நண்பர் TRA எடுத்த படம் |
சாவல் குருவி
சாவல் குருவி (அ) கொண்டலாத்தி
(அ) எழுத்தாணிக்குருவி என வட்டாரத்குக்கொரு நாமமிட்டு அழைக்கப்படும் இந்தப் பறவையை மக்கள்
மரங்கொத்திப் பறவை என நினைக்கின்றனர். இது மரங்கொத்திப்பறவை அல்ல. இது மரங்கொத்தி மரத்தண்டுகளை
அணைத்துப்பிடித்துக்கொண்டு, பல ஆயிரம் தடவை அலகினால ‘தட் தட்’என அடித்துப்பட்டைக்கடியிலிருக்கும்
பூச்சிளை கிளப்பி நாக்கினால் விசிறி உண்ணாது. இது மண்ணைக்கிளறி புழு, பூச்சிகளைப்பிடித்து
உண்ணும். நான் சூலூருக்கு 25 வருஷங்களுக்கு முன்பு குடி வந்த போது, இப்படி இந்த ஊர் பெருத்திருக்கவில்லை. குடியிருப்புப் பகுதியில் இவ்வளவு வீடுகளுமில்லை. அப்போது மதிர்
சுவற்றில் ஒரு மழை நீர் வடியும் பிளவு விட்டிருந்தேன்.
அது அரையடிக்கு முக்கால் அடியே இருக்கும் தரையொட்டிய பிளவு. அதில் கொண்டலாத்தி மூன்று
முட்டைகளை இட்டிருந்தது. மக்கள் முதலில் நினைப்பது பாம்பு முட்டையாக இருக்குமோ என்று
தான். வெள்ளை நிறம். இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு எனக்கு பறவைகளைப் பற்றிய விபரங்கள்
மிகுதியாகத்தெரியாது.
அந்த மதில் பிளவுக்கு இரண்ட்டி
முன்பு ஒரு குல்மோஹர் நாற்று வைத்து, அதைச்சுற்றி மூங்கில் குச்சிகளால் சதுரமாக கூண்டுகட்டி,
ஆடுமாடுகளிலிருந்து காப்பாற்றியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு அல்சேஷன் நாய் கிராஸ்
இருந்தது. அது மூன்று அல்லது நான்கு மாத வயதிலிருந்தது. அது அடிக்கும லூட்டி சொல்லி
மாளாது. அதனால் எனக்கு நேரமும் பணமும் விரையமானது பற்றி தனிக்கட்டுரையாக எழுதலாம்.
அதற்கு பிரவுனி எனப் பெயரிட்டிருந்தேன். ஒரு முறை வழியில் போன சிறுமியைக்கடித்து
வைத்து நான் மருத்துவ செலவுக்காக நஷ்டஈடு கொடுக்க வேண்டியிருந்தது.சங்கலி வாங்கினால்
இரண்டு மாதத்தில் ‘பனால்’. தினமும் ரேஷன் சாதம் அரைக்கிலோவுக்கு மேல் உண்ணும். தடுப்பூசிகள்
பல தெர்மாஸ் குடுவையில் ஐஸ்-உடன் 20 கி.மீ தாண்டியுள்ள நகரத்திலிருந்து வாங்கி வருவேன்.
ஒரு முறை பூச்சி மருந்தால் உண்ணிகளைப்போக்க, நாயைக்குளியலிட, நாய் பூச்சி மருந்தை நாவால்
நக்கி விட, கால் நடை மருத்துவரிடம் நடத்திக்கொண்டு ஓட, ஹயோ! ஹயோ! ஒரே லூட்டி தான் போங்கள்.
