Sunday, June 14, 2015

Oorvelan kuttai

Kalangal
ஊர்வேலன் குட்டை
            ஊர்வேலன் குட்டை நிறைந்து ஐந்து வருஷங்களிருக்கும். சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு பெய்த மழை 91 mm என்று நண்பர் சொல்ல நான் பிரம்மித்துப்போனேன். அன்று இடி மின்னலுடன் பலத்த மழை. ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை மழை செம்மத்தியாக தட்டுகிறது. இடையில் அப்படி மழை பெய்வதில்லை என்று பறவை குருநாதர்(வயது 80), பக்கத்துக்காலனி பெரியவர் (வயது 80) இருவருமே தங்கள் அனுபவத்தில் சொல்கின்றனர். ஒரு இரவில் கொட்டிய மழை குட்டையை நிரப்பி விட்டது. ஞாயிறு அன்று பார்த்த போது சேறுடன் கலங்கிய நீர் நின்று கொண்டிருந்தது. வியாழன் அன்று பார்த்த போது தெளிந்திருந்தது.
கலங்கிய நீருக்கும், குட்டை நிறையத்தண்ணீர் இருந்தாலும் பறவைகள் வராது. கலங்கிய புது நீரில் ஜீவராசிகள் உற்பத்தி ஆகாதது பறவைக்குத்தெரியும். மேலும் விளிம்பு அளவு இருக்கும் நீரில் வேடர்(Waders) பறவைகள் நின்று மீன் அல்லது மற்றஜுவராசிகளை கொத்திப்பிடிக்க முடியாது. இன்னொரு மழை பெய்திருந்தால் கடைவிழுந்து நிரம்பிப்போயிருக்கும். முக்குளிப்பான் ஜோடிக்கு புதிய மழைச்செந்நீர் கூட ஆனந்தம். அமைதிப்பிரதேசத்தில் முக்குளிப்பான்கள்‘குலவை’யிட்டுப்போனது மனதை இதமாக்கியது. குட்டையை மனித ஜன்மங்கள் எப்படியெல்லாம் நாசம் செய்கின்றனர். ஊர்க்குப்பை, பவுண்டரிக்கழிவு, வீடு உடைப்புகள் என சொல்லி மாளாது. குழாயில் நீர் கொண்டு வந்து கொடுக்க, மக்கள் குளம் குட்டைகளை உதாசினப்படுத்துகின்றனர்.
காலை, மாலை சூர்ய உதயம், அஸ்தமனம் பார்த்து ரசிக்கத்தெரியா ஜன்மங்கள். அவர்களுடைய குறிக்கோள், குளம் குட்டை மேல் கட்டிடம் கட்டி காசு சம்பாதிக்க வேண்டும் என்பது தாம். எங்கிருந்தோ ஒரு கொக்கு பறந்து வந்து இறக்கையை மடக்கியவாறு அமர இடம் பார்க்க, ஒரு நீர்க்காகம், பெண் ஒரே ஒரு கட்டிய சேலையை உலர்த்துவது போல உலர்த்த, கால் பகுதி மூழ்கிய கருவேலமரங்கள் நீரில் அசைய, மாக்களே! இதை ரசிக்க நேரமேது? அந்தக்காலங்களில் ஜனத்தொகை குறைவு. மலம் கழிக்க ஊர் எல்லையில் ஒதுங்க வேலமரங்களை வைத்தனர். நீர் இல்லாமலே வரட்சியைத்தாங்கி வளரக்கூடியவை. அவைளை வெட்டி தண்ணீர் காயவைத்து ஊற்றியாயிற்று. இப்போது தில்லி முட்கள் எனும் வேலி காத்தான்கள்.

ஊர் வேலன் குட்டைக்கு மழை பெய்தால் காட்டு நீர் தான் ஆதாரம். புங்கன் குட்டை என்ற இன்னொரு குட்டை கலங்கல் பாதைக்கு கிழக்குப்புறமாக உள்ளது. இதற்கும் காட்டு நீர் தான் ஆதாரம். ஆனால் தறிகெட்ட மக்கள், இதையெல்லாம் அசட்டை செய்து, பஞ்சாயித்தும் காசு வாங்கிக்கொண்டு, வசதிகள் செய்து தர வீடுகள் உருவாக காட்டில் மழைநீர் வடிந்து இந்த இரண்டு குட்டைகளுக்கும் நீர் வந்து நிரம்ப வாய்ப்பில்லாமல் போனது. இனி வருங்காலத்தில் இந்த இனிய இயற்கை காட்சி தரும் குட்டைகள் இல்லாமல் போகும். சாமானியன் யான் ஏதும் செய்ய முடியாது போகும். 

No comments:

Post a Comment