண்தலைச்சிலம்பன்கள் (White headed Babblers) நிறைய என் சின்னத்தோட்டத்துக்கு வருகை தரும். அவைகளின் சங்கீத ‘க்லிங், க்லிங்’ ஒலி காதுகளில் விழத் தேன் பாய்வது போல இருக்கும். அவைகளின் தாகம் தணிக்க ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு குடம் நீர் பிடிக்கும் அளவில் தோட்டத்தில் வைத்திருந்தேன். தினம் சிலம்பன்கள் நான் வைத்து வளர்த்த எழுபது மரக்கூட்டங்களில் ஆடித்திளைத்து, இரை பொறுக்கித் திரிந்து என் இல்லத்தோட்டதுக்கு வரும். இங்கும் வந்து காய்ந்த தேக்கு இலைகளுக்குக்கீழ் எட்டிப்பார்த்து, அவைகளை தள்ளி விட்டு, மதிலில் அமரும். பிறகு இரண்டு, மூன்று என பிளாஸ்டிக் பாத்திரத்தின் விழிம்பில் அமர்ந்து, சிலம்பன்கள் நீர் அருந்தும். சில சமயம் நீரைப்பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் குளிக்கும்.
             பெரும்பாலும் அனைத்துப்பறவைகளும் குளிக்கும். உடம்புச்சூட்டைத்தணிக்கவும், இறகில் உற்பத்தியாகும் உண்ணிகளை நீக்கவும் இது உதவும். சில பறவைகள் உண்ணி நீக்க மண் குளியலிடும். தேன்சிட்டு போன்ற சின்னப்பறவைகள், மலர்களில் முத்துக்களாய் அரும்பியிருக்கும் காலைப்பனி முத்துக்களில், தேனுக்காக நுழையும் போது உரசி விடும். அதற்கு அதுவே போதுமானது. இறகுளில் படும் ஈரத்தை கோதி விடும். ஆனால் பறவைகள் அதிகமாக நனைந்தால் அதனால் பறக்க முடியாது. உடலில் உள்ள பொங்குகள், சிறகுகளில் உள்ள சின்னச்சின்ன பொங்குகள் அதிக ஈரத்தில் இழுபட்டு உதிரும். உலர நேரமாகி, உடல் எடை கூடி பறக்க முடியாது. அதற்குள் கழுகு போன்ற எதிரிகள் அவைகளை இரையாக்கி விடலாம்.
            ஒரு வெள்ளிக்கிழமை நாள், பள்ளியில் இயற்கை வகுப்பு எடுப்பது பற்றி வினவ கிளம்பிய போது, தோட்டத்தைச்சாளரம் வழியாக எட்டிப்பார்க்க, ஒரு சிலம்பன் நீர் பாத்திர விளிம்பில் அமர்ந்து நீரில் படுத்து நீந்திக் கொண்டிருந்த மற்றொரு சிலம்பனை எடுத்துத்தள்ளி விட,முயன்று கொண்டிருந்தது. இது எனக்கு திடீரெனப்புரியவில்லை. ஆனந்தமாக குளியலிடுகிறது என இதைப்புகைப்படமாக்க மாடியிலிருந்த காமெராவை எடுக்க படிக்கட்டுகளில் ஓடினேன். அதற்குள் நீரில் நன்கு ஊறிய சிலம்பன் மயிர்களை கால்களில் இழந்து உயிருக்குப்போராடி கொண்டிருந்தது. நானும்  இரு நிமிஷம் தாமதம் செய்யது விட்டேன்.பாத்திரம் அருகே நெருங்கி பறவையை எடுத்த போது கிட்டத்தட்ட உயிர் போய் விட்டது. அதை மீட்க பிரயத்தனப்பட்ட விளிம்பில் அமர்ந்திருந்த சிலம்பன் மதில் மேல் அமர்ந்து என்னையும், இறந்த சகபறவையையும் பார்த்து சோகப்பட்டது எனது மனதைப் பிசைந்தது.

            குடித்த நீர் வருமா எனப்பறவையைத்தலைகீழாகப்பிடித்து, மார்பை சற்றே அழுத்தி, அலகு வழியே காற்றை ஊதி, ஒன்றுக்கும் சிலம்பன் கண்திறக்கவில்லை. அதன்கதை முடிந்தது. ஒரு சிலம்பன் கண்மூட நானும் கால் பங்கு காரணமாகி விட்டது, என்னை உறுத்தியது. அதன் தலைவிதி முடிந்தது என என்னை நானே தேற்றிக்கொண்டேன்.குற்ற உணர்வினால் அன்று இரவு சரியாக உறக்கம் பிடிக்கவில்லை. எப்போதும் தன்னிலையிலிருத்தல் அவசியம். பல சிந்தனையிலிருந்தால் இப்படித்தான் விபரீதம் நடக்கும்.