சாவல் குருவி சாலமனுக்கு பறவை
மொழிகளை கற்றுக்கொடுத்ததாம். இது தினமும் என் வீட்டைச்சுற்றியுள்ள மரங்களில் ஒன்றினைத்
தெரிந்தெடுத்து கிளையலமர்ந்து ‘கூப்…கூப்’
என சப்தித்து என்னைப் பறவையுலகுக்கு இழுக்கும். தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறதா! இதை
வைத்துத் தான் ஆங்கிலேயர் ‘கூப்பே’ என நாமம்
சூட்டினரா? இது எதனால் கொண்டையை சுறுக்கி விரிக்கிறது? உணர்ச்சி மேலிட சுறுக்கி விறிக்கிறதா?
இது மிக அழகு…… சில சமயம் புல்லாங்குழல் இசைப்பது போலவும் இருக்கும். தற்போது குரல்கள்
வைத்தே இது என்ன பறவை எனச்
சொலவேன். இறைவன் ஒவ்வொரு பறவைக்கும் ஒரு குரலமைத்துள்ளது இனிமை. குரல் என ஒன்றில்லையானால்
ஊமைதான்.
வரிக்குதிரை போல, வெள்ளைக் கோடும், கருப்புக்கோடும்,
பழுப்பு நிறமும், விசிறி போல கொண்டையும், ஒடுங்கிய உடம்பும், கருப்பில் சன்னமாக வளைந்த அலகும், திரும்பத்திரும்ப
பார்க்க வைக்கும். இது வளைந்து, வளைந்து பறக்கும் பாங்கு அருமை.. இவை புல் வெளிகளிலும்,
பூங்காவிலும், தோட்டங்களிலும் விருப்பம் கொண்டது. அவ்விடங்களில் பூச்சி, கூட்டுப்புழு,
வண்டு என கிடைப்பதும் ஒரு சவுகர்யம்.
சாவல் குருவி புத்திசாலி, நண்பர் TRA சொன்னது.
சத்தியமங்கலத்தில் ஒரு வீட்டினுள் தப்பித்தவறி வந்த சாவல் குருவியை அந்த வீட்டார் பாது
காத்து வந்தனர். சில நாளில் இணை சாவல் குருவி எப்படீயோ இருப்பிடத்தைக்கண்டுபிடித்து
ஐன்னல் வழியே கண்டு, அமர்ந்து குரல் கொடுத்து கூட்டிக்கொண்டே சென்று விட்டது. பறவைகளின்
குரலைப்பதிவு செய்து அதன் ஏற்ற இறக்கங்களை நீட்டிக்குறைத்து, புது ராகங்களைக்கண்டு
பிடிக்கலாம். பறவை ஒவ்வொரு இனமும், ஒரு ராகத்தில் பாடுது. இவை குரல் கொடுப்பது இணையை
அழைக்க, எச்சரிக்க, பயத்தை, சந்தோஷத்தை, ஆத்திரத்தை வெளிப்படுத்த பயன் படுத்துகிறது.
அழைக்க, நீண்ட குரல் கொடுக்கிறது. பயத்தைக்குறைவாகவும், அழுத்தமாகவும் குரல் கொடுக்கும்.
இப்படி அதற்கும் பாஷையுண்டு.
பறவைகளுக்கு குறைந்த பட்ச பரிபாஷை இருந்தால்
போதுமானதாக உள்ளது. பெண்கள் மாதிரி வழவழ எனப்பேசிக்கொண்டே இருக்கத்தேவையில்லை அல்லவா!
இதில் கதிர் குருவிகள் (Warblers) விதிவிலக்கு. உண்ணிப்பாக கவனித்தால் பறவைகள் எதற்காக
குரல் கொடுத்தன என அறிய முடியும். மேலும் குரல்கள் எழுப்புவதால், அலகுக்குள் பிராணவாயு
சென்று, உடம்பு பறக்க ஏதுவாகிறது. ஆட்காட்டிப்பறவை இடையூரை அறிவிக்க எல்லாப்பறவைகளுக்கும்
எச்சரித்து விடும். அதன் குணம் அது. கழுகுகளுக்கு விசில் ஒலி. உயர வானில் பறந்தவாறும்,
உயரக்கிளைகளில் அமர்ந்தவாறும், ஒலி எழுப்பினால் தான் இணைக்கு அல்லது குழுவுக்கு கேட்க
முடுயும்.
