Tuesday, November 12, 2013


சிட்டுக்குருவி தொலைத்த மனிதர்கள்

சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி செய்தி தெரியுமா?

கண்ணுக்கு விருந்து

சிட்டுக்குருவி
(Passer domesticus)

சிட்டுக்குருவி பற்றிய பதிவு சங்க கால இலக்கியத்தில் உள்ளதாவென நானும் என் பறவை குருநாதர் முனைவர் ரத்னம் அவர்களும் ஆராய்ந்த போது எட்டுத்தொகையில் அடங்கும் குறுந்தொகையில் இரண்டு செய்யுள்கள் கிடைக்கப்பெற்றன. சிட்டுக்குருவி ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஆசியாவிலிருந்து உலகம் முழுதும் மனிதனால் கப்பலில் பிரயாணித்தும், மற்றும் உணவுக்காக இயற்கையாகவும் பரவியிருக்கும். சங்க காலம்; கி.மு- வலிருந்து 3-ம் நூற்றாண்டு. சங்க காலத்திலேயே நம்மோடு வசித்த பறவையைத்தொலைத்துக்கொண்டிருக்கிறோம். வேதனையளிக்கும்விதம் என்னவென்று  சொல்வது? மனிதன் தன் சுகபோகத்திற்காக எதையும் செய்வான். சிட்டுக்கருவியைப்பார்ப்பதற்கென்றே நான் என் ஊரில் வெள்ளிக்கிழமை கூடும் சந்தைக்கு ஒன்றும் வாங்கவில்லையாயினும் போவேன். சிட்டுக்குருவி சிந்தும் தானியங்களுக்காக அங்கு வரும்.  என் இல்லத்தின் அண்டைப்புறம் இருக்கும் ஊர்வேலன் காட்டில் இருக்கும் ஒரேஒரு குழு சிட்டுக்குருவிகள் கூட்டமாக ஒரு தில்லி முள்மரத்தில் அமர்ந்திருப்பதையும், திடீரென ஒருசேர மாயக்கம்பளம் போல பறப்பதையும் பார்க்க பனிக்காலையில் போவேன்.
அண்டைவீட்டு சுவர் பிளவில் பத்து வருஷத்திற்கு முன்பு கூடு வைத்திருந்தது. நான் குருவி உண்ண குருணை அரிசியை மதில் சுவற்றில் தூவுவேன். அவை தத்தித்தத்தி தானியம் பொறுக்குதைப்பார்த்து, என்மனம் பறந்து போகும். ஒருமுறை ஆண்குருவி மாடி சாளரம் வழி அறைக்குள் புகுந்து வெளியில் செல்லத்திணறிய போது அதன் ஜோடிபெண்குருவி சாளரத்துக்கு வெளியே பார்த்து தவித்த தவிப்பிருக்கே! நம்மைப்போல தான் குருவியினமும்….. இப்போது தண்ணீர் பாத்திரம் வைத்து, தானியம் தூவியுள்ளேன். கூடுப்பெட்டி உப்பரிகையில் தொங்கவிட்டுள்ளேன். குருவி வரக்காணோம்.

பழையதிரைப்படப்பாடல் ஒன்று;-

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்னை விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே

சிட்டுக்குருவியே! நீ பிரிந்து போனதை யாரிடம் சொல்லிப்பாடுவேன்.

பாரதியார் குருவியைப்பற்றி மெச்சிப் பாடி, மனிதனைச்சாடியுள்ளார்.

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
சிறியதோர் வயிற்றினுக்காய்-நாங்கள் ஜன்மமெல்லாம் வீணாய்
            மறிகள் இருப்பதுபோல்-பிறர் வசந்தனில் உழல்வதில்லை

சுவைக்க குருவி பற்றிய சங்க காலத்திய ஒரு குறுந்தொகைப்பாடல் மட்டும் இதோ;-

மாமிலாடன் இயற்றியது

ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ                                     
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண்தாது குடைவன ஆடி,
இல்இறைப் பள்ளித் தம் பிள்ளையொரு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்று கொல்-தோழி-அவர் சென்ற நாட்டே?’  46. மருதம்

குரீஇ= சிட்டுக்கருவி
முன்றில்= முற்றம்
மனைஉறை= இல்லம்வசிக்கும்
உணங்கல்= காய்ந்த தானியம்
மாந்தி= உண்டு
மன்றம்= கொல்லைப்புறம்
பள்ளி=தங்குதல்

பொருள்;
ஆம்பல்பூப் போல சாம்பல் நிறச்சிறகில் இல்லத்தில் வசிக்கும் குருவிகள், முற்றத்தில் சிந்தியிருக்கும் காய்ந்த தானியங்களை உண்டு, கொல்லைப்புறத்திலிருக்கும் எருக்குவியலின் நுண் உயிரிகளைபிடித்து உண்ட களைப்பில் குருவிகள் இரவு வந்ததும் தங்கப்போய்விட்டன. ஆனால் என் கணவர் சென்ற நாட்டிலிருந்து இன்னும் வீடு திரும்பலையே எனத் தோழியிடம் தலைவி புலம்புகிறாள்.

கணவன் பிரிவு சொல்லி தோழியிடம் புலம்பியது போல குருவி தொலைந்த பிரிவை யாரிடம் சொல்லிப்பாடுவேன்.



No comments:

Post a Comment