பிரிவின் துயரம்
வாலிபப்பருவத்தில் நான் வாழ்ந்த வீடு |
பனிரெண்டு செப்டம்பர் 2015-ன்
மாலைப்பொழுதில் சரியாக 7.35 மணிக்கு எனது தந்தையின் உயிர் பிரிந்து எங்கோ சென்றது.
அனைவரும், பேத்தி, பிதுர்களனைவரும் சூழ தேவாரம், சக்தி அகவல் பாடி, ஹர, ஹர (ஹரிஅரன்) முழங்க உடலிலிருந்து ஆன்மா வாய்வழியாகப்பிரிந்து
போனது. எனது தந்தை ஒரு நல்ல மனிதர். கர்ம யோகி. ஒழுக்கமுள்ள நெறியாளர். எப்போதும் வேட்டி,
ஆபாரம் எனும் முழுக்கை சட்டை அணிவார். வெற்றிலை பாக்கு கூடப்போடாதவர். காலத்தே காரியமாற்றுவார்.
பங்கஜா மில்லில் அட்டெண்டராகச்சேர்ந்து டைம் கீப்பர் ஆனவர். எந்தத் தொழிலையும் உன்னிப்பாக
கவனித்து செம்மையாக முடிப்பார். மில்லில் ESI, PF, காசியர், மில்லின் கல்யாண மண்டபம்
மற்றும் குடியிருப்பு பொறுப்பாளர் என சகல வேலையும் ஏற்றுச்செய்த கடின உழைப்பாளர்.
மில் பல வருஷம் ஓடாத போது விவசாயம், அதற்கு முன்பு சகோதரர்களோடு ஹோட்டல் வைத்து நடத்தியவர். ஓய்வு பெற்றபின்பு கூட பிளாஸ்டிக் தொழில்,கட்டிடகட்டுமானம், பார்சல் சர்விஸ், எண்பது வயதுக்குப்பின்பு கூட ஒரு ரூபாய் காய்ன் இரண்டு பூத் என அயராது பணி செய்தும் அவரைச் செல்வம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பெரிய குடும்ப பாரத்தைச்சுமந்து அதில் காசு, பணம் செலவழிந்து போனது. தனக்கெனவும், தன் குடும்பத்துக்கு எனவும் சேமிக்க முடியவில்லை. யாவருக்கும் கொடுத்து சந்தோஷப்படுத்திப்பார்ப்பவர். அவர் எனது தம்பியோடு வசித்தார். நான் 15 கிமீ கிழக்கில் இருந்ததால் சொந்த ஊரைவிட்டு அவர் வர விருப்பப்படவில்லை.
அவர்கடைசி காலங்களில் தினமும் சூலூரிலிருந்து நான் ராமநாதபுரம், சென்று அவர் நலன்களை கவனித்து வருவேன். மாத்திரைகளும், மாதமானால் ஒரு தொகையும் தந்து அவரை நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன். கோயம்புத்தூர் பங்கஜா மில்லின் மைதானத்துக்குள் மாலை நேரம் உலாவப்போய்விடுவேன். அதற்குத் தென்புறம் லைன் வீடுகளாக குசவன் ஓட்டில் வேய்த குவார்ட்டர்ஸ் வீடுகள் இருபது இருக்கும். அதில் இரண்டாவது லைனில் கடைசிக்கு முந்திய வீட்டிலும், அதே லைனில் முதல் வீட்டுக்கு இரண்டாவது வீட்டிலும் மாறி,மாறி எனது வாலிபப்பருவத்தில் தந்தையோடு இருந்தேன். இப்போது மில் நஷ்டத்தில் இயங்கியதால் பராமரிப்பு இல்லாமல் சிதலமாகி கிடக்கிறது.
மைதானத்தில்
உலாவும் போது கவுதாரி, மைனா, காகம், வாலாட்டிக்குருவி, கருப்பு, பிரவுன், பிரவுன்வெள்ளைக்குதிரை
மூன்றினைப்பார்ப்பேன். மேற்குப்புறத்தில் மாடுகள் கட்டியிருப்பர். அந்தி சாயும் பொழுது
கரி பூசிக்கொள்ளும் வானத்தில் பழம் திண்ணி வெளவால்கள் சாய்ந்த கோட்டில் பறந்து வரும்
அழகையும், ஆதவனின் அன்றைய நாளின் கடைசி நிமிடங்கள் போடும் வண்ண ஜாலங்களையும், ஒற்றையாக
நிற்கும் தென்னை மரத்தின் கரிய நிழலையும் பார்த்து ரசிப்பேன். …………தொடரும்
No comments:
Post a Comment