Sunday, July 19, 2015


தொங்கநாதன்


தொங்கநாதன்

தொங்கநாதன் எனில் தூக்கணாங்குருவி என வட்டாரத்தமிழ் சொல்கிறது. இதன் வாழ்க்கை  மர்மங்கள் பல கொண்ட சினிமாப்படம் போல இருக்கும். அதைப்படித்து அனுபவித்தால் இதன் அருமை தெரியும். மக்கள் தான் வாசிப்பு பழக்கத்தை ஒழித்துக்கட்டியாயிற்றே! 86 வயது பழனிக்கவுண்டர் ஒரு அமைதியான கிராமத்தில் மனைவி இறந்தும் உள் சோகம் தெரியாமல் எனக்காக ஐந்து கூடுகளைக்கண்டு பிடித்தார். கிணறுகளின் மேலே தொங்கிக்கொண்டிருக்கும் பத்துக்கூடுகள். இந்த 86 வயது இளைஞர் அதரப்பழைய சைக்கிளில் கடக்முடக் கென பெடலை அமுக்கி கண்டு பிடித்துச்சொல்ல நான் மகிழ்ந்து போனேன். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஸ்கூட்டரில் பறந்தேன். கிணற்று மேட்டில் என் தவத்தை ஆரம்பித்தேன். பாம்பேறி என்ற பெயர் கொண்ட கிணற்று மேட்டில் பாம்பு வரலாம். இருப்பினும் புதராய் முளைத்த வேம்பு சிமிறுகளுக்குப்பின் ஒளிந்து கொண்டும், அமர்ந்தும், தென்னை மரத்தின் மீது சாய்ந்து கொண்டும் மற்றொரு கிணற்றில் கால் கடுக்க நின்றும், தொங்கநாதன்கள் வருவார்களா என காத்திருந்த கணங்களில் வீடு, மற்றும் நண்பர்கள் நினைவு ஏன் வரவில்லை ? இது யோகத்தில் தாரணா என்பதை ஒரு வகை தியானம் எனலாம். தொங்கநாதனை ஒப்பிடும் போது நமக்கு ஆபத்து குறைவு தான். வேலி ஓணான், பாம்பு, பருந்து, அணில், மைனா என முட்டை, குஞ்சுகளை சுவைத்து பசியாற்றிடக்காத்திருக்கும் உயிரிகளைக் காணமுடிந்தது. என்ன விறுவிறுப்பான தொங்கநாதன் வாழ்க்கை! கழுத்தில் தொலைநோக்கி, காமிரா என மாலைகள். மாற்றி, மாற்றி பார்த்து, காத்திருப்பு முடிவற்றது. தொங்கநாதர்ளே! என்னைப்பார்த்து பயம் ஏன்? நான் உங்கள் நண்பனல்லவா! உங்கள் வாழ்க்கை வரலாறு எழுதும் ஏழை எழுத்தாளன். நாதர்களைச்சுற்றி மைனா, வேலிஓணான், அணில், வெண்தொண்டை தினைக்குருவி, கருப்புத்தலை தினைக்குருவி, தேனிபிடிச்சான், சிட்டுக்குருவி என இருந்தன. இதனை நெசவாளிக்குருவி என அழைக்கலாம் என நினைக்கிறேன். மூக்கு ஊசி போல இருந்து தன் கூட்டை நெய்கிறது. கரும்புத்தோகை, நெல் தோகை, சோளத்தோகை, தென்னை ஓலைகளை வெகு சன்னமாக அலகால் இரண்டு அடி கிழித்து வந்து தன் வீட்டை நெய்கிறது. அதற்காக மேற்ச்சொன்ன விளைச்சல் பூமிகளுக்கருகில் உள்ள கிணறுகளில் கூடுகட்டுகிறது.கிணறு ஓரம் வளர்ந்து, கிணற்றுக்குள் சிமிறுகள் தொங்கும் வேம்பு, அத்தி, சீனிப்புளி என்ற மரங்களில் தொங்கும் வீடுகள். வசந்த மாளிகைகளைப்பார்க்க  புலர்ந்தும் புலராத காலைப்பொழுது ஸ்கூட்டர் பறக்கும். பிறகு கிணற்று மேட்டில் தவம். காற்றில் ஆடும் மாளிகைகள். இறைவனை நினைக்க எனக்கு வியப்பு கடல் அளவை விட விரிந்து போகும் தோழி!..........தொடரும்

No comments:

Post a Comment