Thursday, May 23, 2013




வாரம் ஒரு முறையாவது ஆந்தை நண்பனைக்கல்லுக்குழியில் பார்த்ததால், நானும் கொம்பனும் பழக்கமாகிவிட்டோம். கடைசியாகப்பார்த்தபோது,  எடுத்த புகைப்படம் இது. அப்போது நான் ஆந்தை கண்களில் உணர்ந்தது யாதெனில், 'என்னைக்காப்பாற்றுவாயா?  அல்லால் இதுவே நமது கடைசி சந்திப்பாக இருக்கும் நண்பா!. குட்பை!'



இனி இந்த ஏகாந்த இடம் இல்லை
காப்பாற்றுவாயா?
Conservation
இந்தியப்பெரியகொம்பன் ஆந்தையை விரட்டியடித்த கதை

கொம்பன் ஆந்தை பற்றி ஏற்கனவே நமது மழைகுருவி வலைதளத்தில் அளவளாவி மகிழ்ந்தோம். சூலூர், ஊர்வேலங்காடு அத்துவானமுட்காட்டில் ஒரு ஜோ,டி 2 அடி உயர கொம்பன் ஆந்தைகள் மகிழ்ந்திருப்பதற்கு மனிதன் பங்கம் விளைவித்து விட்டான். அவனைத்தவிர யார் காணுயுர்களுக்கு தொந்தரவு தருவார்? சுயநலக்காரனாயிற்றே! மேலும் பணப்பித்து பிடித்தவனாயிற்றே. பித்து பிடித்தவனிடம் பேசினால் நாம் சொல்வது ஏறாது. ஊர்வேலங்காட்டில் ஒரு கற்குழி, (Ravine) டைனமைட் வைத்து கருங்கல்லுக்காக பூமியைத்தகர்க்க உருவாகிப்போக, அதில் காட்டில் பெய்த மழை தேங்கியது. டைனமைட் ஒலி எங்கள் வீட்டுக்குக்கேட்கும். ‘தொம், தொம்என பூமி உதை வாங்கிக்கொள்ளும். பூமி அடுக்கு சீர்குழைவு, அதை ஒட்டி பூமி அதிர்வு வந்தாலும் பரவாயில்லை, கோடிகோடியாக சம்பாதிக்கணுமே, கருங்கற்கள் வீடுகட்ட வேணுமே, என அடித்த அடியில் வசீகரிக்கும் கற்குழி உருவாகிப்போனது. அடடே! மனைவி, குழந்தைகளோடு அமர்ந்து பேசும் வண்ணம் ஏகாந்த வனப்பில் அந்த இடம் உருவாகிப்போனது. உள்ளிருந்து பேசினால் எதிரொலிக்கும்.
ஏகாந்தம் என்றால் என்ன? ஏகாந்தம் எனில் ஈ, காகா கூட இராது இயற்கையோடு தனித்திருப்பது. மக்கள் குறைந்தபட்சம் ஒரு நாய், அல்லது டிவி அல்லது டெடிபியரோடாவது இருப்பார்கள். தனிமை ஒரு பயம். அவர்கள் மனத்தோடு அவர்கள் இருக்கவே பயம்.
ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக கொம்பன் ஆந்தை வந்து குடியேறியது எனது அதிஷ்டம் என நினைத்தேன். காட்டுத்தண்ணீர், மழை பெய்தால் பெரிய கற்குழியானதால் அதிகம் தேங்கிப்போக கற்குழி முதலாளி டைனமைட் வைத்து அடித்து தூள் பறத்த முடியவில்லை. பம்ப் வைத்து கொஞ்ச நாள் செய்து பார்த்தார். சரிப்பட்டுவரவில்லை. சரி! அந்த கற்குழியை மூடுவிழா செய்தால் அந்த இடத்தை பிளாட் போட்டு விற்றுவிடலாம் என தீர்மானமாகி, இப்போது முத்துக்கவுண்டன்புதூரிலிருக்கும் பவுண்டரியலிருந்துகாஸ்டிங்கழிவுகளை இட்டு நிரப்ப கொஞ்சம் கொஞ்சமாக லாரிகளில் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகிறது. இந்த பவுண்டரிக்கழிவுகள் கொட்டப்படும் பேரொலியால் பயந்து அதிர்ந்து போய் கொம்பன் ஆந்தைகள் எத்திசை ஏகியதோ என் வலைதளநண்பர்களே! தெரியலையே!
இந்த காஸ்டிங் கழிவில் வேதியல் சமாச்சாரங்கள் உள்ளன, அதைக்கொண்டு இந்த கற்குழி நிரப்பப்பட்டால்உங்கள் ஆழ்குழாய் கிணற்றுநீர் மாசு அடையும் என அந்தப்பகுதி மக்களுக்கு சொல்லிப்பார்த்தேன். காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஆந்தையைப்பற்றிப்பேசினால் ஆச்சர்யமாகக்கேட்கிறார்களே ஒழிய அதைக்காணவோ, அதை பாதுகாக்கவோ மக்களுக்கு ஆர்வமில்லாமல் பணத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். கற்குழி நாளை வீட்டுமனையாகும். அரசுகூட சிங்காநல்லூர் கற்குழி மேல் சிங்கை பேருந்து நிலையமே கட்டிவிட்டதே! குளங்களெல்லாம் பேருந்து டிப்போக்கள், மின்நிலையங்கள் ஆக்கிவிட்ட அரசு எவ்வழியோ மக்களும் அவ்வழியே!

No comments:

Post a Comment