Tuesday, July 22, 2014

சங்க இலக்கியத்தில் 
சுவையூட்டும்
பறவை கவிதை

புனல்ஆடு மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எறிந்தென
புள்ஆர் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது____-பெரும்பாண்ஆற்றுப்படை (312-314)

            சங்க காலத்தில் சிறுகுழையெனும் காதணிகள் மகளிர் அணிந்திருந்தனர். துவக்க காலத்தில் இயற்கையில் கிடைத்த தாவரங்களையும், செடிகொடிகளையும், மலர்களையும் ஆபரணங்களாக அணிந்தனர். காதில் தளிரை அணிந்தனர். அதனைக் குழை என்றனர். காதில் பூ இதழ்களை அணிந்தனர். விதைகளைப் போன்ற பொருள்களைக் காதில் அணிந்தனர். பூ இதழ்கள் தோடு என்றனர். விதைகளை காழ், மணி மற்றும் மேகலை என்றும் அழைத்தனர்.
            மேலே குறிப்பிடும் மூன்று வரிச்செய்யுளைப் படித்தீர்களா? அருவிநீரில் குளிப்பதற்கு முன்பு, மகளிர் தங்கள் காதுகளிலிருந்த குழையினை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் குளித்துக்கொண்டிருந்த போது சிறு நீல மீன்கொத்தி அந்தகுழையை மீன் என நினைத்து அலகில் கவ்விப் பறந்து விட்டதாம். ஆக அந்தக்காலத்தில் மகளிர் குழை அணிந்திருந்ததையும், அதுவும் மீன் வடிவிலான குழை அணிந்திருந்ததையும் சங்கப்பாடல் மூலமாக அறிய முடிகிறது.
            சிரல் எனில் சிறு மீன்கொத்திப்பறவை. அதுவும் சிறுநீலமீன்கொத்திப்பறவை(Small Blue Kingfisher)யாயிருக்கும்.சங்க காலத்தில் அதாவது கி.பி 100- 700 லேயே மீன்கொத்திப்பறவையைப்பற்றி அறிந்து வைத்திருந்திருக்கின்றனர் என்பது அறியமுடிகிறது. இந்த சங்கப்பாடல் நமக்கு பண்டைய நாகரிகம், பறவை பற்றியதை பதிவு செய்துள்ளது நமக்கு 21-ம் நூற்றாண்டில் காணக் கிடைக்கிறது. பதிவு செய்வது என்பது எழுதி வைக்க வேண்டும். அதைப்படித்து பின்வரும் சந்ததியினர்அறிய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் இலக்கியம் படைப்பதுவும், அதைப்படிப்பதுவும் சொற்பமாக உள்ளது.அதை மீட்டு எடுக்கவேண்டும் யுவன், யுவதிகளே……..உங்களைத்தான்……