கொக்கரக்கோ
எனச்சேவல் கத்துவது பற்றிஒரு பட்டிமன்ற அன்பர் சொன்னது. கோ=என்றால் முருகன் (அ)
அரசன் (அ)தலைவன். அரக்கு= எனில் மாமரம். ரக்கோ= என்றால் பிளந்தது.மாமரமாக மாறிய சூரபத்மனை
இரண்டாகப்பிளந்தது. இனி மக்கட்குத்துன்பமில்லை. இதோ! காலைச்சூரியன் வந்து விட்டான்.
கோ= முதல்வன். துன்பங்கள் அழிந்தொழியும் எனச்சேவல்கள் அதிகாலையில் கொக்கரக்கோ என முகமன்
கூறி மக்களைத்துயில் எழுப்புகின்றன. இந்த ஒலி பிராய்லர் கோழி மரபணுவின் கூட பதிந்துற்றது.
நான் அதிகாலை சூலூர் பேருந்து நிலையத்துக்கு நடந்த போது, ஒரு கோழிக்கடை வந்தது. அங்கிருந்த கோழிக்கூண்டிலிருந்து காலை 05.15 மணிக்கு கொக்கரக்கோ என ஒரு பிராய்லர்
கோழி ஒலி எழுப்பியது விந்தையாக இருந்ததது.
கிளிகள் இனம் பழக்கினால் சரியாகப்பேசி
ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். மைனா கூடப்பேசும். அதன் நாக்கில் வசம்பு தடவத்தடவ நாக்குரிந்து,
லேசாகி, பழக்கினால் பேசும். விசிலடிக்கும். பன்னிரு திருமுறையில்
‘ஆடு
மயில் அகவும் நாடன்’
‘கான
மஞ்ஞை கடிய ஏங்கும்’
‘மீன்
ஆர் குருகின் கானல் அம் பெருந்தறை
வெள்
வீத்தாழை திரை அலை
நள்ளென
கங்குலும் கேட்கும், நின் குரலே?’
பிரணாயாமாவில் காகப்பிராணா செய்தால் காகம்
மாதிரி உடல் லேசாகும். குரல் இனிமை கிடைக்கும்.
மீண்டும் எனது வீட்டு மதில் சுவர் மழை
நீர் வடிப்பிளவில் மூன்று வெள்ளை முட்டைக்கு வருவோம். இருபது வருஷம் முன்பு அக்கம்பக்கம்
வீடுகளும் இல்லை. சாவல் குருவி திடீரென அந்த மதில் ஓட்டையிலிருந்து பறக்கும். எனக்கு
அப்போது ஒன்றும் விளங்கவில்லை. அடை காக்க அவ்வப்போது வந்து போகிறது எனத்தெரியவில்லை.
சாவல் குருவி குரல் எனக்குப்பிடித்தமானது. சமீபகாலமாக, எனது கவிதைகளுக்கு நான் ராகம்
(ட்யூன்) போட ஆரம்பித்தேன். வீட்டில் மிருதங்கம், தாளம், ஸ்ருதிப்பெட்டி உள்ளது. கீ
போர்டு வாங்கினால் போதும். ஒரு இசைக்குழு ஆரம்பிக்கலாம். குழுவுக்கு இசை ஆர்வம் உள்ள
அன்பர்கள் தேவை. சாவல் குருவி எனது கவிதைக்கு அடியெடுத்துக் கொடுக்க நான் இப்படிப்பாடினேன்.
கூப்…..கூப்…….கூப்……. எனப்பாடியே
எனை மயக்கியது நியாயமா
கூப்…..கூப்….கூப்……. இந்த ராகத்தை யாருனக்குச்சொல்லியதோ….
கவிதை வரிகளும்
காற்றினில் அலையுதா….
