Friday, March 27, 2015



பழுப்பு ஈப்பிடிப்பான்
Asian Brown Flycatcher


                இப்பறவை நான் காடம்பாறை போனபோது என் மைத்துனர் வீட்டின் முன்புறத்திண்ணையில் அமர்ந்திருந்த போது முதன்முதலாக அறிமுகமானது. அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது. “சிலுசிலுவென பருவநிலை. எனக்கெதிரில் நாற்பதடி தூரத்தில் ஒரு முள் கம்பியில் அமர்ந்திருந்தது. அது என் இருப்பில் சலனமடையவில்லை. சிட்டுக்குருவியை விட பரிமாணம் குறைவு. பழுப்பு நிறம். அதன் விரிந்த வட்டக்கண் தான் எனக்கு அதன் முகவரியைச்சொன்னது. தலை கொஞ்சமே தூக்கல், வால் நுனி சற்றே இரு மடிப்பாக இருப்பது மட்டுமே அதன் அடையாளங்கள். அதற்கப்புறம் அதை நான் பார்க்கவில்லை. இது வலசை வருவது. எனது இல்லத்தின் வலது புற வீதிக்கு அப்பால் ஒரு இலந்தை மரம் குடைவிரித்து நின்றிருந்தது. அதில் இதைப்பார்த்தேன். பல வருஷங்கள் ஓடிவிட்டதால் சந்தித்தவரை மறப்பது போல மறந்து போய், யார் இவர் என்பது போல எனக்கு சிந்தனை ஓடியது.

புதர்கருவி!(Warbler!)இனம் என நினைத்துக்கொண்டேன். தினமும் இப்பறவையை இலந்தை மரத்தில் உற்றுஉற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவும் வட்டமான அகலக்கண்ணால், மறந்து விட்டாயா? என்னைத்தெரியவில்லையா? என்பது போல என்னை மலங்க மலங்கப்பார்க்கும். எனது இல்ல சிறு பூங்காவுக்கு வரும். மருதாணி, Powder puff என்ற புதர் தாவரங்களில் பூச்சி பிடிக்கும். பிறகு இலந்தை மரத்தில் ஊஞ்சலாடுவது போல கிளைக்குக்கிளை தாவிக்கொண்டிருக்கும். இதுமலைப்பிரதேசங்களை ஒட்டி உலவும், பூங்காவில் உலவும், மரக்கூட்டத்தில் உலவும் மற்றும் கண்பெரியதாக வட்டவடிவத்தில் இருப்பதெல்லாம் இதனை அடையாளம் காண துப்புகள். எனது வீட்டின் முன்பு, நிறைய மரக்குழு இருப்பதுவும் ஒரு தடயம்.

நண்பனே! உன்னை வெகு நாட்களாகக்காணாது போனதால் உனது அடையாளங்கள் மறந்து விட்டன. மன்னியும். உன்னைப்பார்த்த நாள் மீண்டும் நினைவுக்கு வருகிறது. மழைத்தூறல் அத்தோடு ஈரப்பதமான குளிர். இருவரும் ஒருவரை ஒருவர் வெகு நேரம் பார்த்துக்கொண்டோமே! நீ முள்கம்பியில் அமர்ந்திருக்க, நான் மைத்துனர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து அந்த மலைப்பள்ளத்தாக்கில் உயிர்த்திருந்தோமே! இப்போது ஞாபகம் வருகிறது .


நண்பனே! மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்து விடுவாய். அதெப்படி! தனியாக இவ்வளவு தொலைவு வருகிறாய். நான் மட்டும் நண்பனொடு தான் எங்கும் செல்கிறேன். இலந்தை மரத்தில் வந்து முள்ளோடு முள்ளாக அமர்ந்த வண்ணம் உறங்குகிறாய். பகல் பொழுதில் இலந்தை மரக்கிளைகளில் ஊஞ்சல். பிறகு மரத்துக்கு மரம் தாவல், கிடைக்கும் பூச்சிகளை உணவாக்கிக்கொள்கிறாய். பஞ்சம் பிழைக்க வந்தவன் போல இருப்பது தகுமா! நீ என் நண்பனல்லவா! ஏற்கனவே அறிமுகமானவன் நீ! வாரும் என் இல்லத்துக்குள். இருவரும் தேனீர் அருந்தியவாறு பேசிக்கொண்டிருப்போம். என்னோடு தங்குவீர். தயவு செய்வீர்.

No comments:

Post a Comment