Wednesday, July 9, 2014


                               பறவை வேட்டை





பறவை வேட்டை

மனிதஇனம் கற்காலத்தில் வேட்டையாடி உண்டான். விவசாயம், தெரியாத நிலையது. அந்த கற்காலப்பழக்கம் இன்றும் பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகும் அதனுடைய குரூரம் குறையவில்லை.  சிறார் ஒண்டிவில்லோடு மரம், செடி, வேலி, மின்கம்பி எனப் பார்த்துக்கொண்டே செல்கின்றனர். அதுவும் விடுமைறை நாட்கள், பள்ளி தேர்வு விடுமுறைகளில் இவர்களது பொழுது போக்கு, வேட்டை ஆரம்பிக்கிறது. ஓணான், அணில், அரணை, பச்சோந்தி, குருவி என எதையும் விடுவதில்லை. வேட்டைக்குரூரம் மனிதனிடம் அழிந்து விடவிலை.
ஒரு முறை இரண்டு, மூன்று மழைகுருவிகள் இரு சிறாரிடம் காயத்துடன் இருக்க எனக்கு சோகமாகிவட்டது. பத்து சிறார் இருப்பர். எல்லோரையும் குழுமச் சொன்னேன்.
‘இந்த பறவைக பேர் என்ன? உங்களுக்குத் தெரியுமா?’
‘பக்கி’
‘இல்லை. இவை எங்கிருந்து வருதுன்னு தெரியுமா?’
‘……!’
இதுக்குப்பேர் மழைகுருவி. சைபிரியா, ரஷ்யாவுக்கு மேற் கோடியிலிருந்து வருதுங்க. திரும்பவும் மார்ச் மாசம் போயிடும். மழைகுருவிகள் இருப்பதினாலேயே நீங்கெல்லாம் கொசுக்கடி தின்னாம இருக்கீங்க. ஒரு நாளைக்கு ஏகப்பட் கொசுக்கள சாப்பிடும். வெளிநாட்டிலிருந்து வந்த விருந்தாளிகப்பிடிச்சு சாப்பிடலாமா? நீங்கல்லா இலை, தளைகலையா கட்டியிருக்கீங்க? உண்ண எவ்வளவோ இருக்குது. இதப்போய் சாப்பிடலாமா? எவ்வளவு அழகாக இருக்கு பார். நூத்துக்கணக்கான மழைகுருவிக ஒன்று சேர்ந்து உங்கள துரத்தித் துரத்தி கொத்துனா என்ன பண்ணுவீங்க.? உங்க நயவஞ்கத்தை மனுஷங்க கிட்ட காட்டறதுமில்லாம, குருவிக கிட்ட ஏன் காட்டறீங்க? இனிமே இந்தக்குருவிகளக் கொல்லக்கூடாது. நீங்க அதுகளுக்கு எதாவது பண்ணறீங்களா? ஒன்றுமே செய்யாத போது, உங்களுக்கு இந்த மழைகுருவிக உதவியா இருக்கு. இதுவா நீங்க காட்டற நன்றிக்கடன்?’
இரண்டு சிறார்களின் கையில் துடித்துக் கொண்டிருந்த மழைகுருவிகளைப்பார்த்து கண்களில் கண்ணீர் வந்தது. தலை தொங்கிய மழைகுருவிகளைப்பார்த்து விசனப்பட்டேன்.
‘தாதா! தண்ணிகுடுத்தா பொழைச்சுக்குமா?’
‘பொழைக்காது. கல்பட்டு காயம் பாரு. கொன்னுடுவே…ஆனா உயிர் குடுக்க முடியாது. இப்படி ஒண்டிவில் தூக்கி காலனிக்குள் அலையறீங்களே! இனி இந்த வெளி நாட்டுப்பறவைக நம்ம காலனிக்கு வருமா? இங்கே வராம வேற்றிடம் போயிடுமே.’
‘மன்னிக்கணும். இனி இது மாதிரி செய்ய மாட்டோம்.’
‘கூண்டுப்பறவைக வேணுமா? ஒண்டிவில் வேணுமா?  கடைகல்ல கிடைக்கும். நீங்க திருந்துனா, வியாபாரிக விற்க மாட்டாங்க, உங்கள நீங்க நேசிக்கிறீங்க. அது போல மற்ற ஜீவன்களையும் நேசிச்சுப்பழகுங்க.’
‘சரி தாதா.’
‘போய் வறுத்துச்சாப்பிடுங்க’ என விரக்தியில் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
‘டேய்! குருவிங்கள பொதைச்சிரலாம்’ என்று ஒரு சிறுவன் சொன்னது காதுகளில் விழுந்தது.
இவைக்கு தாம்பாடி, தகைவிலான், தலையில்லா குருவி, ஆங்கிலத்தில்

Swallow.(Hirundo rustica) வலசைப்பறவை.