இசைக்குறிப்புகளும்
இலைகளில் தொங்குதா?
கூப்….கூப்…கூப்……. மழைத்துளிகளும்
சலங்கையொலி கூட்டுதா…..
மூங்கில்களும்
குரலிசைக்குதா…?…..
11
கூப்…..கூப்…..கூப்…. கொண்டலாத்தியே…!
உன்னிசையைத்தருவாயா?
நானும்
கற்றுத்தான்
பெம்மானை
இசைப்பேனே…..
சூலூர் குளத்தின் ஏரிமேட்டில் போகும் போது,
என் பறவை குருநாதர் டாக்டர் ரத்தினத்துக்கு பாடிக்காட்டினேன். அவரிடம் பாராட்டு வாங்குவது
மிக்ககடினம். நன்றாக இருக்கறது எனப் பாராட்டினார். அலுவலகத்தில் பாடும் திறமையுடைய
நண்பர் தினகரன் ஓய்வு பெறும் போது பிரிவு உபச்சார விழாவில் சாவல் குருவி இசை பாடல்
பாடி எல்லோர் பாராட்டுதலும் பெற்றேன்.இது போல பல பாடல்கள் உள. நான் இதை எப்போது ‘சிடி’
யாகப்போடுவது. அதை நீங்கள் எப்போது கேட்பது? இதற்கு இசை நிரப்ப யாராவது வருவீரா?
நாய்க்கு மோப்ப சக்தி அதிகம். ஒரு நாள்
எனது ரளொடி நாயை வீட்டைச்சுற்றி நடை பயில விடும் போது, காலை வேளையில், செயினோடு என்னை
இழுத்துக்கொண்டோடி மதில் சுவர் ஓட்டையினுள் இருந்த மூன்று முட்டைகளையும் கபளீகரம் செய்தது.
வெண்கரு வாயலிருந்து ஒழுக, ஒழுக கடித்து நக்கி, நாக்கைச்சுழற்றிமுழுங்கி விட்டது. இது
திடும்மென கண நேரத்திதல் நிகழ்ந்து விட்டது. என் செய்வது? இன்னும் என் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது.
பிள்ளையை இழந்த தாய் போல இரண்டு மூன்று
தினங்கள் சாவல் குருவி ஒன்று, மதில் பொந்தைப்பார்த்தவாறு சோகமாக குல்மோஹர் கூண்டில்
சிறிது நேரம் அமரும். பிறகு பறந்து விடும். முட்டையைக்காப்பாற்ற முடியவில்லையே என்ற
ஆதங்கம் இன்றும் எனக்குண்டு. சாவல் குருவியில் ஆண், பெண் இனம் பிரித்துச்சொல்வது கடினம்.
ஒன்று போலவே இருக்கும். பெரும்பாலும் தாய்ப்பறவை தான் அடைகாப்பதும், வளர்ப்பதும், குஞ்சுகளின்
மேல் பாசமாக இருப்பதும் அதுவே.குல்மோஹர் மரக்கூண்டில் அமர்ந்திருக்கும் போது தாய் சாவல்
குருவியின் சோகம், அது திரும்பத்திரும்ப மதில் பொந்தைப்பார்த்த பார்வையும் என்னை வாட்டியது.
நான் அசிருத்தையாக இருந்து விட்டேனோ! புரவுனி எதையும் உண்டு விடும். அது விவஸ்தை கெட்ட
நாய். அதன் லூட்டி பொருக்க முடியாமல் ரூ. 500-க்கு வாங்கியிருந்தாலும், ஒரு வருஷமாக
அதன் ‘லொள்ளு’ தாங்க முடியாமல் ஒரு தோட்டச்சாளைக்கு இனமாகக் கொடுத்துவிட்டேன். அதுவும்
என்னை விட்டுப்பிரிகிறேனே என்ற சோகம் இல்லாமல் ‘டெம்போ’வில் ஏறி ஜாலியாகச்சென்று விட்டது.
No comments:
Post a Comment