Saturday, June 28, 2014

நீர் காகம்

சூரியக்குளியலிடும் நீர்காகங்கள்

அரும்பு மீசையிலிருந்த போது நின்னை
காகமெனும் வகையென்றிருந்தேன்.
காகத்துக்கு மாறுபட்டவன் நீ!
தனியாகவமும் கூட்டமாகவும் சஞ்சரிப்பு
வானில் வரிசையாய் உயரே பறந்து
எங்கு போகிறீர் வேற்றூறுக்கா?
நீண்ட பொழுது தாமதிக்கும் பொறுமைசாலி
இலையுதிர்த்த மரங்களில் கும்பலாய் அமர்வு,
அதிசயமாயிருக்கும். நகலில் காகமென
நினைத்து தங்கள் எண்ணத்தோடு போவார்
ஒரேயொரு கருப்பு சேலை கொண்ட ஏழை
நனைந்த சேலை உலர்த்துவது போல,
காலை வெய்யிலில் உலர்த்தி நிற்பாய்.
மீனை மட்டுமே நம்பியிருப்பவளே!
நீரில்லாமல் நீயில்லையாதலின்
நீர் உன் நாமத்தில் முதன்மையாயிற்று.
நீரில் குதியாட்டமிடும் சிறாரென
கூட்டமாக குளத்தில் வரிசையில் விழுந்து
தெப்பமாய் நனைந்து, மிதந்து, தாவி
ஓ! உங்கள் களிப்பு இவனுக்கும் தாவட்டும்.
நீர் மூழிகிக்கப்பலென மாறும் காகமே!
மீனைப்பிடிக்க என்ன தந்திரம்!
நெடுங்கழுத்துப் பறவையே! நீர்க்காகமே!


Saturday, June 21, 2014


தினைக்குருவி தங்கும் விடுதி
Dormitory of Whitebacked Munia (Lonchura striata)
            
             
        மற்ற பறவைகளை ஒப்பிடும் போது வெண்முதுகு தினைக்குருவி இரவு தங்கும் விடுதி அலாதியானது. இப்பறவைகள் 3 (அ) 4 அறைகள் கொண்ட கூடு வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களால் கட்டுகிறது. அது 5 அங்குலக் குறுக்களவும், ஒரு வட்ட குழாயமைப்புடனும் உள்ளது. இரண்டு அங்குல அளவுக்கு இரு முனைகளில் வழி அமைத்துள்ளது. பின்புற வழி முன்புற வழியை விட சற்று சிறியது.  பின்புற வழி ஆபத்துக்காலத்தில் தப்பிச்செல்லும் வழி. யாராவது எதிரி கூட்டுக்குள் வந்தால் தப்பிச்செல்ல அது வழி கொடுக்கும். எந்த மாதிரி முன் ஜாக்கிரதை! பாருங்கள்!  இந்த கூட்டில் முட்டை வைத்து அடைகாத்து, குஞ்சு பொரித்த பிறகு உணவூட்டி அதைப் பிரிந்து விடும். இந்தக்கூடுகள் 6 (அ) 8 அடி உயரத்தில் வேலமரத்தில் கட்டுமானம் செய்யும். குஞ்சுகள் வளர்ந்து சென்ற பிறகு இந்தக்கூடுகளை தங்கும் விடுதியாக உபயோகிக்கும் இப் பறவை.
            பல முறை இம்மாதிரியான கூடுகளைப் பார்த்துள்ளேன். ஒரு சூரிய அஸ்தமன நேரத்தில், நீரற்றுப்போன சூலூர் குளப்படுகையுள் நடந்து கொண்டிருந்தேன். ஆரஞ்சு சூரியன் கருநீல மலைப்பின்னே விழும் நேரம்.  அந்த இதமான நேரத்தில் நான் ஒரு தினைக்குருவியின் கூட்டினை அடையாளம் கண்டேன். அதற்குள் முட்டை அல்லது குஞ்சுகள் இருக்குமா எனப் பார்த்தேன். அந்த நேரம் பார்த்து ஒரு ஜோடி தினைக்குருவிகள் எங்கிருந்தோ வந்து என்னை ஆச்சர்யப்படவைத்தன. அவை நான் இருக்கிறேன் என கூட்டுக்குள் நுழையாமல் அருகிலிருந்த ஒரு வேல மரத்தில் அமர்ந்தன. தினைக்குருவிகள் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகக்காத்திருந்தன. நான் பத்தடி நகர்ந்து, ஒரு சிறு மரத்தின் பின்பு ஒளிந்து கொண்டேன். ஆனால் பறவைகள் கூட்டில் நுழையாமல் தயங்கின. சிறிது நேரத்தில், ஆதவன் மறைய இரவின் கருப்புத்துணி விரிய, ஜோடி தினைக்கருவிகள் மெதுவாக கூட்டுக்கருகில் வந்தமர்ந்தன. அவை இரவு தங்குவதற்கு காலியான கூட்டினை சில காலம் பயன் படுத்துவது எனக்கு வியப்பை வரவழைத்தது.

            இன்னொரு முறை தில்லி முட்காடான ஊர்வேலங்காட்டில் இந்த மாதிரியான இரவு தங்கும் விடுதியாக உபயோகப்படுத்தும் கூட்டினைப்பார்த்தேன். இதை எப்படி முனைவர் சலீம் அலி விவரிக்கிறார் எனப்படித்து ஆனந்தப்படுங்கள். “ The nests are used as dormitories by the family till long after the young have flown.”

Tuesday, June 10, 2014


பறவை விடு தூது


Rose-ringed Parakeet (பச்சைக்கிளி)

Red Shank (பவளக்காலி)

Painted Stork (செவ்வரி நாரை)


            சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் பறவைகளை தூது விட்டிருக்கிறார்கள். காதலன்(தலைவன்) காதலிக்கு(தலைவி) தூது, தலைவி தலைவனுக்குத்தூது எனவும் ஆன்மிகஞானிகள், சிவபெருமானுக்கு பறவையைத்தூதாக அனுப்பியுள்ளனர். ஞானிகள் பறவை தூதில் சிவன் மீது இருக்கும் அளவு கடந்த அன்பைவெளிப்படுத்தி தங்கள் குறையோடு முக்தியை வேண்டுவார்கள். காதலன், காதலி பரஸ்பரம் காதலோடு தங்கள் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.
            தூது பறவை மட்டுமல்லாது பணம், தமிழ், புகையிலை, காக்கையுடன் செருப்பு கூட தூது போயிருக்கிறது.
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோ தங்காள்
தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.
            பவளக்காலி என்றால் Red Shank(Ref: டாக்டர் க. ரத்னம்- தமிழில் பறவை பெயர்கள்)இது காஷ்மிர், மற்றும் லடாக்கிலிருந்து தெற்கு வருவதை தொலைநோக்கி இல்லாத காலத்திலேயே ஞானசம்பந்தர் பவளக்காலியை  சம்பந்தர் தேவாரத்தில் 7-ம் நூற்றாண்டில் இப்படிப்பதிவு செய்துள்ளார். அழகுற அமைந்த, சிகப்பு நிறத்துப் பவளம் போன்ற கால்களையுடைய பவளக் காலியே! தேரோடும் நெடுவீதி கொண்டசீர்காழியில் உறையும் சிவபெருமானுக்கு, நீரில் நனைந்த சடையுடைய சிவபெருமானுக்கு எனதுப்பிரிவுத் துயரை சொல்லாயோ!

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளாரூரை
மறக்க்கில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.

பறந்து திரியும் கிளிகளே! பாடித்திரியும் கிள்ளைகளே! அறத்துக்கண்ணை உடைய சிவபெருமானை மறக்கமுடியாமல், எனது வளையல்கள் கைகளில் நிற்பதில்லை. இரவில் உறக்கம் வருவதில்லை என சிவனிடம் உணர்த்தக்கூடிய வலிமை உங்களிடம் உளது. ஆகையனால் எனது பிரிவாற்றாமையை உணர்த்துங்கள். என சுந்தரர் 9-ம் நூற்றாண்டில் பாடியுள்ளார்.

இலைகள்சோ லைத்தலை இருக்கும் வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதும் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.

என் கலைகள் அனைத்தும் சோர்வுருகின்றன. தண்டைகள் கழலும் அளவுக்கு உடல் மெலிவுற்றேன். முலைகள் உனது பிரிவால் விம்மித்தணிகின்றன. இலைகள் அடர்ந்த சோலைகளில் இருக்கும் வெண்ணாரைகளே! எனது பிரிவுப்பெருந்துன்பத்தை சிவபெருமானிடம் பகர்வாயா?
            இந்த பக்தி இலக்கியத்தில் சுந்தரர் தன்னை பிரிவாற்றாமையில் துயரப்படும் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடுகிறார். சிவபெருமான் ஒருவர் தான் இப்பிரபஞ்சத்தில் ஆடவர், மற்றெல்லா ஜீவராசிகளும் பெண்கள். எனவே எப்போதும் எந்த இன்பமும் நமக்கு நிலைத்திருக்காது. சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப நிலைக்குப் போகவேண்டும். அந்த உண்மை ஆடவனை அடைய பெண்களாகிய நாம் முயன்று பேரின்பநிலையில் அழுந்த வேண்டும். அது தான் முக்தி, மோட்சம்,கைலாச பிராப்திமற்றும் ஓஷோ சொல்லும் வெட்டவெளி யாகும்.